Home » Articles » நிறுவனர் பக்கம்

 
நிறுவனர் பக்கம்


கந்தசாமி இல.செ
Author:

அறிவை மழுங்கச் செய்யும் நாற்காலிகள்

அளவு கடந்த சுகம் மனிதனின் கூர்மையை மழுங்கச் செய்துவிடுகிறது என்பது பலரது அனுபவ உண்மை. அதோ போல அளவு கடந்த அதிகாரிங்களும் ஒரு மனிதனின் அறிவை மழுங்கச் செய்துவிடுகிறது என்பதை இன்றைய மக்களாட்சி முறையில் அனுபவித்தே வருகிறோம்.

விக்கிரமாதித்தன் கதை

விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனின் நாற்காலி புதையுண்டு மண்மேடாகி விடுகிறது. அந்த மண் மேட்டின் மீது ஏறி நின்று பேசினால் நல்லதைப் பேசுகின்ற மனிதன், கீழே இறங்கியதும் அதற்கு எதிர்மாறாகப் பேசுவது கதையில் வருகிறது. அந்தக் கதையில் வரும் நாற்காலியில் உட்கார்ந்தால் அறிவு விளக்கம் பெறுகிறது. அது நாற்காலியின் பெருமை என்பதைவிட நாற்காலிக்கு ஏற்ப மனிதன் தன்னை உயர்த்திக் கொள்கிறான் என்பது பொருள். ஆனால் இங்கே நமது ஆட்சிபீட நாற்காலிகளில் உட்கார்ந்தால் அறிவு மழுங்கிப் போய்விடுகிறது. அதற்குப் பிறகு என்ன செய்வது என்றே தெரியாமல் மலடாகிப் போய்விடுகின்றவர்களே நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள்.

எந்தெந்த நாற்காலிகள்?

எல்லா நாற்காலிகளின் அறிவை மழுங்கச் செய்வதில்லை, தனியார் துறை நாற்காலிகள் எல்லாம் அறிவை மேலும் மேலும் கூர்மைப்படுத்தியே வருகின்றன. அறிவை மழுங்கச் செய்யும் நாற்காலிகள் எல்லாம் அதிகார நாற்காலிகள்தாம்.

அறிவுரையாளர்கள் இல்லை

சரி, தாங்களால்தான் சிந்திக்க முடியவில்லை; சிந்தனை ஊற்றுத் தடைப்பட்டுப் போய்விட்டது; வற்றிப் போய்விட்டது. என்று வைத்துக்கொள்வோம். நல்ல நண்பர்களை, நல்ல அறிஞர்களை அருகில் வைத்துக்கொண்டு, அவர்கள் கூறும் நல்ல திட்டங்களையேனும் செயல்படுத்தலாம் அல்லவா? இது அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்ல உயர் அதிகாரிகளுக்கும் பொருந்தும். ஆனால் இவர்கள் அதையும் செய்வதில்லை. நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களை, திட்டங்களாகத் தீட்டி செயல்படுத்த முடியாமல் மக்களை ஏமாற்றுவதிலேயே நமது தலைவர்களின் காலம் கழிந்து விடுகிறது. அவர்களுக்குத் தாளம்போட்டுத் தாங்கள் அனுபவிக்கும் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலும், முடியாவிட்டால் தக்க வைத்துக் கொள்வதிலுமே அதிகாரிகளின் நேரம் போய்விடுகிறது.

குறைநிறைகளை ஏற்கவேண்டும்

இந்த நாற்காலிகள் நம் அறிவை மழுங்கச் செய்யாமல் இருக்க வேண்டுமானால், இதில் அமர்கின்றவர்கள் அவர்களின் செயல்பாடுகளைப் பற்றிய குறைநிறைகளை மற்றவர்கள் கூறும் கருத்துக்களை, விருப்பு வெறுப்பின்றி வரவேற்க வேண்டும். உண்மையில் நல்லவர்களாக இருப்பின் அத்தகையவர்களின் கருத்துக்களைக் கேட்டு வரவழைத்துத் தெளிவு பெறவேண்டும். உண்மையான அதிகாரிகளுக்கும் அது மிகவும் வேண்டப்படுவதாகும்.

மக்கள் கடமை

பொதுமக்களின் விழிப்புணர்ச்சி போதாதாது. அவர்கள் இன்னும் விழிப்புணர்ச்சி உள்ளவர்களாக வேண்டும். பொது மக்கள் யாரிடத்தும் குறைகண்டாலும், நிறை கண்டாலும் இடித்துரைக்கவும் பாராட்டவும் கற்றுக்கொள்ள வேண்டும். “இந்த பல கோடி மக்களில் நாம் ஒருவர் சொன்னால் மட்டுமா இவர்கள் திருந்திவிடப் போகிறார்கள்?” என்று ஒவ்வொருவரும் வாய்மூடியே இருப்பதாலேயே இந்தத் தலைவர்களும் தலைமை அலுவலர்களும் நாம் செய்வதே சரி என்ற நினைப்பில் மிதந்து போகிறார்கள். சில சமயம் என்னைக் கேட்பதற்கு யார்? என்ற மமதையும் அவர்களுக்கு வந்துவிடுகிறது.

அதனால் பொதுமக்கள் தங்கள் கடைமையை மறந்தால், வேதாளம் முருங்கை மரத்திலேதான் குடியிருக்கும். பொதுமக்கள் எங்கெங்கே தங்களால் தீமைகளைச் சாட முடியுமோ அங்கங்கே அதைச் செய்ய வேண்டும். மக்களாட்சியில் பொது மக்களுக்கு இல்லாத உரிமை வேறு ஒருவருக்கும் இல்லை. அதனால் செய்ய வேண்டியதைச் செய்யாவிடினும் கடமை மறந்தவர்களாக மட்டுமல்ல, கடமை தவறியவர்களாகவும் ஆகிறோம். இதனால் எதிர்ப்புகள், பகைகள், பாதிப்புகள் கூட வரலாம். ஆனால் நல்லவற்றை நிலை நாட்ட இவற்றை ஏற்றுக் கொள்வதில் தான் மனிதத்தன்மையே அடங்கி இருக்கிறது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2007

ஹா(ய்)ஸ்டல்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
தலைமைக்குத்தேவை ஆறு முகங்கள்
திறமைதான் நமது செல்வம்
நிறுவனப் பயிற்சிகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்
திறந்த உள்ளம்
வாத விவாதங்கள் தவிர்ப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!
வேரில் பழுத்த பலா
மனோசக்தியின் மறுவடிவமே பிரார்த்தனை
குழந்தைத் தொழிலாளர்கள்
நல்லவை மலர்க!..
சிந்தனைத்துளி
ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை
இதுதான் வாழ்க்கை
Miss பண்ணலாமா?
நம்பிக்கை
ஒளிரும் சாதனை
மனப்பூர்வமான முயற்சி! மகத்தான வெற்றி!!
வளமான பாரதம் நனவாகிட உழைப்பைப் பெறுவீர்
நிறுவனர் பக்கம்
நோய்க்கு அல்ல மருந்து, நோயாளிக்கு
உள்ளத்தோடு உள்ளம்
கற்றல் படிப்பு
மோனலித் வாழ்க்கை
தொடர் இயக்கமே வெற்றியின் அடிப்படை