Home » Articles » உறவுகள் உணர்வுகள்

 
உறவுகள் உணர்வுகள்


செலின் சி.ஆர்
Author:

தொடர்
சி.ஆர். செலின்
மனநல ஆலோசகர், சென்னை.

”அழகான பொருளைவிட பயன்படும் பொருளே மேல்” என்ற நம்பிக்கை நம்மில் பலருக்குமிருக்கும். வார்த்தைகள், செயல்பாடுகளின் மூலம் அவ்வப்போது இந்த நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொண்டிருப்போம்.

உயிரற்ற பொருள்களிடமிருந்தே உபயோகத்தை எதிர்பார்க்கும் நாம் இரத்தமும், சதையும், இயக்கமும், உணர்வுகளும், பகுத்தறிவும் பின்னிப் பிணைந்த முழு மனிதர்களாக நாம், மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் பயனுள்ளவர் களாயிருக்கிறோம்…?

அழகுக்காக வளர்க்கப்படும் ரோஜாச்செடிகூட, மனதை மயக்கும் வாசனையை வாரி வழங்குகிறது. ஆத்தராகவும், குல்காந்தாகவும் தன்னை உருமாற்றி உபயோகமாகிறது. ஆனால் நாம், ‘ அழகான ரோஜாச்செடியை விட, பயன்கொடுக்கும் கத்தரிக்காய் செடி மேல்! என தத்துவம் பேசி, நேரத்தையும் வீண்டித்து அதையும் மட்டம் தட்டுவோம்.

இரண்டு பேர் கொண்ட குடும்பமோ, இருபது பேர் கொண்ட குடும்பமோ, ஒவ்வொருவரும் மற்றவரின் உணர்வுகளோடு தொடர்புடையவர்களே. கணவன், மனைவி என இரண்டே பேரானாலும் ஒருவர் மீது மற்றவருக்கு சில எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் இருப்பது இயல்புதான். இந்த பக்கெட்டைத் தூக்கி அவர் உள்ளே வெச்சா பரவாயில்லையே என்பதிலிருந்து ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவினா ரொம்பா உதவியா இருக்குமே… என்பது வரை அந்த எதிர்பார்ப்பு எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம்.

சரியான சமயத்தில் செய்யும் உதவி அது சின்னதோ பெரியதோ இரண்டுமே சமமான விளைவையே ஏற்படுத்தும். பத்தாயிரம் ரூபாய் கொடுக்கும்போது ஏற்படும் சந்தோஷம், பக்கெட்டைத் தூக்க நீங்கள் கை கொடுக்கும்போதும் மின்னலாய் தோன்றி கிளர்ச்சியூட்டும்.

நம்மில் நிறையபேர், ”ம். வாயைத் திறந்து கேட்டாதானே தெரியும்? நான் என்ன தீர்க்கதரிசியா? அவன் மனசில நினைச்சவுடனே நான் ஞானக்கண்ணால படிக்கறதுக்கு…?” என்று ஏதேதோ காரணங்கள் சொல்லி, நாம் சமயத்தில் உதவததை நியாயப்படுத்துவோம்.

ஆனால், யாராவது நம்மை முதுமுதுக்குப் பின்னால் திட்டியிருந்தால் அடுத்த சில சந்திப்புகளில் யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும்போது, ‘ எனக்கு தெரியாதா? ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வெச்சிட்டிருந்தா நம்பிருவனா? அதான் மனசுக்குள்ள எள்ளும் கொள்ளும் வெடிக்கறது

அவன் முகத்தைப் பார்த்தாலே தெரியுதே…” என்று நரம்பு புடைக்க புலம்பிக்கொண்டே யிருப்போம். இப்போது மட்டும் எப்படி தெரிந்ததாம் அடுத்தவர் மனதில் ஓடும் எண்ணங்கள்…?

உண்மையில், நமது மனம் மகா நுட்பமானது, அடுத்தவர் மனதில் தோன்றும் எண்ணங்களை உடனே படித்துவிடுமளவிற்கு நமக்கு சூட்சும அறிவு உண்டு. ஆனால், நமக்கு தேவையெனும்போது அதை ஒப்புக்கொண்டு, மற்ற சமயங்களில் அப்படி என்று இருப்பதையே கண்டு கொள்ளாத அளவிற்கு நடித்துக்கொண்டிருக்கிறோம்.

Charity begins at home. எடுத்தவுடன் நீங்கள் தெருத்தெருவாக, ஊர் ஊராக சென்று எல்லோருக்கம் சேவை செய்து கொண்டிருக்கப் போவதில்லை. உங்கள் பெற்றோர், உங்கள் உடன் பிறந்தோர், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள் என் சுற்றியிருக்கும். அந்தசிறிய வட்டத்தைப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் நேசிக்கும், நீங்கள் கவனம் செலுத்தும இந்த குறைந்தபட்ச உறுப்பினர்களின் உணர்வுகளப் புரிந்து கொள்வதென்பது அப்படியொன்றும் கடினமானதில்லை.

முப்பது வருடங்களாக கூடவேயிருக்கும் பெற்றோர், உடன் பிறந்தோரின் விருப்பு வெறுப்புகள் உங்களுக்கு அத்துப்படியாயிருக்கும். ஐந்து வருடங்களாக உங்கள் ஒவ்வொரு நடவடிக்கையிலும் துணையாயிருக்கும் உங்கள் மனைவியின் உணர்வுகள் மனப்பாடமாயிருக்கும், நான்கு வருடங்களாக உங்கள் மடியில் தகவழ்ந்து, கைபிடித்து, தோளில் உட்கார்ந்து வலம் வரும் குழந்தையின் எண்ண ஓட்டங்கள், ஆசைகள் உங்களுக்குப் புரியாமலிருக்குமா என்ன…?

அப்புறம் எங்கிருந்து வருகிறது பிரச்சனை…. ? உங்களுக்கு விருப்பமில்லை. காரணம் அதனால் உங்களுக்கு எந்த பிரதிபலனும் கிடைக்கப் போவதில்லை என்று உறுதியாய் நம்புகிறீர்கள்.

உங்கள் மேலதிகாரி, ‘ ஒரு மணி நேரத்திற்குள் இந்த ஃபைலை சரிபார்த்து அனுப்புங்கள். ரொம்ப முக்கியம்…’ என்று கட்டளையிடுகிறார். காலையிலிருந்து வேலை செய்த அலுப்பு , மதிய உணவை முடித்தவுடன் கொஞ்சம் ஓய்வெடுக்காலம் என்ற நினைப்பில் மண். இருதாலும் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, ”யெஸ் ஸார், ஷ்யூர்…” என்பிரகள். மனதிற்குள் முனகினாலம் வேலையை செய்து முடிப்பீர்கள்.

காரணம்? ‘ அப்பதானே ப்ரமோஷன் கிடைக்கும் . இப்ப பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக்க வேண்டியதுதான்…’ என்று சமாதான வார்த்தைகள் கொடுக்கும் தெம்புதான். ஆக, நமக்கு ஒரு பலன் கிடைக்கும் என்று நம்பும் போது, பிடிக்கிறதோ இல்லையோ சிரத்தையெடுத்து ஒரு காரியத்தை செய்து முடிக்கிறோம். நாம் அடுத்தவர்களுக்கு பயனுள்ளவர்களாயிருப்பது கூட பெரும்பாலான சமயங்களில் இப்படி பலனை எதிர்பார்த்துத்தான்.

‘ இன்னைக்கு ஞாயித்துக்கிழமைதானே. கொஞ்சம் மார்க்கெட் போயிட்டு வந்துருங்களேன்….’ தொண்டை கிழிய கத்திக் கொண்டிருப்பார் மனைவி. ‘ வாரத்துல ஒரு நாள் லீவு. அப்பகூட மனுஷனை நிம்மதியா தூங்கவிட மாட்டியா. எனக்கு ரெஸ்ட் எடுக்கணும்… ‘ என கலைந்த தூக்கத்தை விரட்டிப்பிடித்துக்கொண்டு அவள் கோரிக்கையை உதாசீனப்படுத்தி விடுவீர்கள்.

காரணம்? ‘தூக்கத்தை தியாகம் செய்து விடுவதால் என்ன கிடைத்துவிடப் போகிறது? நாலு முறை கத்திப் பார்த்திட்டு அப்புறம் தானாபோய் வாங்கிட்டு வரப்போறா. நாம எழுந்திருக்கலைன்னா வேலை நடக்காமலேயா போயிடும்…’ என்ற எண்ணம் தான். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நாம் நம்மை மாற்றிக்கொள்கிறோம்.

தன் மாமனார், மாமியாரால் ஒரு உதவியும் தனக்கு கிடைக்கப் போவதில்லை என்று உணரும் பெண், அவர்களுக்காக தான் நேரம் செலவழிப்பதே வீண் என்ற முடிவுக்கு வந்து விடுகிறாள். ‘ ஒரு அரைமணி நேரம் லேட்டா சாப்பிட்டா உயிரா போயிடப்போகுது’ என தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு மெகா சீரியலில் முழ்கி விடுகிறாள்.

நம்மை சார்ந்திருப்பவர்களிடம், நமக்கு பெரிதாய் எந்த உதவியும் செய்துவிடப் போவதில்லை என்ற நிலையிலிருக்கும் உறவினர்களிடம் நாம் நடந்து கொள்ளும் விதம் இப்படித்தானிருக்கிறது. முடிந்தவரை அவர்களால் ஏதாவது காரியம் ஆகுமா என்று யோசிக்கிறோம்.

நமக்கு இத்தனை வேலை செய்கிறார்கள். சைக்கிளுக்கு எண்ணெய்விட்டு சரிசெய்வது போல, அவ்வப்போது இவர்களை கவனித்தால் தான் நமக்கு காரியம் ஆகும் என்று கணக்குப் போட்டு, தோணும்போது ஏதோ செய்கிறோமேயொழிய மனமுவந்து, உறவுகளை மதித்து அவர்களுக்கு உதவியாயிருப்பதென்பது சாத்தியப் படாத, மிகவும் அபூர்வமான விஷயமாகி விட்டது.

சிலருக்கு இந்த கணக்குப் போடும் குணம் இல்லாவிட்டால் கூட தங்களது சோம்பேறித்தனத்தால் இப்படி ஏடாகூடமாக நடத்து கொள்வார்கள். மனதிற்குள் ஆசையிருக்கும். இந்த விடுமுறையில் செய்ய வேண்டும், இதைசெய்ய வேண்டும், குறைந்தபட்சம் இந்த வேலைகளிலெல்லாம் உதவ வேண்டும் என ஒரு பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள்.

‘ம். இன்னும் நாலு நாள் லீவு இருக்கே, இன்னைக்கே தொடங்கணுமா, என்று தனக்குள்ளே கேள்விகேட்டு நான்கு, மூன்று, இரண்டும என கவுண்ட் டவுன் வந்து கடைசியில் பூஜ்யத்தில் முடியும். திரும்பிப் பார்த்தால் ஒன்றும் உருப்படியாய் நடந்திருக்காது, இல்லை சும்மா கிட்ந்த சங்கை ஊதிக் கொடுத்தைப் போல வேலை செய்கிறேன் பேர்வழி என்று நல்லாயிருந்ததையும் குழப்பி அரைகுறையாக கலைத்துப் போட்டிருப்பார்கள்.

உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை முன்பே பட்டிலிட்டுக் கொள்ளுங்கள். அம்மாவுக்கு மருந்து வாங்குவதிலிருந்து, பேங்கில் பணம் எடுத்துக் கொடுப்பது வரை இன்று என்ற செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு குறித்துக் கொள்ளுங்கள். அவற்றைப் பின்பற்ற கூடுமான வரை முயன்று பழகுங்கள்.

குழந்தையை பள்ளிக்கூடத்தில் விடுவதோ, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதோ… எந்த வேலையை செய்தாலும் அதை முழு மனதோடு செய்யுங்கள். நானும் செய்கிறேன் என்று ஒப்புக்கு ஒன்றிரண்டு நாட்கள் பரோபகாரியாய் ஷோ காட்டிவிட்டு அடுத்த நாளே கம்பி நீட்டி விடாதீர்கள். செய்வது சின்ன உதவியாயிருந்தாலும் அதை Regular ஆக செய்ய வேண்டியது அவசியம்.

” சே, இன்னைக்கு ஊர்ல இல்ல, இருந்திருந்தா இன்னேரம் இந்த வேலையை செய் திட்டுருபான்…” என்று உங்களை நினைவு கூற, உங்கள் இருப்பை நினைத்து ஏங்க வைக்க இந்த குறிப்பிட்ட கணங்கள் உதவும்.

குடும்பத்தினருக்கு நம் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ அதைவிட கொஞ்சம் குறைவாக, குறைந்தபட்சம் பாதியளவாவது நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கவனம் செலுத்தலாமே…’ அது எப்படின்னே தெரியலே, அவர் வீட்டுக்கு எப்ப போனாலும், எவ்வளவு இன்ட்ரெஸ்ட்டா டிவி பார்த்துட்டு இருந்தாலும் உடனே ஆஃப் பண்ணிட்டு சிரிச்சா முகமா வரவேற்பாரு. காபி, டீ கொடுக்காம அனுப்ப மாட்டங்க…’ என்று சில நண்பர்களைப் பற்றி நாம் பேசிக் கொள்வோம். இல்லையா?

அவர் கொடுக்கும் டீ, காபியில் இல்லை விஷயம். அந்த அக்கறை, உங்களை விட எங்களுக்கு பொழுதுபோக்கு முக்கியமில்லை என்று உங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், நடிப்பாக, வெறும் பேச்சாக இல்லாமல் உண்மையிலேயே மனதார வரவேற்கும் முறை… இந்த உண்மையான உணர்வுகள்தான் நம்மை அவர் பக்கம் இழுக்கிறது.

வெளியூரிலிருக்கும் நண்பர்களே, உறவினர்களோ சொந்த விஷயமாக ஏதாவது உதவி கேட்டால், நன்றாக ஒன்றுக்கு இரண்டு முறை தெளிவாகக் கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொள்ளுங்கள். சில சிக்கலான விஷயங்களைக் குறித்த விவகாரம் என்றால் எந்த விதத்தில் நான் உங்களுக்கு உதவ வேண்டுமென்பதை தயவு செய்து எழுதி அனுப்புங்கள் என்று கேட்டு முழு விவர்ங்களை வாங்கிக் கொள்ளுங்கள்.

உதவி செய்கிறேன் பேர்வழி என்று உபத்திரம் செய்பவர்கள் தான் அதிகம். ‘ பாவம் எட்டு இடத்துல மாப்பிள்ளை பார்த்தாங்களாம். பொண்ணு கருப்பில்ல. எதுவும் அமையல. நீங்களாவது ஏதாவது வரன் இருந்தா சொல்லுங்க’ என்று யாரிடமாவது சொல்லி வைப்பாரகள்… இந்த பேச்சு அங்கு சுற்றி இங்கே சுற்றி கடைசியில் பெண் விட்டாருக்கே வந்து சேரும். காரணம் யாரென புரிந்து கோபித்துக் கொண்டால், ‘ம்… உதவி செய்யப் போனாலே பிரச்சனைதான்…. ” என்று வழக்கமான பொய் சமாதானம் கூறி குறைபட்டுக் கொள்வார்கள்.

அடுத்தவர்களின் உணர்வுகள் சம்பந்தப் பட்ட விஷயங்களில் உதவி செய்கிறேன் என்ற போர்வையில் மூக்கை நுழைத்து கயாப்படுத்தாதீர்கள். நீங்கள் என்னதான் சமாதானம் சொல்லிக் கொண்டாலும், அடிப்படைக் காரணம் என்ன, உண்மையிலேயே உதவும் எண்ணத்திலோ இல்லை அப்படி காரணம் சொல்லிக்கொண்டு உணர்வுகளை சிதைக்கவா என்பது எளிதில் அனைவருக்கும் புரிந்துவிடும். இறுதியில் நீங்களே உங்களிடம் ஏமாந்து போவீர்கள்…!

உண்மையான மனத்துடன், மேன்மையான உணர்வுகளுடன் மற்றவர்களுக்கு நீங்கள் அளிக்கும் சிறிய பங்களிப்பும், சின்ன சின்ன உதவிகளும் உங்கள் உறவுகளை மேம்படுத்தும் அற்புற ஆயுதங்கள்.

ராமருக்கு உதவிய சின்னஞ்சிறு அணிலைப் போல நீங்களும் பயனுள்ளவர்களாயிருங்கள் என்றும்!

எப்பொழுதும் …!

(தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்