Home » Cover Story » வெற்றி முகம்

 
வெற்றி முகம்


கண்ணதாசன்
Author:


– மரபின் மைந்தன் ம. முத்தையா

பவளவிழா நிறைவில் கவியரசர் நினைவுகள்…

தன்மீதான நம்பிக்கை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு முத்திரை பதித்தவர் கவியரசு கண்ணதாசன். சிறுகூடற்பட்டி என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து சிகாகோ நகரில் மறைந்தது வரை மேடு பள்ளங்கள் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்தான் அவர்.

மனிதன் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவதெல்லாம் மோசமான அனுபவங்களிலிருந்து விடுபடுவதற்காகத்தான். முன்னெச்சரிக்கையே இல்லாமல் செயல்கள் செய்து, மோசமான அனுபவங்களைக் கொள்முதல் செய்து அதன்மூலம் வாழ்க்கைப் பாடங்களை வகுத்துக் கொண்டவர்தான் கண்ணதாசன்.

அவர் உணர்ந்த அனுபவங்களையே கவிதைகளாக்கியதால் தன்னைப் பற்றி வெளிப்படையான பிரகடனங்களையும் வெளியிட்டார். ” நாம் எப்படி வாழ்க்கூடாது என்று என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் ” என்றார் அவர்.

அனுபவங்கள் வழியே பாடம் கற்றுக்கொள்ள மிகுந்த நெச்சுரம் வேண்டும். அதனைக் கொண்டிருந்தது, கண்ணதாசனின் பலம்.

‘ தினமணிக்கதிர், ஆசிரியர் ‘ சாவி’ யுடன் ஒருமுறை ‘கிராஸ் டாக்கில் ‘ கண்ணதாசன் பேச நேர்ந்தது. ” எங்க பத்திரிகைகெல்லாம் எழுத மாட்டீங்க” என்று சாவி சொல்ல, ” அதென்ன அப்படிச் சொல்லீட்டீங்க? நல்லா எழுதறேன்” என்றார் கண்ணதாசன். ” தலைப்பு சொல்லுங்க” என்றவுடன் அவர் கொடுத்த தலைப்புதான் ” அர்த்தமுள்ள இந்து மதம் ”.

அதனை ஒரு மத நூலாக எழுதாமல், மன நூலாக எழுதியதால்தான் இதுவரை முறியடிக்கப்படாத சாதனயை அந்த படைப்பு எட்டுயது.

” ஆற்றலும் குளித்தேன்; சேற்றிலும் குளித்தேன்
மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன் ஊற்று நீரிலும் ஒளியினைக் கண்டேன்;
ஊற்று நீரிலும் ஒளியினைக் கண்டேன்;
பார்த்தது கோடி! பட்டது கோடி!
சேர்த்தது என்ன… சிறந்த அனுபவம் ”

என்றார் கண்ணதாசன். அதுதான் அவருடைய மூலம்தனம். நேர்மை உணர்வோடு நெடுங்கியதால் அரசியல் அவரை வளர அனுமதிக்கவில்ல். வெளியேறினார்.

திரைப்படத்தில் நன்கு சம்பாதித்த பணங்களையெல்லாம் திரைப்படத்திலேயே அழித்தார். ” கவலை இல்லாத மனிதன் – படத்திற்குப் பிறகுதான் எனக்குக் கவலைகளே அதிகரித்தனா” என்று அதை விளையாட்டாக்ச் சொல்லத் தெரிந்தது அவருக்கு.

தனி வாழ்க்கையில் சில தடுமாற்றங்கள் – அரசியலில் தோல்வி – பொருளாதார நஷடங்கள் – இத்தனைக்குப்பிறகு கண்ணதாசனுக்குத் தமிழுலகில் தங்க சிம்மாசனம் தேடித்தந்தது, தன்மீதான நம்பிக்கையும், தன்னகரில்லாத தமிழாற்றலும்தான்.

வாழ்வின் சராசரி வரையறைக்குள் மகத்தான கவிஞர்களை நாம் கொண்டுவர முடியாது. பாரதியும் அப்படித்தான், பாரதிதாசனும் அப்படித்தான். கண்ணதாசனின் சில பலவீனங்கள் அனைவராலும் அறியப் பட்டமைக்கு முதல் காரணம், அவரே அவற்றை வெளிப்படையாகப் பேசியதுதான்.

” என் வாழ்க்கை திறந்த ஏடு – அது ஆசைக்கிளியின் கூடு ” என்றார் அவர்.

அனுபவப் பாடங்களுக்கு அடுத்தாற் போல், கண்ணதாசனிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வெண்டியது, வாழ்க்கை மீது நேசம்.

” காதலில் – உறவினில் – கலைகளில் – உணவினில் – ஈதலில் – புரத்தலில் – இயற்கையைரசித்தலில் – வாழ்தலில் பற்றுவை! வாழ்க்கையைக் கற்றுவை! ” என்றார் கவியரசு கண்ணதாசன்.

எல்லா சோகங்களும் தாங்கக்கூடியவையே என்கிற அறிவையும், எல்லாத் தடையும் தாண்டக் கூடியவையே என்கிற தெளிவையும், வாழ்க்கையிடமிருந்து வாங்கிக் கொண்டவர் கவியரசு கண்ணதாசன். அதனால்தான்

” என்னடா துன்பம்? அதை எட்டி உதை வாழ்ந்து பார் எப்போதும் உன்னை நம்பி” ! என்று உற்சாகக் குரல் கொடுத்தார் அவர்.

” நம்பிக்கையென்னும் நந்தா விளக்கு உள்ள வரையில் உலகம் நமக்கு ” என்று ஊக்கம் கொடுக்க அவரால் முடிந்ததும் இதனால்தான்.

கண்ணதாசனைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கை என்பது மத நம்பிக்கையல்ல – மன நம்பிக்கை! விதிக்கொள்கைகூட தோற்றவனுக்குத் தோள்கொடுக்கும் கோட்பாடு என்ற அளவில்தான் அவர் பார்த்தார்.

வெற்றிக்கு வழி சொல்லி அவர் எழுதியதைப் போலவே, தோல்வியாளர்களைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்திய அவருடைய திரைப்பாடல்களும் தனிப்பாடல்களும் தன்னிகரற்றவை.

” உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு ” என்று திரைப்பாடலுக்கு எழுதிய கண்ணதாசன், தனிப்பாடல் ஒன்றில்.

” எல்லாம் அவன் செயலே என்பதற்கு என்ன பொருள்? உன்னால் முடிந்ததெல்லாம் ஒரளவே என்று பொருள்”, என்று காயங்களுக்கு கவிதைக் களிம்பு தீட்டுகிறார்.

” கடல் நீரே குடிநீராய்க் கடவுள் படைத்திருந்தால் அடிநீரைத் தேடி எந்த அரசாங்கம் செலவு செய்யும்?”

என்பது போன்ற கேள்விகளும்,

” செத்தபின் உயிர்கள் போவது எங்கே? தெரியும் வரைநீ தெய்வத்தை நம்பு!”

என்பது போன்ற தத்துவ விளக்கங்களும் தமிழுலக்கில் கவியரசு கண்ணதாசனைக் காலங்காலமாய் நிலைநிறுத்தக் கூடியவை.

இறை நம்பிக்கைக்கு எதிரான குரல் பலமாக எழுந்தபோது ” இறை நம்பிக்கை என்பதே வாழ்க்கை மீதான நம்பிக்கை” என்பதை பொதுவான தளத்தில் நின்று உணர்த்துவதற்காகவே அர்த்தமுள்ள இந்துமதம்” எழுதினார்.

அந்நூல், ஒரு மதத்தின் குரலாக மட்டுமின்றி போதுவான ஆன்மீகக் குரலாகவும் ஒலிக்கிறது. அந்த சமயப் பொறை இருந்த காரணத்தால்தான், அவரால் அதே ஈடுபாட்டோடு ” ஏக காவியம் ” எழுத முடிந்தது.

எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்தாலும், ஆர்வம் காரணமாய் சேர்த்த அறிவும், பட்டறிவும் சேர்த்து அவரைப் பல்கலைக்கழகமாய் உயர்த்தின.

”பாமர ஜாதியில் தனி மனிதன் – நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்”

இப்படிச் சொல்வதன் மூலம், தன்னம்பிக்கையின் தன்னிகரற்ற களஞ்சியமாய்க் கவியரசு கண்ணதாசனைக் காண்கிறோம். அவரது பவளவிழா நிறைவு பெற்றிருக்கும் வேளையில், அவரது தன்னம்பிக்கைத் துளிகள் சில.. இதோ உங்களுக்காக ! ( ‘ அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலிலிருந்து…)

இந்தியா ஒரு பயங்கரமான பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

” படிப்பதற்குக் கல்லூரி இல்லை. படித்து வந்தாலும் வேலை இல்லை! ” என்ற நிலைமை பெருகிக் கொண்டே போகிறது.

இனி எவ்வளவு பெரிய மேதைகள், ஞானிக்ள் ஆட்சி பீடம் ஏறினாலும், அந்தத் திண்டாட்டத்தை முழுக்க ஒழித்து விடுவதென்பது கடினமே.

ஆகவே, பட்டம் பெற்ற அத்தாட்சியை கையிலே எடுத்துக் கொண்டிருக்கும் இளைஞன், வெறும் படிக்கட்டுக்களில் தினம் தினம் ஏறி இறங்கிப் பயனில்லை.

‘ குமாஸ்தா வேலையாவது கிடைத்தால் போதும்’ என்றும் கருதும் சுபாவமும் மாற வேண்டும்.

சற்றுத் தனியாக உட்கார்ந்து, சுயபுத்தியோடு சிந்தியுங்கள்; வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்து விடுபட ஒரு நல்ல வழி உங்களுக்குத் தெரியும்.

இங்கே என் கதையைக் கொஞ்சம் சொல்வதும் பொருந்தும்.

நான் பன்னிரண்டு வயதிலேயே எட்டாம் வகுப்புப் படித்து முடித்தேன். அதற்கு மேல் படிப்பை எட்டிப் பார்க்க வசதியில்லை. ‘ பிள்ளை ஊர் சுற்றுகிறானே, உருப்படாமல் போய் விடுவானே’ என்று பெற்றோர்

கவலைப்பட்டார்கள். என் தந்தை, ஏ.எம்.எம். கடையில் பர்மாவில் தலைமை நிர்வாகியாக இருந்தார். அதனால் என்னைச் சென்னைக்கு அழைத்து வந்து அவர்களுக்கரிய திருவொற்றியூர் ‘ அஜாக்கஸ் ‘ தொழிற்சாலையில் டெஸ்பாட்சிங் குமாஸ்தாவாகச் சேர்த்து விட்டார்.

வாரம் ஐந்து ரூபாய் சம்பளம் எனக்குக் கட்டிப்படியாகத்தான் இருந்தது. ஆனாலும் அது வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை என்று நான் கருதினேன்.

அப்போது அங்கே அக்கௌண்டண்டாக இருந்து பத்மநாபன் என்பவர், ‘ கவிதை ஆத்மாவுக்குத்தான் திருப்தி; சோறு போடாது’ என்பார்

பிறகு கதை எழுதிப் பார்த்தேன்.

பிறகு அந்த வேலையை விட்டு, அலைந்து திரிந்து ஒரு பத்திரிகையில் இடம் பிடித்துக் கொண்டே முன்னேறினான்.

படிப்பு குறைவாக உள்ள ஒருவன், ஏதாவது ஒரு வழியில் சுயமுயற்சியில் முன்னுக்கு வந்துவிட முடியும் என்றால் படித்தவர்களால் ஏன் முடியாது?

தலையில் இருக்கும் கையை எடுங்கள்.

உங்கள் அறிவு ஆராய்ச்சியில் இறங்கட்டும்.

ஏதோ ஒரு தொழில் உங்கள் கண்களுக்கு தெரியும்.

சென்னை ஸ்டுடியோக்களிலே ஒரு நடுத்தர வயதுக்காரர் அடிக்கடி காணப்படுவார். கையில் ஒரு பெரிய பையிருக்கும். அதில் அப்பளம், வடகம், ஊறுகாய், கருவேப்பிலை பொடி அனைத்தும் இருக்கும். அவை கடையில் வாங்கியவையல்ல; அவரும் அவர் மனைவியும் மக்களும் தயார் செய்தவை; எந்தப் புகழ்பெற்ற கம்பெனியில் வாங்கினாலும் அவ்வளவு சுவையாக இராது. ஸ்டுடியோவில் இசைக குழுவினர், டைரக்டர்கள் ஆகியோரோடு, நானும் அதைத்தான் வாங்குவேன். எப்படியும் அறுபதில் இருந்து எழுபது ரூபாய்க்கு விற்று விடுவார். குறைந்தது இருபது ரூபாய் லாபம் கிடைக்கும்.

இவரு குடியிருக்கும் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள், தங்கள் தேவைக்கெல்லாம் அவரிடம் தான் வாங்குவார்கள். மாதம் குறைந்தது எழுநூற்றைம்பது ரூபாய் கிடைக்கும்.

மனைவி, மக்களோடு வீட்டிலேயே உட்கார்ந்து அப்பளம் போடுவது, ஊறுகாய் போடுவது; காலையில் குழந்தைகள் பள்ளிக்குப் போகும்; மனைவி சமையல் செய்யத் தொடங்குவாள்; அவர் விற்பனைக்குப் புறப்படுவார். கைகட்டி நிற்கா அற்புதமான வாழ்க்கை.

