Home » Articles » இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை

 
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை


மகேஸ்வரி
Author:

– N. மகேஸ்வரி

வாழ்க்கையின் எந்த படியில் நின்று கொண்டிருந்தாலும் உபயோகப்படும் வாசகம் இது. தவறு செய்து விட்டு விழித்துக் கொண்டிருக்கும்போது, தோல்வி கண்டு துவண்டு விட்டிருக்கும்போது… இன்னும் இதுபோல் எத்தனையோ சந்தர்ப்பங்களில் நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டிய வார்த்தைகள் இவை.

” தவறான பாதையில் எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல. நம்பாதை தவறானது எனத் தெரிந்தும், உடனே திரும்புவதே முக்கியம் ” என்ற காந்திஜியின் வார்த்தைகளில் உள்ள உண்மை, நாம் தவறு செய்து, திருந்தும் போது புரியும்.

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை! இந்த வாசகத்தின் மந்திர சக்தியை நாம் எப்போது உணர்கிறோம் தெரியுமா? நாம் தோல்வியுறும் போது. பிரச்சனைகள், கஷ்டங்களில் சிக்கும் போது.

பரிட்சையில் தோற்ற மாணவன், காதலில் தோற்ற பெண், நம்பிக்கை துரோகம் இழைக்கப் பட்ட நண்பன், லாபத்தை இழந்த வியாபாரி….. இன்னும் யார் வேண்டுமானாலும் சொல்லிப் பார்க்கட்டும் இந்த வார்த்தைகளை.

தொழிலில் அத்தனை பணத்தையும் முதலீடு செய்த ஒருவருக்கு, ஏதோ காரணங்களினால் பெரிய நஷ்டம். அப்போது மட்டும் அவர் மனம் தளராமல் ( தளரத்தான் செய்யும். இருந்தாலும், அந்தத் தளர்ச்சியின் தீவிரம் சற்று குறைந்ததும் ) சொல்லிப் பார்க்கட்டும் இந்த வார்த்தைளை.

அவை நம்மிடம் இப்போது என்ன இருக்கிறது என்று பட்டியலிடச் சொல்லும் அவரை. எஞ்சி நிற்பது அவருடைய கடவுள் நம்பிக்கையாக இருக்கலாம்; குடும்பத்தினரின் ஆறுதலாக இருக்கலாம்’ எதுவுமை எஞ்சாமல் போவதே இல்லை. குறைந்தபட்சம் நஷ்டத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடமே எஞ்சும். இந்த எஞ்சி நிற்பதுதான் அடுத்து அவரை செயல்படுத்தும் ஊக்கி. இந்த வார்த்தை, தோல்வியிலிருந்து எழ மட்டுமல்ல. பல திடீர் பிரச்சனைகளை சாமாளிக்கவும்தான்.

சென்ற ஞாயிறு ஊட்டியில் நடந்தது இது. ஒரு கடைக்கு சரக்கு போடுவதற்காக பெட்டி நிறைய சின்னஞ்சிறிய பூ ஜாடிகளும், சிறு பொக்கேகளுமாய் ஹைதராபாதிலிருந்து வந்திருந்தார் ஒரு வாலிபர். எதிர்பாராமல் கடை பூட்டி இருந்தது. கடைக்காரரையும் சந்திக்க முடியவில்லை. ஞாயிறு என்பதால் கடைகள் அதிகமில்லை. திறந்திருக்கும் சிலவற்றிலும் இவர் அவசரத்திற்கு அத்தனையும் வாங்குவது நிச்சயமில்லை. இவர் என்ன செய்தார் தெரியுமா? நிச்சம் சரக்கை திரும்ப எடுத்துச் செல்லவில்லை.

கடைகள் இல்லாவிட்டால் என்ன? ஊட்டியில் டூரிஸ்ட்களுக்குப் பஞ்சமில்லையே? தேவையோ இல்லையோ வந்த இடத்தில் ஞாபகார்த்தமாக எதையேனும் வாங்கி வைப்பது டூரிஸ்ட்களின் பொது அம்சம் அல்லவா? இதைப் பயன்படுத்திக் கொண்டார்.

மார்க்கெட் ரோட்டில் சுத்தமான இடத்தில் பெட்டியைக் கவிழ்த்து ஒரு துணி விரித்து பொருட்களை அடுக்கிறார். பொருட்கள் அழகாக இருக்கவே அள்ளிச்சென்றனர் டூரிஸ்ட்கள் ( நானும் தான்). அந்த வாலிபர் என்ன நினைத்திருப்பார்? ஆர்டர் செய்தவர் இல்லையென்றால் என்ன? அவர் வேலையை நாமே செய்தால் போகிறது, என்றுதானே?

இன்னும், எதையேனும் கற்றுக்கொள்ளக் காலம் தாழ்ந்து விட்டதாய் நாம் கருதும்போதும் உபயோகப்படும் இவை.

சில வருடங்களுக்கு முன்பு டுவீலர் ஒட்ட ஆசை வந்தது. மனசுக்குள் ஒரு குரல், ஆமா, முப்பத்து மூணு வயசாச்சு ஒரு சைக்கிள் கூட கத்துக்கலை. அதே மனதில் இன்னொரு குரல். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகலை. ஆர்வம் இருந்தா எப்பவும் எதுவும் கத்துக்கலாம்.

இந்த மனதின் வேலையே இதுதானே. ஒரே சமயத்தில் இரண்டு மூன்று தூதுவர்களை அனுப்பியார் சொல்வதைக் கேட்பது என நம்மை, தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும்.

என் நல்ல காலம்! நான் இரண்டாவது தூதுவருக்கு செவி சாய்த்தேன். பக்கத்து வீட்டு ப்ளஸ் 1 மாணவி என் முதல் குருவானாள். சில நாட்களிலேயே டூவிலருக்கும் குரு கிடைத்தார்.

இது ஒரு சின்ன நிகழ்வுதான். சற்று யோசித்தால் நம் எல்லோர் வாழ்விலும் இதுபோல சிறிய பெரிய நிகழ்வுகள் இருக்கும்.

இவ்வளவு ஏன்? இதோ, இந்தக் கட்டுரையின் முதல் பார்வை இரண்டு வருடத்திற்கு முன்பு விட்டு, வேறு ஒரு எழுத்துவேலை சில மாதங்களுக்குத் தொடர்ச்சியாக இருந்தால், இதை மறந்து விட்டிருந்தேன். இரண்டு நாட்கள் முன்பு பழைய புத்தங்களை அடுக்கும்போது திரும்பச் சந்தித்தேன். நோட்டுப் புத்தகத்தில் இருந்தால் பத்திரமாக இருந்த முதல் பக்தி என்னை வெட்கமுறச் செய்த்து. தலையில் குட்டியது. குட்டு வாங்கிய தலை ரோஷத்துடன் பேனாவைக் கையிலெடுக்க வைத்தது.

நண்பர்களே? இங்கே இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை, என்ற வாசகம் தவறைத் திருத்திக்கொள்ள உதவியது.

நீங்களும் யோசித்துப் பாருங்கள். இந்த வார்த்தைகள் அல்லது இந்த அர்த்தம் தொணிக்கும் வார்த்தைகள் உங்கள் வாழ்வில் உங்கள் உறவினர், நண்பர்களின் அனுபவங்களில் பல மாயங்களை நடத்தி இருக்கும்

 

1 Comment

  1. வசந்தவாசல் அ.சலீம்பாஷா says:

    உண்மைதான்! இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை!

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….