Home » Articles » எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?

 
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?


சின்னை இராமவாசன்
Author:

“மயிலப் புடிச்சி கால ஒடிச்சி ஆடச் சொல்லுகிற உலகம்;  குயிலப் புடிச்சி கூண்டிலடச்சிப் பாடச்சொல்லுகிற உலகம்”

என்று உலத்தையே குரூரமானதாக அவல அறிமுகம் செய்கிற திரைப்பாடல் கேட்டிருப்பீர்கள்.  கேட்டவுடன் எதிர்மறை அலைகள் நமது இதய அறைகளில் ஓரமாக ஒட்டிக்கொண்டு ஓசைப்படுத்துவதை உணர்ந்திருப்பீர்கள்!

எனில்… உலகம் அவ்வளவு குரூரமானதா? – என்ற எதிர்க் கேள்வியைக் கேட்டிடல் பொருத்தமாகும் அல்லவா!

ஆனால்.. நேர் மறை உணர்வின் உள்ளீடாய் இருந்த அழகிய இனிய திரைப்படப் பாடலின் கருவை “ஒடிச்சி” விளையாடி இந்தப் புதிய பாடல் உருவானது – என்பதே வருத்தம் தரும் உண்மை!

“மயிலே உன் காலுடைத்து நடம்பார்க்கிறார் (சிலர்); குயிலே உன் சிறகுடைத்து இசைகேட்கிறார் (சிலர்) ” என்ற தேமதுரத் தமிழ் வரிகள் “சிலரின்” முட்டாள் தனத்தைக் கண்டு மனம் வாடுகின்றனர்.  கேலி நகையாடுகின்றனர்.. ஆனால் இந்த இனிய வரிகளைப் “புடிச்சி”  “ஒடிச்சி” சித்திரவதை செய்வதோடு… கருவையும் சிதைத்து உலகமே குரூரமயமானது என்ற – மனதுக்குச் சோர்வை ஊட்டக்கூடிய எதிர்மறை விளைச் சூல்கொண்டு பிரசவித்துள்ள குரூரம் நம்மை திகைப்புக்குள்ளாக்குகிறது.

நேர் முறை உணர்வூட்டும் சொல், செயல்களுக்கும், எதிர்மறையைச் “சூல்” கொண்ட சொல், செயல்பாடுகளுக்கும் இடையே.. ஒரு நூலின் வேறுபாடே உள்ளது!

புரிந்து  கொண்டால்.. புதுமைகள் விளையும்; தவறினால்.. தோல்வியின் தலைவாசல் தலை காட்டும்.

மேற்சொன்ன இரண்டும் திரை இசைப்பாடலின் வரிகள்தான்.  கரு, பொருள், சொல்செட்டு, இசை – என எல்லாம் பொது;  ஆனால் பாடல் வரிகளுக்குள் புதைந்து கிடக்கும் தாக்கம் மாத்திரம் – எதிர் எதிர்!  இதுவே புரியாத புதிர்!

நுணுகிப் பார்த்தால் வேறு யாரும் அறியாமல் இந்த வேறுபாடும் முகம் காட்டும்.

நமது பயணம் எதிர்காற்றில் திசைமாறாமல் இருக்க..  எதிர்மறைசூல்  கொண்ட சொல் செயல்களை அறிய வேண்டிய அவசியம். இங்கே, ஒரு கதை…

ஒரு விறகுவெட்டி காட்டுக்குச் சென்றான்.  அங்கு ஒரு நரியைக் கண்டான். முன்னங்கால்கள் இல்லாதநரி… இந்த நரி இரையை எப்படித் தேடும்!  பசியை எப்படிப் போக்கும் என்று எண்ணினான்.

அப்போது ஒரு புலி, மானை அடித்துக் கொன்று இழுத்து வந்து கொண்டிருக்கக் கண்டான். ஓடி மரமொன்றில் ஏறிக்கொண்டான்.

மரத்தடியில் கொண்டுவந்து, தான் கொன்ற மானை தின்ற புலி, மிச்சமான எச்சத்தை விட்டுச் சென்றிட.. தொலைவில் காத்திருந்த நரி, அதனை மகிழ்ச்சியோடு தின்னுவதைக் கண்டான்.

“ஆகா.. இரண்டு கால்களில்லாத நரிக்கே இறைவன் இரையினைத் தருகிறானே… அவனது பக்தனாகிய நான் ஏன் விறகு வெட்டிக் கஷ்டப்பட வேண்டும்?  நரியைப் போல நாமும் சும்மா இருப்பதே சுகம்” என எண்ணினான்.

அப்போது ஓர் அசரீரி கேட்டது, “முட்டாளே!  நீ பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது, நரியிடமிருந்தல்ல;  புலியிடமிருந்து”.

விறகுவெட்டி இப்போது புரிந்து  கொண்டான்.  – எதிர்மறைத் தாக்கத்தின் ஊற்றுக் கண்ணையும், நேர்மறை எண்ணத்தின் அவசியத்தையும்!

இழையனைய வேறுபாட்டினை அறிய.. நமக்கு அசரீரி கேட்காது!

வழியை நாம்தான் கண்டுணர வேண்டும். கதையில் விறகுவெட்டி “ஒரு பாடம் கற்றுக்கொள்கிறேன்”.

எதுவுமே கற்றுக்கொள்ளாதிருப்பது – எதிர்மறை.  “நரியிடம் கற்றுக்கொள்வும் – நேர்மறை போன்ற எதிர்மறை அல்லது எதிர்மறைச்சூல் கொண்ட மாயத் தோற்றம் எனலாம்.

‘புலியிடம் கற்றுக் கொள்வது’ – என விறகுவெட்டி உணர்வதுதான் மாயத் தோற்றத்தை அறிந்து விலக்கி சாதனை படைத்திடும் நேர்மறையுணர்வு!

வெற்றியை விரும்புவர்கள் தனக்கு முன்னுள்ள வாய்ப்புகளை, செயல்களை ஆய்ந்துணர்ந்து, ‘எதிர்மறைச் சூல்’ கொண்டவற்றைக் கண்டறிந்து, ‘நேர் மறைச்சூல்’ என நிறமாற்றம் செய்து சாதனை படைக்கிறார்கள்;  மற்றவர்கள் வேதனையடைகிறார்கள்.

எதிர்மறைச் சூல் – என எவ்வாறு அடையாளங் காண்பது? அதன் தாக்கத்திலிருந்து தப்பி, பயணத்திசை தடுமாற்றம் நிகழ்ந்துவிடாமல், வெற்றியின் இலக்கை மட்டும் எட்டுவது எப்படி?  எதிர்மறைச்சூல் ஒளிந்து கொண்டிருப்பதை உணர்ந்து, நேர் மறை நிகழ்வுகளை உருவாக்கும் வழிமுறை என்ன? என்ற கேள்விகள் அலை அலையாய் எழுகின்றன;  அடி  மனத்தில்!

மிகச் சுலபம்!  ஒரு குறுக்குவழி என்றம் கொள்ளலாம். அது “Ask Why? Think.. Why Not?” & என்பது.

ஏன்? – என்று கேளுங்கள்;  ஏன் கூடாது? என்று சிந்தியுங்கள்!  எதிர்மறைச் சூலினை அடையாளங் காணலாம்;  நேர்மறை விளைவை உருவாக்கிக் காட்டலாம்.

வேறு யாரும் எதையும் செய்யுமாறு சொன்னால்… ஏன்? என்று அவர்களிடமே கேளுங்கள்;  காரணங்களைக் கூறுவார்கள்.

“ஏன் கூடாது” என்று கேட்டால்… அந்தத் தரப்பில் பதில் இருக்காது.  ஏனென்றால் அந்தக் காரியம் அவர்களுக்கு “ஆக” வேண்டும்.

அதனால் ஏன் கூடாது.. என்பதை நீங்கள் சிந்தியுங்கள்.  இப்போது இந்த இரண்டு கேள்விகளும் எதிர்மறைச் சூலை அடையாளங்காண எவ்வாறு உதவுகிறது என்று காண்போம்.

இங்கே “ஏன்?” என்றும், “ஏன் கூடாது?” என்றும் நமை நாமே கேட்டுக் கொண்டு சிந்தித்து விடை காண வேண்டும்.

ஏன்? என்ற கேள்விக்குத் திருப்திகரமான ‘முன்னேற்றத்துக்கான வெற்றிக்கான தேவை’ என்ற விடை கிடைத்தால.. அந்தச் செயல் செயலின் அடி நாதமாக உள்ள ‘சூல்’ நேர்மறை என்றுணரலாம்.

மாறாக.. மாறான பதில் கிடைத்தால் ‘எதிர்மறை சூல்’  கொண்டுள்ளது என்றறியலாம். இவ்வாறு அடையாளங் கண்டு கொண்ட பின் நேர்மறையாக நிறமாற்றம் செய்வது எவ்வாறு?

இப்போது அந்தச் செயலை “ஏன் செய்யக் கூடாது?” என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிந்தித்தால்…

நிறைய காரணங்கள் தோன்றும்.   பட்டியலிடுங்கள்;  ஒவ்வொரு காரணத்தையும் ஆய்ந்த அதன் எதிர் மறைத் தன்மைக்கேற்ப “செய்ய வேண்டிய செயலில் செய்ய வேண்டிய மாற்றங்களைக் “குறித்துக்கொள்ள வேண்டும்.

முடிவில்.. உள்ளே ஒளிந்து கொண்டிருந்த ‘எதிர்மறைச்  சூல்’ படிப்படியாக ‘நேர்மறைச் சூலாக’ மாற்றம் பெற்றிருப்பதைக் காணலாம்.

தொடரும்…

 

1 Comment

  1. M. J. SYED ABDULRAHMAN says:

    மிக அருமையன் எதிர்மறை பற்றி நல்ல கட்டுரை ஏன்? வினா?
    வழி_சிந்தித்தால் சிகரம் வரை

    நன்றி ஐயா – சிறப்பு

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்