Home » Articles » மனதை திறந்து வையுங்கள்

 
மனதை திறந்து வையுங்கள்


கவிதாசன்
Author:

சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

மனிதனின் மனமும்
பாராசூட் ஆகிய
இரண்டும் ஒன்றுதான்!
ஆம்!
இரண்டுமே திறந்தால்
வேலை செய்யும்!

உங்களுடைய வெற்றிப் பயணத்தில் உள்ள முக்கியமான தடை எது தெரியுமா? அதுதான் மனத்தடை. அதாவது தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எண்ணிக் கொண்டிருப்பதுடன், நான் சொல்வதுதான் சரி என்று நினைத்துக்கொண்டு, மனக் கதவுகளை மூடி வைத்திருப்பதே முன்னேற்றத்தின் முதல் தடையாகும்.

பூங்காற்றும், புதிய எண்ணமும்

ஜன்னலைத் திறந்து வைத்தால் பூங்காற்று இல்லத்தின் உள்ளே வருகின்றது. அது உடலுக்குத் தேவையான பிராண வாயுவைக் கொடுப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறுகின்றது. அதுபோல, நமது மனக்கதவுகளைத் திறந்து வைத்தால் மாற்றுக் கருத்துகள் உள்ளத்தின் உள்ளே நுழைகின்றன. அதன் காரணமாக புது தெம்பும், புதிய எண்ணமும் நம்முள் விரிகின்றது.

மனக்கதவுகளை மூடி வைத்து முன்னேற்றம் இல்லை என்று புலம்புவதால் எந்தவித பயனும் இல்லை. ஆகவே, முதலில் உங்கள் மனக் கதவுகளை மனதார திறந்து வையுங்கள். மாற்றுக் கருத்துக்கு வழி கொடுங்கள். அதுவே உங்கள் உள்ளத்தில் ஒளியேற்றச் சிறந்த வழி !

மாற்றுக் கருத்துக்கள் மலரட்டும்

எதிலும் எப்போழுதும் உங்களுடைய கருத்துக்களையே மற்றவருகள் மீது திணிக்காதீர்கள். மற்றவர்களுக்கு சில விஷயங்களாவது தெரியும் என்று நம்புங்கள். உலகில் எல்லாம் தெரிந்தவர்களும் இல்லை, எதுவும் தெரியாதவர்களும் இல்லை என்பதையும் புரிந்து
கொள்ளுங்கள்.

உங்களுடைய கருத்துக்களை மட்டுமே மற்றவர்கள் மீது திணிப்பதால், அது உங்களுடைய வாழ்வை இருவித்தில் பாதிக்கின்றது.

1. உங்களுடைய மனதில் புதிய கருத்துக்கள் நுழைவதற்கு வழியில்லாமல், உங்களுடைய முன்னேற்றம் தடைபடுகின்றது.

2. உங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து பிறர் மீது திணிப்பதால், உங்களுடன் இருப்பவர்களுக்கு, உங்கள் மீது தவறான எண்ணம் ஏற்படுகின்றது. அதன் காரணமாக, அவர்கள் உங்களுடன் முழுமையாக ஒத்துழைக்க விரும்பாத நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறு உங்களுடைய முன்னேற்றத்திற்கு நீங்களே முட்டுக்கட்டை போடாமல், முன்னேற்றத்திற்கான புதிய பாதையை அமைத்து முனைப்போடு செயல்படுங்கள்.

தேங்கிக் கிடப்பதால் வாழ்க்கை வளமடைவதில்லை. அதுந்தியைப் போல நகர்ந்து செல்ல வேண்டும். அப் பொழுதுதான் மனக்கழினிகளில் வெற்றிக்கனிகள் விளையும்.

முன்னேற்றப் பாதை

முன்னேற்றப்பாதை முதலில் உங்களுடைய மனதில் இருந்து தொடங்குங்கள். கனவுகளோடு காத்திருந்தது போதும், செயல் வீதிகளில் உழைப்பைப் பதித்து உயருங்கள். முன்னேற்றப் பாதை அமைத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை என்னவென்றால

1. உங்களுடைய மனதைத் திறந்து, மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைப் பெறுங்கள்.

2. உங்களுடைய கருத்தை வெளியிடுவதற்கு முன்னர், மற்றவர்களின் கருத்துக்களை கூர்ந்து கவனியுங்கள், நல்ல வலுவான கருத்துக்கள் இருப்பின் அதை உள்ளத்தில் வாங்கிக் கொள்ளுங்கள்.

3. மாற்றுக் கருத்துகளை கேட்கும் போது அவை சிறந்ததாக இருக்குமாயின் அவற்றின் அடிப்படையில் உங்களுடைய கருத்துக்களை மாற்றி அமைத்துக் கொள்ளத் தயங்காதீர்கள்.

4. எப்போதும் உங்களுடைய கருத்துக்களே சரியானவே என வாதிடாதீர்கள். ” இதை விட சிறந்த கருத்துக்கள் இருந்தால் ஏற்றுக் `கொள்வேன்” என்ற முன்ன்றிவிப்புடன் உங்களுடைய கருத்துக்களை சொல்லத் தொடங்குவங்கள்.

5. புதிய தளிர்கள் துளிர்ப்பதால் தான் மரம் வளர்கின்றது. அதுபோல புதிய எண்ணங்கள் மனதில் நுழைந்தால்தான் மனிதனால் வளர முடியும் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்படுங்கள்.

தொடர்ந்து கேளுங்கள்

நீங்கள் எடுக்கும் முடிவுகளே உங்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை தீர்மானிக்கின்றன. ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கும் வாகனம் ஒரு நிலையில், அப்பாதை பல பிரிவுகளாகப் பிரிகின்றது. அப்போது எந்தப் பிரிவில் செல்கின்றது என்பதைப் பொறுத்தே அது ஒரு இலக்கை அடைகின்றது.

பல பிரிவுகளில் எந்தப் பிரிவில் செல்வது என்பதை முடிவு செய்யும் முன்னர், ஒவ்வொரு பிரிவுப் பாதையும் எங்கு செல்கின்றது என்ற அறிய வேண்டும். அத்துடன், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லும் பாதை எது என்பதையும் பொருத்தே நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய பிரிவுப் பாதையைத் தேர்வு செய்ய வெண்டும்.

அதாவது ஒன்றைத் தேர்வு செய்வதால் ஏற்படும் நன்மை தீமைகளை எண்ணிப் பார்த்து தெளிவு பெற வேண்டும். பிறகு உங்களுடைய இலட்சியத்துடன் அவற்றை ஒப்பீடு செய்து பார்த்து, உங்களுக்கும் உங்களுடைய இலட்சியத்திற்கும் ஏற்றவாறு பொருத்தமான முடிவை எடுங்கள்.

மாற்றுக் கருத்துக்கள்

மாற்றுக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டாதீர்கள். மேலும் மாற்றுக் கருத்துக்களை உளவாங்கும் திறந்த மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கருத்தை முற்றிலும் சரியல்ல என நிரூபணம் செய்யும் விதத்தில் கூட மாற்றுக் கருத்துக்கள் புயல் வேகத்தில் உங்களுடைய மனதை நோக்கி வீசலாம். அதற்காக முடங்கி விடாதீர்கள். ஏனென்றால், மாற்றம் என்பது வளர்ச்சியின் முதல்நிலை என்பதை புரிந்து கொண்டு மாற்றுக் கருத்தை திறந்த மனதுடன் ஆய்வு செய்து பாருங்கள்.

எதையும் முற்றிலும் மறுக்காமல் ” யோசித்துப் பார்க்கிறேன் ” ” முயற்சித்துப் பார்க்கிறேன் ” என்ற மனநிலையோடு எதனையும் அணுகக் கற்றுக் கொள்ளுங்கள். மேலும், உங்களுடைய கருத்தை மற்றவர்களிடம் தெரிவிக்கும் போதும் மென்னமையாகவும், அன்பாகவும் எடுத்துக் கூறுங்கள்.

புதிய கருத்துக்களையும், புரட்சிக்கருத்துக்களையும், உருவாக்குவதுடன் அவற்றை செயலாக்குவதுதான் மிகவும் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றப பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். வெற்றியின் விழுதுகள் உங்களுடைய வாழ்வில் நீளும்.

மாற்றுக் கருத்துக்களுக்கு
மனதை திறந்து வையுங்கள்
வெற்றியின் பாதைகாண
விழிப்போடு செயல்படுஙகள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்