Home » Cover Story » தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!

 
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!


பாலசுந்தரம்
Author:

தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்! கோவையின் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநின்ற நிறுவனம் டெக்ஸ்டூல். ஒரு காலத்தில் டாடா நிறுவனத்திற்கு சமமான அளவு இரும்பை அரசிடம் கொள்முதல் செய்தது. இதன் நிறுவனராகவும், பல கருவிகளின் கண்டுபிடிப்புக்குத் தந்தையாகவும் திகழ்ந்து. இன்று அமைதியாய் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு வரும் டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம் அவர்களுக்கு ஆக்ஸ்ட் 31ல் 90வயது நிறைகிறது. அவருடன் உரையாடினோம் …. தன்னம்பிக்கை இதழுக்காக…

தொழில்புரியும் இடங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய அம்சங்கள் இரண்டு.

(i) நேரம் தவறாமை
(ii) ஒழுக்கம்

இங்கிலாந்து போன்ற நாடுகளில் குறித்த நேரத்தைவிட இரண்டு மூன்று நிமிடங்கள் வரை முன்னோ பின்னோ ஆகும் என்றால் பொறுத்துக் கொள்வார்கள். ஒழுக்கத்தைப் பொறுத்தவரை விதிமுறைகளை பொதுவிதிகளாக கருதாமல் நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்கிற மனோபாவம் தான் இருந்து வருகிறது.

இந்தியத் தொழிலகங்களில் பார்த்தால் சராசரியாக நாளொன்றுக்கு 20% பேர் வேலைக்கு வருவதில்லை. இதற்குக் காரணம் தனிப்பட்ட வாழ்க்கையில் தெரிந்தவர்களின் திருமணம் மற்றும் மரண நிகழ்ச்சி போன்றவற்றிற்கு அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்துக் கொள்ளும் பழக்கம் இங்குதான் அதிகம். காலம் காலமாக இந்தியர்கள் முறைப்படுத்தபட்ட வேலைக்கு பழகவே இல்லை. இந்தியாவின் முக்கியத் தொழிலாக வேளாண்மையிருப்பதால், ஆறுமாதம் வயல்வேலை 6 மாதம் ஓய்வு என்கிற கலாச்சாரத்திற்கு நம் முன்னோர்கள் பழகியிருந்தார்கள். இது நம் ரத்தத்திலேயே ஊறிவிட்டது.

இன்று தொழிலில் மிகச் சிறந்த விஷயங்களுக்கு கூட பொய் சொல்லுகிறார்கள். சின்னக் குழந்தைகள், செய்த தவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள மிக இயல்பாக பொய்சொல்லும். வேலையில் பொய்சொல்லும்வது என்பது குழந்தைத் தனமானது. இது மனமுதிர்ச்சியின்மை காரணமாக ஏற்படுவது.

இன்று பங்குச்சந்தை வணிகத்தில் வாய் ஜாலம்தான் மூலதனம். பொய்மை ஒரு தகுதியாக மாறிக்கொண்டு வருகிறது. இதற்குக் காரணம் தொழில் பணம் சம்பாதிக்கத்தான் என்றாலும் வாழ்க்கையே பணத்திற்காகத்தான் என்ற முடிவுக்கு பலரும் வந்துவிடுகிறார்கள்.

பணக்காரனை கடவுளாகப் பார்க்கிற மனோ பாவம் ஏற்பட்டு விட்டது. பணம் சேர்க்காதவனை பிழைக்கத் தெரியாதவன் என்கிறார்கள். இப்படி பணத்திற்கு வழங்கப்படும் அதிக முக்கியத்துவம், வாழ்வில் அறன்களை வீழ்த்தி இருக்கிறது.

இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு அலுவலகத்தில் மேலாளாராகப் பணிபுரிபவருக்கும், கீழ்நிலைப் பணியாளருக்கும் பதவியில்தான் வேற்றுமை இருக்கும் தவிர, மிகக்குறைந்த சம்பள வித்தியாசம் தான் இருக்கும். இங்கேதான் இரண்டு தரப்பினருக்கும் இடையே சம்பளத்தொகை பல்லாயிரக்கணக்கில் வேறுபடுகிறது.

அரசு நிறுவனம் ஒன்றின் நிரவாக இயக்குநர் ஒருவர் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள விமானத்தில் பயணப்பட்டார். மாநாட்டில் அவர் அணிந்து கொள்ள வேண்டிய கோட்டுக்குப் பொருத்தமான நிறத்தில் அவர் ஷீவை எடுத்துவர மறந்துவிட்டார் என்பது அங்கு போனபின்புதான் தெரிந்தது. உடனே அவர் இருக்கும் பகுதியிலிருந்து ஒரு பணியாளர் அடுத்த விமானத்தில் சென்று அந்த ஷீவை கொண்டுபோய் சேர்த்தார். இது போன்ற ஜமீன்தார் தடபுடல்கள் தொழில்துறை வளர்ச்சிக்கு துணை செய்யாது.

பொருளாதார அடிப்படையிலும், சமூக அடிப்படையிலும், நமக்குள் இருக்கும் பிரிவினைகளைப் பார்த்துதான் இங்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள் அந்தப் பிரிவினையை அதிகமாக்கினர்.

கோவையில் ” இங்கிலிஷ் கிளப் ” என்று ஒன்று இருந்தது. அந்த வீதியிலேயே இந்தியர்கள் யாரும் நடக்கக்கூடாது என்றொரு கட்டுப்பாட்டை வெள்ளையர்கள் கொண்டுவந்தார்கள். ஆனால், இங்கிலாந்து நாட்டிற்கு நாம் போகும்போது அங்கே அத்தகைய வேற்றுமை உணர்ச்சி இல்லை.

அங்கே சில இடங்களுக்கு படகுப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். அப்போதெல்லாம் பயணம் ஒத்துக்கொள்ளாமல் வாந்தி எடுக்க நேர்ந்தால் உடன் பயணம் செய்யும் இங்கிலாந்தினர் அவ்வளவு உதவி செய்வார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இங்கிலாந்து நாட்டின் பண்பாடற்ற பக்குவமற்ற அதிகாரிகளைத்தான் இந்தியாவிற்கு அனுப்புவார்கள். மோசமான மனிதர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பில் இங்கே ஆட்சிக்கு அனுப்பப்பட்டார்கள்.

அந்த நாட்டிலும் நிறைய குறைகள் உண்டு. குற்றங்கள் உண்டு. அந்தக் காலத்தில் இந்தியாவில் ஆங்கில படங்கள் திரையிடப்படுவதை பிரிட்டிஷ்காரர்கள் யாரும் விரும்பவில்லை. தங்கள் வாழ்க்கை முறையில் இருக்கும் குறைபாடுகள் இந்தியருக்குத் தெரிந்நுவிடக்கூடாது என்பதில் அவர்கள் அவ்வளவு கவனமாக இருந்தனர். இதற்குக் காரணம் பிரிட்டிஷாருக்கு இந்தியா மூட நம்பிக்கைகள் நிறைந்த நாடு என்று சொல்லப் பட்டதுதான்.

இன்று உலகப் பொருளாதாரம் இருவேறு நிலைப்பாடுகளுக்கிடையே இயங்கி வருகிறது. (i) அமெரிக்க வழியில் (ii) சொஷலிச வழி. அமெரிக்கமுறை வழி தனிமனிதர்கள் நிறைய சம்பாதிக்கலாம். சமூகத்தில் சீரான பொருளாதார வளர்ச்சி இருக்காது.

சோஷலிச முறையில் அனைவருமே சமமானவர்களாக இருப்பார்கள். நிறுவனங்களை அரசு தான் நடத்தும். ஆனால், பெரிதாக புதிய தொழில்கள் வளராது.

