Home » Articles » தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை

 
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை


admin
Author:

கவிஞர். நிலா

சூன் மாதம் வந்துவிட்டது. பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன.

பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் மாலையில் வீடு திரும்பினார்கள்.

” பாட்டி பசிக்குது ! சாப்பிட என்ன இருக்கு?” என்று வீட்டில் நுழையும் போதே குழந்தைகள் கேட்டுக்கொண்டே நுழைந்தனர்.

பாட்டி… அவர்களுக்குத் தயாராக வடை சுட்டு வைத்திருந்தார். சூடாக… மணக்க மணக்க வடையைச் சாப்பிட்டு விட்டு கை கழுவப் போன சிறுமி அழுத சத்தம் கேட்டது.

” கமலம்…. என்னாச்சி பாரு…? இசையமுது அழுதுகிட்டு இருக்கா” என்றார் தாத்தா.

” இதோ… பார்க்கறேங்க” என்று பாட்டி முடிப்பதற்குள்…
” தாத்தா…! அண்ணன் அடிச்சிட்டாங்க” என்று அழுது கொண்டே வந்தாள். குழந்தையை அள்ளி அணைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.

” சரி… அழாத, அண்ணன் எதுக்கு அடிச்சாங்க?” என்றார் தாத்தா.

” வடை சாப்பிட்டுட்டு கை கழுவுனதுக்க அடிச்சாங்க”.

” டே… தம்பி… தமிழ்வேந்தா! வா இங்கே”, தாத்தா குரல் கேட்டு ஓடி வந்தான் தமிழ்.

” பாப்பா கை கழுவினதுக்கு அடிச்சயாமே!” ” இல்லைங்க தாத்தா. கை கழுவ வாளி தண்ணிய காலி பண்ணிட்டா… ‘ என்றான்.

மேலும் சொன்னான், ” இன்று காலையிலே தமிழ் ஐயா, ‘ தந்தை பெரியார் ‘ பாடம் நடத்தும்போது சொன்னாரு”.

” என்ன சொன்னாரு?”

ஈரோட்டுல தந்தை பெரியார் விட்டுல, அவங்க வீட்டுக்கு விருந்தாளாயா வந்த உறவுக் காரப் பையன், சாப்பாடு சாப்பிட்ட அப்புறம், கை கழுவும்போது ஒரு செம்பு தண்ணிய முழுசும் கொட்டி கைகழுவியத பார்த்து, அந்தப் பையன் முதுகுல லேசா தட்டி.. ” தண்ணிய வீணாக்காத கொஞ்சமா ஊத்தி கை கழுவணும்” அப்படீன்னாராம்.

” காவிரியில தண்ணி வத்தாம ஓடுன அந்தக் காலத்திலேயே பெரியார் தாத்தா தண்ணிய சிக்கனமா செலவு பண்ணச் சொல்லி இருக்கிறாங்க. இப்ப தண்ணி கிடைக்கறதே அரிதா இருக்கு. இப்ப போய் கை கழுவ ஒரு வாளி தண்ணிய காலி பண்ணா அடிக்காம என்ன செய்யறது” என்றான் தமிழ்.

” கண்ணு, இனிமே கொஞ்சமா தண்ணிய ஊத்தி கை கழுவு” என்றபடியே.. பாப்பாவின் தலையை லேசாக வருடினார். ” சரி அழாத”… என்றார் கமலம் பாட்டி.

இசையமுது தேம்பித் தேம்பி அழுது கொண்டே… தாத்தா ” நீங்க கதை சொன்னா அழமாட்டேன்” என்றாள்.

” சரி … சொல்றேன் ” என்று தொண்டையை லேசாக கணைத்தபடி கதை சொல்ல ஆரம்பித்தார் தாத்தா! குதூகலத்தோடு தமிழ்வேந்தன் கதை கேட்க தாத்தா முன்பு அமர்ந்தான்.

” தாத்தா அண்ணனுக்குச் சொல்ல வேண்டாம் எனக்கும் பாட்டிக்கும் சொல்லுங்க” என்றாள் இசையமுது.

” நீ.. பாப்பாவ அடிச்ச இல்லையா.. அதனாலே உட்காராத, நின்னுகிட்டே கதை கேளு” என்றார் தாத்தா.

தமிழ் நின்று கொண்டே இருந்தான். ” தாத்தா அண்ணன் பாவம்… கால் வலிக்கும் உட்காரச் சொல்லுங்க” என்றாள் இசைமுது.

” தம்பி ! உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தண்டனை இரத்து… உட்கார்” என்றார் தாத்தா. பாட்டியும் பாப்பாவும் குபீனரென சிரித்தனர். தமிழும் சிரித்தபடியே பாப்பாவுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு உட்கார்ந்தான்.

தாத்தா முகத்தைப் பார்த்துக்கொண்டே கதை கேட்க வசதியாக, தாத்தா மடியிலிருந்து இறங்கி வந்து பாட்டி மடியில் உட்கார்ந்தாள் இசை.

தாத்தா, கதை சொன்னார், மேலை நாட்டுல, ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி இருந்தார். அவர் நிறைய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உலகத்துக்கு கொடுத்தவர்.

ஒருமுறை, தந்திச் செய்தியை அச்சிட்டுக் கொடுக்கிற ” டிக்கர் ” அப்படிங்கற சாதனத்த கண்பிடிச்சார். அதுக்கு வெகுமதி கொடுக்க ” வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி ” முன் வந்துச்சி. உங்க கண்டுபிடிப்புக்கு வெகுமதியா எவ்வளவு தொகை வேணுமுன்னு விஞ்ஞானிய அந்தக் கம்பெனி கேட்டது.

அதுக்கு, ஒரு வாரத்துல பதில் சொல்றதா விஞ்ஞானி சொன்னாரு. எவ்வளவு தொகை கேட்கலாமுன்னு வீட்ல மனைவிகிட்ட கேட்டாரு. அந்த அம்மா… சொன்னாங்க. ” ஒரு 20000 டாலர் ( கிட்டத்தட்ட பத்து லட்சம் ரூபா) கேளுங்க” அப்படின்னாங்க.

இது ரொம்ப அதிகம்னு நினைச்சார் விஞ்ஞானி. சரி, இதே தொகையை கேட்டுப்புட வேண்டியதுதான்னு, குறிச்ச நேரத்துல அந்தக் கம்பெனிக்குப் போனாரு.

அங்க இருந்த ஆபீசரு, விஞ்ஞானிக்கு வணக்கம் சொல்லி, உடகாரவச்ச பிறகு கேட்டாரு, ” எவ்வளவு தொகை வேணுமுன்னு முடிவு பன்னிட்டீங்களா?”

இருபதாயிர் டாலர் வேணுமுன்னு சொல்ல விஞ்ஞானி முயற்சி பண்ணினார், ஆனா, அது ரொம்ப ரொம்ப அதிகம்னு நெனச்சதால, சொல்ல வந்த வார்த்த தொண்டையிலேயே நின்னிருச்சி.

அவரு, கேட்க ரொம்ப தயங்கினாரு. அந்த அதிகாரி முன்ன விஞ்ஞானி ஒன்னும் பேசாம அமைதியாவே இருந்தாரு. அந்த, அதிகாரிக்கு பிரசர் ஏறிகிச்சி. விஞ்ஞானி பேசறதா தெரியாலை அதுக்கு மேல தாங்க முடியத அதிகாரி ” ஐயா.. ஒரு லட்சம் டாலர் ( ஏறத்தாழ 5 கோடி ) கொடுக்க நாங்க தாயார்… உங்களுக்குச் சம்மதமா? ” அப்படின்னார்.

வாசகர்களே!

1. யார், அந்த விஞ்ஞானி?

2. இந்தக் கதையிலுருந்து நீங்கள் அறிந்து கொள்வது என்ன?

சரியான விடையைத் தாங்கிவரும் சிறந்த. கடிதத்திற்கு பரிசு வழங்கப்படும்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.06.2003

———————————————————————————–
சென்ற மாத கதை

விடை :

” அவன் என்னுடைய குழந்தை ” என்று தாத்தா சொன்னார். மற்றவர்களை தம் குழந்தையாகப் பார்த்தால் கோபம் வருமா? நம்மீது எச்சில் உமிழ்ந்தாலும் மகிழ்வுடன் ஏற்போம் அல்லவா!

பரிசு பெறுபவர் : பா. இராமநாதன்,
த / பெ. பாலகிருஷ்ணன், இராஜபாளையம்.

 

2 Comments

  1. vishnu says:

    Albert Einstein

  2. vishnu says:

    பொறுமையா இருக்கணும் .

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்