Home » Articles » தோள்கள் தொட்டுப் பேசவா

 
தோள்கள் தொட்டுப் பேசவா


முத்தையா ம
Author:

தொடர் (3)
மரபின் மைந்தன் ம. முத்தையா

இளமைக் காலத் தேடல்களில் ஒன்று, தலைமைக்கான தேடல், தன்னை வழிநடத்த இன்னொருவர் வேண்டுமெம எண்ணும் பருவம் இது. நடிகர்கள் தொடங்கி, அரசியல் வாதிகள் வரை, பலராலும் ஈர்க்கப்படும் காலமிது.

தலைவர்களைத் தேடுவதும், அவர்கள் பாதையினைப் பின்பற்றுவதும் தவறில்லை. ஆனால், தான் பின்பற்றும் தலைவர் தரமானவர்தானா என்பதை ஆராய்ந்து பார்க்கும் அவசியம் அனைவருக்கும் உண்டு.

தன்னல மறுப்பு, பொது வாழ்வில் பிடிப்பு வந்து சேரும் தொண்டகளுக்கு உரிய வழியை உணர்த்தும் முனைப்பு, இலக்கு நோக்கிய கவனக் குவிப்பு, இத்தனை தகுதிகளையும் சேர்ந்த தலைவரைத் தேர்ந்து கொள்ளும் போதுதான் சாதனைகள் சாத்தியம்.

உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் உரை வீச்சி மட்டுமல்ல தலைமையின் அடையாளம், வளர்ச்சிகளை நோக்கி வழி நடத்தும் விரிந்த பார்வையே முக்கியம்.

இயக்கங்களில் இணையும்போது, ஒன்றில் கவனம் வேண்டும்.

அந்த இயக்கத்திற்குத் தனிமனிதர் தலைமை தாங்கிறாரா, கொள்கைகள் தலைமை தாங்குகின்றனவா என்பதைத் தெரிந்துணர்வது அவசியம்.

அகிம்சை என்னும் அறக்கொள்கையை மையப்படுத்தியே இயக்கம் கண்டார் காந்தியடிகள்.

கொள்கைகளை முன் நிறுத்திய இயக்கங்களில், தலைமையில் தொடங்கி கடைகோடித் தொண்டன் வரையில் கொள்கையின் வீச்சு விரியும்.

தனிமனிதர்களை மையப் படுத்திய இயக்கங்களில், கீழ்த்தரப்பிலிருந்து ஒவ்வொருவர் கவனமும் தலைவரை நோக்கிய குவியும்.

இன்று, தன்னிகரற்ற் கொள்கைகளுடன் தொடங்கப்பட்ட் இயக்கங்கள் கூட தனிமனித ஈர்ப்புக்கும், தன்னலத் தலைமைக்கும் தாரை வார்க்கப்பட்டுவிட்டன.

எனவே, இந்தத் தலைமுறைக்குத் தலைமை அவசியமா என்கிற கேள்விகூட எழுந்துவிட்டது. தனி மனிதன் ஒவ்வொரு வருமே தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளத் தக்க கல்விச் சூழலோ, சமூகச் சூழலோ இல்லை என்பதால், தலைமைக்கனா தேவை தொடர்கிறது.

ஆனால், தலைமைக்கான தரம் எத்தனை தலைவர்களிடம் இருக்கிறது என்பதை எண்ணும் போதோ ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

ஊடகங்களில் அசுர வளர்ச்சி காரணமாக, மிகப்பல தலைவர்களின் முகத்திரைகள் கிழிகின்றன. சராசரிகளை விடவும் சாதாரண நிலையில் நிற்கின்றனர்.

கொள்கையைக் காற்றிலும் இலட்சியங்களை ஆற்றிலும் விட்டு விட்டு நேற்றின் பழங்கதைகளை நீளமாய்ப் பேசியே நிறைய தலைவர்களின் காலம் கழிகிறது.

எனவே, தலைமைக்கான இலக்கணமாகவும், இலக்கியமாகவும் எழுதிய வாய்ப்பு இளைஞர்களுக்கு இருக்கிறது.

நல்ல தலைமை இல்லை என்பது இன்றைய தலைமுறையின் பலவீனம் முயன்றால், பலமும் அதுதான்.

உண்மையின் உந்துசக்தியை, உழைப்பின் வெளிச்சத்தை, விரிந்த பார்வையின் வலிமையைத் துணையாகக் கொண்டு புதிய தலைவர்கள் புறப்படக்கூடிய காலமும் இதுதான்.

கவிழ்ந்த இருளைக் கிழித்து கதிர் முளைத்து எழுவது போல தவறான வழிகேட்டு தங்கள் தலைமுறை விழுந்து கிடக்கும் வேளையில் சாதிக்கும் ஆற்றலும் சாதனை வேட்கையுமாய் இளைஞர்கள் எழுச்சி பெற இதுவே நேரம்.

தலைமைப் பண்பை வளர்க்கும் வெற்றிக் கோட்டபாடுகளை வகுத்துக்கொண்டு, சொல்சார்ந்த அணுகுமுறையோடு வருகிற தலைமைக்காக வரலாறு காத்திருக்கிறது.

உள்ளீடுள்ள மனிதர்களை உயர்த்துவதும், தவறான பிம்பங்களைத் தகர்ப்பதும் ஊடகங்களின் குணம் என்பதை உணர்ந்தால் நல்லது.

” நீ வழி நடக்க வந்தவரா? வழி நடத்த வந்தவரா?

கேள்விக்கான விடையை உனக்குள்ளிருந்து கண்டெடுத்து வந்துவிடு. உன்னுடைய பலங்களில் உன்னை நீ வென்றுவிடு.

தலைமை என்பது பணம் சேர்ப்பின் உத்தியல்ல, பணிவாய்ப்பின் உத்தரவு என்னும் பணிவுள்ளம் கொண்டவர்களே நிலையான புகழோடு நின்றிருக்கிறார்கள்.

அத்தகைய தலைவர்களை அங்குமிங்கும் தேடாமல் உன்னிலிருந்தே உருவாக்கு.

தகுதிகள் இல்லாத் தலைவனைத் தாங்கத்
தோள்கள் தருவாயா?
தகுதிகள் மிக்க தலைமகனாக
நீயே வருவாயா?

பொதுப்பணி உறிஞ்சும் பொய்முகங்களுக்குப்
புகழுரை தருவாயா?
புதுமைகள் காக்கும் புதிய படையுடன்
பொங்கி எழுவாயா?

தேங்கிக் கிடக்குது தேசத்தின் வளர்ச்சி
வேடிக்கை பார்ப்பாயா?
ஓங்கி உடைத்து, தடைகள் தகர்த்து
உயர்த்தில் சேர்ப்பாயா?

உன்னை இயக்கும் தலைமையைத் தேடி
ஊரெங்கும் அலைவாயா
உன்னில் இருக்கும் தலைவனைத் தேடி
உலகுக்குத் தருவாயா?

ஏதும் செய்யா எத்தர்கள் சொல்வதை
ஏற்றுக் கிடப்பாயா?
நீதிகள் காக்க நீ உன் கொடியை
உயர்த்திப் பிடிப்பாயா?

( இன்னும் பேசுவேன் )

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்