Home » Articles » ஹா(ய்)ஸ்டல்

 
ஹா(ய்)ஸ்டல்


மணவழகன் ஜே
Author:

கல்வி முடிவுகள் வெளிவந்து உங்கள் குழந்தைகள் புதியக் கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டியக் காலக்கட்டம் மதிப்பெண்கள் குறைவாகவோ அல்லது நீங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை எனில் அதன் பாதிப்பு எதிரொலித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. அதன் பாதிப்பு அவர்களை மேலும் தாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளை எந்த கல்வி நிறுவனங்களில் சேர்த்திருந்தாலும், அவர்களின் அடுத்த முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், பயன்படுத்திக் கொள்ளவும் வழிகாட்டுங்கள். அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்திற்கு சென்று பாருங்கள். Home Sick என்ற வீட்டுப் பிரிவால் பாதிக்கப்பட்டு, அதனால் படிப்பில் மனம் ஒன்றாத நிலையும் இதுவரை இல்லாத (வீட்டின் கட்டுப்பாடு) சுதந்திர நிலையில் செல்வதினால் படிப்பில் ஆர்வம் குறைந்துவிடக் கூடிய நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேற்கண்ட இரண்டும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு கல்வி நிறுவனம் மற்றும் பெற்றோர் இருவருக்கும் உரியது. இருப்பினும் இதனால் பாதிப்பு ஏற்படும் நிலையில் நஷ்டம் குடும்பத்திற்கு அதிகம் ஆகையால், பெற்றோர் இதில் கவனமுடன் இருப்பது அவசியம்.

ஹாஸ்டலில் (விடுதி) சென்று விடப்படும் மாணவர்கள் மேற்கண்ட காரணங்களால் அதிகமாக பாதிக்கப்படலாம். எனவே ஆரம்பத்தில் வாரம் ஒரு முறையோ மாதமிருமுறையோ சென்று அவர்களைப் பார்த்துவிட்டு வருதல் நன்று. மாணவர்களுக்கும் பிரிவு பற்றிய கவலையோ, கண் காணிப்பு உள்ளது என்ற மனநிலையோடு இருப்பதற்கு இது வாய்ப்பளிக்கும். பின்பு இதைப் படிப்படியே குறைத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை அவர்களைப் பார்க்கச் செல்லும்போதும் உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்கள், வார்டன், நண்பர்களைச் சந்திக்கத் தவறாதீர்கள். சென்றவுடன், “ம்.. படிப்பு எப்படி இருக்கு. எல்லாம் புரியுதா?” எனக் குடையாதீர்கள். நூலகம் போன்றவற்றுக்கு சென்று பாருங்கள். படிப்பு முடித்து கல்லூரியை விட்டு வரும்போது எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இருந்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை லேசாக நினைவூட்டுங்கள். உணவு வகைகளில் மாற்றம் இருக்கும் அதை எப்படி அட்ஜஸ்ட் செய்து கொள்வது என்பதைக் கூறுங்கள். தெரிந்தவர்கள், நண்பர்கள் விடுதி அல்லது கல்லூரிக்கு அருகே இருந்தால் மாணவர்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

வசதி இருப்பதற்காக பணத்தை கண்டபடி செலவழிக்க வாய்ப்புக் கொடுத்து விடாதீர்கள். இயன்றால் வரவு, செலவினை எழுதி வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். பணத்தின் அருமை அதை ஈட்டும் வழி உணர்ந்திட இது சிறந்த வழி. டைரி ஒன்றை வாங்கிக் கொடுத்து முடிந்தால் எழுதி வருமாறு கூறுங்கள். அவர்களது நடவடிக்கைகளில் முன்னேற்றம், விரும்பத் தகுந்த மாற்றம் இருந்தால் பாராட்டத் தவறாதீர்கள். பாராட்டைப் போன்ற ஒரு “ஊக்கி” இப்பருவத்தில் வேறில்லை.

அவர்களின் அவசியத் தேவையை விளையாட்டு உடைகள், கம்ப்யூட்டர், புத்தகங்கள் போன்றவைகளை வாங்கப் கொடுத்துவிடுங்கள். அவர்களின் அடுத்தக் கட்ட முன்னேற்றத்திற்கு இது உதவுவாதாக இருக்கும்.

மாணவரின் நடத்தையில் விரும்பத்தகாத மாற்றம் இருந்தால், அதை நீக்க உதவிடுங்கள். நல்ல நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள வழி செய்யுங்கள். சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துங்கள்.

இவை அவர்களுக்கு போரடிக்கும் முறையில் அமைந்து விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஒரு நண்பரின் பகிர்தல் (Sharning) போல இது இருக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த உறவினர் அல்லது வீட்டிற்கு அருகே உள்ள நண்பரை ஒரு முறை அழைத்துச் சென்று பாருங்கள். அவர்களை பெருமைப்படுத்துவதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

அவர்கள் கூறும் கஷ்டங்களையும் விஷயங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள். உங்களால் தீர்க்க இயன்றதை உடனடியாக சரி செய்யுங்கள். பிறவற்றிற்கு என்ன காரணம் அல்லது எப்படி அதனுடன் ஒத்துப்போவது என்பதைக் கூறுங்கள்..

ரேக்கிங் போன்றவை ஏற்பட்டால் தன்னம்பிக்கையோடு அல்லது அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளும் படியும், அது அளவுக்கு மீறும்போது அதை உங்களிடமோ நிர்வாகத்திடமோ தெரிவிக்குமாறு தைரியப்படுத்துங்கள்.

ஹாஸ்டல் வாழ்க்கை வாழ்வில் பலருக்கு அமைய வாய்ப்பு ஏற்படுவதில்லை. படிப்பு மட்டுமே முக்கிய பங்கு எடுத்துக் கொண்டு வாழ்வில் பல நட்சத்திரங்களை அடைய வழி வகுக்கும் காலக் கட்டம் அது. அந்த ஹாஸ்டல் வாழ்க்கையை “ஹாய்’ கூறி வரவேற்று பயன்படுத்திக் கொள்ள வழி காட்டுங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment