Home » Cover Story » மனப்பூர்வமான முயற்சி! மகத்தான வெற்றி!!

 
மனப்பூர்வமான முயற்சி! மகத்தான வெற்றி!!


பழனிசாமி G
Author:

உடல் அளவில் உயர்ந்து நில்லுங்கள். நம்பிக்கையை பெறுவதற்காக, மன அளவில் உயர்ந்து நில்லுங்கள் – ஞானத்தை அடைவதற்காக, ஆன்மிக அளவில் உயர்ந்து நில்லுங்கள். வெற்றி கொள்வதற்காக என்கிறார் எம். ஆர். காப்மேயர் அவர்கள்.

இந்த மூன்று அளவிலும் உயர்ந்து நிற்கக்கூடியவர் கோவை மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல், N.G.P கலை மற்றும் அறிவியல் கல்லூரி, N.G.P பாராமெடிக்கல் கல்லூரிகளின் தலைவர் நல்லா G. பழனிசாமி அவர்கள்.

எந்த லட்சியத்தின் வெற்றிக்கோட்டையைத் தொட வேண்டும் என்றாலும் அதற்குத் தேவையானது பணமே அல்ல. முதலும் முடிவுமாக இருக்கவேண்டியது தீவிர உணர்ச்சிதான். தீவிர உணர்ச்சி வேகம்தான், கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போன்ற முழுச்சக்தியையும் தலைசிறந்த வெற்றியையும் பெற்றுத் தரும் என்று சொல்வார்கள். அந்த வெற்றிக்குரிய மருத்துவராக, எல்லோரையும் சமமாகப் பாவித்து பழகும் குணமும், ஆர்வத்துடன் தனது பணிகளைச் செய்யும் குணமும் சேர்ந்தால் அது வாழ்க்கையில் அற்புதங்களைத் தொடர்ந்து நிகழ்த்திக் காட்டும் என்பார்களே அதுவாக வாழ்ந்து ஒவ்வொரு ஆண்டு ரூபாய் 1.5 கோடி அளவு ஏழைகளுக்கு இலவச சிகிச்சை தந்து உயிர் காப்பவராக,

பிறர் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் நம் வாழ்க்கையை இரசித்தால் அதில் இன்பத்தின் இரகசியத்தையும் முன்னேற்றத்தையும் காண முடியும் என்பதற்கேற்ப திருமதி டாக்டர் தவமணிதேவி பழனிசாமி என்கிற துணைவியாரையும், இரு புதல்வர்களையும், ஒரு புதல்வியையும் மருத்துவத்துறையில் வியக்கத்தக்க முன்னேற்றத்தை சந்திக்க வைத்தவராக,

ஒவ்வொரு தனிமனிதனும் நல்லொழுக்கம் நேர்மை, தூய்மை, முதலியவற்றில் நம்பிக்கை வைத்து செயல்படும்போது தனிமனிதனுடன் இந்த மனித சமூகமும் தன்னம்பிக்கையுடன் முன்னேறும் என மனித வாழ்வு செழிக்க நம்பிக்கை தருபவராக, ஆன்மீகப் பணியில் தன்னை பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டு அப்பணி சிறக்க பெருமளவு உதவி புரிபவராக இருக்கக்கூடிய KMCH-ன் நிர்வாக இயக்குநர் திரு. நல்லா G. பழனிச்சாமி அவர்களை திரு. P. நந்தகோபால் அவர்களுடன் நேர்முகத்துக்காக தொடர்பு கொண்டபோது,

“வெற்றி பெறுவோம் என்று நம்புங்கள். இறுதிவரை போராடுங்கள். விடாமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்” என்றார். இனி அவரோடு நாம்,

மிகச்சுவையான சிந்தனைகளைச் சிந்திப்பவரே மிகவும் சந்தோஷமான மனிதர் ஆகிறார். இளமையில் உங்கள் எண்ணம், செயல்பாடுகள் எதைச் சார்ந்து இருந்தது?

பெரியார் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டி என்னும் ஒரு சாதாரண கிராமத்தில் நல்லாக்கவுண்டர் இளையம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தேன். என் அப்பாவுக்கு இரு மனைவிகள். முதல் மனைவி பாவையம்மாள். அவர்களுக்கு 5 பெண்குழந்தைகள். ஆண் வாரிசு இல்லை என்கிற காரணத்திற்காக எனது பெரியம்மாவே எனது அம்மாவை அப்பாவுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். நான் தம்பி, 5 சகோதரிகளுடன் குடும்பத்தில் எட்டு பிள்ளைகளாக வளர்ந்தோம்.

