Home » Articles » பார்க்கும் கோணத்தை மாற்றுங்கள்

 
பார்க்கும் கோணத்தை மாற்றுங்கள்


ஆனந்தன் பி
Author:

மைக்கேல் ஏஞ்சலோ ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய்கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சியுடன் அந்தக் கடைக்காரரிடம், ” ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா? ” என்று கேட்டார்.

”தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்!” என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற ஏஞ்சலோ, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான இயேசுநாதர் சிலை ஒன்றை உருவாக்கினார்.

அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.

முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.

மைக்கேல் ஏஞ்சலோவை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், ” இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?… என்று கேட்டார்.

அதற்கு ஏஞ்சலோ, ” வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கும? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் தாங்கள் கொடுத்த கல்தான் இது ” என்றார்.

கடைக்காரர் வியந்தார்.

” ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் இயேசு நாதரைப் பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த இயேசுநாதர் வெளிப்பட்டுவிட்டார்!” என்றார்.

இதைத்தான் பார்க்கும் கோணம் – Focus என்கிறோம்

உயர்வும் தாழ்வும் அங்கு கிடந்த கல்லில் இல்லை. ‘ அதைப் பார்த்த மனத்தின் கோணத்தில் தான் இருந்தது. கடைக்காரர் பார்வையில் அது தடைக்கல். சிற்பியின் பார்வையிலோ அது அவரை உயர்த்த வந்த படிக்கல்.

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எந்த நிகழ்ச்சியும் பார்க்கும் கோணத்தைப் பொறுத்தே உயர்வாகவோ, தாழ்வாகவோ மாறும். எரிச்சலுடன் ஏனோதானோவென்று சந்தித்த பல நபர்கள் என் வாழ்வில் மகத்தான் திருப்பங்களை உருவாக்கிய மாமனிதர்களாக இருந்துள்ளனர்.

விழிப்புணர்வுடன் இருந்து, விருப்பு வெறுப்பின்றி எதையும் சரியான கோணத்தில் பார்க்கும் மனப்பக்குவம் பெறவேண்டும். அதைப் பெற்று விட்டால் வாழ்க்கை நமக்கு வழங்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மை உயர்த்த வரும் வாய்ப்பாய், வரமாய்த் தெரியும். இல்லையேல் எதிர்ப்படும் ஒவ்வொன்றும் எரிச்சலும் துன்பமுமாய்த் தெரியும்.

கல்வி கற்கும் நம் மாணவ மணிகளின் பார்வையையே எடுத்துக் கொள்வோம். வார இதழ்களையும் மற்றும் க்ரைம் நாவல் புத்தகங்களை அவர்கள் பார்க்கும் கோணம் வேறு; தன் பாடப்புத்தகங்களைப் பார்க்கும் கோணம் வேறு.

யாரும் தூண்டாமலேயே வாரப் புத்தகங்களையும் மர்ம நாவல்களையும் ஆவலாய்ப் படிக்கின்றனர். அரசாங்கத்தின் கல்வித்துறை, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் என பெரிய கூட்டமே சேர்ந்து இடித்தும் பாடப்புத்தகங்களைப் படிக்க வைக்க முடியவில்லை. இவர்கள் அத்தனை பேரின் தொல்லை பொறுக்க முடியாமல் ‘ கடனே ‘ என்றுதான் படிக்கின்றனர்.

காரணம் என்ன? … கதைப் புத்தகங்கைத் ‘தனக்கு என்ற கோணத்தின் பார்க்கின்றனர். ஆவலாய்ப் படிக்கின்றன்ர். பாடப்புத்தகங்களையோ தனக்கு என்ற கோணத்தில் பார்ப்பதில்லை; படிப்பதில்லை.

ஆசிரியர்களின் வற்புறுத்தலுக்காகப் படிக்கின்றனர், பெற்றோர்களின் தொல்லை தாங்காமல் படிக்கின்றனர். அரசாங்கம் நடத்தும் தேர்வுக்காகப் படிக்கின்றனர். இப்படி ‘ மற்றவர்களுக்காக’ என்ற கோணத்தில் பார்ப்பதால், படிப்பதால் பாடங்கள் அவ்வளவு எளிதாக மனத்திற்குள் நுழைவதில்லை.

தனக்கு என்று எதைப்பார்த்தாலும் மனம் நமக்குத் துணைய்ச் செயல்படும். மற்றவர்களுக்கு என்று எதைப் பார்த்தாலும் மனம் நமக்கு எதிர்ப்பாய்ச் செயல்படும்.

எனவே, பார்க்கும் கோணத்தை மாற்றுங்கள்; கிடைக்கும் பயன் உடனடியாக மாறும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2003

அனைத்தும் உணர்!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
இமயமும் தாழட்டும்….
பல்வேறு திறன்களை வளர்ப்போம்
பார்க்கும் கோணத்தை மாற்றுங்கள்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு மணி நேரப் படிப்பு 10 நிமிட புத்துணர்வு
உள்ளத்தோடு உள்ளம்
தோள்கள் தொட்டு பேசவா
பப்பாளிப் பழம்