இப்போது மிகப்புகழ் பெற்றிருக்கும் 777 – ஆம் நெம்பர் திடீர் சாம்பார், திடீர் தக்காளி சூப் உங்கள் நினைவுக்கு வரும்.

முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்ரீராம்பவன், தம்புசெட்டி தெருவில் ஒரு சிறு கட்டடத்தில் இருந்தது. குறிப்பிட்ட சிலரே உட்கார்ந்து சாப்பிடக்கூடிய அந்த இடத்தில் வெறும் இட்லி சட்னியில் தொடங்கிய அந்த வியாபாரம், இப்போது ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி விட்டது.

தொழிலில் எந்தத் தொழில் கேவலம்?

‘ உடலாண்ட்ஸ் ஹோட்டல்’ கிருஷ்ணா ராவ் அவர்கள் தன்னுடைந வரலாற்றை என்னிடம் சொன்னார்கள்.

முதலில் வீட்டில் பலகாரம் செய்து, அதைத் தட்டிலே தூக்கி விற்பனை செய்தாராம்.

அதிலே சிறுகச் சிறுக மிச்சமான பணத்தைச் சேர்த்து பழைய உட்லாண்ஸைக் குத்தகைக்கு எடுத்தாராம். அந்தக் குத்தகைக் காலத்தில் மிச்சமான பணத்தை கொண்டு புது உட்லாண்ட்ஸை விலைக்கு வாங்கினாராம்.

இப்படி ஹோட்டல் தொழிலில் முன்னேறியவர்கள் பலர்.

சமையல் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர், ஒரு அசைவ ஹோட்டல் நடத்தத் தொடங்கி, ஐந்து டாக்ஸிகளும் ஒரு பங்களாகவும் வாங்கியிருக்கிறார்.

சென்னை நகரில் சில கூர்க்காக்கள் உண்டு. இவர்களை யாரும் வேலைக்கு நியமித்ததில்லை. தாங்களாகவே இரவில் சில குறிப்பிட்ட தெருக்களில் தரையைத் தட்டிக்கொண்டு ‘ ரோந்து’ வருவார்கள். தெருவாசிகளுக்கு தைரியம் கொடுப்பது போல் அடிக்கடி விசில் அடிப்பார்கள். ஆபத்தில் ஓடி வருவார்கள். மாதம் பிறந்தால் வீட்டுக்காரரும் இரண்டு ரூபாயிலுருந்து ஐந்து ரூபாய் வரை கொடுப்பார்கள். எப்படியும் ஒரு கூர்க்காவுக்கு முன்னூறு ரூபாய்க்கு மேல் சேர்ந்து விடும்.

பதினைந்து வருஷங்களுக்கு முன், ஒரு கையிழந்த முடவர் ஒருவர் என்னிடம் வேலை கேட்டார்.

நான் அவருக்கு ஒரு டிரங்க் பெட்டி வாங்கிக் கொடுத்து சுமார் இருநூறு ரூபாய் பெறுமானமுள்ள குடும்ப வாழ்க்கை பற்றிய புத்தங்களை ஒரு பதிப்பகத்திலிருந்து வாங்கிக் கொடுத்தேன். குழந்தை வளர்ப்பு, சமையல் கலை போன்ற புத்தகங்கள் அவை.

வீட்டுக்கு வீடு போய், அந்தப் புத்தகங்களை விற்றார். முதல் நாளே நூறு ரூபாய்க்கு விற்பனை. அதற்குக் கமிஷன் இருபத்தைந்து ரூபாய், பிறகு அதையே அவர் தொடர்ந்தார்.

மாதம் அந்தத் தனி நபருக்கு ஐந்நூறு ரூபாய்க்கு குறையாமல் வருமானம் வந்தது.

பிறகு வசதியான சாப்பாடு, தங்குவத்ற்கு ஒரு அறை; ஓரளவுக்குப் பணம் சேர்ந்ததும் கிராமத்தைப் பார்க்கப் போய்விட்டார்.

பெரும் பணத்தைச் செலவழித்து, பி.ஏ., எம்.ஏ., என்று பட்டம் வாங்கி, குமாஸ்தா வேலைக்குக் குட்டிக்காரணம் போடுகின்ற மடத்தனத்தைவிட, இத்தகைய சுய தொழில்கள் எவ்வளவு கௌரவமானவை.

சாப்பாட்டு விடுதி வைப்பது கௌரவக் குறைவா?

புத்தகத்தைத் தூக்கி விற்பது மரியாதைக் குறைவா?

