![]() |
Author: மணவழகன் ஜே
|
“கொடிது கொடிது வறுமை கொடிது” – என்ற அவ்வையின் வாக்கு செல்வச் செழிப்பிற்கு பொருந்துகிறதோ இல்லையோ, திறமைக்குச் சரியாகப் பொருந்துகிறது. திறமையில்(குறைவு) வறுமை ஏற்பட்டால் அது வாழ்க்கையைக் கொடிதாக்கிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
யார் திறமைசாலி?
திறமை என்றால் என்ன? ஒரு விசயத்தைப் பற்றிய நல்ல அறிவு அல்லது ஒரு செயலைச் சரியாகச் செய்வதற்குரிய பயிற்சியை, திறமை என்று கூறலாம்.
நாம் யாரை திறமைசாலி என்று கூறுகிறோம்? மேற்கூறிய விளக்கத்தின்படி பலபேர் செய்ய அறியாத, செய்ய இயலாத, ஒரு செயலை செய்பவரைத்தான் நாம் திறமைசாலி என்கிறோம்.
ஒரு சிலர் மட்டும் திறமைசாலி என்ற பெயரை தட்டிச் செல்கிறார்களே எப்படி? அவர்கள் அச்செயசலை செய்வதற்கும் அதைப்பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்வதற்கும், உழைப்பையும், அதற்காக நேரத்தையும் முதலீடு செய்தவ்கள்.
முதலீடு (Capital) செய்தவர்தானே இலாபம் பார்க்க முடியும்!
பிடித்ததை தேர்ந்தெடுப்போம்
உண்மையில் நாம் செல்வ வளமை இழந்து வறுமையில் வாடக்காரணம், நமது திறமையை வளர்த்துக் கொள்ளாத்தும் பயன்படுத்தாத்தும்தான்.
இந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொண்டால் “என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்” – என்று கவிபாடும் அளவுக்கு வளம் செழித்திருந்தும், உலக வங்கியிடமும் நம்நாட்டைவிட சிறிய நாடுகளிடமும் கடனும், நன்கொடையும் பெறவேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது?
நம்மிடம் உள்ள வளத்தினை பயன்படுத்தி உற்பத்தியையும், தரத்தையும் உயர்த்தி விடுகின்ற திறமை இல்லாததுதான்.
அவ்வாறு திறமை படைத்தவர்களை உருவாக்கி அவர்களை நம் நாட்டுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வழிவகை அறியாமல், திறமைசாலிகளை வெளிநாடுகளுக்கு வேலைக்கார்களாகப் (Brain Drain) போக விட்டுவிடுகிறார்கள் நமது தலைவர்கள்.
திறமையை வளர்க்க..
நாம் திறமையை வளர்த்துக் கொள்ள என்ன செய்யலாம்? நமக்குப் பிடித்த அல்லது நன்கு அனுபவமான துறையினை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். அத்துறையின் தற்கால நிலைமையினையும் தெரிந்துகொண்டு, எதிர்கால வாய்ப்பினையும் அனுமானித்துக் கொள்ள வேண்டும். பிறகு அத்துறையில் பயிற்சி எடுக்க வேண்டும்.
உதாரணமாக விற்பனை என்றால் மொத்த விற்பனையா, சில்லரை விற்பனையா, கடை வைத்தா அல்லது வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்வதா, ஆட்களை வைத்து விற்பதா அல்லது நாமே சென்று விற்பதா? எனப்பல விசயங்களை விளங்கிக்கொண்ட பின்புதான் பயிற்சியில் இறங்க வேண்டும்.
அடையாளம் காணுங்கள்
எல்லாம் தெரிந்தவர்களுகும் உலகில் இல்லை. ஒன்றுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. எனவே, உங்களுக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் காணுங்கள். உங்களுக்கு உதவ இதோ சிறுபட்டியல்.
உங்களுக்குள் உள்ள திறமைகள் கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றாக அல்லது சிலவாக இருக்கும். – அதை டிக் செய்து கொண்டே வாருங்கள்.
பேச்சுத் திறமை, கடுமையான உழைப்பு, சிரித்த முகத்துடன் இருத்தல், மரியாதை, பணிவு, அழகான கையெழுத்து, வேகமாக பேசுவது, எளிதாக முடிவெடுப்பது. உடன் இருப்பவர் பற்றி உடனடியாக புரிந்து கொள்வது. புதிய சூழ்நிலையில் ஒத்துப்போதல், பொது விசயங்களை தெரிந்து வைத்திருத்தல், கல்வியறிவு, பலருடன் நட்பு; நகைச்சுவை, எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம், தலைமைப் பண்பு, திறந்த மனம், காலம் தவறாமை, தன்னடக்கம், தன்னம்பிக்கை, பிறர் நம்பும்படியான நடத்தை கொண்டவராக இருத்தல், பலமொழிகள் பேசுதல், உற்சாகம் போன்றவை.
மேற்கண்ட பட்டியலில் இல்லாத வேறு திறமைகள் உங்களிடையே இருந்தால் அதையும் குறித்துக் கொள்ளுங்கள். டிக் செய்தவற்றையும் நீங்கள் எழுதியவற்றையும் இன்னுமொரு முறை படித்துக் கொள்ளுங்கள்.
எந்த திறமை உங்களுக்கு அவசியமோ, வாழ்க்கைக்கு உதவக்கூடியதோ, அவற்றைப் பட்டியலிடுங்கள்.
செயல்படுத்துதல்
உங்களுக்குள்ள திறமைகளை பட்டியலிட்டு விட்டீர்கள், எது முக்கியம் என்பதை தேர்ந்தெடுத்து விட்டீர்கள், அதை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை செயல்படுத்த ஆரம்பியுங்கள்.
செயல்படுத்து துவங்கிய சிறிது நாட்களில் உங்களுது மனதளவிலான மாற்றம் உங்கள் செயல்களில் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்த ஆரம்பிக்கும்.
அனைவருக்கும் அனைத்துத் திறமைகளும் வந்து விடாது. எங்கேயாவது, யாராவது சிலருக்கு பல திறமைகள் சிறப்பாக கை கூடி வரலாம். அப்படிப்பட்டவர்களுடனோ, அல்லது நம்மிடம் இல்லாத வேறு திறமைகள்ளை உடையவருடனோ நம்மை ஒப்பிட்டுக் கொண்டு அய்யோ, அவரைப்போல நாம் இல்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பது. நம்மிடம் இருக்கின்ற திறமையையும் குறைந்து மதிப்பிடக்கூடிய மனநிலைக்கு இட்டுச் சென்றுவிடும்.
திறமைகளை வெளிக்கொணர்வோம்
பொதுவாக பலர் திறமை இருப்பவர்களாக இருப்பார்கள். அந்தத் திறமையை எப்படிப் பயன்படுத்தி முன்னேற இயலும் என்று அறியாமல் இருப்பார்கள்.
இப்படி இருக்கின்றவர்களுக்காகவே சொல்லப்பட்ட வாசகம்தான், “தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும், தேடுங்கள் சென்றடைவீர்கள்”.
திறமைகளையும், சக்தியையும் வைத்துக்கொண்டு ஒன்று செய்யாமல் இருப்பது தனக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு.
உங்கள் திறமைகளை விற்பனை செய்ய பல கதவுகளைத் தட்டவேண்டி இருக்கலாம், பலரை கேட்க வேண்டியதாக இருக்கலாம், பல இடங்களில் வாய்ப்பினைத் தேடிச் செல்லவேண்டியதாக இருக்கலாம்.
எனவே மேற்கண்ட மூன்றையும் நிறுத்திவிட்டால் உங்கள் வளர்த்தி, முன்னேற்றம் அப்போதே முடங்கி விட்டது என்று பொருள்.
நீங்கள் சந்திக்கும் அடுத்த நபர் உங்களைப் போன்ற திறமைசாலிகளைத் தேடிக்கொண்டிருப்பவராக இருக்கலாம். ஆகையால் தட்டி, கேட்டு, தேடுவதில் சலிப்புக் கொள்ளாதீர்கள்.
யார் செல்வந்தர்?
திறமைசாலிகள் அனைவரும் செல்வந்தர்களாக, அனைத்து வசதியும் படைத்தவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் செல்வந்தர்களும், வசதிகள் பல கொண்டவர்களும் திறமைசாலிகள் அல்லது திறமைமிக்கவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் திறமை கொண்டவர்கள் தான் என்பதில் ஐயமில்லை.
“நொந்ததது சாகும்”, “தேம்பி அழும் குழந்தை நொண்டி” என்ற மகாகவியின் வரிகளை மனதில் வையுங்கள். “மனம் சக்தி தனக்கே கருவியாக்கு, அது சக்தி, சக்தி என்று குதித்தாடும்” இந்த வைர வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.
திறமைகளைக் கண்டு, வளர்த்து வாருங்கள். இதோ நம் கண்முன்னே வாய்ப்புக்கள்! நாம் வளர்வதற்கு!!

January 2004



























No comments
Be the first one to leave a comment.