அதிகம் படிப்பு இல்லாத சாதாரண கிராம வாழ்க்கையில் எங்களின் படிப்பிற்கு வழிகாட்டிகள் என்று யாரையும் அன்றைக்கு சொல்வதற்கில்லை. ஆனாலும் படிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஏழு வயதில் இருந்துதான் ஆரம்பக்கல்வி கற்க ஆரம்பித்தேன். எனது தம்பியும் நானும் 8 மைல் தூரம் மிதிவண்டியில் நாள்தோறும் பெருந்துறை சென்று படித்து வருவோம். பெரிய நிலக்கிழார் என்று சொல்லுமளவு அப்பா இருந்தாலும் வீட்டீல் லாந்தர் (கெரசின்) விளக்குதான். இதில்தான் எங்களின் படிப்பு.

அப்பா எனக்கு முழுச்சுதந்திரம் தந்திருந்தார். தம்பி! என்ன வேண்டுமானாலும் செய். அது நல்லவைகளாக இருக்கட்டும். என ஊக்கப்படுத்துவார். எனது பெரியம்மா வீட்டு நிர்வாகத்தை கவனித்துக்கொண்டு என்னை மிகவும் பாசத்தோடு கவனித்துக் கொள்வார். இப்படி இவர்களின் அன்பில் பாசத்தில் வளர்ந்து பெருந்துறை மேல்நிலைப்பள்ளியில் 5ம் வகுப்பில் சேர்ந்து படித்தபோது அங்கிருந்த மறக்க முடியாத பழைய காந்தியவாதியான ஆசிரியர் ராம்ராஜ் நாயுடு அவர்கள்,

நேர்மையாயிரு
ஏமாற்ற நினைக்காதே
நன்றாகப்படி
புலால் உண்ணாதே
உண்மையே பேசு.
கடினமாக உழை.
நீ என்னவாக வேண்டுமோ
அதை மனதில் கொண்டு வாழ்

என அடிக்கடி சொல்வார்கள். மேலும் தஸ்த்தவீர் என்ற இஸ்லாமிய இளைஞரை சுட்டிக்காட்டி குடும்பச் சூழ்நிலை கருதி பள்ளி வகுப்பு முடிந்த பின்பு தனது தந்தையுடன் இணைந்து தையலகத்தில் வேலைபார்த்துக் கொண்டே படிப்பில் முதல் மதிப்பெண் பெறுகிறான். இந்த தஸ்த்தவீர் போல் நீங்கள் எல்லாம் உழைத்து படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று சொல்வார்கள்.

அவரின் வார்த்தைகள் எனக்குள் ஆழமாகமாகப் பதிவானது. அன்றிலிருந்து மேல் நிலைக்கல்வி வரை முதல் மதிப்பெண்களை பெற்று வரும் மாணவனாக உயர்ந்தேன். படிப்பில் ஆர்வம் அதிகமானது.

பள்ளிப் பாடங்களை வாரத்தின் மூன்று நாட்களுக்குள் படித்து முடித்துவிட்டு மீதமுள்ள நாட்களில் சுற்றியிருக்கிற அனைத்து நூலகங்களுக்கும் சென்று நிறைய நூல்களை படிப்பேன். என்னிடத்தில் நம்பிக்கை உதயமானது. செய்ய முடியாத ஒன்றை செய்து காட்ட வேண்டும் என்ற உறுதி வந்தது. உற்சாகமானேன்!

ஒருவர் எல்லாவற்றையும் இழந்த பின்னரும் உற்சாகத்தை மட்டும் இழக்காமல் இருந்தால் அவரால் நிச்சயம் முன்னேற முடியும் என்று சொல்வார்கள். உங்களின் உற்சாகத்தை மேலும வலுப்படுத்த காரணமாக அமைந்தது…?

“Nothing is impossible. If I have enough men and material”.

என்கிற நெப்போலியன் போனபர்ட் அவர்களின் வாக்கும்,

“தொட்டதனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு”

என்கிற வள்ளுவரின் குறளும் தான் என்னுடைய தாரக மந்திரங்கள்.

