Home » Articles » முன்னேற்றத்தின் மூலதனங்கள்

 
முன்னேற்றத்தின் மூலதனங்கள்


admin
Author:

எந்தத் தொழில் செய்வதாயினும், சவரத்தொழிலானாலும், உழவுத் தொழிலானாலும் பயிற்சி அவசியம் என்பதைக் கடந்த கட்டுரையில் பார்த்தோம்.

பட்டம் படித்து வெளிவருகிறவர்களுக்குக்கூட செயலறிவும், பயிற்சியும் போதிய அளவு இருப்பதில்லை. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் கல்லூரிகளில் மெக்கானிக்கல் படிப்பில் முதலிடம் பெற்று வெளிவருகிறவர், ஒரு காரில் இருந்து இன்ஜினைக் கழற்றவேண்டும். அதை மீண்டும் காரில் பொருத்த வேண்டும். கார் பழைபடி ஓடினால்தான் மாணவன் பட்டதாரியாக வீடு போக முடியும். அந்த அளவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்படிக் கல்லூரியிலிருந்து வெளியேறும் பட்டதாரியால் நேரடியாக ஒரு தொழிற்சாலைக்குச் சென்று பணியேற்க முடிந்தது. ஆனால் இன்று என்ன நிலை? பல கல்லூரிகளில் கார் இன்ஜினைப் பற்றி காகிதத்தில்தான் பார்த்து வருகிறார்கள். இப்படிப் போதிய பயிற்சியற்றவர்களாகத்தான் பட்டதாரிகளே வெளிவருகிறார்கள்.

இந்த நிலையில் மற்ற தொழிலாளர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இன்று வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. ஆனால் மாறிவரும் நிலைக்கேற்பப் பணியாற்ற பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்களா? இல்லை! இன்று பெருகிவரும் செல்போனையோ, இன்சூரன்ஸ் பாலிசிகளையோ விற்பனை செய்வது பற்றி பயிற்சி நிலையங்கள் உண்டா? நாளக்கு நாள் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையில் பயண வழிகாட்டிகள் தேவை (Tourist Guide) அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கான பயிற்சி நிலையங்களும் பாடத்திட்டங்களும் நம்மிடம் உண்டா?

மிக விரைவாக வளர்ந்து வரும் நாடு சீனா. அங்கு வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் டாக்சி டிரைவர்கள் சரளமாகப் பேச வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கிறார்கள். பல வளர்ந்த நாடுகளில் ஆறு மாதங்களுக்கு குறையாமல் ஓட்டுநர் பயிற்சி இருந்தால் தான் டாக்சி டிரைவராக ஆக முடியும். ஆனால் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டபடி பயிற்சி பெறாமல் ஓட்டுநர் உரிம்ம் பெற்று அரசு பதயிலும் சேர்ந்ததைப் படித்திருப்பீர்கள். இதுவா முன்னேற்றத்திற்கான அடையாளம்.

இன்று எல்லா நகரங்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகள் பெருகி வருகின்றன. கால்சென்டர்கள் முளைத்த வண்ணம் உள்ளன. ஆனால் அதில் பணியாற்ற பயிற்சி பெற்றவர்கள் இல்லை. எனவே பயிறசி நிலையங்கள் ஏராளம் வேண்டும். அப்போதுதான் நமது முன்னேற்றம் துரிதப்படும்.

ஒரு பக்கம் வேலைக்கு பயிற்சி பெற்ற ஆட்கள் இல்லை. மறுபக்கம் ஏராளமானோருக்கு வேலையில்லை. அனைவருக்கும் வேலை – இதுவே முன்னேற்றத்தின் அடுத்த முக்கித்தளம். கடந்த ஆண்டு 2004 செப்டம்பர் திங்களில் தில்லியில் ஜாமியா மிலியா இசுலாமியா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பேருரை ஆறிய நமது குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் “வேலை வாய்ப்பின்மை பெருகுவதால் சமூக அமைப்பே ஆட்டம் காணும்” என்று தமது அச்சம் கலந்த எச்சரிக்கையை அறிவித்தார்.

கடைக்கோடி மக்களின் சராசரி வாழ்க்கை என்பது மிகவும் சீர்குலைந்து வருகிறது. உணவு,குடிநீர், உடை, வாழிடம், மருத்துவம் ஆகிய அடிப்படைத் தேவைகள் மற்றும் மூன்று வேளை உணவு என்பதே இன்னும் பிரச்சனையாக உள்ளது. தொன்று தொட்டு செய்து வந்த உழவு, நெசவு சிறுதொழில்கள், கைத்தொழில்கள், குடிசைத் தொழில்கள் எல்லாமும் தாராளமய உலகமய மாயையில் கரைந்து போய்க்கொண்டிருக்கின்றன.

படித்த இளைஞர்கள் பல லட்சம் பேர் வேலை இல்லாமல் நொந்துபோய் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 50 இலட்சம் பேருக்கு மேலான எண்ணிக்கையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன. நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

கடந்த ஆண்டு இராணுவத்திற்கு ஆள் சேர்க்க நடைபெற்ற இடத்தில் நேர்ந்த நெரிசல் காரணமாக,திறந்த கழிவறைக் கூடங்களில் விழுந்து பலியான இளைஞர்கள் பற்றிய செய்தி நமக்கு உணர்த்துவது என்ன? இராணுவத்தில் காட்டிய அவர்கள் ஆர்வத்திற்கு தேச பக்தி என்பதைவிட அந்த இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டமே காரணம்.

ஆண்கள், பெண்கள், படித்தவர், படிக்காதவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், கிராமத்தவர், நகரத்தவர் என எல்லாத் தரப்பினரையும் வேலையின்மை பாதித்துள்ளது.

வேலையற்ற மனநிலை குடும்பத்திலும் சமூகத்திலும் பல்வேறு தாக்கங்களை உருவாக்கிவிடுகிறது. இதைத்தான் கலாம் அவர்கள் வேலைவாய்ப்பின்மையால் சமூக அமைப்பே ஆட்டங்காணும் என்று எச்சரித்துள்ளார்.

“வேலையற்றவர்களின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்” என்று பேரறிஞர் அண்ணா வேறு ஒரு சூழ்நிலையில் குறிப்பிட்டது இந்தச் சூழ்நிலைக்கும் பொருந்துவதாக உள்ளது. இன்றைக்கு சமூக விரோத செயல்களிலும், வன்முறையிலும், தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபடுகிற இளைஞர்களின் பின்னணியை ஆய்ந்து பார்த்தால் இந்த உண்மைப் புலப்படும்.

முகம் வெளிறி, மனம் இருண்டு, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இவர்களை வரவேற்க நுகர்வுக் கலாச்சாரம் சாதி,மதம், சுயநல அரசியல், லஞ்ச ஊழல், போதைப் பழக்கங்கள், வன்முறைகள் எல்லாம் ஆவலோடு காத்திருக்கின்றன. வாக்கு வங்கிகளை வளைப்பதற்காக மலிவான திட்டங்களில் மலையளவு பணத்தை செலவிடும் ஆள வந்தார் இனியாவது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஆக்கப்பூர்வ திட்டங்களைத் தீட்டவும் நடைமுறைபடுத்தவும் வேண்டும்.

வேலை வாய்ப்பு என்பதை அடிப்படை உரிமையாக்கிட வேண்டும். மாற்றுத் தொழில்கள், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்கி அடிப்படை மனிதத் தேவைகளை நிறைவு செய்திட சரியானத் திட்டங்களை அரசுகளும் ஆட்சியாளர்களும் வகுத்திட அவசர அவசியம் இல்லை என்றால் முன்னேற்றம் என்பது முயற்கொம்பே ஆகும்.

நாம் விடுதலை பெற்றபோது நாட்டை எதிர்நோக்கி பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. இருப்பினும் வேளாண்மை தொழில் வளர்ச்சி மற்றும் அறிவியல் மேம்பாடு ஆகியவற்றை முக்கிய நோக்கமாகப் பிரதமர் நேரு பிரகடனப்படுத்தி நம் நாட்டை முன்னேற்றத்திற்கு ஆற்றுப்படுத்தினார். கடந்த 58 ஆண்டுகளில் நமது நாடு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில்மு மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இருப்பினும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாடு மேலும் முன்னேறுவதில் பெரும் தடையாக இருப்பது வேலையின்மை.

ஆர்வத்தோடு கற்று ஆற்றலுடன் வெளிவருகிற பலருக்கு எளிதாக வேலை கிடைத்துவிடுகிறது. இன்னும் பலருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் ஒன்று அவர்கள் வேலைக்கு ஏற்றத் தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை. அல்லது போதுமான முயற்சி இல்லை. அல்லது போதுமான முயற்சி இல்லை. அல்லது தகுதிக்கு மீறிய வேலையைத் தேடுவது காரணமாக இருக்கலாம். ஏனெனில் ஒன்றைச் செய்ய விரும்புபவர்கள் அதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். விரும்பாதவர்கள், காரணங்களைக் கண்டு பிடிக்கிறார்கள்.

வேலை கிடைக்காததற்கு படிப்புக் குறைவும், பயிற்சிக் குறைவும், வேலைத் தேடுவதில் முயற்சிக் குறைவும் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஆபத்தான் பழக்கவழக்கங்கள் அவர்களை ஆக்கிரமித்து வருகின்றன. அதுதான் வன்முறையும், சமூக விரோதச் செயல்களும் தீவிரவாதமும் ஆகும். இன்னும் சிலர் கல்லூரியில் படிக்கிறபோதே வேலை கிடைக்காது என்கிற விரக்தியில் இருக்கிறார்கள். இவர்களை மடைமாற்றம் செய்ய ஒரே வழி அவர்களுக்கு ஏற்ற வேலைகள் அளிப்பதுதான்.

இன்று இந்திய மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் 35 வயதுக்கள் உள்ள இளைஞர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இவர்கள் இந்த நாட்டின் மாபெரும் மனிதவளம். இவர்களை திறம்பட பயன்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கினால் முன்னேற்றம் என்பது திண்ணம்.

இன்னொரு குறைபாடும் நம்மிடையே இருக்கிறது. இந்த வேலை செய்வது கேவலம், மரியாதை குறைவானது. அந்த வேலையைச் செய்வது மதிப்பானது என்ற தவறான போக்கு உள்ளது. இதற்குச் சமூக அடிப்படையிலான காரணமும் உண்டு. இந்த நாட்டில்தான் உடல் உழைப்பை செய்கிற உழைக்கும் மக்கள் கீழானவர்கள் என்ற பேதம் இடைக்காலத்தில் வந்தேறியது. எனவே அடிமனத்தில் அழுந்திக் கிடக்கிற அந்தத் தடைகளை தகர்த்தெறிய வேண்டும்.
-தொடரும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2007

நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
தளர்வறியா மனம் தா
மனிதனும் மனோதத்துவமும்
சமுதாயமும் இளைஞர்களும்
தெய்வம் நீ என்று உணர்
முன்னேற்றத்தின் மூலதனங்கள்
வெற்றிக்கு வழி
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி