Home » Articles » தொடர் இயக்கமே வெற்றியின் அடிப்படை

 
தொடர் இயக்கமே வெற்றியின் அடிப்படை


இமயஜோதி திருஞானாந்த சுவாமிகள்
Author:

நாம் செய்யும் செயல்கள் முழுமையாக வெற்றி என்னும் சிகரத்தை அடைந்து நிறைவாக வேண்டுமானால் தொடர்ச்சி (Continuity) எனும் செயலாக்கம் இடையறாது வேண்டும். ‘செயலாக்கம்’ என தொடர்ச்சியை குறிப்பது ஏனென்றால் செயல்கள் ஆக்கம் பெறுவது தொடர்ச்சியாலேதான் ஆகும். அரிசியாகிய உணவுப்பொருள், சாதம் எனும் நிலையை அடைவது சமைத்தல் எனக் கூறப்படும் பக்குவப்படுத்துதல் இடையறாது தொடர் இயக்கம் நடைபெறுவதாலே ஆகும்.

ஒரு மரக்கன்று நிறைவான பழங்களைத் தரும் பெருமரமாக மாறுவதற்கு அதைப் பேணுதல் எனும் செயலாக்கமாகியத் தொடர்ச்சி இருந்தாக வேண்டும்.

இப்பெரும் பிரபஞ்ச இயக்கத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். நம் பூமிப்பந்து எப்பொழுதும் இடையறாது இயங்கி கொண்டிருப்பதால் உயிர்கள் நிலைப்பெற்று வாழ்கின்றன. நீரின் மாறாத ஓட்டத்தினால்தான் பயிர்களும் ஏனைய உயிர்களும் செழிக்கின்றன. வெப்பத்தின் விளைவாகி காந்தக்களன் எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருப்பதாலேயே அனைத்தும் இயங்கி கொண்டிருக்கிறது. காற்று தடைபடாமல் வீசிக் கொண்டிருபதாலேதான் உயிர்கள் வாழ முடிகின்றது. மேகங்களின் தாழாத ஓட்டத் தொடர்ச்சியினாலேயே அல்லவோ அமுத மழைப் பொழிந்து உயிர்கள் அனைத்தும் தழைக்கின்றது. கோள்களின் இடையறாத இயக்கத்தினாலேதான் பருவ மாறுதல்கள் ஏற்பட்டு உயிர்கள் செழிக்கின்றன. நம் உடலில் தடை படாத இரத்த ஓட்டம் நடைபெற்றால்தான் நாம் ஆரோக்கியமாக இயங்க முடியும். சுவாசம் தங்கு தடையின்றி நிகழ்ந்தால்தான் உயிர் இயக்கம் நடைபெறும். உடலினுள் உள்ள காந்த ஓட்டம் இடையறாது இயங்குவதினாலே தான் உயிர் நிலைப்பெற்று இருக்க முடியும். இவை மூன்றும் தொடர்ச்சியாக இயங்காவிட்டால் விண் தத்துவமாகிற உயிரானது மண் தத்துவமாகிய உடலை விட்டு நீங்கிவிடும். இயற்கை பேராற்றலின் இயக்கத்தை ஊன்றி கவனித்தீர்களே ஆனால் அது இடையறாது இயங்கிக் கொண்டேதான் இருக்கின்றது. அது எப்பொழுதும் தன் இயக்கத்தை தேக்கமாகி நிறுத்துவதில்லை.

இயற்கையுடன் இயைந்து வாழ்வதில் தான் வெற்றியின் ரகசியம் இருக்கின்றது. மிக வேகமாக ஓடும் நதியைக் கடக்க வேண்டுமானால் அதன் போக்கிலேயே நீந்திச் சென்றுதான் கரையேற வேண்டும். மாறாக எதிர்மறையாக நீந்தினால் முயற்சி பயன் அற்றதாய் போய்விடும். இயற்கையாகிய இறையாற்றலை நன்கு உணர்ந்து அதன் இயக்கத்தை தெளிந்து தேர்ந்து அதனோடு இயைந்து செயல்பட்டால் எத்தகைய சோதனைகளையும் வென்று சாதனை படைக்கலாம். இதனையே சிலப்பதிகாரம், “தெய்வம் தெளிமின் தெளிந்தோரை போற்றுமின்” என இயம்புகின்றது ஆதலால் இயற்கையைத் தெளிந்து அதன் ஓட்டத்தோடு இயைந்து நற்செயல்களை தேர்ந்து தொடர்ந்து செய்து வெற்றி மேல் வெற்றிப் பெற்று வாழ்வை வளமாக்குங்கள்.

தொடர் இயக்கம் என்னும் செயலாக்கம் உங்களுள் நிலைப்பதற்கு நான்கு நிலைகளைக் கையாள வேண்டும். அவை எண்ணத் தெளிவு, நம்பிக்கை, ஊக்கம் துணிவு ஆகியவை ஆகும். மனம் ஒரு நிலைக்கண்ணாடியைப் போன்றது. நிலைக்கண்ணாடியில் அழுக்குப் படிந்திருந்தால் அதில் தோன்றும் பிம்பங்கள் தெளிவாக தோன்றாது. அதுபோலவே குழப்பமான மனதினால் எடுக்கப்படும் முடிவுகள் முதிர்ச்சி நிலையை அடையாது. ஆதலினால் சிந்தையை ஒருமைப்படுத்தி தெளிவான குறிக்கோளை நோக்கி தொடர்ந்து நடைபோடவேண்டும்.

இதனையே,

தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

என தெய்வத் தமிழ்திருமறை அறைகின்றது. அடுத்ததாக நம்பிக்கையை முக்கியமாக கைக்கொள்ள வேண்டும். உலகம் உங்களை நம்ப வேண்டுமானால் முதலில் நீங்கள் உங்களின் மீது தன்னம்பிக்கை வைக்க வேண்டும் நம்பிக்கையேதான் வாழ்வை என்றும் உயிர்ப்புள்ளதாக வைத்திருக்கும் மிகப்பெரிய ஆற்றலாகும்.

இதனை விளக்கும் ஒரு உவமான சிறுகதையைக் காண்போம்.

ஒரு குருவானவர் தன் சிஷ்யனுக்கு எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். சிஷ்யனும் முழுமையாக வித்தைகளை குருபக்தியோடு கற்றுக்கொண்டு தன் வீட்டிற்கு திரும்பினான். வீட்டில் அவனது பெற்றோர் அவனுக்கு இல்லறமாம் நல்லறத்தை ஏற்று நடத்துவதற்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து தன் குருவின் இல்லத்திற்கு ஆசீர்வாதம் பெறுவதற்காக அழைத்து வந்தான். குருவிற்கு சிஷ்யனின் மனைவி அணிந்திருந்த நிறைய நகைகளின் மீது பேராசை வந்துவிட்டது. ஆதலால் அவர் சிஷ்யனிடம் நீ சென்று பக்கத்து ஊரில் உள்ள கடைக்குச் சென்று சிலப் பொருட்களை வாங்கி வா என அனுப்பி வைத்தார். அவன் புறப்பட்டுப் சென்றபின் சிஷ்யனின் மனைவியை கொன்று நகைகளை அபகரிக்கும் பொழுது போன சிஷ்யன் வாங்கும் பொருட்கள் மீது சில சந்தேகம் ஏற்பட்டு அதனை மீண்டும் தெளிவு படுத்துவதற்காக திரும்ப வந்தான். அவன் உள்ளே வரவும் சிஷ்யன் மனைவியின் கழுத்தை குரு அறுத்து முடிப்பதற்கும் சரியாக இருந்தது.

குருவோ செய்வதறியாது திகைத்தார். சிஷ்யனோ, “சிறிதும் பதட்டப்படாமல், “குருவே! என்ன! உங்களது கருணை தாங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த சஞ்சீவி மந்திரத்தை நான் வெளிப்படுத்தி சிறப்பு பெற வேண்டும் என்பதற்காக எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி திருப்பி வரவழைத்து என் மனைவிக்கு உயிர் கொடுத்து எழுப்பும் பாக்கியத்தை கொடுத்து அருளி உள்ளீர்கள் என சொன்னான்.

பின், சஞ்சீவி மந்திரத்தை ஓதி இறைவா நான் என் குருவின் மீது வைத்திருந்த பக்தி விசுவாசம் உண்மையானதாக இருந்தால் நான் ஓதும் இம்மந்திரம் பலிக்கட்டும், என் மனைவி உயிர் பெற்று எழுந்து விட அருள் புரிவாய் என மனைவியின் மீது தீர்த்த தண்ணீரைத் தெளித்தான். அவன் மனைவியும் உயிர்ப்பெற்று எழுந்து விட்டாள். பின் குருவை மிக வெகுவாக புகழ்ந்து விடைப்பெற்றான்.

