Home » Articles » சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்

 
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்


செலின் சி.ஆர்
Author:

மற்றவர்களின் மீது பொறாமைப்படுவதும், நாம் பொறாமைக்குள்ளாவதும் எப்படி யெல்லாம் நம் மனநிலையை… தொழில் வளர்ச்சியை.. வாழ்க்கை முன்னேற்றத்தை பாதிக்கின்றன என்பதை இதுவரை பார்த்தோம். இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தைப் பற்றி இப்போது பேசப்போகிறோம்.

தத்துவ நூல்களிலும், வேதப்புத்தகங்களிலும், (குறிப்பாக பைபிளில்) “மறைப்பொருள்” என்ற வார்த்தையைப் படித்திருப்போம். எந்த Context-ல் அந்த வார்த்தை சொல்லப்படுகிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். சூழல் எப்படிப்பட்டதாயிருந்தாலும் சரி. அந்த வார்த்தையின் மகத்துவத்தை, மகிமையை, வலிமையை நீங்கள் உச்சிக்க உச்சரிக்கத்தான் உணர்வீர்கள்.

ஒரு விஷயத்தில், ஏன், விதியில் கூட மறைந்திருக்கும் பொருள்தான் மறைபொருள் என்பதாக யோசித்துப் பாருங்களேன். சின்ன வயதில் நாம் ஒரு கதையைக் கேள்விப்பட்டிருப்போம். நடப்பதெல்லாம் நன்மைக்கே.. என்று சொல்லிக் கொண்டிருந்த மந்திரி, இளவரசியின் கைவிரலில் காயம்பட்டபோதும் அப்படியே சொல்ல கோபித்துக் கொண்ட இளவரசர் அவரை சிறையிலடைத்தாராம். அடுத்தநாள் வேட்டைக்குக் கிளம்பிய அரசர் காட்டுவாசிகளிடம் மாட்டிக்கொள்ள, மனிதர்களை தெய்வத்திற்கு பலிகொடுக்கும் அந்த இளம் இளவரசரை மரத்தில் கட்டிப்போட்டு விட்டார்களாம். பலிகொடுக்க தயாரான அந்த கணத்தில் அவர்களின் கண்ணுக்கு இளவரசனின் விரல்காயம் தென்பட, ஐயையோ.. இவன் உடலில் இரத்தக்காயம் இருக்கிறதே..இது தீட்டாயிற்றே… இவன் இறைவனுக்கு பலி கொடுக்க உகந்தவனல்லவே..” என ஒட்டுமொத்தக் குரலில் கூறி விடுவித்து விட்டார்களாம்.

அப்பொழுதுதான் இளவரசருக்கு தன் மந்திரி கூறிய வார்த்தைகளின் பொருள் புரிந்தது. மனதில் குற்றவுணர்ச்சி ஆட்கொள்ள, வெகுவேகமாய் அவரை அடைத்து வைத்திருந்த சிறைக்குச் சென்று, அமைச்சரே, என்னை மன்னியுங்கள். நீங்கள் சொன்னபடி “எல்லாம் நன்மைக்கே”. பாருங்கள் என் விரலில் ஏற்பட்ட இந்த காயத்தால்தான் அந்த கொடியவர்களிடமிருந்து தப்பினேன். இல்லையென்றால் என்னைப் பலி கொடுத்திருப்பார்கள். என்னை மன்னியுங்கள். உங்களை சிறையிலடைத்து கஷ்டப்படுத்தி விட்டேனே…”என்றானாம்.

கேட்டுக்கொண்டிருந்த மந்திரி, “இதுவும் நன்மைக்கே..” என்று சொல்ல ஒரே ஆச்சரியம் இளவரசருக்கு.

“என்ன சொல்கிறீர்கள்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.

“ஆம். மன்னா…. நீங்கள் என்னை சிறையில் அடைத்திருக்காவிட்டால், நானும் உங்களோடு வேட்டைக்கு வர நேரிட்டிருக்கும். உங்கள் விரலில் காயமிருப்பதால் உங்களை விட்டிருப்பார்கள். ஆனால், எந்தக் காயமுமில்லாமல் ஆரோக்கியமாய் இருந்த என்னைப் பலி கொடுத்திருப்பார்கள். இல்லையா? அதனால்தான் சொல்கிறேன், “இதுவும் நன்மைக்கென்று..” என்று பதிலளிக்க வியப்பில் ஆழ்ந்தார் இளவரசர்.

எவ்வளவு அற்புதமான, ஆழமான கருத்துடைய கதை பார்த்தீர்களா? மேலோட்டமாகப் படிக்கும்போது வேண்டுமானால், என்னவோ மிகவும் சாதாரண குட்டிக் கதை போல் தோன்றலாம். ஆனால், வாழ்க்கையில்… குடும்பம், தொழில் இவற்றில் உங்களுக்கு ஏற்பட்ட மிகவும் சோதனையான காலகட்டங்களை இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. அப்போது நீங்கள் அனுபவித்த வேதனை வலி இவற்றை நினைவில் கொண்டு வாருங்கள். அந்த வலியை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் Fade out செய்துவிட்டு, ‘இதுவும் நன்மைக்கே…’ என்ற அட்சரத்தை மெதுவாய் இந்த இடத்தில் இணைத்துப் பாருங்கள். வலிமிகுந்த அந்த கடினமான, போராட்டமான காலத்திற்குப் பிறகு உங்களுக்கேற்பட்ட திருப்புமுனை…அல்லது சந்தோஷமான நிகழ்வை நினைவு கூர்ந்து… அப்படியே அதைக் கண்முன் கொண்டு வாருங்கள்.

அளவிட முடியாத துன்பத்திற்கும், அலைமோத ஆரம்பிக்கும் ஆனந்தத்திற்கும் இடைப்பட்ட அந்த காலகட்டம்தான், ‘எல்லாம் நன்மைக்கே..’ என்று நீங்கள் நினைக்க வேண்டிய தருணம். அந்த மந்திரியைப் போல், “சிறையில் தானே அடைபட்டேன், ஆனால் மரணத்திலிருந்து தப்பித்து விட்டேனே. இது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று நினைத்து மகிழும் மனப்பக்குவம் நமக்கு இல்லை. மரணம் நேர்ந்தால் கூட பரவாயில்லை, சிறையில் அடைபடக்கூடாது.. என்ற முரண்பாடான சிந்தனைதான் நமக்குள்ளிருக்கிறது. நிரந்தரமான மகிழ்ச்சியை அல்லது நீண்டகால மகிழ்ச்சியை மறந்துவிட்டு தற்போதைய கஷ்டத்தை, தற்காலிகமான, குறுகிய கால துன்பத்தை பெரிதுபடுத்தி அலட்டிக் கொள்கிறோம். இப்படி பதட்டப்படுவதால் தேவையில்லாத டென்ஷன் தலைக்கேறி கொஞ்சம் நஞ்சமிருக்கும் மன நிம்மதியும் கெட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் பரிதாபமான நிலைதான் மிஞ்சும்.

சாலையில் நடந்து போகும்போது ஆங்காங்கே சில புதர்களும், கற்களுமிருப்பது இயல்புதான். அதற்காக அதே சாலையில் அமைந்திருக்கும் வீட்டிற்கோ அலவலகத்திற்கோ, ஹோட்டலுக்கோ செல்லாமல் புறக்கணிக்கிறோமா… ? இல்லையே… பிறகு ஏன், தொழில் வேலையில்.. ஒரு சிறிய தடை தடை, சுணக்கம், இடையூறு, தோல்வி ஏற்பட்டால் பதறிப்போகிறோம். அப்படியே ஒருவேளை மிகப்பெரிய கஷ்டமே ஏற்பட்டு விட்டதென்றாலும் பதட்டப்படாமல் அந்த சூழ்நிலையை ஆராயுங்கள். இப்போது, இப்படியொரு நிலைமை வந்திருக்கிற தென்றால், இந்த சமயத்தில் நாம் எடுக்க வேண்டிய முடிவு என்ன? இந்த சூழ்நிலை நமக்கு உணர்த்தும் மறைபொருள் என்ன? என்ன செய்தி இந்த தோல்விக்குள் புதைந்திருக்கிறது? என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு விஷயத்தை நான் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ‘தோல்விதான் வெற்றிக்கான படிக்கட்டு…’ என்று கேள்விபட்டிருக்கிறோம். ஆனால், நான் சொல்கிறேன். அதற்கும் மேல் சக்தி வாய்ந்தது. மகிமை வாய்ந்தது. ‘தோல்வி தோல்வி வெற்றிக்கான புதையல் தோண்ட தோண்ட பலவிதமான எதிர்பாராத பரிசுகளை அள்ளித்தரும் புதையல்.

தோல்வி என்னும் இந்தப் புதையலுக்குள் மூழ்கி முத்தெடுக்க நீங்கள் தயாரா? காத்திருங்கள்.. அந்த ரகசியத்தை அடுத்த இதழில் சொல்கிறேன்.

-தொடரும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2007

ஹா(ய்)ஸ்டல்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
தலைமைக்குத்தேவை ஆறு முகங்கள்
திறமைதான் நமது செல்வம்
நிறுவனப் பயிற்சிகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்
திறந்த உள்ளம்
வாத விவாதங்கள் தவிர்ப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!
வேரில் பழுத்த பலா
மனோசக்தியின் மறுவடிவமே பிரார்த்தனை
குழந்தைத் தொழிலாளர்கள்
நல்லவை மலர்க!..
சிந்தனைத்துளி
ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை
இதுதான் வாழ்க்கை
Miss பண்ணலாமா?
நம்பிக்கை
ஒளிரும் சாதனை
மனப்பூர்வமான முயற்சி! மகத்தான வெற்றி!!
வளமான பாரதம் நனவாகிட உழைப்பைப் பெறுவீர்
நிறுவனர் பக்கம்
நோய்க்கு அல்ல மருந்து, நோயாளிக்கு
உள்ளத்தோடு உள்ளம்
கற்றல் படிப்பு
மோனலித் வாழ்க்கை
தொடர் இயக்கமே வெற்றியின் அடிப்படை