Home » Articles » தோள்கள் தொட்டுப் பேசவா?

 
தோள்கள் தொட்டுப் பேசவா?


முத்தையா ம
Author:

மரபின் மைந்தன் ம. முத்தையா

கனவுகள் பிறக்காத இதயம் என்பது மக்கள் திறக்காத சிலையைப் போன்றது. உறக்கத்தில் சில கனவுகள் பிறக்கும். அவை விழிக்கும் முன்னரே விடை பெற்றுக்கொள்ளும். விழிப்பு நிலையில் வருகிற கனவுகள், செயல்வடிவம் பெற்று வெற்றியை எட்டும்.

கனவுகள், உற்சாகத்தின் ஊற்றுக்கண்கள். களைப்பும் சலிப்பும் அண்டவிடாமல், மனதைக் காக்கும் மந்திரத் திரைகள். ” நடக்க முடியுமா” என்று தவிக்கும் மனிதனுக்கு, ”பறக்க முடியும் பார்” என்று சிறகுகளைப் பரிசளிப்பவை கனவுகள்.

குடிசையில் வாழும் கதாநாயகன், மாளிகையை ஆளும் இளவரசியைக் காதலிப்பான். காதல் கீதம் பாடுவான். கனவுக் காட்சியில் மரங்களைச் சுற்றி வருவான். பிறகு, நெடிய போராட்டத்திற்குப் பின் அவளைக் கரம் பிடிப்பான்.

கனவு கண்டால் காதலி கிடைப்பாள் என்பது திரைப்படம். கனவு காணத் தெரிந்தால் காதலிக்கும் இலட்சியங்கள் கைக்குக் கிட்டும் என்பதுதான் நம்பிக்கையின் வார்ப்படம்.

”கனவு காணுங்கள்” என்று கலாம் சொல்வதும் அதனால்தான். கனவுகள்தான் அவரை அங்குலம் அங்குலாய் உயர்த்தின.

இராமேஸ்வரம் அருகில், ஒரு கடலோர கிராம்த்தின் குடிமகன், கடல்சூழ்ந்த பாரதத்தின் தலைமகனாய்க் கோலோச்சக் கனவுகள் தான் கைகொடுத்தன.

இத்தனை சிகரங்களை எட்டிய பிறகும் ” இந்தியா 2020 ” என்கிற புதிய கனவை வகுத்துக்கொண்டும் அதைநோக்கி உழைத்துக் கொண்டும் இருக்கிறார்.

இதுதான், கனவு காண்பதற்கும் – கனவிலேயே வாழ்வதற்கும் இடையிலான வேறுபாடு.

உள்மனக் கனவுகள் ஒவ்வொன்றும், உலக வாழ்வுக்கான உந்து சக்கதியாய், மாறும்போது தான் வெற்றிக்கான வாசல் திறக்கும்.

கனவுகள் தரும் சுகத்திலேயே நனவுலகத்திலிருந்து நகர்ந்துவிடுபவர்கள், காலத்தின் கணக்கெடுப்பில் விடுபட்டுப்போகிறார்கள்.

கனவுகள், வெற்றிக்கோலம் வரைவதற்காக வைக்கப்படுகிற புள்ளிகள். அவற்றை செயல் என்னும் கொடுகளால் சேர்ப்பவர்களே பெரும் புள்ளிகள்.

பயணில்லாத கனவுகளைப் ” பகல் கனவு ” என்கிறார்களே, ஏன் தெரியுமா?

” பகல் ” என்பது, செயல்படும் நேரத்திற்கான சிறந்த குறியீடு.

செயல்படும் நேரத்தில் கனவுகளிலேயே காலம் கடத்துபவர்களை, எச்சரிக்கும் விதமாகவே ” பகல் கனவு ” என்கிற பதம் பிறந்தது.

” அதிகாலைக் கனவு பலிக்கும் ” என்பதும், மக்கள் மனதிலிருக்கும் ஒருவித நம்பிக்கை.

அதிகாலை என்பது, ஒரு நாளின் விடியலைக் குறிப்பாய்ப் பார்த்தால், இந்த நம்பிக்கை – மூட நம்பிக்கை, ஆனால் ” அதிகாலை ” என்பது, வாழ்வின் ஆரம்பப் பருவமாகிய இளமைப் பருவத்தின் உருவகம் என்று கொள்ள வேண்டும்.

சிறிய வயதில் மலரும் கனவுகள், மனதில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றை நோக்கி அயராமல் உழைத்தால் நிச்சயம் பலிக்கும்.

”பகல் கனவு”, ”அதிகாலைக் கனவு” போன்ற சொற்கள், ஒருநாளின் பொழுதுகளைக் குறிப்பதாய்க் கருதாமல், வாழ்வின் பொழுதுகளைக் குறிப்பதாய்க் கொள்வதே பொருத்தம்.

கண்ணனைக் கைப்பற்றும் கல்யாணக் கனவுகள், ஆண்டாள் மனதில் உதித்தன. அந்தக் கனவுகளே ஆண்டாளின் தவமாய் ஆயின. அவை, கவிதைகளாய் மலர்ந்தன. மலர்மாலைகளை சூடிக்கொடுத்தும், மகத்துவக் கவிதைகளைப் பாடிக்கொடுத்தும் ஆண்டவனாகிய அரங்கனைக் கைப்பிடித்தாள் ஆண்டாள் என்பது, ஆன்மிகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கனவுகள் இலட்சியங்களாகலாம். இலட்சியங்கள். வெறும் கனவுகளாக விரயமாகிவிடக் கூடாது. கனவாய் முளைவிட்டு, முயற்சியில் துளிர் விட்டு, செயலாய் வேர்பிடிக்கும் விருட்சங்களே இலட்சியங்கள்.

அந்த இலட்சியங்களுக்கு, கனவின் பதிவுகளை உரமாகின்றன.

இலட்சியப் பயணத்தில் நிழல் கொடுக்கும் விருட்சமாய் அந்த இலட்சியமும் அதுகுறித்த கனவுகளுமே திகழ்கின்றன.

களிமண் பிசைந்து மண்பாண்டங்கள் வடிக்கும் வினைஞன் போல, கனவுகள் பிசைந்து சாதனைகள் படைக்கும் இளைஞனைத்தான் காலமும் – கலாமும் கனவு காண்பதாய்க் கேள்வி!

நிச்சயமாய்ச் சொல்கிறேன… நீதான் அந்த இளைஞன்!!

குறிக்கோள் நோக்கிப் பயணம் போகையில்
கனவுகள், குதிரைகளாகும்;
குதிரையைக் கண்டிக் கிளம்பிடு தோழா
கருதிய எதுவும்கை கூடும்!

மறிக்கும் தடைகளை அகற்றும் சக்தி
மனிதனின் கனவுக்குண்டு;
மயக்கம் – தயக்கம் – முற்றிலும் நீக்கி
முயன்றால் வெற்றிதான் உண்டு!

தறியின் சுதியில், தாள கதியில்
ஆடை நெசவும் ஆகும்;
கனவின் சுதியில் செயல்கள் பிறந்தால்
காலம் உன்பெயர் கூறும்!

உறயடிக்கான வழுக்கு மரமாய்
உள்ளது தம்பி உலகம்;
உந்தி உந்தி மேலே ஏறு…
உலகம் உன்னைப் புகழும்!

( இன்னும் பேசுவேன்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்