Home » Articles » காந்தியம்

 
காந்தியம்


அழகர் ராமானுஜம்
Author:

காந்தி பிறந்தபோது நமது நாட்டில் நாற்பது கோடி அடிமைகள். அவர் மறைந்தபோது நாற்பது கோடியும் சுதந்திரப் பறவைகள். இந்த மாற்றமே அவர் நிகழ்த்திய அதிசயம். ஒரு தனி மனிதரின் வாழ்க்கை தரணியின் ஒரு பகுதி மக்களின் தலைவிதியை தலைகீழாக மாற்றியது. இந்த மாற்றத்தின் அடித்தளம் ஆன்மீகம் என்பது இந்த மனி குலத்தின் பலம் மட்டுமல்ல பெருமையும் கூட.

ஒரு தனிமனிதனின் ஆன்மீக பலத்தை விஞ்ஞானத்தின் கருவிகள் வெல்ல முடியாதென்று பரீட்சாத்தமாக நிரூபித்தவர் மகாத்மா காந்தி. இந்த நிரூபனம ஐன்ஸ்டைனை வெகுவாகக் கவர்ந்தது. ஐன்ஸ்டைனின் வரவேற்பு அறையை இரண்டு புகைப்படங்கள் அலங்கரித்தன. அவைகளின் ஒன்று மகாத்மா மற்றொன்று அவரது விஞ்ஞான குரு ஐசக் நியூட்டன். உலகில் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், அவைகளுக்கு காந்தியப்பாதை அடித்தளமாக அமைந்தது.

மார்டின் லூதர், இனவெறிக் கொடுமைகளுக்கு எதிராக அமெரிக்க நாட்டில் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தியபோது அப்போராட்டத்தின் அடித்தளமாக அவர் காந்தியத்தை அமைத்தார். “எனது போராட்டத்தின் பாதையை வகுத்தவர் ஏசுபிரான். அந்தப் பாதையில் நடந்து காட்டியவர் மகாத்மா காந்தி” என்று பெருமைபட உரைத்தார் மார்டின் லூதர்.

உள்ளத்தின் உண்மை உலகையே வெல்லும் எனும் சாரத்தை எழுத்துக்களாக மாற்றி ஏடுகளாகச் சுருக்கி, நூலாகத் தொகுத்து காந்தி பெருமகனார் நமக்கு அளித்தது “My experiments with truth”. உலகப் பொதுமறையாக இன்று இந்நூல் காட்சியளிக்கிறது. கீதை படிப்போரும், குர்ரானை ஓதுவோரும், பைபிளைத் துதிப்போரும், படித்து முடித்தவுடன் அடுத்து கையிலெடுக்க வேண்டிய மறைநூல் மகாத்மாவின் சத்திய சோதனை.

தனது வாழ்க்கையில் பல புத்தகங்கள் எழுதிய ஆச்சார்யார்கள் உண்டு. ஆனால் தனது வாழ்க்கையையே ஒரு புத்தகமாக மாற்றியவர் மகாத்மா. இப்படியொரு மனிதர் இந்த மண்ணில் வாழ்ந்தாரா என்றசந்தேகம் இனி வரும் சந்ததிக்கு வரலாம் என்று மகாத்மாவைப் பற்றி விஞ்ஞான மேதை ஐன்ஸ்டைன் குறிப்பிட்டது நமக்கு ஒரு எச்சரிக்கையே. அப்படியொரு சந்தேகம் வராமல் காப்பது நமது கடமை.

காந்தியத்தைப் பற்றியப் பெருமை நமக்கு வேண்டும். அந்தப் பெருமையை நமதாக்கிக் கொள்கின்ற பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் நமது செயலாக மாறி அந்தச் செயல் இப்பாரை உயர்த்த வேண்டும்.

காந்தியம் நமக்கு உணர்த்தும் முக்கிய அம்சங்கள் இரண்டு. ஒன்று ஆன்மீக பலம், இரண்டு ஆன்மீகம் மதங்களாக மாறி, மதங்கள் மனிதர்களைப் பிரித்து, பிரிவினையால் நாம் அல்லலுறும் நிலையில், பிரிவினைகளில் சிக்காது. அவைகளுக்கு அப்பால் சென்று, பிறமதங்களோடு இணங்கி வாழ்கின்ற மத நல்லிணக்கம். காந்தியம் உரைக்கின்ற ஆன்மீக பலம் நமக்குச் சுதந்திரத்தைத் தந்தது. ஆனால் காந்தியம் உணர்த்திய மதநல்லிணக்கம் அவர் உயிரைக் குடித்தது. உலக உயிர்கள் உய்வதற்கு தன் உயிரைக் கொடுப்பவன் தானே மகாத்மா.

மத நல்லிணக்கம் உருவாகாதவரை உலகிற்கு விமோட்சனம் இல்லை. மத நல்லிணக்கத்தை நம் மனதில் இறுத்தி, அதை மற்றவருக்கும் தருவதுதான் நாம் காந்திக்கு செலுத்தும் மிகச் சிறந்த அஞ்சலியாக அமையும். இறையைப் பேசுகிற மதங்கள் இணக்கத்திற்கு வழி சொல்ல வேண்டும்.

இரைத் தேடலும், இறைத் தேடலும் ஒவ்வொரு மனிதனின் இரண்டு முக்கிய அம்சமாகும். ஒன்று உடலுக்கு, மற்றொன்று உள்ளத்திற்கு. உணவு அன்றாடம் தேவை. இறையுணர்வும் அன்றாடத் தேவைகளில் ஒன்றே. உணவில்தான் எத்தனை வகை! நாட்டுக்கு நாடு, வீட்டிற்கு வீடு, நபருக்கு நபர் உணவு வித்தியாசப்படுகிறது. உடலுக்கு உகந்ததாக, ஊறு விளைவிக்காதவாறு உணவு அமைதல் வேண்டுமே தவிர அது அரிசியால் செய்யப்பட்டாலென்ன அல்லது கோதுமையாக இருந்தாலென்ன! அதுபோல இறைவழிபாடும், இறையென்பது எது என்றகோட்பாடும் நபருக்கு நபர், தெருவுக்கு தெரு, மதத்திற்கு மதம் பல்வேறாக வேறுபடுகின்றன. அதனாலென்ன? உள்ளத் திற்கு உகந்ததாக, உள்ளத்தால் பிறருக்கோ தனக்கோ தீங்கு விளைவிக்காததாக நமது இறைநம்பிக்கையும், வழிபாட்டு முறைகளும் அமைய வேண்டுமே தவிர, ஒருவர் அல்ல என்று வணங்கினாலென்ன, ஈஸ்வரா என்று வணங்கினாலென்ன? இறைக்கு நாம் வைத்த பெயரில் என்ன இருக்கிறது.

மனிதனுக்குப் பிறகு மொழி வந்தது. மொழி வந்தபிறகு பெயர் வந்தது. ஆனால் மனிதனுக்கு முன்பே மனிதன் வந்ததிற்கு காரணமாக இருந்தது தெய்வம். மனிதகுலம் முற்றிலும் அழியுமானால், நாம் வைத்த பெயர்களும் அழிந்துவிடும். ஆனால் அன்றைக்கும் தெய்வமிருக்கும். என்றென்றும் இருக்கிற தெய்வம் முக்கியமா? தெய்வமே அனைத்துமாக ஆனது என்று தானே எல்லோரும் சொல்கிறோம். அப்படியென்றால் தெய்வம்தானே ரஹீமாகவும், ராமசாமியாகவும், ராபெர்ட்டாகவும் ஆனது. ஏதோ ஒரு காரணத்தினால் இவர்களில் யாருக்குத் தீங்கிழைத்தாலும், தெய்வத்திற்குத்தானே தீங்கிழைக்கிறோம். யாருக்கும் தீங்கிழைக்காத, யாரையும் நிந்திக்காத இறைவழிபாடுதான், ஞானம் நிறைந்த இறைவழிபாடு. முறையற்ற உணவு உடலுக்குத் தீங்கிழைப்பதைப் போன்று, ஞானமில்லாத இறைவழிபாடு தீங்கினைத்தான் தரும். ஞானம் நிறைந்த வீடு கோயிலாக மாறும். ஞானம் இல்லாதபோது கோயில்கூட குடும்பத்தின் அங்கமாகிவிடும்.

ஞானமின்மையே சிக்கலின் ஆரம்பம்; ஏமாறுவோம் அல்லது ஏமாற்றுவோம். ஞானம் சிக்கலின் முடிவு; ஏமாறுவது மில்லை; ஏமாற்றுவதுமில்லை.

அருமையான இருசக்கர வாகனத்தில் அமர்ந்து அலுவலகம் செல்கிறேன். விரைவாகச் செல்லும்போது உள்ளே இருக்கின்ற ஒரு கம்பி சற்று விலகிவிடுகிறது. வாகனம் நின்று விடுகின்றது. அதைப்பற்றிய ஞானமிருந்தால், சற்றுப் பிரித்துப் பார்த்து, உள்ளே ஏற்பட்ட விலகலை விலக்கி விட்டால், வண்டி மறுபடியும் ஓட ஆரம்பித்துவிடும். ஆனால் எனக்கு ஞானமில்லாத போது, வண்டியைத் தள்ளிக்கொண்டு பணிமனைக்குப் போகிறேன். காலதாமதம் காரியதாமதம் ஆகிறது. மாலையில் வாருங்கள் சரிசெய்து வைத்திருக்கிறேன் என்கிறது ஒரு பிஞ்சுக்குரல். இன்னும் காரியதாமதம், மாலையில் வருகிறோம். ஒரு கணிசமான செலவு நமக்காகக் காத்திருக்கிறது. இப்போது வீண் பொருள் விரையம். எனது வண்டியைப் பற்றி ஞானம் எனக்கு இல்லையென்றால், எனது வண்டியை வைத்துக் கொண்டு என்னை ஏமாற்றி விடுவார்கள். வண்டி வேண்டும், அதோடு அதைப்பற்றிய ஞானமும் வேண்டும். வண்டியைக் குறைகூறக் கூடாது. அதைப் பற்றிய ஞானம் இல்லாததே உண்மையான குறை. மகனைப் பற்றியோ அல்லது மகளைப் பற்றியோ ஞானமில்லாதபோது, அவர் களால் சஞ்சலப்படுகிறேன். மொழியைப் பற்றிய ஞானமில்லாததே மொழித் தகராறுக்கு காரணம். மதத்தைப் பற்றிய ஞானமின்மையே மதக்கலவரங்களுக்கு காரணம். நான் வணங்குகின்ற தெய்வத்தை வைத்தே என்னை ஏமாற்றி விடுவார்கள்.

மதங்களினால் சிக்கலில்லை. அவைகளைப் பற்றிய ஞானம் இல்லாததே நமது சிக்கல். எங்கே ஞானம்
இருக்கிறதோ, அங்கே இணக்கம் தானாக வந்துவிடும். ஞானத்தைக் கொடுத்து, மத நல்லிணக்கத்தை உலகில் உருவாக்கும் முயற்சியே காந்தியம்.

டாக்டர் G அழகர் ராமானுஜம்

 • முன்னாள் முதல்வர் மற்றும் இயற்பியல் துறைத் தலைவர், என்.ஜி.எம். கல்லூரி, பொள்ளாச்சி.
 • சார்பியல் தத்துவம் மற்றும் துகளியக்கவியலில் டாக்டர் பட்டம்.
 • இருபதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் ஆசிரியர்.
 • முப்பதுக்கும் மேற்பட்ட உலகளாவிய கருத்தரங்குகளில் பங்கேற்றஅனுபவம்.
 • தனது வழிகாட்டுதலில் இயற்பியலில் முனைவர் மற்றும் எம்.ஃபில்., மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்.
 • வேதாத்திரி மகரிஷியிடம் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம் கற்கும் பாக்கியத்தின் பெருமையை உணர்ந்தவர்.
 • மகரிஷியின் கருத்துக்களை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்ல உலக சமுதாய சேவா சங்கம் ஏற்படுத்திய அறிஞர் குழுவின் முன்னாள் செயலர்.
  தத்துவஞானி வேதாத்திரி
  மகரிஷி : இந்த நூற்றாண்டு தந்த மகான் எனும் நூலின் ஆசிரியர்.
 • ஆசிரியர் – வேதாந்தமும் வேதாத்திரியும், தலைவர் – சரணாலயம் தத்துவம், விஞ்ஞானம், தொண்டு மேம்பாட்டு மையம், பொள்ளாச்சி.

Share
 

2 Comments

 1. gopi says:

  very informative

 2. mushi says:

  nice got some information and knowledge

Post a Comment


 

 


December 2006

காந்தியம்
சந்திரமுகியும் அந்நியனும்
விடைபெறும் வினாக்கள்
சக்சஸ் உங்கள் சாய்ஸ்
எனது நூல்கள் உருவான விதங்கள்
எண்ணத்தில் ஏற்றம்; தன்னம்பிக்கையின் உயர்வு!
உறவுகள் மேம்பட மதிப்புகள் கூடிட வெற்றிகள் தொடர்ந்திட
கற்பனை பொய் அல்ல…
நிறுவனர் பக்கம்
உழைப்பால் உயர்ந்த உத்தமர்
உள்ளத்தோடு உள்ளம்
அறிவுப்புதையலே…!
உறவுகள் மேம்பட…
இன்னொரு பாதை இருக்கிறது..!
இதுதான் வாழ்க்கை
வாழ்ந்து விடு!
பருவக் கோளாறுகளும் பரிதவிக்கும் படிப்பும்
சிந்தனைத் துளி
சேவை செய்ய வாய்ப்பு
அன்பாக பேசுவதால் ஏற்படும் நன்மைகள்
சிக்கனமே செல்வம்
வெற்றி மண்டபத்தின் தூண்கள்
திறந்த உள்ளம்
வெரிகுட்