Home » Articles » திண்ணையக் காணோம்

 
திண்ணையக் காணோம்


ஸ்ரீதரன் என்
Author:

– டாக்டர் என். ஸ்ரீ தரன்

அயல் மனுஷனையும்
நெருக்கமாக உணர்ந்துருவான,
சாணி மெழுகி, கோலம் எழுதின,
குளிர்ச்சியான கிராமத்துத் திண்ணைகள்
அபூர்வமாகிப் போயின!

– கவிஞர் மணா

கட்டடக் கலை கட்டுக்கடங்காமல் வளர்ந்து விட்ட இக்காலத்தில் சமையலறை, படுக்கையறை முதலிய வழக்கமான அறைகள் அன்றுபோல் இன்றும் நீடித்து வருகின்றன. ஆனால், திண்ணையை மட்டும் காணோம்! இது ஒரு பெரும் இழப்பு.

காஞ்சிபுரம் போன்ற பழமையான ஊர்களில் கிராம்ப்புறங்களிலும் மட்டுமே ஒரளவு திண்ணைகளைக் காண முடிகிறது. இந்த எஞ்சியுள்ள திண்ணைகளுபம், ஆற்றங்கரையின் மரம்போல, இன்றோ நாளையோ என, தங்கள் ஆயுளின் முடிவை எதிர்பார்த்துப் பொலிவிழந்து காணப்படுகின்றன.

நான் இந்தத் திண்ணை நாகரிகத்தில் வளர்ந்தவன். காலையில் எழுந்ததும் திண்ணைக்குப் போய் விடுவேன். வெயில் காலத்தில் இரவில் படுத்துக் காலையில் எழுந்ததே திண்ணையில்தான். அங்கேதான் காப்பிக்குக் காத்திருத்தல், பாடங்கள் கேரம் விளையாட்டுக்கள், செய்தித்தாள், கதைப் புத்தகம் படித்தல், மாலையில் குழுவாக சஹஸ்ர நாமம் ஓதுதல், இரவில் அரட்டைக் கச்சேரி என்றெல்லாம் பொன்னான நாட்கள் ஆரோக்கியமாகக் கழிந்தன.

இன்றுபோல் புறாக்கூண்டு ஃப்ளாட்டில், எப்போதும் கதவை மூடிவைத்து, உள்ளே புழுங்க வேண்டிய நிலைமை அன்றில்லை. ஆக, இருப்பிடமாக அது விளங்கியது.

இதையெல்லாம்விட நுணுக்கமான உபயோகம் ஒன்று திண்ணைக்கு இருந்தது. மன அமைதி தேடுவோர்க்கு அது புகழிடாக உதவியது. இக்காலத்தில் மனநோய் மருத்துவர்கள் நோயாளிகளை விசாரிக்கும்போது, ஒரு விதமான சொகுசான சாய்வு நாற்காலியில் ( Couche ) வசதியாக அவர்களை உட்கார வைக்கிறார்களே, அதன் அமைப்பு திண்ணையைப் போலவே உள்ளதைக் காணும் பொழுது முன்னோர்களின உளவியல் அறிவு நம்மை வியக்க வைக்கிறது.

எவ்வளவு துன்பமானாலும் திண்ணையில் சரிந்து உட்கார்ந்து கொண்டதுமே, கொஞ்சம் பாரத்தைத் திண்ணை எடுத்துக் கொண்டுவிட்டது போல் தோன்றும். இதனால் பெண்களும் சமையலறையை விட்டால் திண்ணையை அதிகம் பயன்படுத்துவதை காஞ்சி, தஞ்சை, கும்பகோணம் போன்ற் ஊர்களில் இன்றும் காணலாம்.

இவ்வாறு, ஓய்வாகத் திண்ணை மேல் அமர்ந்து சிந்திக்கும்போது மனத்தெளிவு ஏற்படுவதை அனுபவசாலிகள் உணர்ந்திருப்பார்கள். இந்த அளவுத் தெளிவு அறைக்குள் உட்கார்ந்து யோசிப்பதால் கிடைப்பதில்லை.

இரண்டு பேர் தங்கள் பிரச்சினைகள் பற்றி மனம் விட்டுப் பேசுவதற்கும் திண்ணை உதவியது போல் இக்கால வரவேற்பறை உதவுவதில்லை. அறைக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்ததுமே, அறையின் செயற்கை அலங்காரமும், சுவர்களால் உருவாகும் எல்லை கட்டுப்பாடுகளும், செயற்கை ஒளியும், செயற்கைக் காற்றும் மனம் விட்டுப் பேசுவதற்குக் தடைகளாக அமைந்துவிடுகின்றன.

