Home » Articles » தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை

 
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை


நிலா
Author:

பௌர்ணமி நிலா பகல் போலக் காய்ந்து கொண்டிருந்தது. வானம் நிர்மலமாக காட்சியளித்தது. பொழுதெல்லாம் கொழுத்துகளி வெய்யிலுக்கு இரவு வந்ததும் காற்று வீசினால் கொஞ்சம் இதமாக இருக்கும். என்னவோ காற்று அசைவே இல்லை. சுடக்சுட இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு தாத்தா சாய்வு நாற்காலியை எடுத்து வந்து வாசலில் போட்டு சாய்ந்து உட்கார்ந்தார்.

” கமலம் … கமலம்…” என்று மனைவியை அழைத்தார் தாத்தா.

” என்னங்ஐக ஆச்சி?… இப்பதான சாப்பிட்டு போனீங்க. என்னவேணும் சொல்லுங்க” என்றார் கமலம் பாட்டி.

“தாயி…( மனைவியை இப்படித்தான் செல்லமாக அழைப்பார் ) ஒரே புழுக்கமா இருக்கு. கொஞ்சம் அந்த விசிறி எடுத்துவந்து விசிருவியாக்கும்”…. என்றார் தாத்தா.

இந்தச் சத்தம், சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்திருந்த இசையமுது காதி விழுந்தது. ” பாட்டி தாத்தாவுக்கு புழுக்கமா இருந்தா எனக்கும் புழுக்கமா தான் இருக்கும். நானும் வெளியே போய் கட்டில்ல படுத்துக்குவேன்” என்று மளமளவென்று ஒரு தலையணையையும், போர்வையையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்து விட்டாள்.

பாட்டி விசிறி எடுத்துக் கொண்டு வந்தார். ” பாட்டு தாத்தாவுக்கு நான்தான் விசிறுவேன்” என்று அடம் பிடித்தான்.

தமிழ் வேந்தனும் ஒரு விசிறியும் கையுமாக வெளியே வந்தான். அண்ணனும் தங்கையுமாக ஆளுக்கு ஒருபக்கம் விசிறினார்கள்.

குழந்தைகள் இருவரும் சேர்ந்து தாத்தாவுக்கு விசிறிக் கொண்டிருந்தார்கள். தாத்தா ஆனந்தமாய் இருந்தார்.

” தாத்தா இராஜாக்களுக்கு இப்படித் தானே இரண்டு பேரு நின்னு விசிறிக்கிட்டிருப் பாங்க?” என்றான் தமிழ் வேந்தன்

” ஆமாம்” என்றார் தாத்தா.

” அப்பன்னா, இன்னிக்கு இராஜா கதை ஒன்னு சொல்லுங்க தாத்தா! என்றாள் இசையமுது.

” ஓ…! அதுக்குத்தான் இவ்வளவு வேகமா விசிறி வீசறீங்களா?” என்றவர் லேசாக தொண்டையைக் கணைத்துக் கொண்டு கதை சென்னார்.

முதலில் தாத்தா குழந்தைகளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

” இப்ப நம்ப நாட்டை இந்தியரா, அன்னியரா? யார் ஆட்சி செய்யறது?”

” நாமதான் ஆட்சி செய்றோம்” என்றனர் குழந்தைகள்.

” அப்படின்னா நாம அடிமைபட்டு இருந்தப்ப யார் ஆண்டது?”

” ஆங்கிலேயர்” என்று பதில் வந்தது.

”ஆமா..! நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்டு வந்தாங்க. ஆங்கிலேயர் ஆண்டு வந்தாங்க. ஆங்கிலேயர் இந்நாட்டைக் கைப்பற்ற முயற்சி பண்ணப்ப பலர் அவங்களை எதிர்த்து கடுமையா சண்டை போட்டாங்க”.

” தமிழ்நாட்ல யார் சண்டை போடடது?” என்றார் தாத்தா.

” வீரபாண்டிய கட்டபொம்மன்” என்று உடனே சொன்னான் தமிழ்.

” ஆமா…! வீரபாண்டிய கட்ட பொம்மன் வரிகொடுக்க முடியாதுன்னு சண்டை போட்டாங்க. வரி வாங்கறதுன்ற பேர்ல நம்ம செல்வத்தெல்லாம் கொள்ளை அடிச்சாங்க. பெரும்பாலான பாளையக்காரர்கள் அந்த வெள்ளையர்க்கு அடங்கி ஒடுங்கி வாழ்ந்தாங்க. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்ட பொம்மன் வரி கொடுக்க மறுத்தாங்க. அவங்களுக்குள்ள உடன்பாடு ஏற்படுல. 1798 ம் ஆண்டு கட்டபொம்மனத் தூக்கிலிட்டு கொன்னுபுட்டாங்க”.

” இப்படியா… கொஞ்சம் கொஞ்சமா தமிழ்நாடு முழுதும் புடிச்சிட்டாங்க. அப்ப ஓரே ஒரு பகுதி மட்டும் அவங்களால பிடிக்க முடியல.
அதுதான் கோவை மாவட்டப் பகுதி. அதாவது கொங்கு நாட்டப்பகுதி. காரணம் அந்தப் பகுதியில ஒரு மிகப்பெரிய வீரன் ஆட்சி செஞ்சிகிட்டு இருந்தாங்க. அவங்க பேரு சின்னமலை, அவங்க நொய்யலாத்துக்கு வடகறையில் ஓடாநிலைங்கற ஊர்ல அரண்மன கட்டி ஆட்சி செஞ்சி வந்தாங்க. வருகொடுப்பது கிடக்கட்டும், அவன் கொங்கு நாட்ல கால் வைக்கவே கூடாது. இந்த் நாட்டவிட்டே வெள்ளயனை விரட்டனும்னு சண்டை போட்டார்.

இப்படி இருந்தப்ப ஒரு முறை ” கர்னல் மேக்ஸ்வெல் ” தலைமையில் அந்த ஆங்கிலப் படைய கடுமையா சண்டை போட்டு சின்னமலை தோக்கடிச்சாங்க. உயிர் தப்பிச்சா போதுமுன்னு ஓடிட்டான் கர்னல் மேக்ஸ்வெல்.

பல இடங்களிலேயும் வெற்றி பெற்ற கர்னல் மேக்ஸ்வெல் படைகிட்ட தோத்து போச்சின்னு வெள்ளைக்காரர்களே எழுதியிருக்கறாங்க.

இதுக்குமேல சின்னமலைய சும்மா விடக்கூடாதுன்னு அப்புறம் ஓராண்டு கழிச்சு மறுபடியும் சண்டைக்கு வந்தாங்க வெள்ளைக்காரங்க. தமிழ்ப்படை வீரர்கள் எல்லாரையும் கொன்னுபுட்டு சின்னமலைய சிறைபிடிக்கணும்னு முடிவு செஞ்சிருந்தாங்க வெள்ளைக்காரங்க.

ஆனா சின்னமலை நம்ம வீரர்களுக்கு சொன்னாரு, உயின் போனாகூட… ஒரு அடிகூட பின்வாங்கக் கூடாதுன்னு. ஆங்கிலப் படையோ பெரியபடை, சின்னமலைப் படையோ சின்னப்படை, மற்ற பகுதியில் இருந்து துணைப்படைகள் எல்லாம் இன்னும் வந்து சேரல. மக்கள் எல்லாம் நினைச்சாங்க இந்தத்தடவ அவ்வளவுதான். ரொம்ப பெரிய படையா இருக்குது. எப்படியும் நம்ம ஊரை புடிச்சிருவாங்க வெள்ளைக்காரங்க அப்படின்னு பேசிக்கிட்டாங்க.

