Home » Articles » வளமான பாரதம் நனவாகிட உழைப்பைப் பெறுவீர்

 
வளமான பாரதம் நனவாகிட உழைப்பைப் பெறுவீர்


செல்வசுப்ரமணியன் வெ
Author:

எதிர்கால இந்தியாவை உன்னதமாக வைக்க வேண்டுமானால் இளைஞர்கள் உழைக்கவேண்டும். இந்த உலகில் மகத்தான எல்லாக் காரியங்களையும் ஏழைகளாய் இருந்தவர்கள் தான் செய்திருக்கின்றார்கள். இளைஞர்களே தோல்வியைக் கண்டு துவண்டு விடாதீர்கள். உழைப்பாலும் அறிவாலும் எதிர்காலத்தை உருவாக்குங்கள்.

மைக்கேல் பாரடே என்ற அறிவியல் அறிஞன் அச்சகம் ஒன்றில் புத்தகங்களைத் தைத்து ஒட்டுபவனாக வேலைக்குச் சேர்ந்தான். ஓய்வு நேரங்களில் நூலகங்களை நாடிச் சென்றான். அறிவியல் துறையில் ஈடுபட்டு ஆர்வ மேலீட்டால் மின்னாக்கப் பொறி என்று சொல்லப்படும் டைனமோவைக் கண்டுபிடித்து விஞ்ஞானி எனப் பெயர் பெற்றான். உழைப்பால் உயர்ந்த அந்த விஞ்ஞானியைப் போல் இளைஞர்கள் திட்டமிட்டுப் பணி செய்ய வேண்டும்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடித்த போது வயது 32 . கிரஹாம்பெல் தொலைபேசியைக் கண்டுபடித்தபோது வயது 2 0. கம்பியில்லாத் தந்தியை மார்க்கோனி கண்டுபிடித்த போது வயது 21. அலெக்சாண்டர், நெப்போலியன் இவர்களின் போர் சாதனைகள் இளம் வயதில்தான். எனவே இளைஞ்கள் இளம் வயதில், அவசியம் உழைக்க வேண்டும். இதையே முடியரசன்

அயர்வினை அகற்றல் வேண்டும்
ஆர்ப்பொலி தவிர்த்தல் வேண்டும்

வியர்வைச் சிந்தி நாளும்
விளைவினைப் பெருக்கல் வேண்டும்

பயன்பெற விழைவோர் என்றும்
பாடுபட் டுயர்தல் வேண்டும்

செயலிவை தொழிலோர் கொண்டால்
சீர்பெறும் நமது நாடு.

என்பார்.

இளைஞர்கள் மனதை வலிமை மிக்கதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை இல்லாத மனம் தள்ளாடும் குடிகாரனைப் போன்றது. அது எங்கே வேண்டுமானாலும் விழுந்து விடக்கூடும். சோதனைகளின் துவண்டு விடாமல் இருக்கும் மனமே திட மனம்.

இளமையிலே மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தவர். சீனிவாச சாஸ்திரியார். கடின உழைப்பைப் பெற்று ஆங்கில மேதையாக உருவானார். ஆங்கிலேயர்களுக்கு ஆங்கிலச் சொற்களை எப்படிச் சரியாக உச்சரிப்பது என்று சொல்லிக்கொடுத்தார். காந்தியடிகள் தம்முடைய ஹரிஜன் பத்திரிகையை வெளியிடும் முன்பாக அவருக்கு அனுப்பி ஆங்கில நடை சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அமர்ந்தார்.

இளைஞர்கள் ஊக்கத்துடன் உழைக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கை எனும் சக்தி தான் நாம் நினைப்பதையும் விரும்புவதையும் அடைய உதவும் எமர்சனுடைய வயதை ஒருவர் கேட்டதற்கு முன்னூற்று அறுபது ஆண்டுகள் என்று சொன்னார். அப்போது அவர் உங்களுக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்காதே! என்று சொன்னார்.

அதற்கு எமர்சன் எனக்கு வயது அறுபது தான். ஆனால் நான் ஆறுமடங்கு அதிகமாக வாழ்ந்திருக்கிறேன். அதாவது முன்னூற்று அறுபது ஆண்டுகளில் எப்படி வாழ முடியுமோ அவ்விதம் இந்த அறுபது ஆண்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்” என்றார்.

இளைஞர்கள் தாம் செய்யும் பணியில் நம்பிக்கையோடும் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். அவரவர்க்கு எத்துறையில் விருப்பமோ அத்துறையில் நன்கு பயின்று வளர வேண்டும். நெப்போலியன் சிறு வயதிலேயே எதிர்காலம் குறித்துக் கனவுகளை மனத்தில் விதைத்துக் கொண்டான். பெரிய படைத்தலைவனாக ஆக வேண்டுமென்று. ஆனால் அவனுக்கு சிப்பாய் வேலை தான் கிடைத்தது. உற்சாகம் குன்றாமல் சிப்பாயாக இருக்கும் போதே மனதில் பெரிய அணி வகுப்புகளையும் படைப்பிரிவுகளையும் வழி நடத்தும் நெறிமுறைகளையும் கற்பனை செய்து கொள்வான். இறுதியில் அவன் குறிக்கோளை, திட்டமிட்ட இலக்கை அடையத் தவறவிலை. இதையே வள்ளுவரும் ஊக்கமுடமையில்

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டுன்றும் களிறு.

என்பார். உடலை மறைக்கும் அளவுக்கு அம்புகள் தைக்கப் பெற்றாலும் யானை தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல மன எழுச்சியுடையவர் அழிவு வந்தவிடத்தும் தளராமல் தம் பெருமையை நிலை நிறுத்துவர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment