Home » Articles » செயலின் தெளிவே சாதனையின் இரகசியம்

 
செயலின் தெளிவே சாதனையின் இரகசியம்


இமயஜோதி திருஞானாந்த சுவாமிகள்
Author:

நாம் எடுத்த முயற்சிகள் யாவும் கைக்கூட வேண்டுமெனில் அது பயிற்சி எனும் செயல்களால் பரிணமிக்க வேண்டும். செயல் எனப்படுவது நிலைச்செயல், அலைச்செயல், நிலை அலைச்செயல், அலைநிலைச் செயல் என நான்கு வகைப்படும். நிலைச் செயல் என்பது குறித்த காலப் பயிற்சியின் நிறைவில் மாறாத நிலைத்த பயனைத் தருவதாகும். அலைச் செயலாவது முயன்றும் பயன் இல்லாமல் போவதாகும். நிலை அலைச் செயல் என்பது முயன்றும், பயின்றும் கைக்கூடும் தருணத்தில் கைகூடாமல் போவதாகும். அவலநிலைச் செயல் எனப்படுவது கடும் முயற்சியின் நிறைவில் பலன் கைக்கூடுவதாகும்.

ஒரு சிற்பி தெள்ளிய சிந்தனையுடன் அற்புதமான ஒரு அழகான சிலையை வடித்து வைப்பது நிலைச் செயல் வகையைச் சார்ந்ததாகும். அலைச் செயல் என்பது பெருங்காற்று வீசும் காலத்தில் தெருவில் மாவு விற்கும் செயலை ஒத்ததாகும். நிலை அலைச் செயல் எனப்படுவது செழிப்பான நிலமிருந்தும், நீரிருந்தும் போதிய புற ஒத்துழைப்புகள் இல்லாமல் வீணாகும் பயிர் சாகுபடியைப் போன்றதாகும். அலைநிலைச் செயலாவது அடர்ந்த வனத்தினுள் புதுவழிப்பாதையை அமைப்பது போன்றதாகும். அதாவது முதலில் செய்வதற்கு சிரமமாகவும் பின்னர் நிலைத்த பயனைத் தருவதாகும். ஒரு செயல் முழு வெற்றியினைப் பெற சுய ஆற்றல், சுற்றுச் சூழல், தன்மை, சார்பு, ஆகிய நான்கும் ஒருங்கே அமைதல் வேண்டும். இதனையே திருவள்ளுவப் பெருந்தகை.

“எண்ணித் துணிக கருமம் – துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”

என அருளியுள்ளார்.

சுய ஆற்றல் என்பது தன் சுயத்தைப் பற்றி ஆராய்ந்து தன்னிடம் உள்ள நிறைகுறைகளை சீர்தூக்கி அல்லதை விட்டு நல்லதைக் கொண்டு ஆற்றல் களமாக விளங்கி முதலில் தன்மேல் நம்பிக்கை கொண்டு விழிப்புணர்வோடு இருப்பதாகும்.

சுற்றுச் சூழல் என்பது இயற்கை சூழ்நிலைகளை ஆராய்ந்து தெளிந்து அதற்கேற்றாறபோலே, அல்லது அதனைத் தமக்குச் சாதகமாக்கியோ, செயல்படுவதாகும். “தன்மை” எனப்படுவது செய்யப்படும் செயல்களின் விளைவுகள், தனக்கும, பிறர்க்கும் நன்மையை மட்டும் தரக்கூடியதாக இருந்தால் எக்காலத்திலும் போற்றத்தக்கதாகவும், உலக மக்கள் பின்பற்றக்கூடியதாகவும் விளங்கி நிலை பெற்று இருக்கும். தீமையை விளைவிக்க கூடியதானால் அதி விரைவில் நிலையற்றதாய் ஒழியும். தீமைகளை விளைவிக்கும் செயல்களைச் செய்தாலும் நன்மைகளைத் தரும் செயல்களைச் செய்யாமல் விட்டாலும் மாபெரும் தவறேயாகும்.

இதனையே,
“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்”

என தெய்வ மாமறையும் முழங்குகின்றது.

“சார்பு” எனப்படுவது தனது மன அலை வரிசைக்கு ஒத்த, தான் செய்யும் செயல்களைப் பற்றிய பட்டறிவு கொண்ட பெரியோர்களின் துணைதேடுதலைக் கொண்டு நடத்தலாகும். இந்நான்கையும் தெள்ளெனத் தெளிந்து முறையாகக் கைக் கொண்டு செயல்பட்டால் முழு வெற்றியைப் பெறலாம். இதனை வள்ளல் பெருமான் தன் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,

“துறையிது வழியிது துணிவிது நீ செயும்
முறையிது எனவே மொழிந்த மெய்த்து துணையே”

என அருளியுள்ளார்.

