கணிதம் நன்றாக வரவேண்டும் என்றால், வெண்டைக்காயும்;
நினைவாற்றல் பெருக வேண்டும் என்றால், வல்லாரையும்; சமீபகாலமாக சிபாரிசு செய்யப்படுகிறது.
மேற்படி ” தாவரங்கள் ” நினைவுத் திறுனுக்கு உதவுகிறதோ இல்லையோ
தா… வரங்கள்!
தா… வரங்கள்!
எனக்கேட்டால் நினைவுத்திறன், ஊக்கம் உற்சாகம், வெற்றி வழிகள், அமைதி, சந்தோஷம் என கணக்கற்ற வரங்களைத் தருகிற வித்தகர் ஒருவர் இருக்கிறார்.
தன்னம்பிக்கை வாசகர்களுக்கு பரிச்சயமான, ” ஐயா ” என்றும், ” கனகு சார்” என்றும் ” கவனகர் ” என்றும் நண்பர்களாலும், மாணவர்களாலும், அழைக்கப்படுகிற திருக்குறள் அவதானி, பதினாறு கவனகர் இரா. கனக சுப்புரத்தினம் தான் அவர்.
பெயரிலேயே தங்கத்தையும், ரத்தினத்தையும் வைத்திருக்கிற இவர், தனது அதிசய ஆற்றலால், ஓரிரு தின நிகழ்ச்சியிலேயே தனது மாணவர்களாகவும் மாற்றி விடும் வல்லவர். மனச்சோர்வை விரட்டி மலர்ச்சியை எளிதாக வரவழைத்து விடுகிறார்.
உலகின் பல பாகங்களுக்கும் வான ஊர்திகளில் பயணித்து நிகழ்ச்சிகள் நடத்த தமிழர்களின் மனவானில் சஞ்சரிக்கும் இவர், சில மாதங்களுக்கு ஒருமுறை கோவையிலும் வாழ்வியல் முன்னேற்ற நிகழ்ச்சிகளை அளித்து வருகிறார்.
முக்கனிச் சுவையினும் இனிப்பான இவரது நிகழ்ச்சிகளிலும், புத்தகங்களிலும், ஒலி இழைகளிலும், மனம் நெகிழ்ந்தவர்களும், மகிழ்ந்தவர்களும், மலர்ந்தவர்களும், எண்ணற்றோர், எண்ணற்றோர்.
பானை சோற்றில் பதம் பார்க்க, இவரின் ” நினைவாற்ற வளர”…. புத்தகத்திலிருந்து இதோ சில பருக்கைப் பக்கங்கள்….
ஒருமுறை பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் எனது பதின்கவனக நிகழ்ச்சி நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் எழுந்து, ” ஐயா, இசையும் ஓர் ஒலிதானே, அது மட்டும் ஏன் நம்மைக் கவர்ந்து இழுக்கிறது?…” என்று கேட்டார்.
” அதன் ஒழுக்கம்தான் கவர்ச்சிக்குக் காரணம்!”… என்று பதில் சொன்னேன்.
” அந்த ஒழுக்கம் எப்படி வாய்க்கிறது?” என்றார்.
” அவசரம் இல்லாமல், அது அதற்குரிய நேரத்தை அனுமதிப்பதால்!” என்றேன்.
அந்த மாணவர், ஏனோ அளவுக்கதிமாய் மகிழ்ச்சி அடைந்தது போல் தெரிந்தது.
” நான் பலரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன பதில்தான் எனக்கு நிறைவைத் தருகிறது. எப்படி அவ்வளவு பொருத்தமாய் உங்களால் பதில் கூற முடிகிறது?” என்று கேட்டார்.
”ஒரு வேளை உங்கள் கேள்வியைச் சரியான கோணத்தில் ( Right Focussing ) நான் பார்த்திருக்கலாம் ” என்றேன்.
அவருக்கு விளக்கியவற்றையே இங்கும் குறிப்பிடுகிறேன்.
