Home » Articles » முயற்சி

 
முயற்சி


இமயஜோதி திருஞானாந்த சுவாமிகள்
Author:

நம் வாழ்க்கைச் சோலையில் இடையறாது சாதனைப் பூக்கள் மலர வேண்டுமானால் நாம் கைக்கொள்ள வேண்டியது தாழாத முயற்சியாகும். திண்மையான எண்ணத்தோடு முயன்றால் முடியாதது இவ்வுலகத்தில் மட்டுமல்ல எவ்வுலகத்திலும் இல்லை. முயற்சி என்பது சாத்திய முயற்சி, அசாத்திய முயற்சி என இருவகைப்படும். முயற்சி கைக்கூட வேண்டுமானால் காலம், இடம், பொருள், இறையாற்றலின் துணை இந்நான்கும் நமக்கு ஒத்துழைக்க வேண்டும். இயல்பாகவே இந்நான்கும் நமக்கு சாதகமாக இருந்து செய்யும் முயற்சிகள் எளிதாக வெற்றி பெறும். இது சாத்திய முயற்சி எனப்படும். மேற்குறித்த நான்கில் ஏதேனும் ஒன்றோ இரண்டோ நமக்கு சாதமாக இல்லாவிட்டாலும் மேற்கொள்ளும் முயற்சி அசாத்திய முயற்சி எனப்படும்.
ramyakutty
எந்த ஒரு செயலைச் செய்தாலும் நீங்கள் முக்கியமாக கவனிக்கவேண்டியது காலத்தையே ஆகும். காலம் மிகவும் இன்றியமையாதது ஆகும். ஓங்கி வளர்ந்து செழிப்பான நறுங்கனிகளைத் தரக்கூடிய ஒரு மரம் அதன் பருவக் காலத்தில் மட்டுமே பலன் தரும். மற்றையக் காலங்களில் கனிகளைத் தராது. அது போன்றே காலம் கனிந்து இருக்கும் நேரங்களில் செய்யும் செயல்களே மிக விரைவாக இலக்கை அடையும்.

இதனையே,

“அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா. தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றி பழா”

என ஔவை பிராட்டியார் அருளி இருக்கின்றார். காற்றுள்ள பொழுதுதான் தூற்றிக் கொள்ள வேண்டும். காலத்தே பயிர் செய்ய வேண்டும். அடுத்து நீங்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது “இடம்” ஆகும். இடம் என்பது பொருந்தும். இடம், பொருந்தா இடம், பொருந்தா பொருந்தும் இடம் என மூன்று வகைப்படும். கேட்பதற்கு மிகவும் இனிமையான தெய்வீக இசையை அமைதியான சூழலில் கேட்டு இலயப்படுவது பொருந்தும் இடம் ஆகும். மிகுந்த ஒலிகளை எழுப்பி இயங்கும் இயந்திரங்களின் இரைச்சல் நிறைந்த சூழ்நிலையில் இசையைக் கேட்க விரும்புவதே பொருந்தா இடமாகும். மக்கள் நிறைந்துள்ள ஒரு அரங்கினுக்குள் ஆராவார ஒலிகளுக்கிடையே இன்னிசையை இசைக்க விட்டுகேட்க விரும்புவதோ பொருந்தா பொருந்தும் இடம் ஆகும். அவ்விடத்தில் இசை ஒலிக்க ஆரம்பித்ததும் மக்கள் ஆரவாரத்தை விட்டு இசையில் இலயமாகி ஒன்றிவிடுவர். முதலில் பொருந்தாமல் இருந்து பின் பொருந்தி விடுவதே பொருந்தும் இடமாகும். இந்த உவமானம் எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும். எந்த ஒரு முயற்சியை தொடங்கினாலும் காலம், இடத்தை தேர்ந்தெடுத்து அதற்குரியச் செயல்களைத் தொடங்கினால் வெற்றி எப்பொழுதும் உங்களைச் சூழ்ந்தே இருக்கும். இதனையே திருவள்ளுவர் பெருந்தகை தமது திருக்குறளில்,

“ஞாலம் கருதினும் கை கூடும்; காலம்
கருதி இடத்தால் செயின்

என அறுதியிட்டு அறைகின்றார். அடுத்து நீங்கள் உற்று நோக்க வேண்டியது “பொருள்” ஆகும். பொருள் என்பது “நிறை பொருள்” , “குறைபொருள்” என இருவகைப்படும். எந்த ஒரு குறிக்கோளும் நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும், சமுதாயத்திற்கும் நன்மைகளைத் தருவதாக இருந்தால் அது நிறைபொருள் எனப்படும். நமக்கோ, நம்மைச் சார்ந்தவருக்கோ, சமுதாயத்திற்கோ தீமைகளைத் தருவதாக இருந்தால் அது குறைபொருள் எனப்படும். காக்கையின் குறிக்கோள் தனக்கு கிடைத்ததை தன் இனத்தை எல்லாம் பகிர்ந்து உண்ணுதலாகும். இது “நிறை பொருள்” என்னும் வகைப்பட்டது. கூடையினுள் இடப்பட்ட நண்டுகளின் குறிக்கோள் ஒன்றினை ஒன்று காலை வாரிவிட்டு சிறைப்பட்டு அழித்து கொள்வது ஆகும். இது “குறைபொருள்” எனும் வகைப்பட்டது. இயேசுநாதர் உலக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து தன்னையே இழந்தார். ஆனாலும் அவரது குறிக்கோளாகிய கொள்கை எங்கும் நிறைந்து நிறை பொருளான தெய்வத்தன்மை வாய்ந்து அழியாததாக உள்ளது. அவரை எதிர்த்தவர்களின் கொள்கை குறை பொருளாகி அருகி விட்டது.

குறிக்கோளின் தன்மையை

“அழிவதும் ஆவதும் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்”

எனத் திருமறை ஓதுகின்றது. ஆகையால் தெளிவான நற்குறிக்கோளைப் பொருளாகக் கொண்டு சிறப்புற வேண்டும். அடுத்ததாக நீங்கள் பெற வேண்டியது “இறையாற்றலின் துணை” ஆகும். இறையாற்றல் என்பது எல்லாவற்றையும் படைத்து, காத்து, குற்றம் நீக்கி, மறைத்து அருளாக விளங்கி இயற்கையாய் பரிணமிக்கும் மாபெரும் தெய்வீக காந்த ஆற்றலாகும். தனக்குள் விளங்கும் அம்மாபெரும் ஆற்றலை உணர்ந்து அதுமயமாக நிற்கும் பெரியோர்களின் துணையைக் கொண்டால் உங்களுக்குள் விளங்கும் பேராற்றலின் தன்மையை நீங்கள் உணர்ந்து வெற்றிமேல் வெற்றியினைப் பெற்று கொண்டாடலாம். அத்தகைய பெரியோர்களின் துணை சதுப்பு நிலத்தில் நடந்து செல்லும் ஒருவருக்கு துணையாக இருக்கும் ஊன்றுகோலைப் போன்றது.

தெய்வத் திருமறையாம் திருக்குறளும் இதனை,

“தக்கார், இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்”

என இயம்புகின்றது. தக்க பெரியோர்களைத் துணைக்கொண்டு நடப்பவர்களை எத்தகைய பகை ஆற்றலாலும் வெல்ல முடியாது என்பதே தீர்க்கமாகும். வள்ளல் பெருமானும் இறையாற்றலின் துணையை ஆழ்ந்து அனுபவித்து அருளிய அகவலில்,

“துறையிது வழியிது துணிவிது நீ செயும்
முறையிடு எனவே மொழிந்த மெய்த்துணையே
எங்குறு தீமையும் எனைத் தொடராவகை
கங்குலும் பகலும் மெய்க் காவல் செய்த் துணையே”

என்று அமுத மழைப் பொழிகின்றார். நீங்கள் தக்க சான்றோர்களின் துணையைக் கொண்டு நடந்தால் உங்கள் வாழ்க்கை பாதை செம்மையுறும். ஆதலால் போன நாள் போகட்டும். கவலையுறாதீர்கள். புதிய நாள் புலர்ந்து விட்டதால் உங்களுக்குள் புதுமையாக மலருங்கள். எல்லை இல்லா மாபெரும் ஆற்றல் உங்கள் கைகளிலே தவழுகின்றது. வையகத்தையும் வானத்தையும் வசப்படுத்துங்கள். காலம், பொருள், இடம், இறையாற்றலின் துணையினைப் பெற்று சாத்தியமாய் தாழாத முயற்சியினைக் கைகொண்டு அல்லதை விலக்கி நல்லதைக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து சீரும் சிறப்புற வாழ்த்துகின்றோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! அன்பே சிவம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2007

விடைபெறும் வினாக்கள்
புத்தம் புது மலரே…
சங்கமம்
பயிலரங்க செய்திகள்…
தேர்வுகள் இனி தேர்ச்சிகளே!
சக்சஸ் உங்கள் சாய்ஸ்
பணியை / தொழிலை விரும்புக
முயற்சி
திறந்த உள்ளம்
புதுமைகள் படைத்திடு! புவனம் வென்றிடு!
விஷ்யு ஹேப்பி 2007
உற்சாகத்தால் உயர்த்துவோம் தன்னம்பிக்கையை
நிச்சயம் நான் நல்லாயிருப்பேன்…
போராடினால் உண்டு பொற்காலம்
இடைவிடாத பெருமுயற்சி
உடல்நலக் குறிப்புகள்
உள்ளத்தோடு உள்ளம்
மேலெழு மனமே…
தன்னம்பிக்கை
வெற்றிகொள்
இதுதான் வாழ்க்கை
இலட்சியத்தை அடைந்திட….
கோவையில் அப்துல்கலாம்
இதுதான் வாழ்க்கை