ஒரு கிராமத்தில் தர்மராஜ் என்னும் ஏழைச் சிறுவன் வசித்து வந்தான். ஒரு நாள் தன் தாயுடன் ஊருக்கு அருகில் உள்ள கொய்யாத்தோப்பு வழியாக கடந்து செல்கையில் கொய்யாக்கனி வேண்டுமெனத் தன் தாயிடம் கேட்டான். தாயோ எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தான். அதனால் அத்தாயார் கீழே விழுந்து கிடந்த ஒரு கனியை எடுத்துத தன் மகனிடம் கொடுத்தார். அச்சமயம் அவ்வழியே வந்த காவலாளி பார்த்து கேட்கவே அத்தாயார், ஐயா குழந்தை பசியினால் வாடிக் கேட்டதால் கீழே விழுந்து கிடந்த கனியை எடுத்துக் கொடுத்தேன், சற்று பொறுத்துக் கொள்ளுங்கள் என வேண்டினார். காவலாளி சமாதானம் அடையாமல் ஊர் பஞ்சாயத்தில் கொண்டு சென்று நிறுத்தினார். ஊர்த்தலைவருக்கும் அப்பெண்மணிக்கும் இடையில் முன் சிறுபகை இருந்தது. அதை மனதில் கொண்டு ஊர்த்தலைவர் அப்பெண்மணிக்கு பெருந்தண்டனையைக் கொடுத்தார். ஊர் மக்கள் தன் தாயார் தனக்காகப் பெரும் அவமானப்பட்டது அச்சிறுவனின் ஆழ் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தன் தாயை அவமானப்படுத்திய ஊரின் முன்னால் தான் சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என சங்கல்பம் எடுத்துக் கொண்டு சின்னஞ்சிறு வயதில் ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து இரவு பகல் பாராமல் தொழிலைக் கற்றுத் தேர்ந்தான். பின்னர் தான் உழைத்துச் சேர்த்த பணத்தையும் தன்னை ஒத்த நல்ல சக தொழிலாள நண்பர்கள் இருவரையும் கூட்டாகச் சேர்த்து ஒரு சிறு நிறுவனத்தைத் தொடங்கினார்.

உண்மை, தெளிவு, தேர்வு, கடும் உழைப்பு ஆகிய ஆற்றல்களை அவனுக்கு தான் தன் மேல் வைத்திருந்த மாறாத நம்பிக்கை இடையறாது அளித்துக் கொண்டிருந்தது. மக்கள் நலனை மனதில் கொண்டு சிறு இலாபத்தையும் பெரு வியாபாரத்தையும் நோக்கமாகக் கொண்டு இடையறாது உழைத்ததால் அவரது வியாபாரம் மிகப் பெருமளவில் பெருகியது. தனக்குக் கிடைத்த நிகர இலாபத்தில் தொழிலாளருக்கு ஊக்கத் தொகை கொடுத்து மகிழ்ந்ததால் தயாரிப்புத் தரம் சிறந்து வியாபாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தார். பின்னர் ஊர்த்தலைவரின் வீட்டையே இவர் விலைக்கு வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஏழைச் சிறுவனாய் இருந்த பொழுது ஏற்பட்ட அந்த ஆழ்ந்த வைராக்கியமும் தன்மேல் கொண்ட தீவிர நம்பிக்கையுமே அவரை மேலேற்றியது. “யத்பாவம் தத்பவதி” நீ எதுவாக ஆக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்” என்பது ஆன்றோரின் வாக்கு ஆகும். ஆகவே, சுய ஆற்றல், சுற்றுச்சூழல், தன்மை, சார்பு என நான்கும் ஒருங்கே பெற்று ஒரு செயலைச் செய்தால் வெற்றி நிச்சயமாகும். மனம் தளராதீர்கள், எல்லை இல்லா மாபெரும் ஆற்றல் உங்களுக்குள்ளே கொட்டிக் கிடக்கிறது. உங்களுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறது. உண்மையை கண்டு தெளிந்து உறுதியில் நிலைத்தால் வெற்றி உங்களை வந்து அடையும்.

வெற்றிப்பாதை தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2007

கற்பனை செய்வோமே! கனவுகள் வெல்வோமே!
இந்திய நாட்டுப்பண்
உடல் நல குறிப்பு
பொங்குமே வாழ்வு
சிந்தனைத்துளி
இதுதான் வாழ்க்கை
இனியது குறள்….
உழைப்பால் உயர்ந்தவர்
விடைபெறும் வினாக்கள்
விரும்பியவாறு மாறலாம்
செயலின் தெளிவே சாதனையின் இரகசியம்
அவசரம் வேண்டாமே…
தன்னம்பிக்கையால் தலை நிமிர்வோம்!
படிப்பது சுகமே
கைவிரல் காயம்
போராடினால் உண்டு பொற்காலம்
துணிச்சலான சாதிப்பு
திட்டம் தீட்டுவோமா
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
எது சிறந்த தொழில்?
சக்சஸ் உங்கள் சாய்ஸ்
தன்முனைப்பை நீக்குவோம் தன்னம்பிக்கை அதிகரிப்போம்!
திறந்த உள்ளம்
சிந்தனைத்துளி