Home » Articles » சந்திப்பில் நமது நேரம்

 
சந்திப்பில் நமது நேரம்


கந்தசாமி இல.செ
Author:

நேரத்தைச் சரியாக நிர்வகிக்கத் தெரிந்தவர்கள் தங்களுக்கு நேரம் போதவில்லை என்று சொல்லவதில்லை. மாறாக இதற்கு நேரம் ஒதுக்க என்னால் இயலாது என்னால் இயலாது என்று கூறுவார்கள். ஏனெனில் அவர்களது முன்னுரிமையின்படி சில செயல்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கமாட்டார்கள்.

நேரத்தைச் சரியான முறையில் பகிர்ந்து பயன் படுத்தாதவர்கள்தாம் எனக்கு நேரமில்லை என்று ஒரு நாளைக்கு நூறு முறை சொல்லுவார்கள். இவர்கள் தாம் நேரத்தை வீணாக்குகின்றவர்கள்.

மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்கள். மிகவும் முக்கியமானவர்கள், இவர்களை கூடச் சந்தித்து விடலாம். காரணம் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் இவர்கள் இங்கு இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கும்.

ஆனால், 24 மணி நேரத்தையும் தங்கள் விருப்பப்படிச் செலவிடுகின்றவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கமாட்டார்கள். சொன்னபடியும் இருக்கமாட்டார்கள். நீங்கள் யாரைச் சந்திக்க வேண்டுமானாலும் முன் கூட்டியே நேரத்தை உறுதி செய்துகொள்வீர்களானால் அது மிகவும் நல்லதாகும். சாதாரண மனிதராக இருந்தால் கூட நீங்கள் அவரை மதித்து நேரம் கேட்பதால் அவர் காத்திருப்பார். குறித்த நேரத்தில் சந்திப்பு நிகழ்ந்து விடும். உறுதி செய்து கொள்வதை கடிதம் மூலமோ, தொலைபேசி மூலமோ வசதிக்கேற்ப உறுதிசெய்து கொள்வது நல்லது.

சந்திக்கின்ற நேரத்தில் மாற்றம் நிகழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் யார் மாற்றம் நிகழ்த்துகிறாரோ அவர்தாம் எழுதிப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல ஒருவரை மாலையில் 4 மணிக்குச் சந்திப்பதற்கு பதிலாக 3 மணிக்கே சென்று தொந்தரவு கொடுப்பதோ, 5 மணிக்குச் சென்று வேண்டிக் கொள்வதோ சந்திப்பினால் விளையவேண்டிய பயனை எதிர்மறை ஆக்கிவிடும்.

குறிப்பிட்ட நேரத்திற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாக இருந்தால் போதும். அவ்வளவு சரியாகச் செல்ல வாகன வசதிகள் இல்லை என்றால் கூட சந்திக்கின்ற இடத்திற்கு அருகில் சென்று இருந்து செல்வதுதான் சிறந்த பலனளிக்கும். சந்திப்பில் கூட என்ன பேசவேண்டும், என்ன கேட்க வேண்டும், சந்திப்பில் ஏதேனும் விளக்கம் கொடுக்க வேண்டுமானால் அதற்குரிய விளக்கம் என்ன? எதை முன் தொடங்குவது? எப்படி முடிப்பது? எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வது என்றெல்லாம் முன்கூட்டியே தயாரித்துக் கொண்டு மனதில் திட்டமிட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.

ஒரு மாநிலத் தலைமைச் செயலரை ஒரு முறை சந்திக்க நேர்ந்தபோது அவர் கேட்டுக் கொண்டார். “நீங்கள் சொல்ல வேண்டியதை எல்லாம் சுருக்கி ஒரு நிமிடத்தில் சொல்லுங்கள். அதற்கு மட்டும் தான் நேரம் ஒதுக்க இயலும். அடுத்த கூட்டத்திற்குச் செல்ல வேண்டும்” என்றார்.

ஒரு மணி நேரம் விவாதிக்கவும் தெரிய வேண்டும். ஒரு மணித்துளியில் சொல்லவும் தெரிய வேண்டும்.

இன்னும் சிலர் சந்திக்க வந்து உட்கார்ந்த பிறகு ஊர் கதையெல்லாம் பேசிவிட்டு எழுந்து போகும்போது வந்ததைச் சொல்லிவிட்டுப் போவார்கள்.

பெரும்பாலும் அரசியல் பிரமுகர்கள் சிபாரிசு செய்கின்ற முறை இதுதான். அவருக்குக் கணக்கு எவ்வளவு நேரம் உள்ளே பேசிக் கொண்டிருந்தார் என்பது தான். இவரைச் சென்னைக்குக் கூட்டிக் கொண்டு வந்தவரோ அலுவலகத்திற்கு வெளியில் அமர்ந்திருப்பார். நம் காரியத்திற்காக அதிகாரியிடம் வாதாடிக் கொண்டிருக்கிறார். நினைத்த காரியம் ஆகிவிடும் என்று கற்பனையில் மிதந்து கொண்டு இருப்பார்.

வேறு சிலர் போன காரியத்தைச் சொல்லாமலே வந்துவிடுவதும் உண்டு. இவர்கள் எல்லாம் நேரக் கொலையர்கள்.

சந்திப்பில் கடைப்பிடிக்க வேண்டிய சில பண்புகள்:

1. சந்திப்பில் சுருங்கப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். வழவழ என்று பேசுவதை உலகம் ஒருபோதும் விரும்புவதில்லை.

2. இனிமையாகவும்,மென்மையாகவும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். சிலர் போடும சதம் மூன்று அலுலகங்கட்கு கேட்பதுண்டு.

3. பிறர் சொல்வதை முதலில் கேட்க வேண்டும். பின்னர் பதில் சொல்ல வேண்டும். பேசிக்கொண்டிருக்கும் போதே இடை இடையே மறுத்துப் பேசுவது எதிரான விளைவினையே உண்டாக்கும்.

4. சந்திப்பில் விவாதங்களுக்கு இடம் வைத்துக் கொள்வதே கூடாது. பயன் விளையாது.

5. இருவர், மூவர் சேர்ந்து ஓர் அலுவலரைப் பார்க்கும் பொழுது, அவர்களுள் ஒருவர் தன் நெருக்கத்தை, உறவு கொண்டாடு வதை யாரும் விரும்புவதில்லை.

6. நாம் சந்திக்க உள்ளே புகுந்துவிட்டோம். இனி யார் எப்படிப் போனால் என்ன என்று காபி, டிபன் வரை உள்ளே அமர்ந்துவிடக்கூடாது. பல சமயங்களில் அப்படி நடப்பதும் உண்டு. சந்திப்பில் இரு தரப்பினருக்கும் பொறுப்புணர்ச்சி வேண்டும். காரணம் அரசு உயர் அலுவலர்கள் சந்திப்புக்கு என்று ஒரு மணி நேரம் முடிந்ததும், நாளைக்கு என்று அறிவித்து விடுவார்கள். வெளியூரிலிருந்து சென்றவர்கள் அதனால் அல்லலுற நேரிடும்.

7. தெளிவும் சுருக்கமும் தான் சந்திப்பை வெற்றிகரமானதாக்கும்; நேரத்தைப் பொன்னாக்கும்.

8. சந்திப்பின் உள்ளார்ந்த பொருள் என்ன என்பதை எடுத்துச் சொல்வதற்கு ஏற்பவே பயன் விளையும்.

9. எடுத்துச் செல்லும் கருத்து, சந்திக்கும் நேரம், சந்திப்புக்கு உரியவர் மனநிலை – ஆகியவற்றிற்கு இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. சூழ்நிலை அறிந்து நிகழாத சந்திப்பில் பலன் குறைவு. சில சமயங்களில் எதிர் விளைவும் ஏற்பட்டு விடுவதுண்டு.

10. நேரம் ஒன்றுதான் நமக்கும் மற்றவர்களுக்கும் சொந்தமானது என்ற பொறுப்புணர்ச்சி எல்லோர்க்கும் எப்போதும் வேண்டும். (Nothing is our but time)


Share
 

1 Comment

 1. சூர்யா says:

  மிகச்சிறந்த பதிவு…

  நல்ல கருத்துக்கள்..

  வாழ்த்துக்கள்

  சூர்யா
  butterflysurya@gmail.com

Post a Comment


 

 


May 2007

ஒத்தி வைப்பதை ஒத்தி வைப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!
தோல்வி தந்த படிப்பினை – சாதனை
நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைப்போம்
முயற்சியில் முழுமை, வாழ்க்கையில் வளமை
அச்சம் வேண்டாமே..
சந்திப்பில் நமது நேரம்
உள்ளத்தோடு உள்ளம்
சாதிக்கத் தூண்டிய சாதனையாளர்
உன் கையில்
“Student” – ன் பொருள்
"Student" – ன் பொருள்
புதுமைப் – பெண்கள்
புத்தகங்கள் உங்கள் உற்ற நண்பன்
சிந்தனைத்துளி
இதுதான் வாழ்க்கை
உள்ளார்ந்த தேவைகள்
ஜெயிக்கும் நட்சத்திரம், எதுவும் சாத்தியமே
மனதை தன்வயப்படுத்துங்கள்
திறந்த உள்ளம்
காலையில் கண் விழித்தவுடன் நினைக்க வேண்டியவை
விளையாட்டு ஏன் வினையாகிறது?