“இந்த உலகில் ஒரு முறைதான் வாழ முடியும். எனவே, என்னால் முடிந்த அளவிற்கு என்னைச் சேர்ந்தவர்களுக்கு ஏதாவது ஒரு நன்மையாவது செய்வேன். அதை இப்போதே செய்வேன்” என்கிற எண்ணம் என்னை மேலும் உயர்த்தியது.

8-ம் வகுப்பு வந்தவுடன் அடுத்த இலக்கு என்னவென்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்போதைய கல்வியில் கணக்குப் பாடப்பிரிவில் ஜெனரல் மேத்ஸ், ‘காம்போஸிட் மேத்ஸ், என்ற இரு பிரிவுகள் இருக்கும். இதில் ஜெனரல் மேக்ஸ் எடுத்து படித்தால் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என அந்த பிரிவை எடுத்துப் படித்தேன். மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைத்தது.

அன்றைய காலகட்டங்களில் மருத்துவப் படிப்புக்கு அமெரிக்கா செல்வது என்பது ஆர்வமான விசயமாக இருந்தது.

உங்களுக்கு அமெரிக்கா செல்லும் ஆர்வம் இருந்ததா?

நான் படித்த இறுதி ஆண்டோடு மருத்துவத்திற்காக அமெரிக்கா சென்று பரிட்சை எழுதுவது என்பது இறுதியாக இருந்தது. ஆனால் நான் தேர்வு எழுத செல்லவில்லை. என் அப்பாவின் உடல்நிலை பாதிப்பு என்னை பாதித்தது. அவரை பிரிந்து அமெரிக்கா செல்வதில் விருப்பமில்லை . இங்கேயே M.B.B.S. முடித்து M.D. யில் சேர்ந்து ஓரிரு ஆண்டுகள் கோவை மருத்துவ கல்லூரியில் Ass. Professor of Medicine ஆக பணிபுரிந்தேன். 1975ல் அப்பாவின் இறப்பிற்குப் பின் நானும் எனது மனைவியும் அமெரிக்கா சென்று மீண்டும் M.D. படிப்புடன் ‘எண்டோகிரனாலஜி ‘(ENDOCRINOLOGY) படித்து முடித்தேன். 1978லிருந்து 1985 வரை அமெரிக்காவில் பணிபுரிந்தேன்.

கோவை மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டலை உருவாக்கும் எண்ணம் எப்போது உதித்தது?

பத்து வருட காலம் அமெரிக்காவில் இருந்தாயிற்று எல்லோரும் விருப்பப்படுகிற அமெரிக்காவை பார்த்தாயிற்று. படித்தாயிற்று பணியும் புரிந்தாயிற்று. இனி என்ன செய்வது என யோசிக்க ஆர்ம்பித்தேன்.

என்னுடன் படித்த சக நண்பர்கள் எல்லோருக்குள்ளும் ஓர் இலட்சியம் இருந்தது. கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவப் பணியாற்றவேண்டும் என்பது. எனக்குள்ளும் இது மிகவும் ஆழப் பதிந்திருந்ததால் அமெரிக்காவில் உள்ளது போல் ஒரு மாடலான மருத்துவமனையை நமது இந்தியாவில், தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என சக நண்பர்களுடன் சேர்ந்து முடிவெடுத்து தாயகம் புறப்பட்டு வந்து இடம் தேடினோம்.

சென்னை, ஈரோடு, கோவை என மூன்று மாவட்டங்களில் இறுதியில் பல்வேறு வசதிகள் கருதி கோவையைத் தேர்வு செய்து இடம் தேடினோம். ஒரு வருட காலம் இடம் கிடைக்கவில்லை. பல்வேறு தேடல்களுக்குப் பின் திரு. நாராயணசாமி நாயுடு என்பவரிடம் பள்ளமும், மேடுமாக இருந்த 21/4 ஏக்கர் நிலத்தை வாங்கினோம்.

இந்தச் சூழலில் எனது நண்பர்களில் சிலர் சென்னையில் மருத்துவமனையை உருவாக்கலாம் என்றபோது மறுத்து கோவையில் தான் மருத்துவமனை என உறுதியாக செயல்பட ஆரம்பித்தேன். நல்லதைச் செய்து காட்ட என்னால் முடியும் என்பதை ஆழ்மனத்திற்குச் சொல்லி சொல்லி மன உறுதியை பலப்படுத்த ஆரம்பித்தேன்.

உருவாக்க நினைக்கின்ற மருத்துவமனை கார்ப்பரேட் மருத்துமனையாக இருக்க வேண்டும் என ஆடிட்டர் திரு. ஜெயராமன் உதவியுடன் இரண்டு வருடம் சரியான திட்டமிடுதலுடன் ரூபாய் 50 இலட்சத்திலிருந்து 60 இலட்சத்திற்குள் முதலீடு இருக்குமளவு மருத்துவப் பணியைத் துவக்கினோம். ஆனால் தேவைப்பட்டது ரூபாய் 12 1/4 பணம்.

அமெரிக்க டாலருக்கு 7 ரூபாய் என்றிருந்த காலகட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சிக்கப்பூர், யூரோப் போன்ற உலக நாடுகளில் உள்ள நண்பர்களை எல்லாம் தொடர்புகொண்டு ஒரு மருத்துவமனையை கம்பெனியாக தொடங்குகிறோம். நீங்களும் இதில் இணையுங்கள். பிற்காலத்தில் பயன்பாடாக அமையும் என்று பல்வேறு முயற்சிகளோடு பணம் சேர்த்தோம்.

120 பேர் 10,000/20,000 டாலர் பங்களிப்போடு மருத்துவமனையை உருவாக்கின போது பற்றாக்குறை ரூபாய் 7 கோடி. இந்த நேரத்தில், சாதனைபுரிந்த மனிதன் என்பது, துணிவுடன் செயல்படுவனையோ, உணர்ச்சியுடன் செயல்படுபவனையோ குறிக்காது அறிவுடன் துணிந்து செயல்படும் ஆற்றலைப் பெற்றவனை மட்டுமே அது குறிக்கும். ஏனெனில், ஆற்றலையே இயக்கும் ஆற்றல் அறிவு ஒன்றிக்கு மட்டுமே உள்ளது. எனவே நம்முடைய துணிவு மிக்க ஒவ்வொரு செயலும் அறிவுப்பூர்வமானதாக இருக்க வேண்டும். என்ற ஜேம்ஸஃ ஆலன் அவர்களின் வாக்கு சிந்திக்க வைத்தது. அடுத்த கட்ட முயற்சியாக பொதுமக்களின் பங்களிப்பை கேட்டுப் பெற்றோம். அதன் மூலமாக கிடைத்த தொகையுடன் 1990ல் 200 படுக்கை அறையுடன் மருத்துவமனையை வெற்றிகரமாக துவக்கினோம்.

நல்ல செயல்களை நோக்கி நகரும் போது நிச்சயம் தடைகள் தென்படும். உங்களுக்கு தடைகள் எந்த ரூபத்தில் வந்தது?

தண்ணீரின் மூலமாக வந்தது. ஆம் தமிழக அரசு அன்றைக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்க அனுமதி அளித்திருந்தும் கூட கோவை மாநகராட்சி எங்களுக்குத் தண்ணீர் தர மறுத்தது. காரணம் அன்றைக்கு மருத்துவமனை இருந்த பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை.அதனால் மக்கள் மாநகராட்சிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். மாநகராட்சி மறுத்துவிட்டது. ‘செய்து முடித்தே தீருவேன்’ என்ற திடமான மன உறுதியைப் பெற்றிருப்பவர்கள், தாங்கள் விரும்பிய அனைத்தையும் பெற்றே தீருவார்கள் என்று அடுத்த இலக்காக இந்த தண்ணீர் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என யோசித்து சிங்காநல்லூர் குளத்திற்கு அருகில் ஒரு கிணறு வாங்கி அங்கிருந்து பைப் மூலமாக தண்ணீரை கொண்டு வந்தோம்.

அதற்கு பிறகு பெற்றகடனுக்கு வட்டியும் கொடுக்க முடியவில்லை. சொல்லியதுபோல் அசலை குறிப்பிட்ட மூன்று, நான்கு ஆண்டுகளுக்குள் கொடுக்கவும் முடியவில்லை. சிரமத்திற்குமேல் சிரமம். மருத்துவமனையில் வரும் வருமானம் மற்ற செலவுகளுக்கு சரியாக இருந்தது. மருத்துவமனை வரலாற்றில் ஒருவர் 1:2 என்ற கணக்கில் கடன் வாங்கியிருந்தால் 3 ஆண்டுகள் இல்லாமல் கடனை அடைப்பது சிரமம் என உணர்ந்தேன்.

இந்த கடன் சிரமத்திலிருந்து விடுபட மீண்டும் ரூபாய் 5 1/4 கோடி பணத்தை முதலீடாக்கி வங்கிப் பிரச்சனைகளைத் தீர்த்து 250 படுக்கையறை உள்ள மருத்துவமனையாக KMCH-ஐ உயர்த்தினோம். 1994-ல் இருந்து நல்ல முன்னேற்றம்.

விரைவில் 17வது ஆண்டு விழாவை கொண்டாடவிருக்கிற தங்கள் மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்:

1. நியாயமான மருத்துவ சேவை.
2. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாது எல்லோருக்கும் சமஅளவு கட்டணம்.
3. தேவையில்லாத செலவை நோயாளிகளுக்கு தரக்கூடாது என்பதில் உறுதி.
4. முழுநேர மருத்துவர்களுக்கு மட்டுமே பணி.
5. ஆண்டுதோறும் ரூபாய் 1.5 கோடி அளவு ஏழை எளியோருக்கு இலவச சிகிச்சை.
6. ஏழு இடங்களில் விபத்தில்பாதிக்கப்பட்டோருக்கு அவசர சிகிச்சை மையம்
7. ஈரோடு, பெருந்துறை உள்ளிட்ட ஊர்களில் KMCH பொது மருத்துவமனை மற்றும் ஹார்ட் ஸ்பெசாலிட்டி மருத்துமனை.

உலக நாடுகளோடு ஒப்பிடுமளவு நமது இந்தியா இன்றைக்கு மருத்துவத்துறையில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா?

ஐரோப்பா, அமெரிக்க அளவு சில துறைகளில் வளர்ந்திருக்கிறோம். பெரியளவில் உள்ள மருத்துவமனைகளில் Heart, ஆர்த்தோபீடிக்ஸ் (Orthopaedics) போன்றவற்றில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளோம். கடந்த 3 வருடங்களில் தனியார் மருத்துவமனைகளில் நல்ல புதிய எக்யூப்மென்ட்ஸ் நிறையவே வந்திருக்கிறது. அதற்குரிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் நிறையவே உருவாகியிருக்கிறார்கள். அதனால் நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதில் பெருமளவு வளர்ந்து விட்டோம். ஆனால்,

மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் நமது இந்தியாவில் உள்ள மருத்துவ வசதிகள் ஒரு குறிப்பிட்ட பணவசதி படைத்தவர்களை மட்டுமே முழுமையாக சென்று சேர்கிறது. சாதாரண மக்களை அது சென்றடைவதில்லை. இந்த வித்தியாசம் மற்ற உலக நாடுகளில் இல்லை. அங்கு எல்லோருக்கும் எல்லா வசதிகளும் பொதுவாக கிடைத்துவிடுகிறது.

அதேபோல இன்பராஸ்ட்ரக்சர் (INFRASTRUCTURE), பாரா மெடிக்கல் துறைகளில் எல்லாம் நாம் இன்னும் மேலை நாடுகள் அளவு வளரவில்லை.

மருத்துவர்கள் – எக்ஸ்யூப்மென்ட்ஸ் அளவில் உலகநாடுகள் அளவு வளர்ந்திருக்கிறோம்.

மருத்துவத்துறையில் தங்களின் எதிர்காலத் திட்டம்?

இன்னும் 200 படுக்கையறைகளுடன் KMCH-ஐ விரிவு படுத்தவிருக்கிறோம்.

200 படுக்கையறை உள்ள மாடர்ன் கேன்சர் பிரிவு ஒன்றை பல கோடி செலவில் உருவாக்க விருக்கிறோம். மெடிக்கல் டூரிஸம் கொண்டுவர வெளிநாட்டவர்களுக்கு ஏற்ப அதிநவீன வசதிகளுடன் அடங்கிய அறைகளை உருவாக்கியிருக்கிறோம்.

கை, கால் முறிவு உள்ளவர்களுக்கும் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கும் மெடிக்கல் டூரிச மாக குன்னூரில் 50 படுக்கையறைகளுடன் கூடிய ரிசார்ட் டைப்பில் தனிநபர் ஒருவருடன் இணைந்து ஒரு இடத்தை உருவாக்கவிருக்கிறோம்.