மனத்திற்கு நம்மை ஐந்து வகையில் நிர்வகிக்கும் ஆற்றல்கள் உண்டு. அவை :
எதையும் சரியான கோணத்தில் பார்த்தால்;
Right Focussing
தவறான கோணத்தில் பார்த்தால்;
Wrong focussing
நினைவில் வைத்து வெளிப்படுத்துதல்;
Memory
கற்பனை செய்தல்; Imagination
தூங்க வைத்தல்; Sleep
ஆக நினைவாற்றல் என்பது, மனம் நிர்வகிக்கும் ஐந்து பணிகளில் ஒன்றே தவிர, அது மட்டுமே மனத்தின் பணியல்ல.
மனத்தை முழுவதும் தன்வயப்படுத்தியோர்க்கு, இந்த ஐந்து வகை நிர்வாகமும் சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
நெப்போலியான் – விரும்பிய வினாடியில் தூங்கவும், சொன்ன வினாடியில் விழித்து எழவும் ஆற்றல் பெற்றிருந்தார் என்று கேள்விப்படுகிறோம். நெப்போலியன் கிடக்கட்டும்; நம்மைச் சுற்றி இருப்பவர்களில் கூட, ஒரு சிலர் இந்த ஆற்றல் பெற்றிருப்பதைக் கவனித்துப் பார்த்தால் புரியும்.
அதற்கு என்ன பொருள்?
தூக்கம், அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என்பதே பொருள்.
இதுபோல், ஒவ்வொன்றையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்; முயல வேண்டும்.
” எதையும் புரிந்து கொண்டு பின்பற்றுவது நல்லதா? பின்பற்றிப் புரிந்து கொள்வது நல்லதா?
இப்படியொரு கேள்வியை புத்தரிடம் கேட்டார் ஒரு சீடர்.
இதற்கு நேரடியாய்ப் பதில் சொல்லாமல் புத்தர் ஒரு நிகழ்ச்சியை விவரித்தார்;
கங்கை ஆற்றில் புனித நீராடுவதற்காக வேதியர் ஒருவர் வந்தார். குளித்து முடித்ததும் கங்கை நீரை எடுத்துச் செல்ல வேண்டிய, கையோடு சொம்பு ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்.
குளித்து முடிக்குவரை அந்தச் சொம்பைப் பாதுகாக்க வேண்டிய இருந்தது. உடனே ஒரு யோசனை தோன்றியது. மணலை ஆழமாய்த் தோண்டி சொம்பைப் புதைத்து வைத்தார். இடம் அடையாளம் தெரிய வேண்டி, அந்த இடத்தில் ஒரு குச்சியை நட்டு வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்.
குளித்து முடித்துவிட்டுச் சொம்பை எடுக்க வேண்டிய கரை ஏறியவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி! ஏனெனில், திரும்பிய பக்கமெல்லாம் மணற்குவியல்கள்! ஒவ்வொன்றின் மீதும் குச்சி வேறு நடப்பட்டிருந்தது!
புரிந்தது இதுதான். அவருக்குப் பின்னால் குளிக்க வந்த அத்தனை பேரும், ” மணலைக் குவித்துக் குச்சி நடுவதை ஒரு சடங்கு!” என்று நினைத்து, ஆளுக்கொரு மணற்குவியலை உருவாக்கிவிட்டுக் குளிக்கச் சென்றனர்.
புரிந்து கொள்ளாமல் பின்பற்றும் அவ்வளவும் இப்படி அர்த்தமற்ற சடங்குகளாய் மாறும்; முடிவில் மூட நம்பிக்கை என்று ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்படும்.
ஆனால், ஒன்றைப் புரிந்துகொண்டு விட்டாலோ பின்பற்றுதல் தானே வரும்.
” இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். புரிந்து கொண்டு பின்பற்றவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?” என்று கூறினார் புத்த பகவான்.

July 2003

























No comments
Be the first one to leave a comment.