Home » Articles » வேரில் பழுத்த பலா

 
வேரில் பழுத்த பலா


கமலநாதன் ஜெ
Author:

மனம் என்பது எல்லையற்ற ஆற்றல்களை உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் கொடுக்கக்கூடிய அட்சய பாத்திரம். மனம் என்ற குளம் பாசிபடியாமல் தூய்மையான நீர் நிலையைத தாங்கி நின்றால் அது ஊர் முழுவதும் அதாவது உடல் முழுவதும் சுறுசுறுப்பு, வேகம், சக்தி, பிறந்து செயல் ஊக்கம் பரவ வழிவகுக்கும்.

“FACE IS THE INDEX OF THE MIND”
(முகம் என்பது மனதின் செயல்பாட்டை எடுத்துக்காட்டும் அடையாளம்) என்பார்கள். மனதில் சோர்வு புகுந்திருக்கிறதா அல்லது சுடர் விடும் ஆற்றலும் மகிழ்ச்சியும் நிரம்பி வழிகின்றதா என்பதை முதலில் எடுத்துக்காட்டுவது முகமே.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

என்பது திருவள்ளுவர் மனதிற்கும் முகத்துக்கும் உள்ள தொடர்பினை விவரிப்பதற்காக எழுதியுள்ள குறள். தனக்கு அருகில் இருப்பதை பளிங்கு அப்படியே பிரதிபலிப்பது போல முகம் என்பது மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் என்ற இக்கருத்து மனதை, மனதின் பல்வேறு உணர்ச்சி நிலைகளை அப்படியே முகத்தில் காணலாம் என்ற உண்மையை அப்பட்டமாக்குகிறது.

மனதின் கவலைகள் அதிகம் இருந்தால் வயிற்றில் ஜீரணத்திற்கு ஏதுவாக இருக்கும். சுரப்பு நீர் அதிகமாக சுரந்து வயிற்றிலும் குடற்பகுதியிலும் புண்களை ஏற்படுத்தும். தூக்கமின்மை, உடல் நடுக்கம், இருதயக்கோளாறுகள், அதிக ரத்த அழுத்தம் ஆகியவையும் அடுத்து வரும்.

ஆற்றும் கடமையை மறக்காதே – புயல்
காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே.
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே – நெஞ்சில்
பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே
வெற்றியைக் கண்டு மயங்கிவிடாதே
தோல்வியும் தொடர்ந்து வரும் – நீ
தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதே
தொடர்ந்தொரு வெற்றி வரும்.

என்று கவியரசு கண்ணதாசன் ‘மனதிற்கு அறிவுரை கூறிகின்றார். மனம் தோல்வியினால் துவண்டுவிடாமல் உறுதியோடு இயங்குமானால் உடல் பலம்பெற்று ஊக்கத்தோடு செயல்பட ஏதுவாகும். ஹெலன் கெல்லர் போன்றவர்கள் உடல் உறுப்புகள் பழுதான நிலையிலும் உள்ளத்தின் உறுதியினால் செயற்கறிய வெற்றிகளைக் குவித்தார்கள். உடல் எவ்வளவு பலம் பொருந்தியதாக இருந்தாலும் மனம் சோர்ந்து விட்டால் அம்மனிதன் வெற்றி காண இயலாது.

பூமியில் இருப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
இருக்குமிடம் எதுவோ
நினைக்குமிடம் பெரிது
போய்வரும் உயரமும்
புதுப்பது உலகமும்
அவரவர் உள்ளங்களே

என்ற கண்ணதாசன் வரிகள் வாழ்வில் உயர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஒரு மனிதனின் உள்ளம்தான் உள்ளடக்கி இருக்கிறது என்று தெளிவாக எடுத்துரைக்கிறது.

இன்றைக்கு தன்னம்பிக்கை மனதின் வலிமை, உள்ளத்து எண்ணங்களால் உயர்வடைய வழி என்று உலக முழுவதும் பேசுகிறார்கள். தமிழிலும் தன்னம்பிக்கை மனதின் ஆற்றல் இவை குறித்த சிந்தனை நூல்கள் நிறைய வருகின்றன. ஆனால் சுமார் 75 ஆண்டுகட்கு முன்பே ஜேம்ஸ் ஆலனின் வலிமைக்கு மார்க்கம் என்ற தன்னம்பிக்கை நூலினை மொழிபெயர்த்து மனதின் எல்லையற்ற ஆற்றல்களை வெளிப்படுத்தி உள்ளார் வ.உ.சி. அவர்கள். ஆம், நமது கப்பலோட்டிய தமிழர் அவர்கள்தான்.

“புருஷர்களும், ஸ்திரிகளும், வலியராயினும் எளியராயினும் கற்றாராயினும் கல்லார் ஆயினும் இல்வாழ்வார் ஆயினும் துறவியாயினும் சகல வெற்றிகளுக்கும் சகல சித்திகளுக்கும் அகமே காரணம் என உணர்தல் வேண்டும்.” என்பதே அந்நூலின் மையக்கருத்து.

“எல்லாப் பொருட்களையும் காட்சிக்கு கொண்டு வருவன மௌனமும் வெற்றியும் பொருந்திய நினைப்புச் சக்திகளே நம்பிக்கையும் காரிய நோக்கமுமே வாழ்க்கையின் பலம். உறுதியான தெய்வ நம்பிக்கையும், அசையாத செயல் சிந்தனையும் எக்காரியத்தையும் முடிக்கும். நம்பிக்கையை நல் எண்ணங்களை மனதில் தேக்கினால், செய்து முடிக்க வேண்டிய காரியத்தை நோக்கி நினைப்புச் சக்திகள் செல்லுகின்றன’. என்ற வ.உ.சி.யின் நூல் கருத்து இன்றைக்கு நாம் பேசுகின்ற தன்னம்பிக்கைச் சிந்தனைதான்.

‘யானையின் பலம் தும்பிக்கையிலே மனிதனின் பலம் நம்பிக்கையிலே’ என்பார்கள். மனம் உறுதியான நம்பிக்கையை பற்றி நிற்குமானால் உடலின் ஒவ்வொரு உறுப்பும் சோர்வகற்றி சுறுசுறுப்பாக செயல்படும் முட்செடிகள் நிறைந்த கானகமா என்று கேட்டால் இரண்டும்தான். பார்க்கும் பார்வையில் தான் வேறுபாடு உள்ளது. நம்பிக்கையோடு பார்த்தால் மலர்வனம் நம்பிக்கை இல்லாமல் பார்த்தால் முட்செடிகள் நிறைந்த கானகம்.

‘என் விதியின் தலைவன் நானேதான் என்று நம்ப வேண்டும். நம்மை உயர்த்துவதும் தாழ்த்துவதும் யாரோ அல்ல; நாமேதான். மனதிற்கு நல்ல பயிற்சி கொடுத்து ஆக்கபூர்வமான எண்ணங்களையே தாங்கி நிற்க பழக்க வேண்டும். சற்று ஏமாந்தாலும் ‘மனம்’ நம்மை பாதாளத்தில் தள்ளி விடலாம். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “உன் மனதிற்கு நீதான் எஜமானான் என்ற உணர்வோடு மனதை ஆட்சி செய் என்கிறா அறிஞர் பி.எஸ். ஆச்சார்யா.

“மனம் தன்னைத்தானே உந்தித்தள்ளி தவறான பாதைக்குச் சென்று அடிபட்டு மீண்டும் மீண்டும் சரியான பாதைக்கு வரும் யந்திரம்” என்கிறார் மேக்ஸ்வெல் மால்ட்ஸ். ஒருவன் தீமையான செயலில் ஈடுபடுகிறான், அது அவனுக்கு மகிழ்ச்சி தருகிறது. கொஞ்சம் லாபம் கூட கிடைக்கிறது. யாரும் அந்த தீமையை அவன் செய்வதை கண்டறியவில்லை என்ற திருப்தி கூட வருகிறது. ஆனால், இதெல்லாம் தற்காலிக இன்பம்தான். இதனால் ஏற்படும் ஆபத்துக்கள், துன்பங்கள் கொஞ்ச நாட்களில் அவன் மனதுக்கு புலப்பட மனம் துயரத்தில் ஆழ்கிறது. தன்னிரக்கம் கசிகிறது. திகைப்பும் மயக்கமும் உண்டாகின்றன. ஆனால் இதிலிருந்து அவன் மீண்டுவிட்டால், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால், ஏற்பட்ட துன்பம் மறைந்து ஆனந்தம் உண்டாகும். இழப்புக்குப் பின்வரும் ஏற்றம் எல்லையற்ற மகிழ்ச்சியை நிம்மதியை, நிறைவைத் தரும்.

“மன நிம்மதி என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்; ஆடம்பரம் எனபது நாமே தேடிக்கொள்ளும் வறுமை என்பார் பேரறிஞர் சாக்ரடீஸ். மனம் தன்னிரக்கம் என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டால் காயப்பட்டுப் போகின்றது. இந்தக் காயம் ஐம்புலன்களுக்கும் பரவி மனிதரை பலவீனப்படுத்துகிறது. மனம் உறுதிமிக்க பொலிவை அடைந்தால், உடல் உறுப்புகள் செயல்திறம் பெறுகின்றன. இப்போது சொல்லுங்கள், மனதின் சீர்கெட்ட எண்ணங்களால் உடலின் உறுதி தளர்ந்து அழிவை நோக்கிப் போகலாமா அல்லது மனதை வலிமைப்படுத்திக் கொண்டு செயற்கரிய சாதனைகளை செய்து வெற்றி பெறலாமா?

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment