Home » Articles » வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்

 
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்


கவிதாசன்
Author:


சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

இதய வங்கியில் –
சேகரித்து வைத்துள்ள
கருத்துப் பொற்காசுகளை
முன்னேற்றச் செயல்களில்
இன்றே முதலீடு செய்யுங்கள்

செயல்களே உங்களுக்கு வெற்றி மாலை சூட்டுகின்றன. உங்களுக்கு என்னென்ன தெரியும் என்பதைவிட அவற்றில் என்னென்னவற்றை எந்தெந்த அளவிற்கு நீங்கள் செயல்படுத்துகின்றீர்கள் என்பதே முக்கியம்.

பயன்படுத்தப்படாத அறிவும், பயணப் படாத பாதையும் பயன்படுவதில்லை.

உங்களின் ஒவ்வொரு அறிவுத்துளியும் வெற்றியாக விளைய வேண்டும் எனில், அதை உழைப்பு நிலத்தில் ஊன்றி, வியர்வை நீர் பாய்ச்சி, களைப்பு எனும் களையை நீக்கி முயற்சியெனும் உரமிட்டு வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களின் வாழ்நாள் வளமுடையதாக அமையும்.

எல்லையில்லாத ஆற்றலை அடி மனதில் வைத்துக்கொண்டு வெற்றிக்கனியைச் சுவைக்காமல் நீங்கள் இருக்கின்றீர்க் என்றால், அதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல; நீங்கள் முழுப் பொறுப்பு. ஏனென்றால், உங்களது முயற்சிச் சிறகுகளை அசைக்காத்தால்தான், வெற்றி வானம் உங்களுக்கு அகப்படவில்லை.

ஆக்க ஆற்றலை வைத்துக் கொண்டு நீங்கள் செயல் எனும் தேரில் ஏறி வெற்றியூரை அடையவில்லை எனில், அதற்கு நீங்களே காரணம். அவ்வாறு ஆற்றலை வைத்துக்கொண்டு சோம்பல் சிறையில் அடையப்பட்டுக்கிடக்கின்றீர்கள் என்றால், உங்களுக்கு நீங்களே தீங்கு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

கொஞ்சம் கடுமையாக்க் கூட இந்தக் கூற்று உங்கள் நெஞ்சைக் தொடலாம். அதற்காக வருத்தப்பட வேண்டாம்.

உங்களுடைய வெற்றிக்கும் தோல்விக்கும் நீங்கள் பொறுப்பு ஏற்கும் போதுதான் உங்களது வாழ்க்கைப் படகை உங்களின் இலக்கை நோக்கிச் செலுத்த முடியும்.

கொஞ்சம் சிந்தயுங்கள், உங்களுடைய எண்ணத்தைக் கொஞ்சம் மாற்றியமைத்தால் வெற்றிப் பாதையை உங்களால் அறிந்து கொள்ளமுடியும். எண்ணங்களே முன்னேற்றத்தின் ஏணிப்படிகள். ஆக்க எண்ண் மேலே ஏறுகின்றது. அழிவு எண்ணம் கீழே இறங்குகின்றது.

வெற்றிக் கைகாட்டி

கீழ்க்காணும் வழிகளில் சிந்தித்தால், வெற்றிப்பாதையைத் தேர்வு செய்வதற்கு உங்களை நீங்களே ஆயத்தப்படுத்திக் கொள்ள முடியும்.

1. தவறு நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தை தவிர்த்து விடுங்கள்.

2. சோர்வை அகற்றுங்கள்.

3. தள்ளிப்போடும் எண்ணத்தைக் கிள்ளிப்போடுங்கள்.

4. வென்றால் வெற்றி, தோற்றால் அனுபவம் என்ற நோக்கில் எதையும் தொடங்குங்கள்.

5. வெற்றிக்கு புத்திசாலித்தனமான உழைப்பே மூலதானம் என முழுமையாக நம்புங்கள்.

6. வெற்றிப்பயணத்தில் இலக்கை அடையும் வரை ஓய்வில்லை என்ற உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

7. தோல்வி நேர்ந்தால் பிறரைக் குறை கூறம் மனநிலையை அகற்றி விடுங்கள்.

8. எதிலும் நன்மை உண்டு என்று நம்புங்கள்.

9. உங்களை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.

10. சுய பட்சாதாபம் கொள்ளாதீர்கள்.

அச்சம் அச்சப்பட்ட்டும்

உங்களின் எழுச்சியையும் உத்வேகத்தையும் கண்டு, அச்சம் அச்சப்படட்டும், சூரியனின் உதயம் கண்டு விலகுகின்ற இருளைப்போல உங்களின் ஒளித்தொடக்கத்தையும் உற்சாக ஈடுபாட்டையும் கண்டு, மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் அச்சமும் எதிர்மறை சிந்தனையும் விலகி ஓடட்டும்.

”செய்து முடிக்க முடியும்” என்ற முனைப் போடு ஒரு செயலைக் தொடங்கும் போது, அந்த செயலை செய்து முடிப்பதற்கான ஆற்றல் இயல்பாகவே உங்களுக்கு வந்து விடுகின்றது என மனநல அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

ஆகவே, ஆழ்மனதில் நம்பிக்கை விதைகளைத் தூவுங்கள். அச்சமின்றி எதையும் விழிப்புணர்வோடு தொடங்குங்கள். எல்லா திசைகளையும் நன்கு கவனித்தவாறே உங்கள் வெற்றிப் பயணம் தொடங்கட்டும். அதிக மகிழ்ச்சியோ அதிக கவலையோ உங்களை அதிகமாகப் பாதிக்காதவாறு மனதை சமநிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்வெனும் ஆழ்கடலில்
வெற்றி முத்தெடுக்க
அச்ச ஆடைகளை
அகற்றி விட்டு
ஆக்கக்கரங்களை அசைத்து
முயற்சி நீச்சலை
முதலில் கற்றுக் கொள்ளுங்கள்

சோர்வை விரட்டுவோம்

ஒருவரை வெற்றியிலிருந்து விலக்கி வைப்பதில் சோர்வு முந்திக் கொள்கின்றது. ஆகவே, சேர்வை விலக்கி விட்டால்தான் உங்களால் வெற்றியடைய முடியும்.

வாழ்வின் மீதும், செய்கின்ற செயலின் மீதும் பிடிப்பும் ஈடுபாடும் இல்லாதபோது மனதில் சோர்வும் தளர்ச்சியும் உண்டாகின்றது. பின்னர், அதுவே உடற்சோர்வாக மாறி உங்களுடைய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் குலைத்து விடுகின்றது. அதன் காரணமாக நீங்கள் முழு ஈடுபாட்டுடன் பணி செய்யாத நிலை ஏற்படுகின்றது.

முழு ஈடுபாடும் ஆர்வமும் இல்லாமல் செய்யப்படுகின்றன பணிகள் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையாமல் தோல்வியைத் தழுவுகின்றன.

மனமும் உடலும் சோர்வாகவும் தளர்ச்சியாகவும் இருக்கும்போது செய்கின்ற செயல்களில் ஏற்படுகின்ற தோல்வி, மேலும் உங்களை பலஹீனம் அடையச் செய்கின்றது. ஆகவே, மனம் சோர்வற்ற நிலையில் உற்சாகமாகவும் புத்துணர்வோடும் இருக்குமாறு வைத்துக் கொண்டால் உங்களது வெற்றிப்பயணம் இனிமையாகத் தொடரும்.

மனதை புத்துணர்வோடும் உத்வேகத்தோடும் வைத்துக்கொள்ள கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

1. தன்னம்பிக்கை தரும் நூல்களைப் படியுங்கள்.

2. உறசாகமும் ஊக்கமும் தரும் சொற்பொழிவுகளைக் கேளுங்கள்.

3. உங்களை ஊக்கப்படுத்தும் ஆற்றல் உடைய நண்பர்களுடன் உரையாடுங்கள்.

4. மனதில் தன்னம்பிக்கையை விதைக்கும் பாடல்களைக் கேளுங்கள்.

5. வாழ்நாளில் எதையாவது ஆக்கப் பூர்வமாகச் சாதிக்க வேண்டும் என்று எப்பொழுதும் எண்ணிக் கொண்டே இருங்கள.

6. மன ஆற்றலை இழக்கச் செய்யும் சூழ்நிலை நூல்கள், நண்பர்கள், போன்றவற்றை விலக்குங்கள். மேலும் எதிர்மறை எண்ணத்தை உண்டாக்கும் சூழலில் இருந்து விலகுங்கள்.

சோம்பல் புழுதியில்
புரண்டு கொண்டிருந்தால்
வெற்றியின் விரல்கள்
நம்மை விலக்கிவிடும்

சுறுசுறுப்பு அருவியில்
ஒவ்வொரு நொடியும்
முழுமையாய் குளிப்போம்
பணிகை உடனே
முடிப்போம்!

தள்ளிப்போடும் எண்ணம்

எதையும் தள்ளிப்பொடும் எண்ணம் உங்களுடைய வெற்றிக்குத் தடைகல்லாக இருக்கின்றதா என எண்ணிப்பாருங்கள். நீங்கள் தள்ளிப் போடுவது பணிகளைப் மட்டும் அல்ல உங்களுடைய முன்னேற்றத்தையும் தான் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தள்ளிப் போடுவது என்பது ஒருவிதமான மணநோய் என்று கூட சொல்லலாம்.

முடிக்க முடியாத பணிகளைத் தள்ளிப் போடுவதற்கும் முடிக்கக்கூடிய பணிகளைத் தள்ளிப்போடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவ்வாறு தள்ளிப் போடுவதால் ஏற்படும் விளைவுகளும் வேறுவேறானவை. ஆகவே, இன்றே முடிக்கக் கூடிய பணிகளை நாளை என்று தள்ளிப் போடாதீர்கள். காரணமும் அவசியமும் இல்லாமல் பணிகள் உங்களிடம் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பணிகளை உடனுக்குடன் முடிக்க சில யோசனைகள்

1. ஒவ்வொரு நாளையும் புதிய நாளாக, புதிய திட்டங்களோடு தொடங்க வேண்டும் என்று நினையுங்கள்.

2. உங்களுடைய வெற்றி, பணியை முடிப்பதில்தான் இருக்கின்றது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.

3. பெரிய வேலையாக இருந்தால் அதை சிறுசிறு கூறுகளாகப் பிரித்து செய்யப் பழகுங்கள்.

4. செய்ய வேண்டிய பணிகளை மனதில் சுமப்பதை விட செய்து முடிப்பதே எளிதானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

5. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய பணிகளை அன்று அதிகாலையில் அல்லது முந்நைய இரவிலேயே நேரத்துடன் திட்டமிடுங்கள்.

6. திட்டமிட்ட பணிகள் திட்டமிட்டவாறு முடிக்கப்பட்டதா? என்பதையும் ஒரு சில பணிகளை முடிக்க முடியவில்லை எனில் அதற்கு என்ன காரணம் என்பதையும் ஒவ்வொரு இரவும் சுயஆய்வு செய்யுங்கள்.
——————————————————————-
பயன் படுத்தப்படாத அறிவும், பயணப்படாத பாதையும் பயன் தருவதில்லை.
————————————
முழு ஈடுபாடும் ஆர்வமும் இல்லாமல் செய்யப்படுகின்ற பணிகள் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையாமல் தோல்வியைத் தழுவுகின்றன.
—————————————————————

 

1 Comment

  1. Guru says:

    supper sir really i am inspired தங்கள் சேவை தொடரட்டும் வ

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்