இன்றும் அமெரிக்க வழிதான் செல்வாக்கு பெற்றுத் திகழ்கிறது.

மனிதநேயப் பார்வையுடன் தொழில் தர்மங்களைப் பின்பற்றி தொழில் நடத்த வேண்டும் என்றால் மனிதன் பண்படவேண்டும். கல்வியும், வாழ்வியல் அறிவும் மனிதனைப் பண்படுத்தவல்லவை.

பொதுவாகவே, எந்த ஒரு மனிதனும் மிருகத் தன்மை கொண்டவனாகதான் இருக்கிறான். ஆன்மீகமும் ஞானமும் அவனைப் பண்படுத்துகின்றன. இது மிக எளிமையான வழி. அன்பு என்கிற மதம் இதற்குக் கடவுளே தேவையில்லை.

ஒவ்வொரு மனிதனும் தன் இயல்புக்கு ஏற்ப இத்தகைய முறை ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் கீதை சுதர்மம் என்கிறது.

திரு. பாலசுந்தரம் அவர்கள் தன் தொழில் அனுபவம் குறித்து அடுத்த இதழிலும் பேசுகிறார்.

டெக்ஸ்டூல் பாலசுந்தரம்

இந்தியாவின் இன்னொரு இரும்பு மனிதர் என்ற புகழாரம் சூட்டும் டெக்ஸ்டுல் பாலசுந்தரம் பள்ளிப்படிப்பை – கோவை தூய மைக்கேல் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை சென்னை – Presidency கல்லூரியிலும் B.E. படிப்பை – லண்டன் Shifordலும் படித்தவர்.

” என்னை நன்றாக இறைவன் படைத்தனன்” என்ற திருமூலரின் மூலமந்திரமே முச்சுக்காற்றானது.

1946 – ல் டெக்ஸ்டூல் என்ற மாபெரும் தொழிற்சாலையை நினுவினார். 7000 தொழிலாளர்களின் உழைப்பை உருவாக்கும் தொழிற்சாலையாக அது கோவையில் விளங்கியது.

”கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற மகாகவியின் கனவு இம்மாமனிதரால் நிஜமானது.

புதிய உலகத்திற்கு புறப்படவைக்கும் இவரின் உன்னதப்படைப்புகள்.

மின்சார மோட்டாராக, ( Electric Motor)

நூற்பு ஆலை எந்திரமாக
(Textile Spinning Machine )

டீசல் என்ஜினாக, ( Diesel Engine )

அல்லைடு ஸ்டீலாக ( Allied Steal)

தேனிரும்பாக

தேசமெல்லாம் தொழிற்புரட்சிக்கு இவையே தூண்டுகோலானது. கதரின் வளர்ச்சிக்கு இவரின் பங்கு நெசவாளர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெறச் செய்தது. புதிய இயந்திரம் ஒன்றை உருவாக்கி பம்பாய் நகரில் பார்வையாளர்கள் மத்தியில் இடம் பெறச்செய்து பார்ப்பவர் மத்தியில் படைப்பினைவியக்க வைத்தார்.

கல்விப்பணியிலும் தன்னை அர்ப்பணித்து 1980 – ல் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வது மகாவித்யாலயா என்ற கல்வி நிலையத்தை நிறுவினார். இன்று அப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகி 3000 மாணவ, மாணவியர்க்கு அறிவின் ஆலயமாக காட்சியளிக்கிறது. 1999 – ல் அப்பள்ளி மேலும் வளர்ந்து ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மக வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியை தோற்றுவித்தது.

வெள்ளை ஆடைக்குள் ஒரு வீரத்தின் விளைச்சலாய்….

எளிமையாய் ஒரு இமயம் இங்கு வாழ்ந்து வருகிறது.

இளமையே கைகட்டி சேவகம் செய்யும் துணிச்சல் 90

வயதிலும் இவருக்கு தோற்றமளிக்கிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….