Home » Articles » மனோசக்தியின் மறுவடிவமே பிரார்த்தனை

 
மனோசக்தியின் மறுவடிவமே பிரார்த்தனை


மாசிலாமணி ந
Author:

மனித மனங்கள் ஒரு உயிருள்ள வானொலிப் பெட்டியைப்போல, (ஜீவ ரேடியோ) மனத்தால் சிந்தித்தல், யோசித்தல் அதவாது கண்களை மூடி மனத்தை இந்த பிரபஞ்சத்தை நோக்கி நுட்பமாக செலுத்துத் அதவாது டீயூன் (TUNE) செய்தல் சில சமயங்களில் நெற்றிப் பொட்டு (ஆக்ஞா சக்ர்தில் ) எழுது கோல்களாலோ விரல்களாலோ லேசாக தட்டி மூளை நரம்புகளை லேசாக தட்டி மூளை நரம்புகளை தூண்டி எந்தப் பொருள் குறித்த தீர்வு தேவையோ புதிய செய்திகள் தேவையோ அந்த தகவல்களை பிரபஞ்சக் களத்தில் பதிவாகியுள்ள பேரறிவிலிருந்து பெறலாம்.

மனித மனத்தில் உருவாகிற எண்ணங்கள் சக்தியாகையால் உருவான மறுவினாடியே அது நம் மூளையை விட்டு உடலை விட்டு பிரபஞ்சத்தில் பரவத் தொடங்கிவிடுகிறது. இதனை ஒரு உயிருள்ள வானொலி ஒலிபரப்பு நிலையம் செயல்படுவதாக நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சாதாரணமாக ஒருவர் பேசுகின்றொலி ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் மற்றவர்களுக்கு கேட்பதில்லை. ஒரு ஒலி பெருக்கியைப் பயன்படுத்துகிறபோது ஒலியின் தன்மை பல மடங்காக (AMPLIFY) பெருக்கப்பட்டு இன்னும் அதிக தூரத்திற்கு கேட்கச் செய்ய முடிகிறது. அதே ஒலி நுண் அலைகளாக (Microwave) மாற்றப்படும்பொழுது அது மிக நீண்ட தூரம் சென்று மீண்டும் நுண் அலைகள் சாதாரண அலைகளாக மாற்றப்பட்டு கேட்கச்செய்கிறது.

மனித மனத்தின் எண்ணங்களும் இப்படி நுண் அலைகளாக மாற்றப்பட்டால்தான் அது அதிக தொலைவு ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவும்.

சாதாரணமான எண்ணங்கள் இப்படி பரவினாலும் வேகாமாக வெகு தொலைவிற்கு செல்லாது.

ஒவ்வொரு மனித மனத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் (FREQUENCY) எண்ணங்கள் ஒலிபரப்பாவதால் அதே அலை வரிசையில் மனத்தை வைத்திருப்பவர்களின் மூளையை அது தாக்கி அங்கு அந்த சிந்தனை தொடர்பான சிந்தனைகள் தோன்றக் காரணமாக அமைகிறது.

இந்த நிகழ்வுகளை ஒரு சோதனைச்சாலையில நிரூபணமாக செய்ய முடியாது. ஆயினும் ஒரு பேருண்மையை நாமனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதாவது ஒத்த எண்ணமுடைய எண்ண அலைவரிசையையுடைய மனிதர்கள் மட்டுமே மனப்பூர்வமான நிறைவான உணர்வுப் பூர்வமான நட்பில் நிலைக்க முடியும்; நண்பர்களாக வாழமுடியும்.

மாறுபட்ட எண்ண அலைவரிசையுடையவர்கள் நண்பர்களாக இருக்க இயலாது. சில சமயம் மாறுபட்ட எண்ணமுடையவர்கள் சில காலம் ஒன்றாக இருப்பார்கள். ஆனால் அது மனம் இணையாத உடல்கள் மட்டும் அருகில் இருக்கும் போலியான தோற்றம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலி, கபட நட்பாகத்தான் இருக்க முடியும்.

ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்பது உலக இயற்கை. விதி, நியதி. இது மாறாதது.

எண்ணங்களைப் பொருத்த மட்டில் தன்னை ஒத்த எண்ணங்களை, தன்னை ஒத்த சிந்தனை உள்ள மனிதர்களை கவர்ந்து இழுப்பது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

“கற்றாரைக் கற்றாரே காமுருவர்” என்பதும், “பாம்பின்கால் பாம்பறியும்” என்கிற சொற்றொடர்களும் இந்த பிரபஞ்ச எண்ண விதிகளின் படிதான்.

இல்லை, போதவில்லை, வறுமை பற்றாக்குறை, பஞ்சம் என்று வாடிக்கையாகப் பேசுபவர்கள் வறுமை எண்ணங்களையும், வறுமையிலும் பற்றாக்குறையிலும் பரிதவிப்பவர்களையும், ஏழைகளையும், வறுமைச் சூழலையும் வாழக்கையில் கவர்ந்து இழுத்து மேலும் மேலும் வறுமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஆனால் வளமை எண்ணம் உடைய செல்வந்தர்கள் வளமான வணிகத்தையும் வரப்போகிற வருமானத்தையும் வளமான வணிகம் செய்கிற நண்பர்களையும் பிரபஞ்ச விதிப்படி ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்கிற விதிப்படி ஈர்த்து வசதியான வளமான வசந்த வாழ்க்கை விளைகிறது.

ஒருவேளை உங்களிடம் இன்றைக்கு பணமில்லை என்றாலும் நாளை வரப்போகிற பணத்தை செல்வத்தை எண்ணி வளமான சிந்தனையை மனத்தில் இருத்துங்கள்.

“POVERTY BEGETS POVERTY” “RICH BECOMES RICHER” பிச்சைக்கார வறுமை எண்ணம் ஏழ்மையை கொண்டு வருகிறது. செல்வ மனநிலை வளமான வாழ்க்கையை வருவிக்கிறது.

இந்த எல்லாவற்றையும் தீர்க்கமாக சிந்தித்த “மனவளக்கலை” என்கிற மார்க்கத்தை தமிழ் மக்களுக்குத்தந்த தவசீலர் மகரிஷி வேதாத்திரி அவர்கள் “வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தி வரவேற்கச் சொன்னதும் வாழ்த்தச் சொன்னதும் இந்த பிரபஞ்ச நியதியையும் விதியையும் விஞ்ஞானபூர்வமாக அறிந்ததன் விளைவே.

மனிதர் தங்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் அடைய முயற்சி செய்கிறார்கள். முயற்சிகள் தோல்வியடைகிற பொழுது கடவுளிடம் கேயேந்த தொடங்குகிறார்கள்.

இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

உண்மைதான். இந்த பிராத்தனையை ஏன் தொடக்கத்திலேயே செய்யக்கூடாது. கிருத்துவ விவிலியம் பிரார்த்தனையைக் குறித்து இப்படி கூறுகிறது.

“ஆதலால் நீங்கள் ஜெபம்பண்ணும் போது, எவைகளைக்கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்” – மாற்கு 11:24

பிரார்த்தனை விஞ்ஞானப்பூர்வமானது விசுவாசியுங்கள், உணர்ச்சிகள் இவையாவும் ஒன்றிணைவதால் இந்தப் பிரபஞ்சம் முழுவது பரவி தக்க நபரைத் தாக்கி அந்த மனிதரின் மூலம் நம் எண்ணங்கள் ஈடேறுவதற்கான சூழல் வாழ்க்கயில் உண்டாகிறது.

அற்புதத்தை உருவாக்குகிற அற்புதங்களை நிகழ்த்துக்கிற ஆற்றல் இப்படித்தான் உருவாகிறது.
காதலாகி கசிந்து கண்ணீ மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாய வே

என்று இந்த கருத்தை வலியுறுத்துகிறது. திருஞானசம்மந்தரின் தேவாரப் பாடல்.

பிரார்த்தனையை ஆன்மிக அர்த்தத்தில் பார்க்காமல் ஒரு சுயக்கருத்தேற்றம் (AUTO SUGGESSION) என்று இறைநம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் இதனை வாழ்க்கையில் வெற்றியடைய பின்பற்ற வேண்டும்.

பிரார்த்தனையை அமைதியாக தனிமையில் (தியானம் செய்வதுபோல) ஒரு அறையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட படம் அல்லது இலை முன்பு (சூழல் அழகாக இருந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும் எதிர்மறை சிந்தனைகள் உருவாகாது) மனம் கமழும் சூழலில் ஆச்சார இயம – நியம விதிகளின்படி குளித்துவிட்டு ஈர உடையுடனோ அல்லது குளிர்ந்த உடலுடனோ (அப்போதுதான் ஆழ்மனம் விழிப்படையும்) நினைவு மன செயல்பாடுகள் ஒடுங்க ஆழ்மனம் விழிக்க எண்ண அலைகளின் போக்குவரத்து குறைவாக இருக்கும் பிரம்ம முகூர்த்த வேளைகளில் (அதிகாலை 3.00 மணியிலிருந்து 6 மணிக்குள் சூரியன் உதிப்பதற்கு முன்) நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் உணர்ச்சிபூர்வமாக சங்கல்பிக்கிற ஆசைகள், அபிலாஷைகள் தீர்மானங்கள் விஞ்ஞான விதிகளைப் போல செயல்பட்டு விளைவுகளை உருவாக்கும். நினைத்தது நிறைவேறும்.

இதே விஞ்ஞான முறை பிரார்த்தனை தான் கிருத்துவ பெந்தகொஸ்தே என்ற பிரிவினர்களும் விசுவாசத்துடன் உணர்ச்சி பூர்வமாக செய்கின்றனர்.

ஏன் இந்து மதத்திலும் கூட வாழ்க்கையில் விரும்பிய சில காரியங்கள் நடைபெற வேண்டி நம்பிக்கையோடு உணர்ச்சி பொங்க கரகம் எடுத்தல், காவடி ஆடுதல், தாரை தப்பட்டை முழங்க பூஓடு எடுத்தல் மாவிளக்கு, விளக்கு பூஜை செய்தல் போன்ற சடங்குகளும் சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. காலப்போக்கில் இந்த செயல்பாடுகளின் அடிப்படை தன்மைகள் மாறி இன்றைக்கு ஒரு பொழுதுபோக்கு, மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளாக மாறிவிட்டன.

டாக்டர் பண்டிட் ஜி. கண்ணைய யோகி என்கிறவர் சென்னையில் வாழ்ந்து மறைந்த ஞானி. “மானச யோகம்” என்கிற தன்னுடைய நூலில் அவர் எண்ணங்களைப்பற்றி அற்புதமான செய்திகளையும் விளக்கங்களையும் விரிவாக தந்திருக்கிறார்கள்.

ஒரு உதாரணம்: வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்காக வாங்கித்தரும் மோட்டார் கார், பஸ் போன்ற பொம்மைகள் பாட்டரி மின்சாரத்தினாலோ அல்லது சாவி கொடுப்பதன் மூலமோ இயங்குபவைகள். அவைகளை தரையில் வைத்து இயக்கிவிட்டு அதன் ஒரு பாதையில் ஏதோ மரக்கட்டையோ ஒரு கனமான புத்தகத்தையோ குறுக்கே வைத்து தடையை ஏற்படுத்தினால் அந்த பொம்மை முன்னேறிச் செல்ல முடியாமல் நிற்கும்.

எறும்புகள் செல்லும் பாதையில் இதுபோல தடைகளை ஏற்படுத்தினால் அந்த எறும்புகள் தடையைத் தாண்டி தடையின் மீது ஏறியோ அல்லது வலமாகவோ இடமாகவோ திரும்பி பாதையை மாற்றி தன் பயணத்தை தொடருகிறது.

பொம்மைக்கும் எறும்புக்கும் செயல்பாடுகளில் உள்ள வேறுபாடு எதனால் என்று சிந்தித்தால் ஒன்றை அறியலாம். அதாவது எறும்பின் அறிவு, எண்ணம் செய்லபடுவதால் செயல்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்தது. பொம்மைக்கு ‘எண்ணம்’ இல்லை. செயலில் மாற்றம் ஏற்படுவதில்லை.

வெளியூரில் உள்ள நண்பரின் விலாசத்தை தந்து அந்த ஊருக்கு வேறு ஏதோ ஒரு வேலை விஷயமாக செல்லும் உள்ளூர் நண்பரிடம் ஒரு பொருளைக் கொடுத்து சேர்ப்பித்துவிட்டு வரச்சொன்னால் உள்ளூர் நண்பர் தன் அறிவாலும் முயற்சியாலும் அவ்வாறு செய்வார் .

இதுபோலவே நம்மூரில் கிடைக்காத ஒரு பொருளை வெளியூரில் வாங்கிவருமாறு உறவினருக்கோ நண்பருக்கோ வேண்டுகோள் விடுத்தால் அவர்கள் அவ்வாறே அந்த ஊர்களுக்குச் செல்லும் பொழுது தேடிப்பிடித்து முயற்சி செய்துத வாங்கிவருவார்கள். அறிவு என்கிற எண்ணமும் முயற்சி என்னும் முனைப்பும் உடலை தூண்டி, இயக்கி அவ்வாறு செய்யத் துணைபுரிகிறது.

இந்த மேற்கண்ட பணிகளைச் செய்த நண்பர்கள், உறவினர்கள் இவர்களுக்கு தகவல்களைத் தந்துவிட்டு, அவர்களின் அறிவாகிய எண்ணத்தில் பணிக்கான முனைப்பை ஏற்படுத்திவிட்டு உடலையும் எண்ணத்தையும் வேறாக பிரித்து கற்பனையாக உடல் இல்லை எண்ணம் மட்டுமே உள்ளது என்ற நிலையில் அங்கே செயல் நிகழுமா என்று நாம் எண்ணிப் பாத்தாலோ அல்லது சோதித்துப் பார்த்தாலோ ஒன்றை நாம் நிச்சயமாக உய்த்துணரலாம்.