குருவிற்கோ பெருமிதம் தலைக்கேறி விட்டது. நமது சிஷ்யனுக்கே இவ்வளவு ஆற்றல் வாய்த்ததென்றால் அவனுக்கு கற்றுத் தந்த நமக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கும். இத்தனை நாள் நமக்கே தெரியாமல் போய்விட்டதே என எண்ணி இதனை மக்களிடம் வெளிப்படுத்தி சிறப்பு பெற வேண்டும் என நினைத்து ஒரு பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அனைத்து மக்களும் கூடியிருக்கும் சபையில் உங்களுக்கெல்லாம் ஒரு அதிசய அற்புதம் செய்து காட்டுகிறேன் என்று சொல்லி தன் மனைவியை மேடைக்கு அழைத்து அனைவரின் முன்னிலையில் தன் மனைவி கழுத்தை அறுத்து விட்டு பின் சஞ்சீவி மந்திரத்தை ஓதி எழுப்ப முயன்றார். அந்தோ! பரிதாபம் அவள் எழுந்திருக்க வில்லை. அவர் சிறுமைப்பட்டு காவல் கைதியாக நேரிட்டது.

இந்த உவமான கதையின் கருத்து என்ன வென்றால் உண்மையான நம்பிக்கையோடு சிரத்தையுடன் தன்னலமற்ற செய்யும் செயல்களுக்கு இயற்கையாம் இறை பேராற்றல் என்றும் துணை நின்று வெற்றிப் பெற வைக்கும். ஆனால் சுயநலமான தீய எண்ணங்களுக்கு அது என்றும் தோல்வியையே தரும். ஆதலால் உங்களுக்குள்ளும் புறமும் நிறைந்துள்ள மாபெரும் ஆற்றலோடு இணைந்து நல்லவற்றையே செய்து வாழ்க்கையை வெற்றியுடையதாக செய்யுங்கள்.

அடுத்து தொடர் இயக்கம் வெற்றிப்பெற வேண்டுமானால் ஊக்கத்தோடு செயல்களை புரிய வேண்டும். ஊக்கம் செயல்களை என்றும் உயிரோட்டமாக வைத்துக்கொள்ளும் சிறப்புடையதாகும். அதனையே திருவள்ளுவப் பெருமானும் தமது குறளில் “ஆக்கம் – அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையானுழை” என அருளியுள்ளார். இதன் பொருள் நிலையான ஊக்கத்துடன் செயல்புரிகின்றவர்களை வெற்றி தானே தேடி அவர்களை சென்றடையும் என்பதாகும்.

அடுத்த நம்மிடம் எப்பொழுதும் இருக்க வேண்டியது துணிவாகும். தன்னையும் பிறரையும், இயற்கையின் இயக்கத்தையும் அறியாமல்தான் அஞ்சும் பேதமை முழுமையாக உணருங்கள். உணர்ந்த தருணத்தை தன்னுள் விளங்கும் ஆற்றலும் இயற்கையின் பேராற்றலும் ஒன்றாகவே இருப்பதை உணர்வீர்கள். உலகம் முழுக்க ஒரே பேராற்றலின் அடிப்படையில் இயங்குவதை கண்டு உணர்வீர்கள்.. ஒரு இருட்டான பாதையில் நடக்கும் பொழுது சிறுதடையும் பெருந்தடையாக தெரியும். பெருந்தடையாக தெரிந்தும் சிறுதடையாக தெரியும். ஆதலால் அறிவு தெளிவான வெளிச்சத்தில் நடந்து நம் செயல்களை எண்ணித் துணிய வேண்டும். இதனையே திருமறை,

தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்கு

என ஓதுகின்றது.

ஆதலால் தெளிவு, நம்பிக்கை, ஊக்கம், துணிவு ஆகியவற்றை முறையாகக் கைக்கொண்டு ஆர்வம், முயற்சி, பயிற்சி தொடர்ச்சி ஆகியவற்றை நிலையாகக் கடை பிடித்து தேர்ந்த நல்லோரைத் துணைக் கொண்டு வாழ்க்கையை பெரிய வெற்றி கொண்டாட்டமாக என்றும் கொண்டாடுங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2007

ஹா(ய்)ஸ்டல்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
தலைமைக்குத்தேவை ஆறு முகங்கள்
திறமைதான் நமது செல்வம்
நிறுவனப் பயிற்சிகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்
திறந்த உள்ளம்
வாத விவாதங்கள் தவிர்ப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!
வேரில் பழுத்த பலா
மனோசக்தியின் மறுவடிவமே பிரார்த்தனை
குழந்தைத் தொழிலாளர்கள்
நல்லவை மலர்க!..
சிந்தனைத்துளி
ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை
இதுதான் வாழ்க்கை
Miss பண்ணலாமா?
நம்பிக்கை
ஒளிரும் சாதனை
மனப்பூர்வமான முயற்சி! மகத்தான வெற்றி!!
வளமான பாரதம் நனவாகிட உழைப்பைப் பெறுவீர்
நிறுவனர் பக்கம்
நோய்க்கு அல்ல மருந்து, நோயாளிக்கு
உள்ளத்தோடு உள்ளம்
கற்றல் படிப்பு
மோனலித் வாழ்க்கை
தொடர் இயக்கமே வெற்றியின் அடிப்படை