Home » Articles » தாரக மந்திரம்

 
தாரக மந்திரம்


செலின் சி.ஆர்
Author:

-சி.ஆர். செலின்

இறைவா…

என்னால் செய்ய முடிந்ததைச் செய்யும் திறனையும், செய்ய முடியாததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், இந்த இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் அறிவையும் எனக்குத்தா!

இவை வெறும் வார்த்தைகளல்ல. உணர்வுகளை நெறிப்படுத்தி, உறவுகளோடு பின்னிப் பிணைந்து நம்மை வாழ வைக்கும் தாரக மந்திரங்கள்.

யோசித்துப் பாருங்கள்! நமக்கு நாமே எதிரியாகிவிடும் சூழலும், உறவுகளோடு மோதலும் எந்தச் சூழ்நிலையில் ஏற்படுகிறது? நம்மால் செய்ய முடிந்த விஷயங்களை, கண்டும் காணாமல் சோம்பேறித்தனத்தாலோ அல்லது அக்கறையின்மையாலோ கிடப்பில் போட்டுவிடும்போது பிறரின் அதிருப்திக்கும், சமயத்தில் குற்றவுணர்ச்சிக்கும் ஆளாகி, நமக்கு நம்முடனேயான உறவையும் மற்றவர்களுடனான உறவையும் துண்டித்துவிடுகிறோம்.

இதென்ன அதிசயம்

நம்மால் செய்ய முடியாத விசயம் என ஒன்றிரண்டாவது உலகத்தில் இருக்கின்றன என என்றைக்காவது ஏற்றுக்கொண்டிருக்கிறோமோ? “ம்க்கும். வரையறதா? அது என்ன பெரிய விசயம். அங்கங்கே பெயிண்ட்டைத் தெளிச்சுட்டு மாடர்ன் ஆர்ட்றாங்க. யார்தான் செய்ய மாட்டா அதை? சமையலா ? சமையறையில் இருக்கிற எல்லா பாட்டில்லயிருந்தும் ஒவ்வொரு கரண்டி எடுத்துப்போட்டுக் கலந்தா வேலை முடிஞ்சது இதென்ன அதிசயம்னு வந்து டமாரம் அடிக்கிறா? இப்படிப் பேசிக்கொண்டு சுற்றுபவர்களை தினமும் எங்கேயாவது பார்க்கலாம். அதுவும் இப்போதெல்லாம் ‘ஆல்ரவுண்டர்களா’ யிருந்தால் தான் பிழைக்கமுடிகிறது. குறைந்த பட்சம் அப்படி காட்டிக் கொள்ளவாவது வேண்டும்.

ஏற்றுக்கொள்ளுதல்:

மேலும், நம் மனதளவிலாவது நம்மால் செய்ய முடியாத விஷயங்களை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். நீங்கள் சிறந்த ஆடிட்டராயிருக்கலாம். ஆனால் சமையல் துளிகூடத் தெரியாது. நீங்கள் சிறந்த ஓவியராயிருக்கலாம். ஆனால் தாட்பூட்டென பேசமுடியாது. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்த்தில் நமக்கு அப்பாற்பட்ட விசயங்கள் என சிலவற்றை சுமந்து கொண்டுதானிருக்கிறோம். இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால்தான், அவற்றைத் திறம்படச் செய்பவர்களைப் பார்த்து அதிசயிப்போம். வியப்பின் அடுத்தகட்டமாய், அவர்களைப் பாராட்டுவோம். தன்னால், அங்கே இயல்பாய் ஒரு உறவு மலரும். அனிச்சையாய், ஒரு மலரின் இதழ் விரிவதைப் போல், பிறருடனான உறவு மலர்வது நாம் நமக்கு உண்மையாயிருக்கும் நேரத்தில்தான் ‘என்னால் முடியாது’ என்று உண்மையை ஒப்புக்கொள்வதற்கும் மிகுந்த தைரியம்ம் வேண்டும். நம் இயலாமையை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டால், வாழ்வு இனிக்கும்.

வேறுபடுத்திப் பார்த்தல்

அடுத்தது, இவ்விரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் அறிவு… இந்த இடத்தில் பலருக்குப் பிரச்சினைதான். ஒரு விசயத்தை தன்னால் செய்ய முடியும் என்ற நிலையிலிருக்கும் போதும், விருப்பமின்மையால் அல்லது சோம்பேறித்தனத்தால் ‘ஐயோ! என்னால் முடியாது’ என தவிர்த்து விடுவார்கள். அல்லது இதற்கு நேர்மாறாக தனக்கு அப்பாற்பட்ட விசயங்களைத் தலைமேல் போட்டுக்கொண்டு, தலைகீழாய் நின்றாவது சாதித்தாக வேண்டும் என்ற வெறியோடு அலைவார்கள். இவை இரண்டுமே உண்மைக்குப் புறம்பான, நிலைமையை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் இப்படி செய்வதால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதை உணர வேண்டும். இப்படி எந்தத் திரையும் இல்லாமல், எவ்வித ஒளிவு மறைவுமின்றி, திறந்த மனதுடன் நடுநிலையாய் யோசித்துப் பாருங்கள். “என்னால் செய்ய முடிந்தவை என்னென்ன? செய்ய முடியாதவை எவை?” என்று அலசிப்பாருங்கள். சின்ன விசயமோ, பெரிய காரியமோ தன்மை எபடியிருப்பினும், இவ்விரண்டையும் வேறுபடுத்திப் பாருக்கும் கலை கைவந்து விட்டால் உறவுகளை சீர்படுத்திக் கொள்வது எளிதாகி விடும். ஆக, இவை வெறும் வார்த்தைகளல்ல, வாழ்வை வழிநடத்தும் தாரக மந்திரங்கள்.

மூன்று முக்கிய உறவுகள்

உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள், மனத்தடைகள்.. இவற்றைப் பற்றி இதுவரை பகிர்ந்து கொண்டோம். நாம் கையாள வேண்டிய அடிப்படை விசயங்களை ஆராய்ந்தோம். இவற்றை செயல்படுத்தும் போது நாம் எவ்வகையான உறவு நிலையிலிருக்கிறோம் என்பதையும் யோசித்து அறிந்து கொள்ள வேண்டும். அதென்ன உறவு நிலைகள்?

உறவுகள் பலவிதம், உண்மைதான். ஆனால் அவை அனைத்தையும் மூன்று அடிப்படை வட்டங்களுக்குள் அடக்கி விடலாம்.

தேடிவரும் உறவுகள்

சிலரிடத்தில் நாம் பெரிதாய் எதுவும் ஈடுபாடு காட்டமாட்டோம். இயல்பான ஓரிரு வார்த்தைகளோடு நின்று விடுவோம். மனதளவிலும் பெரிதாய் ஓட்டுதல் இருக்காது. ஆனால், அவர்கள் நம்மைச் சுற்றிச்சுற்றி வருவார்கள். எப்பாடுபட்டாவது நம்முடனான உறவை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார்கள். சம்பந்தப்பட்டவர்களின் குணநலன்களை, தன்மையைப் பொறுத்து இதன் வீரியம் மாறுபடலாம். ஆனால், விசயம் ஒன்றுதான்.

தேடிப்போகும் உறவுகள்

அதேபோல், சிலர் நம்முடன்ன் உறவாடுவதில் பெரிதாய் விருப்பம் காண்பிக்கமாட்டார்கள். தானுண்டு. தன் வேலை உண்டு என்று அமைதியாயிருப்பார்கள். ஆனால், அவர்களிடமுள்ள ஏதோ ஒன்று நம்மை இழக்கும். மீண்டும் மீண்டும் போய் பேசத் த ஓன்றும். அந்த உறவைப் பலப்படுத்திக் கொள்ளத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். அவர்களுக்காக நம் மனதின் ஒரு பகுதி காலியாயிருக்கும். எப்போதும் பெரிதாய் எந்த ஆரவாரமும் இல்லாமல், மெலிதாய் சலசலத்துக் கொண்டிருக்கும் ஓடையைப் போல இந்த உறவின் நினைவுகள் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கும். காப் போக்கில் இருவரையும் கட்டுப்போட்டு ஒரே அலைவரிசையில் அடித்துச் செல்லவும் கூடும்.

திணிக்கப்பட்ட உறவுகள்

அடுத்த நிலை இருக்கிறதே.. நினைத்துப் பார்க்கவே கொஞ்சம் எரிச்சலூட்டும் கட்டம்தான். சிலரைப் பார்த்தாலே நமக்குப் பிடிக்காது. எதற்கெடுத்தாலும் எரிந்து எரிந்து விழும் ‘வள் வள்’ நபர், வெளியில் சிரிச்சு உள்ளுக்குள்ள வயிறெரிய புத்தி, பேசிப்பேசியே ஆளை மயக்கி குழியில தள்ளிவிடற ரகம். இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் நமக்கு அவரைப் பிடிக்காமல் போய்விடும். ஆனால், ஒட்டவும் முடியாதமல் தள்ளிப்போகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம். ஏதாவது ஒரு விசயத்திற்கு நாம் அவரைச் சார்ந்திரக்க நேரிடலாம். இல்லை, அவருடன் வேலை விசயமாக பேச வேண்டியதிருக்கலாம். அவர் எரிந்து விழுவதில் அர்த்தமேயில்லை என நன்றாய் புரிந்திருந்தும் நம்மால் எதுவும் செய முடியாத சூழ்நிலையிலிருப்போம். நம் ஒவ்வொருருக்கும் இது போன்ற ஒரு ‘திணிக்கப்பட்ட உறவு’ கட்டாயம் இருக்கும். ‘எனக்கு மட்டும் நிலைமை சரியாகட்டும், நேரம் வரும்போது மவனே உன்னைக் கவனிச்சுக்கிறேன்’ என மனதிற்குள் கறுவிக்கொண்டே வெளியே வேறு வழியில்லாமல் சிரித்துப் பேசுவோம். என்ன, உங்களுக்கும் இப்படி ஒரு ‘கடி’ உறவு’ இருக்கிறதா..?

வேறுபடும் தன்மை

சரி, எதற்கு இப்போது இந்த பட்டியல்? பொதுவாய், ஆம் சில முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது, அல்லது சில விசயங்களைக் கையாளும் போது சம்பந்தப்பட்ட வருக்கும், நமக்குமிடையே என்ன வகையான உறவு நிலை இருக்கிறது என்பதைப் பற்றி யோசித்துப் பார்ப்பது நல்லது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரே விசயம்தான். ஆனால் அது அது ஆட்களுக்குத் தகுந்த படி நிறம் மாறிவிடும். எடுத்துக்காட்டாக நம்மைத் தேடிவரும் உறவுகளிடம் நாம் பேசும் விசயத்தை, திணிக்கப்பட்ட உறவுகளிடம் பேசினால் அது பொருந்தாது. நாம் பேசும் தொனி, பழகும் தன்மை எல்லாமே இந்த உறவு நிலைகளைப் பொறுத்து, அதற்கேற்ப அமைய வேண்டும். அப்பொழுதுதான், “நான் உன்கிட்ட பேசின மாதிரிதானப்பா அவன்கிட்டேயும் பேசினேன்? அதக்கு ஏன் இப்படி பிரச்சினை பண்றான்?” என்று நீங்கள் குழம்பும் நிலை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

வாழ்த்துக்கள்!

இதுவரை நாம் பகிர்ந்து கொண்ட அனைத்து விசயங்களையும், இந்த உறவுநிலைகளின் அடிப்படையில் வகைபடுத்தி, சிந்தித்துத செயல்படுத்திப் பாருங்கள். எவ்வித தடையுமின்றி, போராட்டங்களுமின்றி இனிய இசையாய், பொங்கும் அருவியாய், பூத்துக் குலுங்கும் தோட்டமாய் உங்கள் வாழ்க்கைப் பயணம் தொடரும். உணர்வுகளை அழகாய் கையாளுங்கள். நாளுக்கு நாள் உங்கள் உறவு வட்டம் பெருகும். உங்கள் வபாழ்வு மலர, உறவுகள் இனிக்க என் வாழ்த்துக்கள்!

இரண்டு வருடங்களாய், ஒவ்வொரு மாதமும் உங்களை சந்தித்து, உங்கள் உறவோடும் உணர்வோடும் கலந்து போக எனக்கு வாய்ப்பளித்த ‘தன்னம்பிக்கை’ க்கு என் நன்றிகள்!

நம் உறவு தொடரும். அடுத்த இதழில் புத்திம் புதிய, இன்னொரு வித்தியாசமான தொடரில் உங்களை சந்திக்கிறேன்.. தயாராயிருங்கள்…

முற்றும்.

அன்பு நெஞ்சங்களே!

வணக்கம்! ‘உறவுகள்’ உணர்வுகள்’ தொடர் இந்த இதழுடன் முடிவடைகிறது. அடுத்து நீங்களும் நானும் கலந்துரையாட வாய்ப்பளிக்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க நாமக்கல் வாசகர் வட்ட பயிலரங்கிற்கு வருகிறேன். உங்கள் சிக்கல்களுக்கு உடனே தீர்வு சொல்லப்படும். இந்தத் தீர்வுகள் “மனம், மன்றிய ஆவல்” என்ற புதிய தொடரலாக ‘தன்னம்பிக்கைய்யில் வெளிவர இருக்கிறது. உங்கள் கேள்விகளை நேரிலும் கேட்கலாம், வாய்ப்பில்லாதவர்கள் அஞ்சலிலும் அனுப்பலாம். உங்கள் கேள்விகள், மனம் , உறவியல், த்த்துவம், குடும்பச்சிக்கல், அலுவலகச் சிக்கல், சொந்தப் பிரச்சினை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களுக்குபதிலளிக்க தயாராக இருக்கிறேன். பேப்பர், பேனா எடுத்து விட்டீர்களா? உடனே எழுதி ஆசிரியர், தன்னம்பிக்கை மாத இதழ், 79, திவான் பகதூர் சாலை, கோவை – 641 002

– சி.ஆர். செலின்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2004

கடவுள் பிரபஞ்சம் மனிதன்
மனித வளமேம்பாடு
வியர்வைத் துளிகளை விதைப்போம்
யாமறிந்த சிலம்பொலியார்
சிகரத்தை நோக்கி…
பொங்கல் வாழ்த்து
ஆசையும் ஆரோக்கியமும்
உள்ளத்தோடு உள்ளம்
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
கேட்காதீர்கள் கொடுக்கப்படும்
மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்
திடமான தன்னம்பிக்கை
நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்
கொடிது கொடிது.. திறமையில் வறுமை
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
நினைவாற்றல் பயிற்சி வித்தகர்
பொங்கல் சூளூரை!
ஆசிரியர் சு.செ. ஆண்டு பல வாழ்க!
தாரக மந்திரம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
நீங்களும் எழுத்தாளராகலாம்
பவளவிழா காணும் பண்பாளர்
சித்திரச் சிலம்பின் வித்தகப் பரல்
உளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்
புத்தாண்டில் புறப்படு!
மாணவர் பெற்றோர் பக்கம்