தகவல்கள் தரப்பட்ட அறிவுறுத்தப்பட்ட அறிவு செயல்பட முனையும். செயல்படும் உடல் இல்லாத நிலையில் உலகுக்கு வெளிப்படையாக அறிவின் எண்ணத்தின் செயல்பாடு தெரியாது. ஆனால் அறிவு வெளியூரில் உள்ள நண்பர்களின் எண்ணத்தைத் தாக்கி விளைவை ஏற்படுத்தும். வாங்கிவரச் சொன்ன பொருள் தகவல் தந்தவருக்கு கிடைக்க வழிமுறைகளைச் செய்யும். இதே தத்துவத்தை பயன்படுத்தி ஒரு மனிதரின் உள்ளத்திலிருந்து மற்றொரு மனிதருக்கு செய்தியை அறிவிக்கும் செயல்பாட்டை “மானச தந்தி” (Telepathy) என்று அழைக்கலாம். செய்யவும் செய்யலாம்.

பல நேரங்களில் இயற்கையாகவே இதுபோல நண்பர்களைப் பற்றியோ உறவினர்களைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கும்போதோ அதற்கு உரியவர்கள் நேரில் வந்த அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பேசும்பொழுது “நினைத்தேன்! வந்தாய்! நூறுவயது!” என்று வியப்படைக் கூடிய செயல்களை பலமுறைபார்க்கலாம்.

இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் வாசக அன்பர்கள் இந்த தத்துவத்தைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்கலாம். உண்மையை அறியலாம். உடல் கருவியைப் பயன்படுத்தாமல் உள்ளத்தின் ஆற்றலை மனோ சக்தியால் மற்றவர்களின் மனங்களின் கருத்துக்களைச் செலுத்தி காரியங்களைச் செய்ய முயற்சி செய்யலாம்.

வணிகத்தில், தொழிலில் விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை கவர, விற்ற பிறகு பணத்தைபெறுவதற்கும் முரண்பாடுள்ள மனிதர்களுக்கு இடையே நல்லுறவுகளை உருவாக்கவும், கணவன் மனைவிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கும், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும், மனதால் விரும்புகிறவர்களின் மனதில் இடம்பிடிக்கவும், முதலாளி தொழிலாளி உறவுகள் மேம்படவும், ஒரு காரியம் நடைபெற உதவி கேட்டு செல்லும்பொது தடையின்றி மற்றவர்களுக்கு உதவவும், ஒத்துழைக்கவும், இந்த மானசீக மனோசக்தி உத்தியைப் பயன்படுத்தி மாற்றங்களை வேண்டும் வகையில் உருவாக்கலாம்.

உணர்ச்சி பூர்வமாக மற்றவர்களின் உருவங்களை மனதில் கற்பனையாக எண்ணி அவர்களின் மீது அன்பு கொண்டு வாழ்த்துவதன் மூலமும் மானசீகமாக வேண்டிக்கொள்வதின் மூலமும் நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கேற்ற உதவியை ஒத்துழைப்பைப் பெறலாம். நம் சொல்லுக்குக் கீழ்படியாத குழந்தைகளையும் ஒத்துப் போகாத மனிதர்களையும் உணர்ச்சிகளையும் வாழ்த்துவதன் மூலமாக கீழ்ப்படியவும் ஒத்துப்போகவும் செய்யலாம்.

மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தவும் அதை வளர்த்துக் கொள்ள உள்ள சில நிபந்தனைகளைப் பற்றியும் இனி நாம் அறிந்து கொள்ள வேண்டும். (அடுத்த இதழில்)

 

1 Comment

  1. தா.தமிழ் வாணன் says:

    மிகவும் அருமையாகவும்,பயனுள்ளதாகவும் இருந்தது. அருமையான,உன்மையான கருத்தினை பதிவு செய்துள்ளீர்கள்.இந்த கருத்தினை ஏற்றுக் கொள்ளகூடிய பக்குவம் ஒருசில பேறுக்கு மட்டுமே உள்ளது என்பது உன்மையான விசயம்,அப்படியே ஏற்றுக் கொண்டாலும் 100 ல் 5 சத்விகிதம் மட்டுமே செயல்படுத்த தெரிந்த்தவர்களாய் இருக்கிறாற்கள்.நன்றி.

Post a Comment