ஆனா, வெள்ளக்காரங்க எவ்வளவோ கடுமையா சண்டை போட்டுங்கூட ஒரு தூசளவு கூட சின்னமலை படை பின் வாங்கல. சின்னமலை சொல்லி இருந்தாங்க… நான் சொல்ற வரைக்கும் யாரும் வெள்ளைக்காரங்களை எதிர்த்துச் சண்டை போடாதீங்க. அவங்க தாக்குதல தடுத்துக்கிட்டு மட்டும் இருங்கன்னு. இது புரியாம வெள்ளைகாரங்க சத்தெல்லாம் சேத்து சண்டை போட்டாங்க. ஓர் அடி கூட முன்னேறவ முடியல. அவங்களுக்கே ஆச்சரியமா போச்சு.

நாலா பக்கமும் இருந்து படையெல்லாம் வந்து சேந்துச்சு. சின்னமலைக்கு ஒரே குஷியாயிடுச்சு. கடுமையா எதிர்த்து சண்டை போட உத்திரவு போட்டாங்க சின்னமலை. இரண்டு படையும் கை கலந்துருச்சி, ஒருத்தரை ஒருத்தரை வெட்டிக்கிட்டாங்க, சுட்டுக்கிட்டாங்க, ஆ… ஊன்னு ஒரே சத்தமா இருந்துச்சு.

பலபேர் கைதனியா, கால்தனியா, தலை மட்டும் தனியா வெட்டி விழுந்து கிடந்துச்சு. எங்கப் பார்த்தாலும் பிணக்குவியலா இருந்துச்சு, இரத்தம் ஆறுமாதிரி ஓடுச்சு. இராத்திரியிலயும் சண்டை நடந்துச்சு, இரண்டு நாளாச்சி இன்னும் சண்டை முடிச்ச மாதிரி தெரியல.

சின்னமலைக்கு ரொம்ப கோபம் வந்துருச்சி. சின்னமலை படையில தடிப்படைன்னு ஒன்னு இருந்துச்சி. தடிக்காரரை முன்னேறி தாக்கச் சொன்னங்க சின்னமலை. தடியடிய வெள்ளைக்காரங்களால தாங்க முடியல. எப்படி அதை சமாள்ளிக்கிறதுன்னு தெரியல.

இந்த நேரம் பார்த்து சின்னமலை வெள்ளைக்காரங்க தலையெல்லாம் தேங்காசீவர மாதிரி சும்மா சீவிக்கிட்டே முன்னணிக்கு போனாங்க. ஆங்கில படைத்தலைவன் கிட்ட நேரடியா சண்டை போட்டாங்க. ஓங்கி ஒரே வெட்டு, அவன் தலை கீழே விழுந்துச்சி. வெள்ளப்படை ஓட்டமெடுத்துச்சி. இதை கேள்விப்பட்டு சென்னையில், கல்கத்தாவுல கோட்டையில இருந்த வெள்ளக்காரங்க கதிகலங்கி போயிட்டாங்க.

அப்புறம் ஓராண்டு கோவை பகுதி மக்கள் அமைதியா வாழ்ந்தாங்கழ ஒருநாளு, ஒருபெரிய குதிரைப்படை கோவையை நோக்கி வந்துச்சி. அதுல மூவாயிரம் குதிரைவீரன்கள் இருந்தாங்க. அந்தபடைக்கு ‘ கர்னல்’ ஹாரிஸ் தலைமை தாங்கி நடத்தி வந்தான்.

திரிவரங்கப்பட்டணத்த சுத்தி வளைச்சி திப்புவ ஜெயிச்சவன் இவந்தான். குதிரைப்படை நடத்துறதுல கெட்டிகாரன்னு பேர்வாங்கனவன். காவிரியில கணுக்கால் அளவே தண்டி ஒடறகாலம். தீடீர்னு அந்தப்படை வந்த ஆத்த கடந்துச்சி. விடிய்க்காலத்துல அறச்சலூருக்கே வந்திருச்சு.

சின்னமலை அப்பதான் கொலுமண்டபத்து வாசல்ல உடகார்ந்து இருந்தாங்க. கோட்ட கொத்தளத்துமேல காவல் காத்த வீரர் ஒருத்தன் ஓடியாந்து வடக்கே இருந்து குதிரைப்படைவர்றமாதிரி இருக்குன்னான். சின்னமலை தம்பி ஓடிப்போய் கோட்டமேல ஏறிப்பாத்துட்டு ஓடியாந்து, ” அண்ணா! ஆமாம், பெரிய குதிரைப்படை தம்பட்டம்பாறை வந்திருச்சி அப்படின்னான். இன்னும் கொஞ்ச நேரத்துல ஊரையே வளைச்சிருக்கும் என்ன செய்யறது?” அப்படின்னான் பதறிபோய்.

சின்னமலை சிரிச்சிக்கிட்டே சரேல்ன்னு எழுந்து படைக்கல அறைக்குப் போய் ஒரு நாட்டுத் துப்பாக மட்டும் எடுத்துகிட்டு வெளிய வந்தாங்க. குதிரை தயாரா இருந்துச்சி, ஒன்னும் பேசாம, குதிரைமேல ஏறினாங்க. வடக்கு நோக்கி பறந்துச்சி குதிரை. சின்னமலையின் குதிரை காற்றவிட வேகமா வெள்ளக்காரர் படையை எதிர்நோக்கிச் சென்றது.

ஆங்கிலப் படைத்தலைவன் தன்னை நோக்கி ஒரு குதிரைக்காரன் ரொம்ப வேகமா வருவத பார்த்து அவங்க குதிரையை நிதானமா நடத்திக்கிட்ருந்தான். குருவி மாதிரிப் பறந்து வந்த சின்னமலையோட குதிரை திடீர்னு நின்னுச்சி. அவ்வளவுதான். படார்னு ஒரு குண்ணு பாஞ்சது. குண்டுபட்ட அந்தக் குதிரை வலிதாங்க முடியாம வந்த வழியே திரும்பி வேகமா ஓடுச்சி.

அதைப்பாத்த மத்த குதிரைகளும் அது பின்னாலயே ஓட்டமெடுத்துச்சு. படைத் தலைவன் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தும் குதிரைய திரும்பவும் முடியல, நிறுத்தவும் முடியல.

தனியொருத்தனா ஒரு படையவே வெற்றி கொண்டது உலக வரலாற்றுல சின்னமலையாத்தான் இருக்கு. அந்தக் குதிரை படைத்தலைவனே புகழ்ந்தான்னா பாத்துக்கோ” விசிறி வீசிக்கொண்டிருந்த குழந்தைகள் எப்போது நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை. கதையில் மெய்மறந்து நின்றனர்.

– தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2003

செயல்களைத் திரும்பிப் பாருங்கள்
HEALTH CORNER
ஈரோட்டில் ” சுதந்திரச் சுடர்கள்”
ஈரோட்டில் '' சுதந்திரச் சுடர்கள்''
மாணவர் பக்கம் பெற்றோர்
வெற்றிப் படிகள்
சிந்தனைத்துளி
உறவுகள்… உணர்வுகள் …
நோயின்றி வாழ்வது சுலபம்
சிந்தனைத்துளி
படிப்போம்! படிக்கவைப்போம்!!
கோவை தன்னம்பிக்கைப் பயிலரங்கம்
சிறந்த நண்பர்கள் வெற்றி தூண்கள்
பயிலரங்கம் கனவா? நனவா?
வெற்றிக்கு வழிகாட்டும் வெற்றியாளர்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
வேர்கள் உள்ளவரை
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு முக்கிய அறிவிப்பு
பகிர்ந்து தருதல் பெரும் பேரின்பம்
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்