Home » Articles » நிமிடங்களை அலட்சியப்படுத்தாதீர்கள்

 
நிமிடங்களை அலட்சியப்படுத்தாதீர்கள்


கந்தசாமி இல.செ
Author:

சில நிமிடங்கள்தானே என்று உங்கள் நிமிடங்கள் வீணாவதை அலட்சியம் செய்யாதீர்கள், பத்தாண்டுகளில் நீங்கள் வீணாக்கும் நேரத்தை – நிமிடங்களைச் சேமித்து, சரியாகப் பயன்படுத்தினால் ஒரு கல்லூரியில் சேர்ந்து மூன்றாண்டுகள் படித்துப் பெறுகின்ற ஒரு பட்டத்தைப் பெற்று விடலாம் என்று அறிஞர்கள் கணக்கிட்டு இருக்கிறார்கள்.

நிமிடங்களை வீணாக்குவது என்பது நம்மை நாம் சிறிது சிறிதாக வீணாக்கிக் கொள்கிறோம் என்பது பொருள்.

நிமிடங்கள்தாம் யுகங்களாக மாறுகின்றன

ஒரு பழைய குழந்தைப் பாடல் உண்டு. அதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். சிறு சிறு நீர்த்துளிகள் சேர்ந்துதான் மாபெரும் கடலாக உருவெடுத்துள்ளது. சிறு சிறு நீர்த்துளிகள் மாபெரும் கடலாக உருவெடுத்துள்ளது. சிறுசிறு மண் துகள்கள் தான் அழகிய மண்ணுலகாய் வடிவெடுத்துள்ளது. அதைப்போலவே சிறுசிறு மணித்துளிகள் சேர்ந்த தான் – அவை எளியவைதான் என்றாலும் சிறியவை தான் என்றாலும் – யுகங்களாக உருவாகின்றன என்பதை பார்க்க வேண்டும்.

“Little drops of water
Little grains of sand
Make the pleasant land
So the little minutes
Humble though then be
Make the mighty ages of eternity”

ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் விலைமதிக்க முடியாத ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும். அந்த மணித்துளிகளைப் பயனுள்ள வழியில் கழிக்க வேண்டும் (Every minute counts).

அவசரமாக அல்ல, விரைவாகச் செயல்படுங்கள்

சிலர் சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசும்போதும், சூழ்நிலை அறியாமல் மிகவும மெத்தனமாகப் பேசும்போதும் நாம் எரிச்சலடைகிறோம். சில சமயங்களில் பொறுமை இழந்து நீங்கள் சொல்ல வந்தது என்ன? அதை மட்டும் சொல்லுங்கள் என்று நேரிடையாகக் கேட்கிறோம்.

தமது தேவையை ஒரு வரியிலோ ஒரு சொல்லிலோ சொல்லத் தெரியாதவர் – என்ன சாதிக்கப் போகிறார்? அதோடு இத்தகையவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் நமது நேரமும் வீணாகின்றது. நமது நேரம் வீணாகின்றதே என்ற உணர்வால் உந்தப்படுகிறோம். இவரோடு வீணாக்கிய நேரத்தைச் சரிகட்ட நம்முடைய பணிகளை விரைவுபடுத்தி உழைக்க வேண்டியுள்ளது.

தெளிவான எண்ணமுடைய மனிதன காலத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறான். தெளிவில்லாதவன் வாழ்வு திசைதெரியாத பயணம்தான்.

ஒரு 5 மணித்துளிகள் அதிகம் கிடைத்திருந்தால் விடுபட்ட ஒரு கேள்விக்கு பதில் எழுதி இருக்க முடியும். இன்னும் கூடுதலாக 10 மதிப்பெண்கள் கிடைத்திருக்கும். தகுதி அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். ஏமாந்து போயாயிற்று என்று வாழ்நாள் முழுவதும் வருந்திக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?

இரண்டு நிமிடம் தாமதமாகாமல் இருந்திருந்தால் அந்த அதிகாரியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கும். உண்மையைச் சொல்லி நமக்குரிய தகுதியைப் பெற்றிருக்க முடியும். இரண்டு நிமிடம் தாமதமாக சென்றதால் வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்புக்கு ஆளானோம் என்று வருந்திக கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?

அதனால் தான் நோபல் பரிசு பெற்ற உலகம் போற்றும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் “உலகில் மிகவும் விலை உயர்ந்த நேரம் தான்” என்று குறிப்பிடுகின்றார் (Time is the most valuable thing in the world – Edison).

நம் நாட்டு மூதறிஞர் திருவள்ளுவரே நேரத்தை வீணாக்குகின்றவர்களை எச்சரிக்கை செய்கிறார். நேரத்தை வீணாக்காமை மட்டுமல்ல, அதனைச் சரியாகவும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.

குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய பணியை நீட்டித்துச் செய்பவர்கள் – ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டியதை இரண்டு மணி நேரம் வரை செய்து கொண்டிருப்பவர்கள் – இவர்கள் வாழ்க்கையில் முன்னேறமுடியாது என்பது மட்டுமல்ல, இவர்கள் வாழ்க்கை சரிந்து கொண்டே போய் பின்னர் அழிந்தும் போய்விடும் என்று எச்சரிக்கையும் செய்கிறார்.

இதோடு மறதி, சோம்பல், அளவுக்கு விஞ்சிய தூக்கம இவை மூன்றும் சேர்ந்து கொண்டால் போதும் பின்னர் அந்த மனிதன் மீளவே முடியாது என்கிறார்.

நேரத்தை முறையாகவும், சரியாகவும பயன்படுத்துவதே ஒரு பண்பாடாகும். வளர்ந்த சமுதாயத்தின் அடையாளம் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதுதான்.

இந்த வாரத்திற்குள் நமக்கு இறுதி முடிவு காத்திருக்கிறது என்று நமக்கு முன்கூட்டியே தெரிந்து விடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் என்ன செய்வோம்? முதன்மையான வேலைகளை எல்லாம் வரிசைப்படுத்தி விரைந்து விரைந்து செய்து முடிப்போம் அல்லவா?

ஆனால், உண்மை என்னவென்றால் நமக்கு முடிவு ஒரு வாரத்தில் இல்லை, ஒரு நாளில் இல்லை, ஒவ்வொரு நிமிடத்திலும் காத்திருக்கிறது. ஒவ்வொரு வினாடியிலும் காத்திருக்கிறது. எந்த நிமிடத்திலும் எதுவும் நிகழலாம். அதனால் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில், நமக்கும் சமுதாயத்திற்கும் நன்மை தரும் வகையில் கழிப்பது நமது கடமையாகும்.

விக்டர் யூகோ என்ற பேரறிஞர் கூறுவது போல “வாழ்நாள் மிகவும் குறுகியதுதான். ஆனால், நமது நேரத்தை வீணடிப்பதன் மூலம் மேலும் அதனைக் குறுகியதாக்கி விடுகின்றோம்” என்பதை ஒவ்வொரு கணமும் எண்ணத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இப்பொழுது, இன்று, உங்கள் கையில் ஒரு நாளைய 24 மணிகள் – 1440 நிமிடங்கள் -86,400 வினாடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை வீணாக்காமல் பயனுள்ள வகையில் செலவிடத் தயாராகுங்கள்.


Share
 

1 Comment

  1. noopept says:

    salutations from across the sea. informative blog I shall return for more.

Post a Comment


 

 


June 2007

வானமே எல்லை
தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை
இதுதான் வாழ்க்கை
முடிந்தது இன்னல் முயற்சி எடு
சிந்தனைத் துளி
சக்சஸ் உங்கள் சாய்ஸ்
எங்கே எப்போது எப்படி படிப்பது?
உள்ளார்ந்த தேவைகள்
பணியை, தொழிலை விரும்புக
வேரில் பழுத்த பலா
குழுவாகச் செயல்படுங்கள்! வெற்றிகளைக் குவியுங்கள்
வாய்ப்பு
உங்களுக்கு அவமானமா?
ஆரோக்கியமாய் வாழ்வோம் தன்னம்பிக்கையை அதிகரிப்போம்
முயற்யில் முழுமை, வாழ்க்கையில் வளமை
பிரபஞ்சக் களமே பேரறவின் நிலைக்களன்
திறந்த உள்ளம்
வேரில் பழுத்த பலா
உடோபியன் வெற்றி
ஆத்திரம் வேண்டாமே
எண்ணம் போல் வாழ்வு
நிமிடங்களை அலட்சியப்படுத்தாதீர்கள்
உள்ளத்தோடு உள்ளம்