அறைக்குள் உட்கார்ந்து தனக்குள் பேசிக் கொள்வதும் இயலாத காரியம்,. ஆனால், திண்ணையில் உட்கார்ந்ததும் வாய்ப்பூட்டு திறக்கிறது. பேசுவது மட்டுமல்ல, வாய் தானாகவே பாட்டுக்களை முணுமுணுக்கும் அளவிற்கு சுதந்திரமாக இயங்குகிறது. உண்மையில் திண்ணையில் மாயம் எதுவுமில்லை. அதை அமைத்த நம் முன்னோர்களின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். திறந்த வெளியும் வசதியான இருக்கையும் திறந்த வெளியும் வசதியான இருக்கையும் தெளிவாகச் சிந்திக்க உதவுகின்றன என்பதுதான் திண்ணையின் தத்துவம், ரகசியம்.

இதைக் கருத்தில்கொண்டு ஒரு பிரச்சனை உங்களை வாட்டும்போது அதன் மையத்தை அடையப் பின்வருமாறு செய்யலாம்.

வீட்டை விட்டுக் கிளம்புங்கள். திறந்த வெளியாகவுள்ள கடற்கரை, ஏரிக்கரை, கூட்டமற்ற பூங்கா, சிறுகுன்று, கோயில் பிரகாரம், மண்டபம் போன்ற இடங்களுக்குச் சென்று அமருங்கள்.

இவ்வாறு வசதியாக அமர்ந்த பிறகு, தற்சமயம் உங்களை வருத்துகின்ற பிரச்சினையைக் காற்றிடம் வாய் விட்டுக் கூறுங்கள். வேடிக்கையாகச் சொல்ல வில்லை. ” நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், நொய்ந்த உள்ளம் இவற்றைக் காற்றுதேவன் புடைத்து நொருக்கிவிடுவான்” என்று பாரதியார்வசன கவிதையில் வாக்களிக்கிறார். காற்றுடன் பேசும்போது கண்ணீர் வந்தால் துடைக்க வேண்டாம்! திறந்த வெளிச்சூழ்நிலையில் மனத்தைத் திறந்து போட்டு, பிரச்சனை உருவானதிலிருந்து தற்கால நிலைமை வரையிலான கட்டங்களை வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டும். அப்பொழுது அதன் மையப்பகுதி புலனாகும். அங்கு கவனத்தைக் குவித்தால் முடிச்சு விழுந்துள்ள இடம் தெரியும். அடுத்து, அதை நெகிழ்வித்துவதற்கான உபாயம் தேடலாம்.

இதனால்

1. பிரச்சனை தீர வழி கிடைக்கும் அல்லது.

2. பிரச்சனை இன்னும் சற்று முன்னேறிய பிறகே முடிவெடுப்பது விவேகம் என்று பொறுத்திருக்கத் தீர்மானிக்கலாம். ஏனெனில் பெரும்பான்மையான புயல்கள் கரையைக் கடப்பதில்லை. அல்லது.

3. பிரச்சனை தலைக்குமேல் வெள்ளமாகப் போய்விட்டதால், நடப்பது நடக்கட்டும். நாம் பார்வையாளராக மட்டும் இருப்போம். இவ்வாறு நம் உடல்நலத்தையாவது காத்துக் கொள்வோம் என்று முடிவுக்கு வரலாம்.

” உனக்கு நீயே அன்னியனாய் இரு. வாழ்க்கை நதி, காலத்திற்குள் பாய்வதைக் கவனி. அதன் கரையில் நில் – வியப்போ அக்கறையோ இல்லாமல்” என்று ஓஷோ சொல்லியுள்ளதைப் பின்பற்றலாம்.

திண்ணைகள் குறைந்து காணாமல் போகின்ற இக்காலத்தில், மேற்கண்டவாறு திறந்த வெளியில் சென்று யோசிப்பதால் பிரச்சினைகளின் இறுக்கம் தளரும். வைராக்கியம் உருவாகும். கையிலுள்ள உப்புக்கடலை குறையக் குறைய மனத்தில் மண்டியிருந்த அச்சமும் கவலையும் குறையத் தொடங்கும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….