Home » Articles » நிறுவனப் பயிற்சிகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்

 
நிறுவனப் பயிற்சிகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்


சூரியன்
Author:

சில சமயங்களில் என்னை கலந்து ஆலோசிக்காமல் என் மேல் அதிகாரிகள் முடிவுகளை எடுக்கிறார்கள். இதனால் என் மனம் வருத்தமும், கோபமும் அடைகிறது. இதை எப்படி சமாளிப்பது?

முதலில் அவர்கள் எடுத்த முடிவு சரியானதாக நீங்கள் நினைத்தால் அதனை நடைமுறைப்படுத்துங்கள். தவறானதாக இருந்தால் ‘என்னை கேட்காமல் செய்ததால் எப்படியோ போகட்டும் என்று வெறுப்புடன், அலட்சியத்துடன் செயல்பட வேண்டாம்.

உடனே சென்று அந்த முடிவினால் வருகிற சாதக – பாதகங்களை கூறுங்கள். இதனை பண்புடன் பொறுமையாக விளக்குங்கள். அதையும் மீறி செய்யச் சொன்னால் செயல்படுத்துங்கள் (Obey and then report)

இந்த நிகழ்ச்சி முடிந்ததற்கு பிறகு உங்களது மேலதிகாரியை அனுமதி வாங்கி தனியே சென்று சந்தியுங்கள். பின் கீழ்க்கண்டவாறு கூறுங்கள்.

“என்னை கலந்திருந்தால் என் பகுதியை நான் நேரடியாக கொண்டிருப்பதால் பல விபரங்களை உங்களுக்கு நான் தந்திருக்க முடியும். அதன் பிறகு முடிவுகளை நீங்களே எடுக்கலாம். அது நிர்வாகத்திற்கு இன்னும் கூடுதல் பயனாக இருந்திருக்கும்”.

பின் தொடர்ந்து செயல்படுங்கள். காலம் செல்ல செல்ல உங்களை புரிந்து கொள்வர். அதன் பிறகு கருத்து முரண்பாடுகளினால் வருகிற பிரச்னைகள் தவிர்க்கப்படும்.

பொதுவாக நிறுவன வளர்ச்சியை முன் வைத்து செயல்பட்டால் Ego உணர்வுகளை பின் வைத்து செயல்பட்டால் நிறுவனம் வளரும். இதுபோல் இயங்குகிற மனிதர்களை நிர்வாகம் புரிந்து கொள்கிறபோது அவர்களுக்கு தனி மரியாதையும் மதிப்பும் ஏற்படும்.

நான் பணி செய்வது ஒரு பெரிய நிறுவனம். எனக்கு அமைந்த வேலை எனக்கு பிடிக்கவில்லை.. அது என் திறமைக்கு பொருத்தமானதாக இல்லை என்ன செய்வது?

இப்போதைக்கு அமைந்திருக்கும் பணியை செவ்வனே செய்து வாருங்கள். மனதளவில் இது ஒரு தற்காலிகமானது என்று நினைத்துக்கொள்ளுங்கள். (Temporary Landing) ‘இந்நிலை மாறும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு கொண்டு இருங்கள். அதே சமயத்தில் உங்களது திறமைக்கு பொருத்தமான வேலை எந்த பகுதியில் இருக்கிறது என்பதை அறிந்து அந்த பகுதிக்கு செல்ல முறைப்படி தொடர்ந்து பயிற்சி எடுங்கள். அந்த பகுதியில் பணி கிடைத்தால் எந்த வகையில் நீங்கள் நிறுவனத்திற்கு பயனாய் இருப்பீர்கள் என்பதை நிர்வகாத்திற்கு தெரியப்படுத்துங்கள்.

மனக்காட்சியில் அந்த பகுதிக்கு மாறுதல் ஆவது போலவும், அங்கு சென்று நீங்கள் சிறப்பாக பணி புரிவது போலவும் நம்பிக்கையுடன் காட்சிகளை மனத்திரையில் பார்த்துக்கொண்டு வாருங்கள். மாற்றம் நிகழும்.

என் மேல் அதிகாரி கோபத்துடன் திட்டுகிறார். சில சமயம் பலர் முன்னிலையிலும் திட்டுகிறார். இதை எண்ணி மனம் சங்கடப்படுகிறது. என்ன செய்வது?

நீங்கள் தவறு செய்திருந்தால் தைரியமாக ஒத்துக்கொள்ளுங்கள். இதற்கும் ஒரு கம்பீரம் வேண்டும். தவறு செய்யாத பட்சத்தில் எதிர்த்து வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்கள் பக்கத்தில் உள்ள நியாயத்தை எடுத்துச் சொல்லுங்கள். சம்பவம் முடிந்ததற்கு பிறகு தனியே சென்று உங்கள் மேல் அதிகாரியை பார்த்து சொல்லுங்கள்.

தயவு செய்து என்னை பலர் முன்னிலையில் திட்ட வேண்டாம். என்னை தனியாக கூப்பிட்டு சொன்னாலே எனது தவறுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். திரும்ப அது நிகழாமலிருக்க வேண்டிய முயற்சிகளை செய்வேன்” என்று கூறுங்கள். பின் அவரை மனதுக்குள் நலமாக இருக்க வாழ்த்துங்கள். அவர் திட்டியதை நினைத்து வெறுத்துக் கொண்டு இருந்தால் மனம் அமைதி இழக்கும். பிரச்னையை அவர் நிலையில் நின்றும் பார்க்கவும். திரும்ப திரும்ப வாழ்த்தும்போது மனித உறவு இனிமையாகும்.

இன்னும் அதிகமாக விளக்கம் பெற என்னுடைய ‘டென்ஷன், கோபம், கவலை, போக்குவது எப்படி? என்ற நூலை படிக்கவும்.

பொதுவாக எந்த பணியாயிருந்தாலும் வளர்ச்சி, வெற்றி,மகிழ்ச்சி அடைய என்னென்ன செய்யவேண்டும்?

1) செய்யும் தொழில் பற்றிய அறிவை பெருக்கிக் கொள்ளவேண்டும். அது சம்பந்தப்பட்ட அத்தனை விபரங்களையும் சேகரித்துக் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ‘அவரைக்கேட்டால் தெரியும் என்றும் மற்றவர்கள் உங்களைப் பற்றி சொல்ல வேண்டும்.

2) தொழிலை ஈடுபாட்டுடன் முழு கவனத்துடன் ஆர்வத்துடன் செய்து செய்து திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

3) எப்போதும் தன்னம்பிக்கை, உற்சாகம், உடன்பாட்டு அணுகுமுறை, சக்தி இவை நிறைந்த மனதுடன் தயார் நிலையில் இருங்கள்.

4) நீங்கள் இருந்தாலும் தெரிய வேண்டும். இல்லாமல் இருந்தாலும் தெரிய வேண்டும். அதாவது உங்களுடைய “Presence & Absence” உணரப்படல் வேண்டும்.

5) நிறுவனத்தை சார்ந்து நீங்கள் இல்லாமல் உங்களைச் சார்ந்து நிறுவனம் இருக்கிற அளவுக்கு தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நிறுவனத்திற்கு மிகவும் அவசியமானவராக மாறவேண்டும் (Special Skills).

6) குறித்த நேரத்திற்கு பணிக்குச் செல்லுதல் அதிகமாக விடுமுறை எடுக்காத தன்மை, முன்கூட்டியே திட்டமிட்டு விடுப்பு எடுக்கிற பழக்கம், நிறுவன விதிமுறைகளை அறிந்து கடைப்பிடிக்கிற தன்மை புதிதாய் கற்றுக்கொள்வதில் ஆர்வம். வெற்றிக்கும் தோல்விக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை. நன்பகத்தன்மை (Reliability& Availability) ஆகிய ஒழுங்குத்தன்மை (Decipline) மிக்கவராக இருத்தல் வேண்டும்.

7) ஒவ்வொரு நாளும் எல்லா வகையிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். (அறவு, திறமை, சக்தி, செயல்திறன்) (Continuous improvement)
மேற்கண்டவற்றை பின்பற்றினால் எந்த தொழில், எந்த நிறுவனம், எந்த ஊர், எந்த நிலையில் இருந்தாலும் தொழில் வாழ்க்கையில் வளர்ச்சி, வெற்றி, மகிழ்ச்சி, நிச்சயம்.

கையால் தொழில் செய்தல் பூஜை பகர்வது மந்திரம் என்பது போல் பணி செய்து ஒவ்வொரு நாளையும் ஆனந்த மானதாக ஆக்குவதற்கு நல்வாழ்த்துக்கள்!
(நிறைந்தது)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment