Home » Articles » சமுதாயமும் இளைஞர்களும்

 
சமுதாயமும் இளைஞர்களும்


மயிலானந்தன் எஸ்.கே.எம்
Author:

தத்துவ ஞானி அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு வரும் ஆகஸ்டு 14-ஆம் தேதி 95-வது பிறந்த தினம் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அருட்தந்தை அவர்களது பிறந்த தினத்தை உலக அமைதி தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஆண்டுதோறும் உலக அமைதிக்காக பல்வேறு கருத்தரங்குகளை அறிஞர் பெருமக்களைக் கொண்டு நடத்தி வருகிறோம். இவ்வாண்டும் தனி மனித அமைதியும், உலக அமைதியும் எனும் தலைப்பில் பொள்ளாச்சி ஆழியாறு அருட்பெரும் ஜோதி நகரிலுள்ள அறிவுத் திருக்கோவிலில் ஒரு கருத்தரங்கினை நடத்திட உள்ளோம். இக்கருத்தரங்கினை, மேதகு தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் துவக்கி வைக்கவுள்ளார்கள்.

1958ஆம் ஆண்டு உலக சமுதாய சேவா சங்கம் எனும் அமைப்பை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தோற்றுவித்தார்கள். தனி மனித அமைதி மூலம் குடும்ப அமைதி, குடும்ப அமைதி மூலம், உலக அமைதி என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைப்பு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 200க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் உலக சமுதாய சேவா சங்கத்துடன் இணைப்புப் பெற்று இயங்கி வருகின்றன. மேற்கண்ட அறக்கட்டளைகள் அறிவுத் திருக்கோவில்களை நிறுவி, தொண்டாற்றி வருகின்றன.

இவ்வறிவு திருக்கோவில்களில் மனவளக்கலை என்னும் பெயரில் எளிய முறை உடற்பயிற்சிகள் (உடலுக்கு நோய் வராமல் தடுக்கவும்) உயிராற்றலுக்கு வலிமை சேர்க்க எளிய முறை காயகற்பப் பயிற்சி மனதை அமைதி நிலைக்கு கொண்டு வர எளிய தியானப் பயிற்சிகள், நற்குணங்களைப் பெற்று பண்பாட்டில் உயர்வு பெற அகத்தாய்வு எனும் தற்சோதனைப் பயிற்சிகள், பூரண மனநிறைவு பெற இறைநிலை விளக்க வகுப்புகள் இவையெல்லாம் ஆண்டுதோறும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்ட பயிற்சிகளைக் கற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இக்கல்வி போதிக்கப்படுகிறது. மனதைத் தூய்மைப்படுத்தி ஒருமுகப்படுத்தி, உறுதிப் படுத்திட இப்பயிற்சிகள் உதவுகின்றன, மேலும், உயர்ந்த பண்பாடுகளைப் பெற்று நல்ல நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. மாணவர்களும் இளைஞர் சமுதாயமும் ஆண்களும் பெண்களும் அனைவரும் நிறைவாகவும், அன்போடும் ஒத்தும் உதவியும் வாழ இக்கல்வி பயனுள்ளதாக அமைகிறது.

அருட்தந்தையின் பிறந்த நாள் வருகின்ற இந்த மாதத்திலே அவர்கள் இளைஞர்களுக்கு கூறியுள்ள கருத்துக்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

இளைஞர்கள் வாழ்க்கைப் படித்தளங்களிலேயே மிக முக்கிய நிலையில் உள்ளவர்கள். உடல் ஆற்றல் ஓங்கியிருக்கும். காலம் இளமைப்பருவம். இப்பருவத்தில் தான் அவர்கள் அறிவாற்றலையும், செயல்திறத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்த காலத்தில் அவர்கள் பெறுகின்ற நல்லறிவுதான் அவர்களை வாழ்நாள் முழுவதும் செம்மையாக வாழ வகை செய்யும்.

கல்வியென்றால் பொதுவாக, உலகெங்கும் உள்ள கருத்து, எழுத்தறிவு, தொழிலறிவு பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் அறிவு என்பதாக உள்ளது. இந்த அளவில் பெறப்படும் கல்வியால் தொழில்நுட்பங்கள் பெருகியுள்ளன. வாழ்க்கையில் உடல் சிரமத்தைக் குறைக்ககூடிய வகையில் வேக வாகனங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் இன்னும் இவை போன்ற கணக்கற்ற சாதனங்கள் பெருகியுள்ளன. விஞ்ஞானத்தின் துணைகொண்டு, அவைகளின் உற்பத்தி பெருகியதன் நோக்கம் என்ன? வாழ்வில் சிரமம் குறைத்து, இன்பமும், நிறைவும் பெற்று வாழவேண்டும் என்பதுதானே?

பெருகியுள்ள வசதிகளைக் கொண்டு மனிதர்கள் தற்காலத்தில் இன்பமும், மன நிறைவும், மன அமைதியும் பெற்று வாழ்கிறார்களா என்றால் இல்லையென்ற நிலையேயுள்ளது.

மனநிறைவு என்பது மனித வாழ்வின் குறிக்கோள் ஆகும். அத்தகைய மன நிறைவை எவ்வாறு பெறுவது? எவ்வாறு இனிமையும், அமைதியும் உள்ள வாழ்க்கை வாழ்வது என்ற அறிவும், அதனை மதித்து வாழும் பயிற்சியும், ஒவ்வொருவருக்கும் அவசியமாகும். இத்தகைய அறிவைத்தான் பண்பாட்டறிவு என்று அறிஞர்கள் ஞானிகள் பகுத்துள்ளார்கள்.

மனதைக் கொண்டுதான் வாழ்க்கையை நடத்துகிறோம். மனநிலைக்கு ஏற்றவாறே வாழ்க்கை அமைகிறது. மனம் செம்மைப் பட்டு நல்ல முறையில், இனிமையாக, நிறைவாக வாழ வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தனக்கும் சமுதாயத்திற்கும், சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் தனக்கும் உள்ள தொடர்பைச் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

தனி மனிதனுக்குத் தேவையான அனைத்தும் இயற்கையிலிருந்தே மனித தொகுப்பாக உள்ள சமுதாயத்தால் எடுக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டு அளிக்கப்படுகிறது. எந்த ஒரு தனி மனிதரும் தனது தேவைகளைத்தானே அடைந்து, பூர்த்தி செய்து கொள்ள முடியாது. நாம் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளும் மனித இனத்தின், தொகுத்த உழைப்பின் பலனாக உருவாகி வருவதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த வகையில் சிந்திக்கின்ற போதுதான், நம் ஒவ்வொருவரையும் பாதுகாப்பதும், பராமரிப்பதும் சமுதாயம்தான் என்ற உண்மை விளங்கும்.

நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கு வாழ்ந்து கொண்டுள்ளோம்? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். தூய வெளியாக உள்ள இறைநிலையே விண் முதல் பிரபஞ்சம் வரையாக மலர்ந்து செயல்படுகிறது. இறைநிலை என்பது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு காலம் என்ற நான்கு தன்மைகளை உடையது. அனைத்துத் தோற்றங்களையும் தாங்கிக்கொண்டும், இயக்கியும் வரும் அதன் தன்மைகள் பேராற்றல், எனப்படுகின்றன.

நமது உடலாகவும், நம் உடல் இயக்க ஆற்றலாகவும், நம்மிடம் அறிவாகும் இருப்பது இறைநிலையே. உண்ட உணவைச் சீரணித்து, சத்துப் பொருளைப் பிரித்து உடலைப் பராமரிப்பதில் நமது பங்கு என்ன? இருதயத்துடிப்பு, இரத்த ஓட்டம், மூச்சு ஓட்டத்தில் பிராண வாயுவை எடுத்துக் கொண்டு, கரியமில வாயுவை வெளியேற்றுவதில் நமது பங்கு என்ன? இவையெல்லாம் பேரறிவாக எங்குமாக, எல்லாமாக உள்ள இறையின் செயல்பாடே.

இந்த உண்மைகளை உணரும்போது தான், மனித இனம் விரிவடைகிறது. உடல் வரை அறிவை எல்லை கட்டிக்கொண்டு “தான்” எனவும் “தனது” எனவும் கொண்டிருந்த கற்பனை நீங்குகிறது.

எல்லாம் வல்ல இறையருளே உலகங்களாக உயிரினங்களாக, மனிதராக உள்ள உண்மை விளங்க, தான் என்ற தன்முனைப்பு நீங்கி விடுகிறது.

இறைவனே நானாக இருப்பது போல் என்னை ஒத்த மனிதர்களாக, சமுதாயமாக இருந்து கொண்டு எனக்கு வேண்டியது அனைத்தையும் அளித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை தெளிவாகிவிடும்.

பிறந்தது முதற்கொண்டு வளர்த்து, கல்வியூட்டி, ஆளாக்கி, இன்றளவும் எனக்குத் தேவையானது அனைத்தையும் அளித்துப் பராமரித்தும், பாதுகாத்தும் வருவது சமுதாயம் தான் என்ற உண்மை உள்ளத்தில் நன்றியுணர்வாக வெளிப்படும். ஒவ்வொரு வரும் தான் பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கிற நன்மைகள் எல்லாம் சமுதாயத்தின் அன்பளிப்பே.

மனித குலத்தின் உழைப்பிலே வருவது தான் அத்தனையும என்று எண்ணிப்பார்க்கும்போது, சிறு பிராயம் முதற்கொண்டு இன்று வரை சமுதாயத்திலிருந்து பெற்றதெல்லாம் கடன் என்று ஆகிவிடுகிறது. பெற்றகடனைத் திரும்பவும் சமுதாயத்திற்கே தனது அறிவாற்றல், உடல் ஆற்றல் கொண்டு அளிக்க வேண்டுமென்ற நன்றியுணர்வு உள்ளத்திலே துளிர்க்கிறது.

இதனையே கடமை உணர்வு என்கிறோம். கடன்+மை = கடமையாகிறது. ஆங்கிலத்திலும் due என்றால் கடன் அதனைச் சார்ந்தே due+ty= duty என்று வழங்கப்படுகிறது.

தான் பெறும் நன்மைகளைக் கருத்திற் கொண்டு, எவ்வித எதிர்பார்ப்புமின்றி, மீண்டும் சமுதாயத்திற்கே நமது அறிவையும், ஆற்றலையும் அளிப்பதே நிஷ்காம்ய கர்மம் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

பலரது உழைப்பால் உருவாவது சமுதாய வளம். வாழும் ஒவ்வொரும் அவ்வளத்தை எடுக்கும் போது, அது குறையவே செய்யும். சமுதாய வளம் குறையாதிருக்க எடுக்கும் ஒவ்வொருவரும் திரும்ப அளிக்கும் உணர்வு பெறவேண்டும். இதுவே கடமையுணர்வாகும். அப்படி அளிக்காவிடின், வளம் குன்றி வறுமையே மிஞ்சும். பஞ்சமா பாதகங்கள் பெருகி, கடமை உணர்விலேதான், உரிமை ஒன்றி நிற்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதனையே திருவள்ளுவரும்,

“இவர்பால் ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோவா தவர்”

எனவே, எனது உழைப்பின் மூலமாகவே உயிர் வாழ்வேன் என்ற உறுதிப்பாட்டை ஒவ்வொரு இளைஞரும் உள்ளத்தில் கொள்ள வேண்டும். பிறருக்கு நன்மை அளிக்கக்கூடிய நிலையில் நம்மை, உழைப்பால் உயர்த்திக் கொண்டேயிருக்க வேண்டும். பிறரை எதிர்பார்க்கும் நிலை கூடாது.

இளைஞர்கள் அடுத்ததாக மனதில் கொள்ள வேண்டிய ஒன்று ஒழுக்கம். ஒழுக்கம் என்பது பிறருக்கு தீங்கு செய்யாதிருத்தலாகும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. இது இறைநீதி. செயல் ஒன்றைச் செய்து விட்டு, விளைவிலிருந்து யாரும் தப்ப முடியாது. அந்த அடிப்படையில் நல்லதை விரும்பும் நாம் எப்பொழுதும் எண்ணம், சொல், செயலால் நல்லதையே செய்யப் பழக வேண்டும்.

நமது வாழ்வு இனிமை கூடியதாக அமைய வேண்டுமென்றால் நமக்கும் பிறர்க்கும் இடையே எப்பொழுதும் நல்லுறவு பராமரிக்கப்படுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிறருடைய ஒத்துழைபில்தான் ஒவ்வொருவருடைய வாழ்வும் நடை பெறுகிறது என்ற உண்மையை மறக்கக் கூடாது.

எல்லோருடனும் இனிமையாகப் பழக வேண்டும். சினம் தவிர்த்துப் பொறுமையை மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யுமிடத்திலுள்ளோர், உற்றார், உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு இவை பெருகும் இனிமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

எனக்கு என்ன வேண்டும்? என்று நம்மையே நாம் வினவிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியும், மனநிறைவும்தான் வேண்டும் என்பது விளங்கிவிடும்.

நான் எங்கு, எப்படி எவ்விடத்தில் இருக்கிறேன் என்று கணித்துக்கொள்ள வேண்டும். அதாவது வயதிலே, உடல் வலுவிலே, கல்வியிலே, செயல் திறமையிலே அறிவின் நுட்பத்திலே, பொருள் வளத்திலே, அதிகாரத்திலே, எந்த நிலையில் இருக்கிறேன் என்று கவனித்துக் கொண்டு இவற்றால் நான், எனக்கு, என் குடும்பத்திற்கு, சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு என்ன நன்மை செய்திட முடியும் என்று பார்க்க வேண்டும். அவற்றினை ஆற்றுவதற்கு எனது திறமையை எந்தெந்த முறையில் வளர்த்துக் கொள்ள முடியும் என்று பார்க்க வேண்டும். அவற்றினை, ஆற்றுவதற்கு எனது திறமையை எந்தெந்த முறையில் வளர்த்துக் கொள்ள முடியும் என்று திட்டமிட்டு முறையான பயிற்சியின் மூலம் செயலில் இறங்கி விட வேண்டும். இவ்வாறு செயல் புரிய, புரிய, ஒரு பெரிய இன்ப ஊற்று உள்ளத்திலே ஊறத் தொடங்கி விடும்.

யாரிடமிருந்தும் எப்போதும் எதையும் எதிர்பார்த்தல் வேண்டாம். எதிர்பார்த்தல் பெரும்பாலும் ஏமாற்றத்த்தினால்தான் முடிகிறது. இந்த ஏமாற்றம் இன்ப ஊற்றை அடைத்துவிடும்.

ஒவ்வொருவருக்கும் அறிவு இருக்கிறது. பொறுப்புணர்ச்சி இருக்கிறது. செயல் திறமை இருக்கிறது. வாழ்வின் அனுபவம் இருக்கிறது. இவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும். பிறரை மேய்ப்பதோ, அடக்கி ஆள நினைப்பதோ, இன்ப ஊற்றை அடைத்து விடும். நல்லது செய்வதோடு விட்டுவிட வேண்டும். செய்தவற்றிற்குப் பலனை எதிர்பார்த்தல் ஏமாற்றம் தரும்.

அவசியமின்றி பிறர் செயலில் தலையிடல் கூடாது. புதிய சிக்கல்களையும் உருவாக்கிக் கொள்ளக்கூடாது. நமது கடமையிலிருந்து தக்க நீதி உணர்வின்றி நழுவவும் கூடாது. இவற்றால் நம் மீது பிறர்க்கு மதிப்பு உயரும். உள்ளத்தில் அமைதியும் பெருகும்.

பிறருடைய வாழும் சுதந்திரத்தையும், வளத்தையும் பறிக்க மாட்டேன் என்ற உறுதியை ஒவ்வொரு இளைஞரும் ஏற்றுச் செயல்படல் அவசியம்.

உடல் இயலாமையால் பிற காரணங்களால், துன்பத்தில் இருப்போரைக் கண்டு, மனம் இரங்கி, அவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்திட முன்வர வேண்டும்.

இறை எனும் பேராற்றல் அணு முதற்கொண்டு அண்டம் ஈறாக ஊடுருவி இருந்து கொண்டு, அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கும் உண்மையினை மனதில் கொள்வோம். மனிதரது செயல் ஒவ்வொன்றிற்கும், தக்க விளைவை இன்பமாகவோ, துன்பமாகவோ அளித்துக் கொண்டிருக்கிற இவ்வுண்மையை மறவாது, உள்ளத்தில் வைத்துகொண்டு, நமது செயலிலேயே அளவு, முறை, ஒழுங்கு இவற்றைக் கடைப்பிடித்து, வாழ்தலே தெய்வ வழிபாடாகிறது.

இந்த உண்மையை உணர்ந்து, நம்பிக்கை கொண்ட மனம் என்றும் வெற்றியும், மகிழ்ச்சியும் அமைதியும் பெற்று, நிறைவு பெற்ற நிலையில் இருந்து வரும். நமது செயலுக்கு விளைவாக பிற உயிருக்கு நல்லது செய்தால் நமக்கு நன்மையும், கெட்டது செய்தால் நமக்கு துன்பமும் வரும். செயலுக்கு தக்க விளைவாக வருவதே இறைநீதி என்பது இன்றைய இளைஞர் சமுதாயம் பெறவேண்டிய உண்மை உணர்வாகும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2007

நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
தளர்வறியா மனம் தா
மனிதனும் மனோதத்துவமும்
சமுதாயமும் இளைஞர்களும்
தெய்வம் நீ என்று உணர்
முன்னேற்றத்தின் மூலதனங்கள்
வெற்றிக்கு வழி
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி