உங்கள வாழ்க்கையின் வெற்றி உங்களின் எண்ணங்களைக்கொண்டுதான் உருவாகிறது. எண்ணங்கள் முடமாகிக் கிடந்தால் வெற்றியின் முகவரி உங்களுக்கு அகப்படாது. எண்ணம்தான் வாழக்கை. அதாவது நேற்றைய எண்ணமே உங்களின் இன்றைய வாழ்க்கை. உங்களின் இன்றைய எண்ணம்தான் நாளை வாழ்க்கையாக மலர்கின்றது. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் ஆற்றல் கொண்டவை உங்கள் எணங்கள் மட்டுமே. ஆகவே உங்கள் எண்ணங்கள் எந்த அளவிற்கு விரிகின்றதோ,அந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கையும் உயர்கின்றது.
மன அரங்கில் எப்பொழுதும் எண்ணங்கள் அலை அலையாக அரங்கறியவாறே உள்ளன. மனம் மலடாகக்கிடந்தால் நச்சு எண்ணங்கள் உட்புகுந்து கொள்கின்றன. மனதில் நச்சு எண்ணங்கள் தோன்றுவதைத்தடுக்க நீங்கள் எப்பொழுதும் நல்ல எண்ணங்களால் மனதை நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.மனம் முழுக்க ஆக்கபூர்வ எண்ணங்கள் மலர்ந்தால் வெற்றியின் அரும்புகள் உங்கள் மனதில் துளிர்விடத் தொடங்குவதை உங்களால் உணரமுடியும். எதையும் முடியும் என்று எண்ணுங்கள். எதிரே உள்ள சாவல்களை எதிர்கொள்ளும் ஆற்றல், உங்களுக்கு உள்ளது என முழுமையாக நம்புங்கள். ஏனென்றால் நம்பிக்கை தான் வாழ்க்கையின் அஸ்திவாரம்.
வாழ்வின் பரிணாமத்தில் எண்ணங்களே ஏணிப்படிகளாக அமைகின்றன. உங்கள் எண்ணங்கள உயரும்போது நீங்களும் உயர்கிறீர்கள். வெள்ளத்தின் அளவு உயரும் போது தாமரையின் உயரமும் அதற்கேறவாறு உயர்கிறது. அதேபோல மனதில் எண்ணத்தின் உயரம் கூடக்கூட வாழ்க்கையின் உயரம் கூடுகிறது. எண்ணங்கள் தாழும் போது வாழ்க்கையும் தாழ்ந்து விடுகிறது. அதாவது ஒன்றை வெல்வதற்கு முன்னர் உங்கள் மனதால் அதை வெற்றி கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவர் தேர்வில் வெற்றி பெறும் முன்னர் அவர் எண்ணத்தால் தேர்வை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு எண்ணத்தால் ஒன்றை எதிர்கொள்ளும்போது என்னென்ன இடையூறுகளை நீங்கள் சந்திக்க உள்ளீர்கள் என்பதை மனக்கண்ணால் கண்டு அவற்றிற்காண தீர்வுகளையும் எண்ணிப்பார்க்க முடியும்.
மேலும் அத்தகைய இடையூறுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றியும் பிரச்னைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதைப் பற்றியும் மனம் தீர்க்கமாக எண்ணி எண்ணி தீர்வுகளின் மீதே சதா அடை காக்கத் தொடங்கும். பிறகு வெற்றியின் வெளிச்சம் உங்கள் மீது பரவத் தொடங்கும்.அதன் பின்னர் மனம் முழுக்க உத்வேகமும், உற்சாகமும் மின்சாரமாக பாய்வதை உங்களால் உணர முடியும். இவ்வாறு உற்சாகத்தின் வீச்சு கூடும் போது மனதில் முடங்கிக் கிடக்கும் ஆற்றல் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கும். தடைகள் உங்கள் வாழ்க்கையின் படிகளாகும். எதையும் முடியும் என்று எண்ணுங்கள். அவ்வாறு எண்ணும் போது “எப்படி முடியும்” என்று வினா உங்களைத் துரத்த தொடங்கும். மனம் முழுக்க தேடல் பறவைகள் சிறகினை விரிக்கும். விரிந்த பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள ஒவ்வொரு வழிமுறைகளையும் தேடித்தேடி மனப் பயணம் தொடங்கும். இதனால் முடியாது என்ற எண்ணம் முறியடிக்கபட்டுவிடுகிறது.
தோல்விகள் ஏற்படும்போது எதிர்மறை எண்ணம் ஏற்படுவதற்கோ, பின்வாங்கு எண்ணம் உண்டாவதற்கோ ஒருபோதும் வழிவிடாதீர்கள். அது போன்ற சூழ்நிலைகளில் தோல்வியை எவ்வாறு பாடமாக எடுத்துக் கொண்டு முன்னேறுவது என்று எண்ணத் தொடங்குங்கள். வெற்றியினால் கிடைக்கும் பரிசுகளை விட தோல்வினால் கற்றுக்கொள்ளும் பாடங்களின் மதிப்பு உயர்ந்தவை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். முன் வைத்த காலை பின் வைப்பதில்லை, வெற்றிக்கு முன்னால் ஓய்வென்பதில்லை என மனம் முழக்கமிட வேண்டும். தோல்விகள் உங்களை நன்கு தயாரித்து கொள்ள அறிவுறுத்தும் ஆசிரியர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஏமாற்றமும், தோல்வியும் புதுப் புது சிந்தனைகளுக்கு உரமாக வேண்டும். தோல்வி என்பது என்றுமே முடிவாக அமைவதில்லை. அது திருப்பு முனையாகவே அமைந்திருக்கிறது. சாதனையாளர்களின் வரலாறுகளை புரட்டும்போது இந்த உண்மைகள் நன்கு விளங்கும்.
எண்ணங்களால் எதையும் சாதிக்க முடியும். எண்ணங்களால் மனம் வலிமை பெறுகின்றது. எண்ணங்களை ஏணியாக்கி வானத்தின் முகடுகளை தொடுவதற்காக நீங்கள் பிறந்துள்ளீர்கள். எண்ணங்களை வலையாகி உலகத்தைப் பிடித்து உங்கள் மனதுள் வையுங்கள்.முடியாது என்று சொல்லும் வார்த்தைகளுக்கு உங்கள் செவி மட்டுமல்ல மனமும் மறுப்பு சொல்ல வேண்டும். விரிந்த உலகத்தில் விடைகள் நிறைந்துள்ளன. தடைகளெல்லாம் விடைகளாக மாற்றும் வல்லமை உங்கள் எண்ணத்திற்கு உள்ளது என்பதை உணருங்கள்.
எண்ணத்தின் பாதை எவ்வாறு செல்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள். அதாவது உங்கள் எண்ணத்தின் பயணம் வெற்றியின் இலக்கை நோக்கிச் செல்கிறதா? என அவ்வப்போது சுய தணிக்கை செய்யுங்கள். பொதுவாக பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளத்தைப்போல, எணணங்கள் தோல்வியை நோக்கிச் சென்றால் நீங்கள் உங்களுடைய மன ஆற்றலை இழக்கின்றீர்கள் என்று பொருள். உத்வேகம் குறைவதோடு மனம் சோர்வடைந்து விடுகிறது. ஆகவே எண்ணத்தின் பயணத்தை வெற்றியை நோக்கியே செலுத்துங்கள். எண்ணத்தை வெற்றியின் இலக்கை நோக்கி திருப்பி விடுவதில் நீங்கள் வென்றுவிட்டால் நிஜ வாழ்வில் சவால்களை மிகவும் எளிதாகிவிடுகிறது. ஆகவே வெற்றி பெறும் எண்ணங்கள் மனதில் தொடர்ந்து மலரட்டும். வெற்றியின் அதிர்வுகள் உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் பதிவாகட்டும். பிறகு பாருங்கள் உங்கள் சொல்லிலும், செயலிலும், அணுகுமுறையிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கும். இவ்வாறு மனதளவில் நிகழும் ஒவ்வொரு மாற்றமும், செயலோடு கைகோர்க்க வேண்டும். அவ்வாறு எண்ணமும், செயலும் ஆக்கபூர்வமாக உருவாகும் போது வாழ்க்கையின் பயணம் வெற்றிப் பயணமாக மாறுகின்றது. அதனால் புத்துணர்வோடு கூடிய அதிர்வுகள் உங்களிடமிருந்து புறப்படுகிறது. அவை எதிரே உள்ள தடைகளை தகர்த்து அவற்றை எல்லாம் வழிகளாக மாற்றுகின்றது.
அதன் பிறகு நீங்கள் திரும்பும் திசைகளெல்லாம் வெற்றிப் பூக்களை உங்களால் பறிக்க முடியும். தோல்விச் சருகுகள் உதரத் தொடங்கும். இந்தத் தொடக்கமே ஒவ்வொரு செயலின் அடித்தளமாகவும், ஊக்குவிக்கும் உந்து சக்தியாகும் இருந்து செயல்களை வெற்றிகரமாக முடிக்க உதவுகின்றன. ஆகவே உங்கள் எண்ணங்களின் தன்மையை உணருங்கள்! அவற்றை உயர்த்துங்கள்! உயருங்கள்!

January 2005




























1 Comment
Thanks, nice and motivating article…