சீனியர் சிட்டிசன்களுக்காக ஒரு இல்லம் ஒன்றை அமைத்து பராமரிக்கவும் இருக்கிறோம்.

மருத்துவத்துறையின் மீது இருந்த ஆழ்ந்த ஈடுபாட்டின் காரணமாக KMCH மருத்துவமனையை உருவாக்கிய தாங்கள் கல்வித்துறையிலும் கால் பதித்து பெற்ற வெற்றி குறித்து சொல்லுங்களேன்…

‘நன்மையின் ஊற்று அனைத்தும் நம்மிடமே தான் உள்ளது. அது வேறு எங்கும் இலை. நாம் முயற்சி தொடர்ந்து செய்தால் போதும். அது எப்பொழுதும் கொப்பளித்துக் கொண்டு பாய்ந்து வரும் என்று சொல்வார்கள். அந்த முயற்சிக்கு கிடைத்த பரிசுதான் கல்விப்பணி.

மனப்பூர்வான முயற்சி
மகத்தான வெற்றியாகும்.

நடக்கக்கூடிய காரியத்தை துணிச்சலாகத் தொடங்குபவர்களுக்கே தேவையான சக்தியும் ஊக்கமும் தொடர்ந்து கிடைக்கும் என்பதற்கேற்ப-

N.G.P. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
N.G.P. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
KMCH பாரா மெடிக்கல் கல்லூரி
N.G.P. இன்ஜினியரிங் கல்லூரி
(இந்த ஆண்டு முதல்)

என N.G.P. ஆனது கல்விப்பணியில் வளர்ந்து வருகிறது. எண்ணம் ஏற்றமாக இருந்தால் எல்லாம் தேடி வரும்.

நம்பிக்கை இல்லாவிட்டால் வெற்றியின் சிகரங்களைத் தொட முடியாது. நம்பிக்கை இருந்தால் குறைந்த முதலீட்டில் கூட நம் திறையைப் பயன்படுத்தி முன்னுக்கு வரமுடியும். முடியாது என்று நேர்மாறாகச் சிந்திக்காமல் முடியும் முடியும் என்று சிந்தித்து நம்பிக்கையுடன் கால்களை எடுத்து வைத்து நடந்தால் எல்லா செயல்களிலும் வெற்றி பெறலாம்.

இன்றைக்கு ஒவ்வொருவரும் வெற்றிபெற காரணமாய் அமைவது?

தன்னம்பிக்கை, நம்புங்கள்! உண்மையாகவே நம்புங்கள். வாழ்க்கையில் குறிப்பிட்ட மலைச்சிகரத்தை அடைந்துவிடுவோம் என்று அதே நம்பிக்கையுடன் நீங்கள் அதே மலையை நோக்கிச் செல்லும்போது மன உறுதியும், செயலுறுதியும் மேலும் மேலும் உங்களை சிகரத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் என்பார் ஸ்வார்ட்ஸ் என்ற அறிஞர். எனவே எப்போதும் வெற்றியைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே செயலில் ஈடுபாட்டைக் காட்டுவது வெற்றியை எல்லோருக்கும் பெற்றுத்தரும்.

உழைப்பாலும், மன உறுதியாலும், சரியான திட்டமிடுதலாலும், எல்லோரையும் சம்மாக பாவித்து அன்போடு பழகும் நற்குணத்தாலும் உயர்ந்திருக்கிற தாங்கள் இன்றைய இளைய சமுதாயத்திற்கு கூறவிரும்புவது…

ஒவ்வொரு நாளும் ஆண்டு முழுவதும் கடின உழைப்பால் தான் வெற்றியை இறுகப் பற்றவேண்டும். இல்லையென்றால் ஓட்டை வாளியிலிருந்து நீர் ஒழுகி ஓடி விடுவதைப் போல, வெற்றியும் ஓடிவிடும். கடின உழைப்பைப் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்தால்தான் வெற்றி நீடித்து நிற்கும்.

சின்ன சின்ன வேலைகளையும் சீராகவும் துல்லியமாகவும் செய்து முடித்து உற்சாகத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெரிய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த முடியும். சாதியுங்கள்! வாழ்த்துங்கள்!!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment