Home » Cover Story » வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி

 
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி


செல்லப்பன் சு
Author:

சிலம்பொலி சு. செல்லப்பன் சங்க காலம் முதல் சமகாலம் வரை – வந்த கவிதைகள் அனைத்தையும், தம் சிந்தனையில் பதிந்தள்ள செந்தமிழ்க் கணினி.

நடமாடும்
நான்காம் தமிழ்ச்சங்கம்!
அள்ளக் குறையாத
அருந்தமிழ்ச் சுரங்கம்!

திங்களைப்போற்றியும்
செங்கதிர்போற்றியும்
சேரன் தம்பி
சிலம்பை இசைத்தார் – சிலம்பு
ஏட்டில் இடம்பெற்றது
சிலம் பொலியார்…
சிலம்பை அசைத்தார் – சிலம்பு
நாட்டில் நடைபோட்டது!

கூர்ந்தமதி சு.செ. வாய்திறந்தால்
கூவுகுயில்சிலையாகி
சிலிர்த்து நிற்கும்!

கேட்டு நிற்கும் கூட்டம்
கிரங்கிப் போகும்
கேளாகும் செவிமருந்து
சிந்தனை கொள்வர்!

தமிழகத்தில் – இவர்
தாள் பதியாத
தமிழ் மன்றங்கள் உண்டா?

சங்க இலக்கியம் – புரியா
சங்கட இலக்கியமாய் இருந்ததை
மக்கள் இலக்கியமாய்
மாற்றிய மேதை!

சீறாப்புராணம் பலருக்கு
ஏறாப்புராம் – அதைச்
சீர் சீராய்ப் பிரித்து
சிந்தை கவர உரைத்தவர்!

புரியாதவர்க்கு
வேம்பா யிருந்த
தேம்பாவணியை
தேன்குழல் சுட்டு
உண்ண் தாரல் போல்
உள்ளம் கவர உரைத்தவர்!

பள்ளி ஆசிரியராய்ப்
பணியைத் தொடங்கி
முதன்மைக் கல்வி அலுவலராகி
முந்து – தமிழ் வளர்ச்சித் துறைக்கும்
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும்
ஒப்புமையில்லா இயக்குநராகி – தமிழ்ப்
பல்கலைக்கழகப் பதிவாளரானவர்!

அரசு பணியினின்று
ஓய்வு பெற்ற பின்பும்
அயராது தமிழ்ப்பணி
ஆற்றும் தமிழ்த்தேனீ!

இன்றும்
பள்ளி மாணவர்களுக்கு
பாடம் நடத்தும்
அகந்தை இல்லாத ஞானி!
எழுபத்தைந்து அகவை நிறைந்த
எளிமையின் இலக்கணம்!

ஒப்பற்ற ஆசிரியர்
முதுபெரும் தமிழறிஞர்
சிறந்த நிர்வாகி
தலைசிறந்த பேச்சாளர்
எழுப்பத்தைந்து அகவை நிறைந்த
எழுஞாயிறு
சு. செல்லப்பனாருக்கு
தன்னம்பிக்கை இதழின்
வாழ்த்துக்கள்!

செல்லப்பர் என்று
செல்லப் பெயரிட்டது வீடு!
சொல்லப்பர் எனும் பெயரை
சூட்டிவிட்டது நாடு

செல்லப்பனார் இப்போது உங்களோடு….

சிலம்பொலி என்றால் தமிழகத்தில் உங்கள மட்டுமே குறிக்கும்படி ஆனது எப்படி? அப்பெயர் உங்களுக்கு எப்படி வந்தது?

என்னுடைய சிலப்பதிகாரப் பேச்சைக்கேட்டு மகிழ்ந்த சொல்லின் செல்வர், இரா.பி. சேதுப்பிள்ளை 1953ல் ‘சிலம்பொலி’ எனும் பட்டத்தை வழங்கினார். ஐயா ம.பொ.சி. அவர்கள் நாடு முழுவதும் சிலப்பதிகாரத்தை எடுத்துரைத்து வந்ததால் அவர் ‘சிலம்புச் செல்வர்’ என அழைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து நான் அப்பணியை மேற்கொண்டதால் ‘சிலம்பொலி’ என்று அழைக்கப்பட்டேன். தொடர்ந்து 50 ஆண்டுகளாக இவ்வாறு அழைக்கப்பட்டு வந்ததால் ‘சிலம்பொலி’ என்பது என் இயற்பெயர் போலவே ஆகிவிட்டது. வேறு யாருகும் இப்படத்தைத் தந்து அழைத்தாலும், ‘சிலம்பொலி’ என்றதும் என்னையே நினைப்பர். ஆதலால் அது என்னுடனேயே ஒட்டிக்கொடு விட்டது. மேலும் எனக்கு இப்பட்டத்தைத் தந்தவர், இப்பட்டம் இவருக்கு மட்டுமே நிலைக்க வேண்டுமெனும் பேருள்ளத்தோடு கொடுத்திருப்பார். ஆதலாலேயே அது எனக்கு நிலைத்துவிட்டது என்றும் கருதுகிறேன்.

நீங்கள் இன்றைய தமிழக இலக்கியப் பேச்சாளர்களில் தலைசிறந்த பேச்சாளர். பேச்சாளராக வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்குள் எப்படி ஏற்பட்டது?

நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த காலத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஐயா ம.பொ.சி. போன்ற தலைவர்களின் பேச்சுகளையும், கிருபானந்த வாரியார் தோழர் ஜீவானந்தம் போன்றோரின் பேச்சுக்களையும் விரும்பிக் கேட்டிருக்கறேன். மக்கள் அப்பேச்சுக்களைப் போற்றி விரும்பிக்கேட்டதைக் கண்டு, நாமும் இப்படி ஒரு பேச்சாளராக வேண்டும் என்னும் உந்துதல் பிறந்தது. ‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதற்கொப்பத் தொடர்ந்து பேசிப் பேசிப் பழக்கம் ஏற்பட்டதால், நீங்கள் குறிப்பிடுவது போலத் தலைசிறந்த பேச்சாளர் என்றில்லாவிட்டாலும், ஒரு குறிப்பிடத் தகுந்த பேச்சாளர் என்று மக்கள் கருதும் நிலையில் உள்ளேன்.

இயற்றமிழுக்குத் தாங்கள் ஆற்றியுள்ள பணிகளுக்காக தமிழக அரசு ‘கலைமாமணி’ விருது கொடுத்துள்ளது. அப்படியானால் இயற்றமிழுக்குத் தங்களின் பங்களிப்பு என்ன?

1950 முதல் இயற்றமிழுக்கு ஓரளவு தொண்டாற்றியுள்ளேன். தொடக்கத்தில் ஆசிரியராக, தலைமையாசிரியராக, மாவட்டக் கழக்க் கல்வி அலுவலராகப் பணியாற்றிய காலத்தில் அப்போதிருந்த சேலம் மாவட்டத்தில் (இப்போதுள்ள சேலம், தரும்புரி, நாமக்கல் மாவட்டங்களில்) தமிழ் இலக்கிய மன்றங்கள் தோன்றத் துணை நின்று தமிழ் இலக்கிய உணர்வினை உருவாக்கினேன். ‘சாவில் தமிழ் படித்துச்சாக வேண்டும்; எந்தன் சாம்பலது தமிழ் மணந்து வேகவேண்டும்’ எனும் யாழ்ப்பாணத்துக் கவிஞர் சச்சிதானந்தனின் பாடலடிகளை தமிழ்நாட்டு மேடைகள் தோறும் முழங்கி மக்கள் மனத்தில் தமிழுர்வை விதைத்தேன். 3ம் வகுப்புமுதல் 11ம் வகுப்பு வரை கணித நூல்கள் எழுதினேன். அதற்கு முன்னர் வடமொழிச் சொற்கள் நிறைந்திருந்த கணித நூல்களைத் தூய தமிழில் எழுதினேன். ‘திவாலா’ என்று எழுத வேண்டிய இடத்தில் ‘கடன் மூழ்கி’ என்று எழுதினேன். இராமன், கிருஷ்ணன் எனப் பெயர்கள் இருந்த நிலையை மாற்றிச் செங்குட்டுவன், இளங்கோவன் என்றெல்லாம் எழுதினேன். மாவர்கள் கணித நூலை ஒரு தமிழ்நூல் போல் படிக்கும் நிலையை ஏற்படுத்தினேன். தமிழ்நாடு, மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் சென்று தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தேன். பெரும்பாலும் பாரதம், கம்பராமாயணம், கந்த புராணம் எனத் தொடர் சொற்பொழிவுகள் இருக்கும். நான் மக்கள் அறிய வேண்டிய, ஆனால், பெருமளவில் புழக்கத்தில் இல்லாத பெருங்காதை, மணிமேகலை, சீவக சிந்தாமணி, சங்க இலக்கியங்கள் ஆகியவற்றைக் குறித்து நாடெங்கும் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றினேன். அவ்விலக்கியங்கள் பற்றிய அரிய ஆய்வு நூல்களையும் எழுதினேன்.

நபிகள் நாயகம் வரலாறு கூறும் உமருப்புலவரின் சீறாப்புராணத்தை மிகச் சிறப்பாக விளக்கி ‘சீறாச் செல்வர்ய என்ற பட்டமும் பெற்றேன். மேலும் தமிழில் வெளிவந்துள்ள நூல்களுக்கு, குறிப்பாக கவிதை நூல்களுக்கு மிகுந்த அளவில் அணிந்துரை தந்திருப்பவன் நானாகத்தான் இருக்க முடியும்.

ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, பல்கலைக் கழகப் பதிவாளராக, தமிழ்வளர்ச்சித் துறை – உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனராக உயர்ந்து வெற்றியாளராகத் திகழ்ந்தது எப்படி?

செய்த பணி ஒவ்வொன்றிலும் மனம் ஒன்றி ஈடுபாட்டுடன் பணியாற்றியதால், என் மேலலுவர்கள் என் பணியைப் பாராட்டி மேலும் மேலும் உயர்வு தந்தனர். என்னுடைய உண்மையான நேர்மையான உழைப்பே என் உயர்வுக்குக் காரணம். நான் எந்தப் பணியையும் தேடிச்சென்றதில்லை. ஆனால் எனக்களிக்கப்பட்ட பணிகளைச் செம்மையாகச் செய்து முடித்திருக்கிறேன். என் படிப்படியான உயர்வுக்கு இவையே காரணம்.

மிகவும் வறுமையான சூழலை எதிர்கொண்டு கற்று உயர்ந்ததாக உங்களைப் பற்றி அறிந்தோம். வறுமை உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இல்லையா?

மிக வறுமை என்று இல்லை. என்றாலும் கல்லூரியில் சேர்ந்து கட்டணம் கட்டிப் படிக்கவும் விடுதியில் சேர்வதற்குமான பொருளாதார சூழ்நிலை இல்லாத ஏழ்மைக் குடும்பச் சூழ்நிலையில்தான் இருந்தேன். கல்லூரிப் படிப்பை திருவானைக்காவலில் உள்ள இரங்கூன் ரெட்டியார் சத்திரம், திருச்சியிலுள்ள பாப்பம்மாள் அறநிலையைச் சத்திரங்களில் உணவுண்டே படித்தேன். சத்திரத்துத இலவச்ச் சாப்பாடு இல்லையென்றால் என் கல்லூரிப் படிப்பு இல்லை. நாள்தோறும் போகவர, சுமார் 20 கி.மீ. நடந்து சென்றே கல்லூரிக் கல்வி பெற்றேன். இந்த இல்லாமையையே நான் இன்பம் எனக் கொண்டதால் வறுமை என்னை வெற்றிக்கொள்ள முடியவில்லை. வறுமை எனும் இடும்பைக்கு இடும்பை படைப்பவனாக இருந்துவிட்டேன்.

உங்களைப் போன்ற உயர்ந்த பதவியிலே இருந்து ஓய்வு பெற்றவர்கள் சென்னைத் தலைநகரிலேயே வசிக்க விரும்பும்போது நீங்கள் மீண்டும் நீங்கள் பிறந்த கிராமமாகிய சிவியம்பாளையத்தில் வந்து தங்கியிருப்பதோடு பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதாகவும் அறிந்தோம். அதுபற்றிக்கூறுங்கள்.

நான் கிராமத்திற்கு திரும்பிய காரணம் சென்னையில் எனக்கென வீடு ஒன்றினை வாங்காத்து தான். பெரிய அளவில் வாடகை கொடுத்து சென்னையில் தங்க என் பொருளாதாரம் இடம் தரவில்லை. சென்னையில் தங்கியிருந்தால் விளம்பரம், புகழ் இவை கிடைக்க வாய்ப்புண்டு. இந்த விளம்பரத்தாலும் புகழாலும் நான் எப்போதுமே மயங்கியதில்லை.

கிராமத்தில் இயற்கையோடு ஒன்றி மனநிறைவோடு வாழ்கிறேன். எந்தச் சூழ்நிலையிலும் நிறைவோடு வாழக்கூடிய மனோபாவத்தை எவ்வாறோ பெற்றிருக்கிறேன்.

நான் பல்வேறு பணிகளில் உயர்பதவிகளில் இருந்தபோதும் ஆசிரியத் தொழிலில் இருந்தபோது பெற்ற மனநிறைவை வேறு எப்பணியிலும் பெற்றதில்லை. கடினமானவற்றை எளிமையாக்கி மாணவர்களுக்கு விளக்கும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் ஒளியை காணுவதால் கிடைக்கும் இன்பத்தைக் கோடி கோடியான செல்வம் தந்துவிட முடியாது. இப்போது என் வயது 75. இன்றும் நாளொன்றுக்கு 5 மணி நேரம், 6 மி நேரம் தொடர்ந்து பாடம் நடத்த என்னால் முடிகிறது. வகுப்புக்குள் நுழைந்து விட்டால் வெளியுலகை முற்றிலுமாக மறந்துவிடுவேன். வகுப்பு நடத்துகிறோம் என்ற எண்ணம்தான் இருக்குமே தவிர யாருக்கு என்ற எண்ணம் தோன்றாது. முதல் வகுப்பு மாணவனேயாயினும், முதுகலை வகுப்பு மாணவனேயாயினும் அம்மாணவர் நிலைக்கு இறங்கி அவரோடு ஒன்றி விடுவேன். ஆதலால் பாடம் நடத்துவதில் வேறு எதிலும் கிடைக்காத இன்பத்தை நான் பெறுகிறேன்.

உங்கள் வாழ்க்கையில் விடாப்பிடியாக வைத்திருக்கிற கொள்கை என்ன?

‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பதே என் வாழ்க்கையில் நான் விடாப்பிடியாகக் கொண்டுள்ள கொள்கை. ஆட்சியில், ஆலயங்களி, பள்ளிகளில், நீதிமன்றங்களில் தமிழ் முதன்மை பெறவேண்டும் என்பது என் விடாப்பிடியான கொள்கை.

உலக நாடுகளுக்கெல்லாம் செல்லும் போதும் விடாப்பபிடியாக வேட்டி சட்டையில்தான் செல்கிறீர்களாமே. ஏன்?

நான் கல்லூரியில் படிக்கும்போது இரண்டு வேட்டி, இரண்டு சட்டைகளோடு இருந்தவன். ‘அவற்றை உடுத்திய பழக்கமே தொடர்ந்து வந்துவிட்டது. நாளடைவில், வேட்டி சட்டைத் தவிர, மற்றவற்றை அணிந்தால், அது ஏதோ வேற்று நாட்டவர் போன்ற உணர்வு என்னுள்ளே ஏற்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள்கூட, முக்கிய தமிழ் விழா நாட்களில், பட்டு வேட்டி, சட்டையே அணிகின்றனர்.. வேட்டி நம் தேசிய உடை என்ற உணர்வு இப்போது எனக்கு உண்டாகிவிட்டது. வெளிநாடுகளில் நாம் வேட்டியுடன் செல்லும்போது,, நாட்டு உடையுடன் வருகின்றனர் என நமக்கு தனி மரியாதை தருகின்றனர். நான் வேட்டி உடுத்தியே பழகிவிட்டேன். அதை மாற்ற விரும்பவிலை; தேவையுமில்லை; ஆனால் வேற்று வகையில் அணிபவர்களை நான் குறை கூறவில்லை. என் வழக்கம் நானணிகிறேன்; அவர்கள் வழக்கம் அவர்கள் அணிகிறார்கள்! வேட்டி அணிவதில் எனக்கு ஏற்பட்ட பழக்கம், வசதியாகி, பின்னர் அதுவே விடாப்பிடியாக மாறிவிட்டது. அவ்வளவுதான்.

மேலைநாட்டு மக்களிடமிருந்து நம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

காலத்தை வீணாக்காத தன்மையை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். செய்யும் தொழில் எதுவாயினும் அது கொண்டு உயர்வு தாழ்வு கருதாத அவர்களின் பண்பை மிக முக்கியமாக்க் கற்றுக்கொள்ள வேண்டும். செல்வத்தாலோ, அதிகாரத்தாலோ மக்களை வேறுபடுத்திப்பார்க்காத சமநிலை நோக்கு அவர்கள் நமக்குத் தரும் சிறந்த பாடமாகும். சிங்கப்பூருக்கு முதன் முதலில் சென்றபோது தமிழ்ச் சங்கத்தின் தலைவரைக் காண அழைத்துச் சென்றார்கள். தமிழ்ச் சங்கத் தலைவர் பெரிய செல்வந்தராக, உயர்பதவியில் இருப்பவராக இருப்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவர் ஒரு பள்ளியில் அடிநிலைப் பணியாளராக இருந்தார். அவரைக் கோடிக்கு அதிபதியும் ‘தலைவர்’ என்றே அழைத்தார். இந்நிலை இந்நாட்டில் மலருமா?

கல்விப் பணியில், நிர்வாகப் பணியில், உங்கள் சாதனைகள் என்று எவற்றைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்?

கணக்கு ஆசிரியனாக இருந்தபோது, மாணரகள் அனைவரும் கணக்கை விரும்பிக் கற்பிக்கும் பாடம் எனக் கருதும் வகையில் போதித்தேன். 14 ஆண்டுகள் கணக்காசிரியனாகப் பணியாற்றிருக்கிறேன். வகுப்பின் சராசரி மதிப்பெண்கள் 85, 90 என்றிருக்கின்ற அளவு என் கற்பித்தல் திறமை இருந்தது.

மாவட்டக் கழகக் கல்வி அதிகாரியாக இருந்தபோது நியாயமான முறையில் நியமனங்கள் மாறுதல்களில் பல நூற்றுக்கக்கானவர்களுக்கும நலம் செய்துள்ளேன்.

தமிழ் வளர்ச்சி இயக்குனராக இருந்தபோது, அரசு அலுவலகங்களில் பெரும்பான்மை அலுவல்மொழி தமிழாக இருக்கச் செய்ய அரும்பாடுபட்டுள்ளேன்.

நீங்கள் ஒரு கல்வியாளர் என்ற முறையில் – இன்றைய கல்வி நிலை பற்றிய தங்கள் கருத்து என்ன?

பாரதியார் ஆங்கிலக் கல்வி கற்க அவரை அவர் தந்தை அனுப்பியதைப் பற்றி எழுதுகிறார்; ‘செலவு தந்தைக்கோரு ஆயிரம் சென்றது; தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன; நலம் ஓர் எள்துணையும் கண்டிலேன்; இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்” என்றார். ஆனால் இன்றோ நலங்களெல்லாம் ஆங்கிலத்தில்தான் எனும் பொய்த் தோற்றத்தால் ஆங்கிலப் பள்ளிகள் புற்றீசல்கள் போல தோன்றிய வண்ணம் உள்ளன. பிறமொழிகளைக் கற்பதில் தவறில்லை. ஆனால், தமிழ்வழியில் தான் கல்வி என்னும் நிலை இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கல்வியாகவும் இருக்க முடியும். முதுகு ஒடிய பிள்ளைகள் மூட்டை போலப் புத்தகங்களை சுமகும் கொடுமை மறைய வேண்டும். இன்று மனப்பாடம் செய்து அதை அப்படியே எழுதும் நிலை இருக்கிறது. இது மாறி மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் முறையில் கல்வித்திட்டம் அமைய வேண்டும். ‘கல்வி, விலைபோட்டு வாங்கவா முடியும். வேளை தோறும் சென்று கற்பதால் படியும்” என்றார் பாரதிதாசன். இன்றோ விலைபோட்டுத்தான் கல்வி வாங்கப்படுகிறது. இன்றைய கல்வித் திட்டத்திலும் நடைமுறையிலும் புரட்சிகரமான மாறுதல் தேவை.

இன்றைய இளைஞர்கட்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

இளைஞர்கள் விதைகளைப் போன்றவர்கள். இதை வீரியமுடையதாக இருந்தாலும் அது பாறையின் மேல் விழுந்தால் முளைக்காது. அழியும். கள்ளியும் முள்ளும் சூழ்ந்த புதருக்குள்ளே விழுந்தால் முறைத்து வெளி விந்தாலும் வளைந்து பின்னி புதருக்குள் ஒரு செடியாகப் பயனின்றிப் போகும். நன்கு பக்குவப்பட்ட நிலத்தில் விழுந்தால் வளர்ந்து நல்ல பக்குவப்பட்ட நிலத்தில் வேண்டாத இடத்தில் விழாமலும் பொருத்தமற்ற சூழலில் சிக்காமலும், நலமான சேர்க்கையினால் பெருநலம் விளைப்பவர்களாகத் திகழ வேண்டும்.

‘தன்னம்பிக்கை’ வழியாக தமிழக மக்களுக்குத் தாங்கள் விடுக்கும் பொங்கல் செய்தி என்ன?

தன்னம்பிக்கை எனும் தாரகமந்திரம் தரணியெங்கும் தழைப்பதாகுக; மதிப்பு மிக்க மனிதநேயம் மாநிலமெங்கும் மலர்வதாகுக; பொங்கும் மங்கலம் எங்கும் ஓங்குவதாகுக!

– பேராசிரியர் மதி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2004

கடவுள் பிரபஞ்சம் மனிதன்
மனித வளமேம்பாடு
வியர்வைத் துளிகளை விதைப்போம்
யாமறிந்த சிலம்பொலியார்
சிகரத்தை நோக்கி…
பொங்கல் வாழ்த்து
ஆசையும் ஆரோக்கியமும்
உள்ளத்தோடு உள்ளம்
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
கேட்காதீர்கள் கொடுக்கப்படும்
மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்
திடமான தன்னம்பிக்கை
நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்
கொடிது கொடிது.. திறமையில் வறுமை
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
நினைவாற்றல் பயிற்சி வித்தகர்
பொங்கல் சூளூரை!
ஆசிரியர் சு.செ. ஆண்டு பல வாழ்க!
தாரக மந்திரம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
நீங்களும் எழுத்தாளராகலாம்
பவளவிழா காணும் பண்பாளர்
சித்திரச் சிலம்பின் வித்தகப் பரல்
உளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்
புத்தாண்டில் புறப்படு!
மாணவர் பெற்றோர் பக்கம்