‘ வேலை கிடைக்கவில்லை. ஒரே துன்பம் ‘ என்று மூக்கைச் சிந்துவதை விட, இப்படி ஒரு முயற்சி செய்தால் என்ன?

சென்னையில் இருந்து திருச்சி போகும் வழியில் தொழுப்பேடு என்றொரு கிராமம். அங்கு ஒரு ‘ ரயில்வே கேட்’ உண்டு. கேட் அடைத்திருக்கும் போது கார் நிற்க வேண்டி வரும். கிராமத்துக் பெண்கள் மோர் விற்பார்கள். ஒரு டம்ளர், பத்துக்காசு.

நான் இரண்டு டம்ளர் குடித்துவிட்டு, இரண்டு ரூபாய் கொடுப்பேன்; என் மனைவி கோபித்துக் கொள்வாள்.

” வேலை இல்லை என்று பல்லவி பாடாமல், பிச்சை எடுக்காமல் இப்படித் தொழிலைச் செய்கிறாளே ஒருத்தி, அதை கௌரவிக்க வேண்டுமல்லவா?” என்பேன்.

வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்?

வேலை கிடைக்காத்து ஒரு துன்பமல்ல; வேலை உங்களுக்குள்ளேயே இருக்கிறது.

முயற்சி செய்யுங்கள்

நீங்கள் கண்டடைவீர்கள்.

மேஜையில் உட்கார்ந்து அழுக்குப் படாமல் எழுதிக் கொண்டிருப்பதுதான் கௌரவம் என்று கருதினால், கடன்காரனாகி கைகட்டி நிற்கும்போது, அந்தக் கருதினால், கடன்காரனாகி கைகட்டி நிற்கும் போது, அந்தக் கௌரவம் முழுவதும் போய்விடும்.

சந்தோஷமாக ஒரு குடும்பம் முழுவதும் பார்க்கக் கூடிய தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, வீட்டுக்குள்ளேயே பெண்டாட்டி பிள்ளைகளோடு பேசிக்கொண்டு, லாபகரமானதாகவும் தொழில் நடத்த முடியும்.

சிவகாசி நகரில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாளைக்கு மூன்று ரூபாய் சம்பாதிக்கிறது. ஒவ்வொரு தாயும் ஐந்து ரூபாய் சம்பாதிக்கிறாள். தகப்பன் பத்து ரூபாய் வரை சம்பாதிக்கிறான்.

அந்த ஊரில் நீங்கள் சினிமா பார்க்கப் போனால், முண்டாசு கட்டி முதல் வகுப்பில் உட்கார்ந்திருக்கும் முதலாளியாகவும் சந்திக்க முடியும்.

நம் வாழ்க்கையை நாமே நடத்திச் செல்லக் கடவுள் நாலாயிரம் வழிகளைத் திறந்து விட்டிருக்கிறார்.

இந்து தர்மப்படி, ஆயிரம் பேர்கள் வேலை பார்க்கும் ஒரு ஆபீஸில் குமாஸ்தாவாக இருந்து கூட்டத்தோடு கோவிந்தா போடுவதை விட, ஒரு சிறு தொழிலை சுய தர்மமாக ஏற்றுக் கொண்டு நடக்கிறவன் பொருளாதாரத்தில் மட்டுமல்ல; பக்தியௌகத்திலும் வெற்றி பெற்று விடுகிறான்.

(முகங்களின் சந்திப்பு தொடரும்…)

 

2 Comments

  1. R.Swaminathan says:

    Superb line from kannadhasan

Post a Comment


 

 


July 2003

செயல்களைத் திரும்பிப் பாருங்கள்
HEALTH CORNER
ஈரோட்டில் ” சுதந்திரச் சுடர்கள்”
ஈரோட்டில் '' சுதந்திரச் சுடர்கள்''
மாணவர் பக்கம் பெற்றோர்
வெற்றிப் படிகள்
சிந்தனைத்துளி
உறவுகள்… உணர்வுகள் …
நோயின்றி வாழ்வது சுலபம்
சிந்தனைத்துளி
படிப்போம்! படிக்கவைப்போம்!!
கோவை தன்னம்பிக்கைப் பயிலரங்கம்
சிறந்த நண்பர்கள் வெற்றி தூண்கள்
பயிலரங்கம் கனவா? நனவா?
வெற்றிக்கு வழிகாட்டும் வெற்றியாளர்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
வேர்கள் உள்ளவரை
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு முக்கிய அறிவிப்பு
பகிர்ந்து தருதல் பெரும் பேரின்பம்
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்