Home » Articles » முன்னேற்றத்தின் மூலதளங்கள்

 
முன்னேற்றத்தின் மூலதளங்கள்


admin
Author:

வளர்ந்த நாடுகளில் கற்பிக்கும் முறையே அலாதியானது.  சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது கேன்பராவில் உள்ள ஒரு பள்ளியில் பார்வையிடச் சென்றிருந்தேன்.  தொடக்கப் பள்ளியில் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருந்தார்கள்.  வகுப்பின் 4 பகுதியிலும் ஐந்தைந்து பேர் கொண்ட குழுவாக அமர்ந்து ஏதோ கற்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஒரு குழுவுடன் ஆசிரியர் அமர்ந்து வழிகாட்டிக் கொண்டிருந்தார்.  அந்த ஆசிரியரிடம் வினவியபோது தெரிவித்தார் மாணவர்களை சிறுசிறு குழுக்களாக பிரித்து கற்பித்தால் கற்றல் மிகையாக உள்ளது. எனவேதான் இந்த முறையைக் கையாளுகிறோம் என்றார்.

அந்த வகுப்பறை முழுவதும் அவர்கள் பாடங்கள் தொடர்பான படங்கள் (Pictorial Charts) இருந்தன. வகுப்பைவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது மூன்றாம் வகுப்பு மாணவர்கள் வரிசையாக நூலகம் சென்று கொண்டிருந்தார்கள். அந்த வயதிலேயே நூகலகம் சென்று வேண்டிய நூல்களைத்தேடி எடுத்துப் படிக்கும் பழக்கம் கற்பிக்கப்படுகிறது. இங்கே கல்லூரி மாணவர்கள் கூட நூலகம் செல்லாமலும், முழு நூல்களைப் படிக்காமலும் வெறும் உரைகளை மட்டும் (Notes) படித்து பட்டமேற்படிப்பு வரை முடித்துவிடுகிறார்கள்.

ஆனால்,கேன்பராவில் பள்ளி மாணவர்களுக்குக் கூட அவர்கள் அளிக்கும் வீட்டுப்பாடம் அறிவையும், சிந்திக்கிற ஆற்றலையும் கூர்மைப்படுத்துவதாக உள்ளது.   இராசிபுரத்தைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கரன் என்ற வேளாண் விஞ்ஞானி வீட்டில் இங்கு தங்கியிருந்தேன்.  ஆஸ்திரேலியா தலைகரில் அரசு நிறுவனம் ஒன்றில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார். அவர் வீட்டில் தங்கியிருந்தபோது பள்ளியில் படிக்கும் அவரது மகன் வீட்டுப்பாடத்திற்கு விடை தயாரிக்க செய்ய, நூல்களைப் புரட்டுவதும், நாளேடுகளில் குறிப்பெடுப்பதும், சேகரிப்பதுமாக இருந்தார். அவருக்கு ஆசிரியர்கள் அளித்திரந்த தலைப்பு ஒலிம்பிக்ஸ் அப்போது சிட்னியில் ஒலிம்பிக் 2000 நடைபெற்று முடிந்திருந்தது.)

இவ்வாறு கல்வி அங்கே அறிவு தேடுதலை வளர்ப்பதாகவும், ஆய்வு மனப்பாண்மையை ஊக்குவிப்பதாகவும், சிந்தனை ஆற்றலைத் தூண்டுவதாகவும், அறிவைக் கூர்மைப்படுத்துவதாகவும் இருக்கிறது.  பள்ளிகளில் இப்படியென்றால் இன்னும் கல்லூரி பல்கலைக்க கழகங்களில் கற்பித்தல் மிக அற்புதம்.  (மேலும் விபரங்கள் அறிய – தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள் என்ற நூலில் காண்க.)

ஆனால் நமது கற்பித்தல் முறை எப்படி இருக்கிறது? தற்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்ற கணக்காக பல தனியார் பள்ளிகளில், 9-ம் வகுப்பிலேயே 10 ஆம் வகுப்பு பாடத்தை நடத்தி முடித்து விடுகிறார்கள்.  பதினொன்றாம் வகுப்பிலேயே  12-ம் வகுப்பு பாடத்தை நடத்தி முடித்துவிடுகிறார்கள்.  பல பள்ளிகளில் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரவு 8 மணிக்குத்தான் வீடு வருகிறார்கள்.  காலையில் பள்ளி பாடநேரத்தில் ஒருபாடத்தை நடத்தி முடித்துவிட்டு மாலையில் பள்ளியிலேயே நடக்கிற தனிப்பயிற்சி… நேரத்தில் இன்னொரு பாடத்தையும் நடத்திவிடுகிறார்கள். பாடம் புரிந்ததா இல்லையா என்பது பற்றி கவலையே இல்லை. பிறகு தேர்வு.. தேர்வு… தேர்வு.. மனப்பாடம்.. மனப்பாடம்… மனப்பாடம்.. ஓராண்டில் படிப்பதை இரண்டாண்டுகள் படித்து நூற்றுக்கு நூறு தேர்ச்சி. இது என்ன சாதனை?

இந்த மாணவர்களுக்கு வாரதில் ஒருமுறைகூட விளையாட நேரம் அளிப்பதில்லை.  பல பிள்ளைகள் மன அழுத்த்தில் உடைந்து போய்விடுகிறார்கள்.  கல்வி சுவையாக இல்லாமல் சுமையாகிவிட்டது.  கல்வி அறிவை வளர்க்க ஒரு சாதனமாக இருக்க வேண்டும். மாணவர்களை வாட்டுவதாக இருக்க்கூடாது.  போட்டிகள் நிறைந்த உலகம் என்பதை மாணவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.  எனவே நாடு வளர அவர்களை வறுத்தெடுக்காமல் வழிகாட்டுவதோடு நிறுத்திக் கொள்வோம்.

பள்ளிகள் வணிக மயமாக்களின் உச்சம், 100% தேர்ச்சிக்காக 9-ம் வகுப்பில் படிக்கும்போதே பெற்றோர்களை அழைத்து, உங்கள் பையன் நன்றாகப் படிப்பதில்லை.  இந்த ஆண்டு தேர்ச்சி தருகிறோம்.  வேறு பள்ளியில் சேர்த்துவிடுங்கள் என்று கழித்துக்கட்டுகிறார்கள்.

ஒரு பள்ளியில் தேர்வுக்கு சில மாதம் முன்பாக ஒரு மாணவரின் தந்தையை வரவழைத்து உங்கள் மகன் தேர்வது கடினம் எனவே தேர்வுக்கு அனுப்பாதீர்கள். அல்லது தனித் தேர்வாளாராக எழுத வையுங்கள் என்று வணிக நடத்துகிறார்கள்.

தனியார் பள்ளியில் 100% தேர்ச்சிக்கா புதிதாக எவரையும் 10ம் வகுப்பில் சேர்ப்பதில்லை.  எமது நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து மாறுதலாகி வந்தார். 10ம் வகுப்பில் மகனை சேர்க்க சாதனை பள்ளி ஒன்றில் இடம் கேட்டு பகீரத முயற்சி செய்தார். கடைசியில் சரி நன்றாக படிக்கக்கூடிய மாணவன் என்பதால் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் நீங்கள் 9-ம் வகுப்புக் கட்டணத்தையும் சேர்த்து கட்ட வேண்டும் என்று பள்ளி நிவாகம் கேட்டிருக்கிறது. இது பகற்கொள்ளை அல்லவா?

சிறப்பாக கற்பித்து சாதாரண மாணவர்களையும் நன்றாக படிக்க வைத்து தேர்ச்சி காட்டினால் அது சாதனை. ஒன்பதாம் வகுப்பிலேயே கழித்துக்கட்டுவது, பத்தாம் வகுப்பில் புதிதாக எவரையும் சேர்ப்பதில்லை. நூற்றுக்கும் மேல் மதிப்பெண் பெற்றவரை மட்டுமே சேர்த்து இரவு பகலாக அந்த மாணவர்களைக் கசக்கிப் பிழிந்து பலரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, வெகு சிலரை மட்டும் நூற்றுக்கு நூறு வாங்க வைப்பது ஒன்றும் பெரியசாதனை அல்ல.

அரசு பள்ளிகளில் ஆய்வக வசதிகளை ஏற்படுத்தியும், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் செய்தாலே அற்புதமான சாதனைகளை ஏழை பாளைகள் நிறைந்த அரசு பள்ளிகள் செய்துவிட முடியும். இன்றும் பல அரசு பள்ளிகள் நூற்றுக்கு நூறு விழுக்காடு தேர்ச்சியும் மாவட்ட அளவில் முதன்மையும் பெறத்தான் செய்கின்றன.

கற்றலை ஊக்கப்படுத்தவும் குறைந்த நேரத்தில் அதிகம் கற்கவும் மாணவர்களை மாலையில் சிறிது நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும்.  சிறிது நேரம் விளையாடினாலே பொழுதும் வகுப்பில் சேர்த்த சோர்வும், அழுத்தமும் உதிர்ந்து மனமும் உடலும் லேசாகும். உற்சாகம் பெறும். படிக்க அமர்ந்தால் குறைந்த நேரத்தில் அதிகம் படிக்க முடியும்.

மனம் ஒருப்பட ஓரிரு நிமிடம் செய்யக்கூடிய எளிய மனப்பயிற்சிகளை செய்துவிட்டு (விபரங்கள் ‘நினைவாற்றல் மேம்பட வழி’ நூலில் காண்க) படிக்க அமரலாம்.  தனியாகப் படிப்பதைவிட நண்பர்களுடன் இணைந்து குழுவாக படிப்பது மிக்க பயன்தரும்.  குறுகிய காலத்தில் அதிகம் படிக்க முடியும்.

படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருக்காமல் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திப் பார்ப்பதன் (Recollecting) மூலம் படித்ததை மறவாமல் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.

– தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2005

எளிது எளிது
நிறுவனர் நினைவுகள்
வெற்றி நமது விலாசமாகட்டும்
விற்பனையில் வியத்தகு சாதனை
சுனாமியில் மீண்ட டாக்டர் பெ. இளங்கோ
படிப்பாளிகளை படைப்பாளிகள் ஆக்குவோம்
செயலாக்குவோம்
சாதனையாளர்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
எப்படி எப்படி எப்படி
சோதனை வெல்வோம்.. சாதனை கொள்வோம்!
நேர்காணல்
நீதான் வெற்றியாளன்
மலரும் மணமும்
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
எங்கும் எதிலும் வெற்றி
பேட்டி
உலகம் உங்கள் கையில்
வெற்றிக்கு கனவு காண்போம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்