Home » Articles » நீங்களும் எழுத்தாளராகலாம்

 
நீங்களும் எழுத்தாளராகலாம்


பெருமாள் முருகன்
Author:

தொடர்…

– பெருமாள் முருகன்

எழுதுவதற்கு என்ன வேண்டும்? இந்தக் கேள்விக்கு எத்தனையோ பதில்கள் உண்டு. நல்ல எழுதுகோல் தேவை என்று ஒருவர் சொல்லலாம். சிலருக்குப் பேனா மேல் இருக்கும் ஈடுபாடு அத்தகையது. விதவிதமான எழுதுகோல்களைச் சேகரிக்கும் வழக்கமுள்ள நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எழுதுபவர்கள் அல்ல. பேனா வடிவங்களில் மயக்கம் கொண்டவர்கள்.

பேனா மீது உணர்வுப் பூர்வமான ஈடுபாடு கொண்டவர்களும் உண்டு. தன்னுடைய பேனாவில் எழுதினால்தான் எழுத்துவரும் என்னும் நம்பிக்கை. ராசியான பேனா என்றால் அதனைப் பிறரிடம் கொடுக்க மாட்டார்கள். சில பேனாக்கள் இயங்கும் விதம் அதனைப் போற்றி வைத்திருப்பவர்க்கு மட்டுமே தெரியும்.

எழுதுவதற்கு அழகான மேசை வேண்டும் என்றுகூட ஒருவர் கூறலாம். என் நண்பர் ஒருவர், தான் தேர்வில் தோல்வியுற்றதற்குப் படிக்க பொருத்தமான மேசை இல்லாததுதான் காரணம் என்று குறைபட்டுக் கொண்டார். இன்னொருவர், எழுதத் தாள்கள் அவசியம் எனலாம். மையுறுஞ்சும் சாதாரணத் தாள்களில் எழுத ஒருவருக்கு மனம் குவியாமல் போகலாம். உயர்தர வெள்ளைத்தாள்கள் எழுத்துக்குக் கம்பீரம் கொடுப்பதாக உணரலாம்.

தனிமையும் வசதியும் கொண்ட இடம் இருந்தால், தவிர எழுத எனக்கு வராது என்று பதில் சொல்பவர்களும் உண்டு. ஒரு குறிப்பிட்ட வீட்டில் குடியிருந்தபோது நிறைய எழுத முடிந்ததாகவும் வீடு மாறியபின் எழுதவே முடியவில்லை என்று எழுத்தாளர் ஒருவர் குறைப்பட்டுக்கொண்டார். எத்தனை பெரிய கூட்டத்தின் இடையிலும் தன் தனிமையைக் காப்பாற்றி வைத்துக் கொள்பவர்களும்த உள்ளனர். காற்றின் சிறு உரசல் ஒலியில் கூட தனிமையைத் தொலைத்துப் பதற்றம் அடைவோரும் உண்டு.

சிலருக்கு எழுத ஒரு தலைப்பு வேண்டும். எந்தத் தலைப்பு என்றாலும் அதற்குத் தயாரித்துவிடக் கூடிய இயல்புடையவர்கள் பலர். பட்டிமன்றப் பேசாளர்கள் பலரின் இயல்பு இத்தகையது. ஒட்டியும் அவர்களால் பேசமுடியும். வெட்டியும் பேசமுடியும். ஏனென்றால், அது தொழில், சிலர் குறிப்பிட தலைப்புக்கு – ஒருமுறை தயாரித்து வைத்துக்கொள்வார்கள். வருசக்கணக்காக அது ஓடும். நான் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது விழாவொன்றில் வந்து பேசிய பேச்சாளர், பதினைந்து ஆண்டுகளுகுப் பின் நான் வேலைபார்த்த கல்லூரிக்கும் பேச வந்தார். ஒரே தலைப்பு; ஒரு பேச்சு; அவர் காட்டும் மேற்கோள் கவிதைகளில் கூட மாற்றமில்லை. கல்லூரிக்கென்றால் இப்படி என்று அவர் தயாரித்துக் கொண்ட பேச்சு தலைமுறைகளைக் கடந்து பலனளித்துக் கொண்டிருக்கிறது.

கவிதைப் போட்டி ஒன்றின்போது அதை நடத்தும் பொறுப்பிலிருந்த பேராசிரியர், ‘தலைப்புச் சொல்லுங்க’ என்று மாணவர்கள் கேட்டதும், ‘அது தான் கெடக்கல. ஒரு தலைப்பைத் தேடித்தவிக்கிறேன்’ என்றார். சட்டென ‘ஒரு தலைப்பைத் தேடி’ என்பதுதான் கவிதைத் தலைப்பு என்று அறிவித்துவிட்டார். தலைப்பு கிடைப்பதும் இப்படியும் உண்டு.

தமிழின் முன்னோடிச் சிறுகதை எழுத்தாளரான புதுமைப் பித்தன், ‘நாசகாரக் கும்பல்’ என்னும் அருமையான சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார். அக்கதையை அவர் எழுதி சம்பவம் சுவராஸ்யமானது. பத்திரிகை ஒன்றின் அடுத்த இதழுக்குப் புதுமைப்பித்தனிடம் கதை கேட்டனர். அவரும் ஒத்துக் கொண்டார். ‘அடுத்த இதழுக்கு முன் விளம்பரம் கொடுக்க வேண்டும். கதையின் தலைப்பைச சொல்லுங்கள்’ என்று இதழாசிரியர் அடம் பிடித்தார்.

தான் ஏற்கனவே எழுத்த் தொடங்கிப் பாதிவரை கதை வந்துவிட்டதெனப் பாவனை செய்த புதுமைப்பித்தன் உடனே ஒரு தலைப்பைச் சொன்னார். ‘நாட்டினுக்கு நலம் கெடுக்கும் நாசகாரக் கும்பல்’ என்னும் பாட்டுவரி ஒன்றை அவர் முணுமுணுத்துக் கொண்டிருந்த சமயம் அது. ‘நாசகாரக் கும்பல்’ சொற்சேர்க்கை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது அதையே தலைப்பாகச் சொல்லிவிட்டார். பின்னர் அத்தலைப்புக்கு எழுதிய கதை மிகவும் புகழ்பெற்றது.

வேறு சிலருக்கு எழுத வேண்டும் என்றால் சுவையான தேநீர் தேவை. தேநீரின் ஒவ்வொரு உறிஞ்சலிலும் மூளையின் ஒருபாகம் திறந்து கொள்ளக்கூடும். தேநீருக்குப் பதிலாக புகைப்பொருள்கள், மதுபானம் ஆகியவற்றை நாடுவோரும் உண்டு. உண்மையோ பொய்யோ தெரியவில்லை. கண்ணதாசன் போதையில்தான் கவிதை எழுதுவார் என்றோர் கருத்துப் பரவலாக நிலவுகிறது. ‘ஒரு கோப்பையில் என் குடியிருப்புய என்றும் பாடினார். பாரதியார் கஞ்சாப் புகைக்கும் பழக்கம் உள்ளவர் என்பார்கள். அப்பழக்கத்தால்தான் அவருக்குப் பீரிட்டுக் கொண்டு கவிதை வந்திருக்குமோ? அப்படியென்றால் கஞ்சாப் புகைக்கிறவர்கள் எல்லாம் கவிஞர்களாக இருக்க வேண்டுமே.

அதேபோலக் கண்ணதாசன் ‘அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை’ என்றும் சொன்னார். அதனால் தானோ என்னவோ பலர் காதல் வந்துவிட்டால் கவிதை தானாக வரும் என்று நம்புகிறார்கள். என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன்.

நான்
கவிதை எழுத வேண்டும்
நான்
கவிதை எழுத வேண்டும்
அடியே
வா காதலிப்போம்

என்று கவிதை எழுதினான். ஆக, காதல் முதன்மையான நோக்கமில்லை. கவிதைதான் முதன்மை. அதற்குக் காதல் வேண்டும். இந்த மனப்பான்மையைக்கேலி செய்யும் வரிகள் இவை. ஆனால், காதலிப்போர் எல்லோரும் கவிதை எழுதும் திறன் கொண்டவர்கள் என்று சொல்ல முடியாது. கவிதை என்னும் பெயரில் ஒருவரியாவது கிறுக்காத இளைஞனே இல்லை என்றும் சொல்வதுண்டு. இங்கே காதல் போய்விட்டால் கவிதையும் போய்விடுகிறது.

எழுதுவதை ‘ரொம்பச் சுலபம்’ என்று கருதுவோர் ஏராளம். ஏதாவது ஒன்றைப் படித்துவிட்டு அல்லது எழுத்தாளர் ஒருவரைச் சந்தித்து பேசியபின் எழுத்தார்வம் பொங்கிப் பெருக எழுத்த் தொடங்கி விடுவார்கள். அவர்களுடைய உற்சாகம், வேகம் போற்றத்தக்கதுதான். ஆனால் அது சோடா பாட்டில் உற்சாகம். கோலிச்சோடாவை உடைத்தால் நுரையோடு பொங்கிக்கொண்டு காற்று மேலெழுந்து வரும். அந்த எழுச்சி வெகுநேரம் நீடிக்காது. சட்டென்று அடங்கிப்போகும். அத்தகைய உற்சாகத்தால் பயனில்லை. எழுந்து உற்சாகம் அடங்கிப் போன வரைக் கேட்டால் அவர் சொல்வார், ‘சரியான கரு கெடைக்கல’ என்று.

எழுதத் தேவை ‘கரு’ என்றுதான் பெரும்பான்மையான பேர்நினைக்கிறார்கள். நல்ல நல்ல கரு கிடைப்பவர்கள் பெரிய எழுத்தாளர்கள் ஆகிறார்கள். கிடைக்காதவர்கள் பெரிய எழுத்தாளர்களாக முடிவதில்லை. அப்படித்தானா?

கல்லூரி மாணவர்களிடம் மட்டுமின்றி பொதுவாகவே இன்னொருகருத்தும் நிலவுகிறது. தமிழ் படித்தவர்களால் எழுத முடியும் என்பது அது. தமிழ் இலக்கியத்தைப் பாடமாக எடுத்துவிட்டால் அவர்கள் இலக்கியப் படைப்பாளிகளாகச் சட்டென மாறி விடுவார்களாழ அந்த ரசவித்தை தமிழுக்கு இருக்கிறதா? நான்றிய பெரும்பாலான எழுத்தாளர்கள் முறைசார் கல்விமுறையில் தமிழ் இலக்கியம் படித்தவர்கள் அல்லர். அப்படிப் படித்தவர்களில் மிகக் குறைவான பேர்களே எழுத்தாற்றல் பெற்றவர்கள். தமிழ் இலக்கியம் படித்ததால் புலமை பெறலாம். இலக்கிய அறிவு வளரும். ஆனால் எழுத முடியுமா?

பேனா, தாள், மேசை இவையெல்லாம் கருவிகள். கருவிகளே ஒரு செயலைச் செய்துவிடுவதில்லை. கருவிகள் செயலுக்குப் பயன்படும். அவ்வளவுதான். கருவிகள் மீதான பிரியத்தால் ஒருவர் அதனால்தான் எனக்கு எழுத்து வருகிறது என்று சொல்லலாம். ஆனால் அது உண்மையாகிவிடாது.

வீடு, இடம், வசதி போன்றவை சூழல் சார்ந்தவை. சூழல் ஒரு மனிதனின் சிந்தனை. கருத்துக்களை உருவாக்கும்; பாதிக்கும். குறிப்பிட்ட சூழல் எழுத உதவி செய்யும். தொந்தரவு, தொல்லைகளிலிருந்து விடுபட்டுக் கவனம் செலுத்தச் சூழல் உதவலாம். ஆனால் சூழலால் மட்டும் எழுத்தை உருவாக்க முடியாது.

தலைப்பு, போதை, காதல் கரு ஆகியவை மனநிலை சார்ந்தவை. அவை குறிப்பிட்ட ஏதாவது ஒரு சூழலில் படைப்புந்துதல் தரலாம். அவை எழுத்துக்கான அடிப்படை நிபர்ந்தனைகள் ஆகா. மேலும் இவை தனி மனிதர்களில் இயல்புகளைப் பிரதிபலிப்பவை. எழுத்தின் பொதுத்தன்மை என்று சொல்லிவிட முடியாது.

எழுத வேறென்ன வேண்டும்? கடவுளின் அருள் என்று சொல்லலாமா?

(தொடரும்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2004

நீங்களும் எழுத்தாளராகலாம்
அறிவும் வெற்றியும்
மகிழ்ச்சி மிக சுலபம்
எண்ணத்தில் முதன்மை கொள்வோம்
தேர்வு
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
உள்ளத்தோடு உள்ளம்