Home » Articles » வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க

 
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க


சண்முக வடிவேல் இரா
Author:

தொடர்…
” நகைச்சுவைத் தென்றல் ” இரா. சண்முக வடிவேல்

தம்முடைய குழந்தைகளின் மழலைச்சொல் இன்பத்தைப் பருகாதவர்களே, குழல் இனியது என்றும், யாழ் இனியது என்றும் கூறுவார்கள். தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு இன்புற்றுவிட்டால், இசைக்கருவிகளின் இன்பம் இன்பமாகவே தோன்றாது. இது திருவள்ளுவரின் கருத்து.

குழந்தைகள் இல்லாத வீடு வீடாகவே தோன்றாது. ஆனால், நம் தாய்க்கும் சில நேரங்களில் குழந்தைகளைத் திட்டுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும்.

” சனியனே ஏண்டா இந்தப்பாடு படுத்தறே? எங்கயாவது தொலையேன்டா!”

பள்ளி விடுமுறை நாளில் குழந்தையின் தொல்லை பொறுக்க முடியாத தாய்மாரின் புலம்பல் இது!

” இவள எங்கயாவது ஹாஸ்டல்ல சேத்துவிடுங்க. சொன்ன பேச்சையே கேக்க மாட்டேங்கறா”

மகளின் குறும்புக்கு மாற்றுதேடும் தாயின் அலறல் இது. சரி இவர்கள் இப்படியெல்லாம் அங்கலாய்க்கிறார்களே என்று குழந்தைகளை எங்காவது அனுப்பிவிட்டால் இவர்கள் அமைதியாக இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.

‘புள்ள இல்லாம பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்குங்க. போயி உடனே அழைச்சிட்டு வாங்க’.

இப்படி மறுபடியும் ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகள் தரும் தொல்லைகள்தான் அவர்களைப் புலம்ப வைக்கின்றன. இந்தத் தொல்லையும் தேவையான தொல்லைதான்.

குழந்தைகள் அப்படி என்ன அடாவடித்தனம் செய்கிறார்கள்?

எழுதத்தான் பேனா கேட்பார்கள்.

பேனாவைக் கொடுத்தால் எழுதுவது தவிர மற்ற எல்லாக் காரியங்களும் செய்வார்கள்.

உடனே அதை அக்குவேறு ஆணிவேராகப் பிரிப்பதுதான் முதல் வேலை. அப்படிச்செய்தால்தான் அது குழந்தை.

வாங்கியவுடன் பேனா திறந்து, பிள்ளையார் சுழி போட்டுக் காகிதத்தில் கவிதை எழுதத் தொடங்கினால் அது என்ன குழந்தையா?

குழந்தை என்றால் குறும்பு இருக்கத்தானே செய்யும்? விலை உயர்ந்த பேனாவை அதன் கையில் கொடுத்தது நம் தவறு. விளையாட்டுப் பொருள்களைத் தந்து – அது அடம்பிடித்துக் கேட்கும் பேனாவை மறக்கச் செய்து – கவனத்தை மடைமாற்றும் சாமர்த்தியம் நமக்கு வேண்டும்.

குழ்ந்தையிடம் சாமர்த்தியம் இருக்கிறதே.

என் பெயர்த்தி ஒருத்தி, பெயர் சுடர் விழி. மூன்று வயது. சுட்டியானவள்.

நான் மிகவும் கெட்டிக்காரன் என்பது என் நினைப்பு, சாப்பாட்டுக்கு நெய்க்கிண்ணத்தை எடுத்துவந்து தன் மகளுக்கு ஊற்ற வந்தாள் என் மகள். தானே ஊற்றிக்கொள்ள வேண்டும் என்கிறாள் என் பெயர்த்தி. தர மறுக்கிறாள் தாய். நெய்கிண்ணம் வராவிட்டால் சாப்பிடப் போவதில்லை என்று சத்தியாக்கிரகம் நடக்கிறது.

வேறு வழியில்லை. நெய்க்கிண்ணத்தை அவளிடம் தந்து பத்திராக நெய் ஊற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்திச் செல்கிறாள் தாய்.

எது நடக்கக்கூடாது என்று நினைத்தோ, அது நடந்தே விட்டது. கிண்ணம் குழந்தையின் கையிலிருந்து வழுக்கிக் கீழே விழுந்தது. நெய் முழுவதும் தரையில் . தாயார் கோபத்தின் உச்சிக்குச்சென்று சரியானபடி அடித்துவிட்டார். மதியம் தொடங்கி மாலை வரை குழந்தையின் அழுகை. நான் ஏதோதோ சமாதானம் சொல்லிப் பார்க்கிறேன். சமாதானம் ஆகவில்லை பெயர்த்தி.

இரவு படுக்கப்போகும்போதும் அழுகை நிற்கவில்லை. நான்தான் கெட்டிக்காரனாயிற்றே!

‘ ஒரு கதை சொல்லவா?’ என்றேன்

‘ சொல்லு’

‘ சுடர்விழி என்று ஒரு சின்ன குட்டி’

‘ யாரு? நானா தாத்தா?’

‘ நீ இல்லம்மா. அவ வேற ஒருத்தி’

‘ அப்படின்னா சொல்லு ‘

‘ அவ ரொம்ப மோசமானவ. அம்மா சொல்றதைக் கேக்க மாட்டா. பிடிவாதக்காரி. ‘ ஹோம் வொர்க்’ செய்ய மாட்டா’

‘ சே, அவ ரொம்ப மோசம் தாத்தா, அப்புறம்?’

‘ அப்புறம் என்னா? ஒரு நாளு… நெய்க்கிண்ணத்தை அடம்பண்ணி வாங்கிக் கீழே கொட்டிட்டா’

‘ ஐயய்யே அப்புறம் என்ன? சொல்லு தாத்தா’

‘ சரி நெய்யைக் கீழே ஊத்திட்டாளே, அவள என்ன செய்யலாம்? சொல்லு’

இவ்வாறு கேட்டதும் மூன்று வயது நிரம்பிய அவள் கையை கன்னத்தில் வைத்துச் சிறிது நேரம் யோசனை செய்தாள். பிறகு,

‘ என்னா செய்யிறதுன்னு என்னக் கேக்கறீயே தாத்தா. நான் சின்னபுள்ள எனக்கு என்ன தாத்தா தெரியும்?’

நான் சற்றே அயர்ந்துவிட்டேன். நான் என்ன நினைத்துக் கேட்டேன்? அந்தச் சுடர்விழியை என்ன செய்வது என்று நான் கேட்டதற்கு ‘ அடிக்க வேண்டும்’ என்று அவள் பதில் சொல்வாள். சொன்னதும் ‘ அப்ப ஒங்க அம்மா அடிச்சதும் சரிதானே? அதுக்கு ஏன் அழுவுறே” என்று கேட்டு சமாதானம் செய்துவிடலாம் என்பதற்காக அல்லவா கேட்டேன்?

அவள் என்ன செய்துவிட்டாள் பாருங்கள். தான் சிறுபிள்ளையென்றும், தனக்கு எதுவும் தெரியாது என்றும், நெய்க்கிண்ணத்தை நழுவ விட்டது போல என் கேள்வியையும் நழுவ விட்டு விட்டாளே! சிறு குழந்தையிடம் எவ்வளவு சாமர்த்தியம்? நாமும் அந்த சாமர்த்தியத்தோடு இருக்க வேண்டும்.

நாம் அவள் ஊற்றிக் கொள்ளும் அளவு சிறிதே நெய்யை வைத்துத் தந்திருக்கலாம். நெய்க் கிண்ணத்தின் வெளிப்பாகத்தை நன்றாகத் துடைத்து வழுக்காமல் தந்திருக்கலாம். சிறுகுழந்தை என்ன செய்யும்? என்பதையும் என்ன நடக்கும்? என்பதையும் என்ன நடக்கும்? என்பதையும் எதிர் பார்த்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கையுடன் நடவாமல், குழந்தையை அடிப்பதால் என்ன பயன்?

குழந்தையிடமிருந்து எதை எதிர்பார்க்கிறோமோ, அதை நாம் செய்ய வேண்டும். ‘ பொய் சொல்லாதே’ என்று அறிவுரை சொல்லும் நான் பொய்பேசாது இருப்பதுதானே முறை?

பெயர்த்தியைக் கடைத்தெரு அழைத்துச் சென்றேன். அவள் சாக்லேட் வேண்டும் என்று பிடிவாத மாகக் கேட்டாள். நானும் பிடிவாதமாக மறந்துத்தான் பார்த்தேன். ‘ வயித்துல பூச்சி உண்டாயிடும். அப்புறம் ஊசி போடணும் கண்ணு’ என்று நான் சொன்னால்,

‘ஒரே ஒரு சாக்லேட் சாப்பிட்டால் பூச்சிவராது தாத்தா. டாக்டரு கூட குறைச் சலா சாப்பிடணும்தானே சொன்னாரு? ஒங்கிட்ட தானே தாத்தா சொன்னாரு. மறந்துட்டயா? சரி, சரி ஒரே ஒரு ஃபைல் ஸ்டார் வாங்கிக்குடு”.

ஒன்று வாங்கிக் கொடுத்துத் தின்ன வைத்தேன். தின்று முடித்துவிட்டு,

”தாத்தா அம்மாகிட்ட முட்டாயி வாங்கிக் குடுத்தத சொல்வாதே. அம்மா அடிக்கும்”

” ஒன்னத்தானே அடிக்கும். அடிச்சா வாங்கிக்க. சாக்லேட் தின்னா அடிவாங்கித்தான ஆகணும்?”

” ஒன்னயும் திட்டும் தாத்தா. ஏன் வாங்கிக் குடுத்தீங்க. ஒங்களாலதான் அவ கேட்டுப் போறான்னு கன்னா பின்னான்னு திட்டுமே தாத்தா”.

” ஆமா என்ன செய்யறது?”

” என்னா செய்யிறதா? சாக்லேட் வாங்கிக் கொடுத்தீங்களான்னு கேட்டா, இல்லேன்னு சொல்லு தாத்தா”

பொய் சொல்லக் கூடாதும்மா. நெஜத்தையே சொல்லுவோம். அடிச்சா நீ வாங்கிக்க. திட்டுனா நான் வாங்கிக்கறேன். பொய் மட்டும் சொல்லக்கூடாதுடா தங்கம்”.

” அப்ப சரி. நீயும் வாங்கு. நானும் வாங்கறேன்”.

இப்படி அவளிடம் பொய்சொல்லக் கூடாது. உண்மை சொல்வதால் உபத்திரம் வரும் என்றாலும் கூட உண்மையே பேச வேண்டும் என்றெல்லாம் அவளிடம் பொய் சொல்லாமல் இருக்கும் நேர்மைத் திறத்தை வலியுறுத்திக் கூறியிருக்கிறேன்.

ஒருநாள் நான் வீட்டின் உள்ளே இருக்கிறேன். வெளியிலிருந்து ” சார்!” என்ற குரல். இரும்பு கேட்டைத் திறந்து உள்ளே வந்து அழைப்பு மணியை அடிக்க அவருக்கு அச்சம். என் நாய் சும்மா இருக்காதே! அதனால்தான் வெளியிலிருந்தே ‘ சார் ‘ போடுகிறார்.

அந்த மனிதர் நல்லவர்தான். ஆனால் பேச ஆரம்பித்தால் நிறுத்துவது கடினம். ஒரு பணம் தந்து பேச வைத்தால் பத்து பணம் தந்தாலும் நிறுத்த மாட்டார். கடுமையாகப் பேசி அனுப்பி விடவும் முடியாது.

அவர் ஒரு ‘ பிரச்சார பீரங்கீ’ போகும் திசையெல்லாம் நம்மைப் பற்றிக் கூறி – இல்லாத்தும் பொல்லாததும்தான் – எல்லோரும் நம்மை வெறுக்கும்படிச் செய்துவிட்டு அவ்வப்போது நாம் எதிர்ப்படும் நேரங்களில் ‘ வெற்றிப் புன்னகை’ வேறு புரிவார்! பாம்பென்று ஒதுங்கவும் முடியாது; கயிறென்று மிதிக்கவும் முடியாது’ என்பார்களே ஒரு பழமொழி. அந்தப் பழமொழிக்கு இவரைத் தவிர வேறு பொருத்தமான சாட்சிகளே கிடைக்க மாட்டார்கள்.

அவர் குரலைக் கேட்டவுடன் என் உள்ளமும் உடம்பும் நடுங்கத்த தொடங்கியது. பெயர்த்தியை அழைத்து ” தாத்தா இல்லை. ஊருக்குப் போயிட்டாங்க. வர ஒரு வாரமாகும்னு சொல்லு போ” என்று கூறினேன்.

அவள் என்னருகில் வந்து கேட்டாள், ” பொய் சொல்லலாமா தாத்தா?” என்று.

உள்ளபடியே அன்று என் உடம்பு கூசிக் சிறுத்தது. ‘ பொய் சொல்லலாமா தாத்தா?” என்ற கேள்விக்கு இனிமேல் சாக்லேட் தின்றுவிட்டு இல்லையென்று பொய் சொல்ல அனுமதி கேட்பதாகத்தானே அர்த்தம் சொல்லி வைக்கிறது.

எந்தச் சூழ்நிலையிலும் உண்மை பேசும் திண்மை நமக்கிருந்தால் நம் குழந்தைக்கு உபதேசமே தேவையில்லையே!

(தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2003

செயல்களைத் திரும்பிப் பாருங்கள்
HEALTH CORNER
ஈரோட்டில் ” சுதந்திரச் சுடர்கள்”
ஈரோட்டில் '' சுதந்திரச் சுடர்கள்''
மாணவர் பக்கம் பெற்றோர்
வெற்றிப் படிகள்
சிந்தனைத்துளி
உறவுகள்… உணர்வுகள் …
நோயின்றி வாழ்வது சுலபம்
சிந்தனைத்துளி
படிப்போம்! படிக்கவைப்போம்!!
கோவை தன்னம்பிக்கைப் பயிலரங்கம்
சிறந்த நண்பர்கள் வெற்றி தூண்கள்
பயிலரங்கம் கனவா? நனவா?
வெற்றிக்கு வழிகாட்டும் வெற்றியாளர்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
வேர்கள் உள்ளவரை
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு முக்கிய அறிவிப்பு
பகிர்ந்து தருதல் பெரும் பேரின்பம்
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்