Home » Articles » ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க

 
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க


சாந்தாசிவம்
Author:

” உங்களுக்காக ”
திருமதி. சாந்தாசிவம்

நம்மை நாம் சரியாக பாதுகாத்துக்கொள்ள, முதலில் நம்மை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு காரியத்தில் நாம் வெற்றி அடைகிறோம் என்றால், அதில் நம் ஆர்வம் குன்றாமல் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

நம்மில் பலரும் உழைப்பினால் களைப் படைவதில்லை, கவலையினால்தான் களைப் படைகிறோம், உங்கள் நீண்ட பேச்சினால் சலிப்படைந்து உங்களை மறுப்பவர்கள்தான் உங்கள் கவலைக்குக் காரணம்.

எத்தனைதான் தன்னம்பிக்கை இருந்தாலும் எதிர்மறையான ஓர் எண்ணம் மனிதனுக்கு நிழலாக அவன் கூடவே வருவது இயல்பு. ஆனால் நடக்குமோ, நடக்காதோ, கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற கேள்விகளின் தொடர் சிந்தனைதான், வாழ்க்கைப் பயணத்திற்கு அறிவைப் புகட்டும் ஒரு உந்து சக்தி என்பதை பலரும் யோசிக்க மறக்கிறோம்.

நாம் உடனே வெற்றி அடைந்தால் நம் சிந்தனைத்திறன், செயலாக்கம் எல்லாம் வளராமல் ஸ்தம்பிக்கவும் வாய்ப்புண்டு.

முழு உணர்வுடன் நாம் ஒரு காரியத்தைச் செய்தோமானால், தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ளவும், மீண்டும் தவறு நடவாமல் இருக்கும்படி பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்.

தவறு என்று மனதில் பட்டாலும் பலரும் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா? ” இல்லையில்லை சரியாகத்தான் செய்கிறோம், நன்றாகத் தான் பேசினோம்” என்று போலிச் சமாதானத்தை தங்களுக்குள்ளே வளர்த்துக் கொண்டு, அடிக்கடி அதோடு நட்புறவு வேறு வைத்துக் கொள்கிறார்கள். இதுதான் ஒரு மனிதனை முன்னேற விடாமல் தடுக்கக் கூடிய, அவனுக்குள்ளேயே வளரும் ஒரு விஷச்செடி.

கூர்மையாக நம்மைப்ற்றி சற்றே சிந்தித்தால், நம் தவறுகள் மினரல் வாட்டரில் தெரியும் தூசுக்கள் போல் தெரியும். நம்மை அறியாமல் செய்யும் தவறுகள் பல.

அதில்… உதாரணத்திற்கு வியாபரா விஷயமாக ஒரு அலுவகத்திற்கோ அல்லது அவரின் இல்லத்திற்கோ நீங்கள் சென்றிருக்கலாம். அப்பாயிண்ட்மென்ட் வாங்கியாகி விட்டது. செல்கிறீர்கள்.

நமக்குத் தெரிந்ததையெல்லாம் பேசி, எப்படியும் அவரை நம் வழிக்குக் கொண்டு வருவது என்பது மட்டுமே தங்கள் எண்ணம். முழுக்க இதையே எண்ணிச் செல்கிறீர்கள், பேசுகிறீர்கள். அவரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

அருமையான பேச்சுத்திறமை, திறமையான, அழகான விளக்கம், அசத்தலான உங்கள் உருவம், அதற்கேற்ற வடிவமைப்பான உங்கள் ஆடையலங்காரம், ஒரு கதாநாயகனாக உட்கார்ந்து விளக்கமாக விவரிக்கும் பாங்கு என எல்லாமே அவருக்குப் பிடித்துப் போய்விட்டது.

இந்த பேச்சு ஒரு MLM, இன்ஸீரன்ஸ், ஒரு டெக்னாலஜி என எதுவாகவோ இருக்கலாம். நீண்ட நேரம் விவரித்து அவர் பதிலை எதிர் நோக்கும் உங்களுக்கு அவரின் ஆர்வம் சற்றே நோக்கும் உங்களுக்கு அவரின் ஆர்வம் சற்றே குன்றியிருப்பது முகத்தில் தெரிகிறது. மீண்டும் குன்றியிருப்பது முகத்தில் தெரிகிறது. மீண்டும் விடாப்படியாக உங்கள் பிடியை இறுக்குகிறீர்கள்.

அவரின் உடலசைவு மொழிகளைத் தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ளவிட்டாலும், ஓரளவு புரிந்து கொண்டவராகத்தான் உங்கள் நிலையும் இருக்கிறது.

சாய்ந்து அமர்ந்திருந்த அந்த எதிரிலிருக்கும் மனிதர் முன் இருக்கைக்கு வருவதும், எழுந்துபோக எத்தனிப்பதுபோல கால்களை ஊன்றி முயற்சிப்பதும், இவரை வெளியே அனுப்ப இதுவாவது உதவாதா என்பதுபோல் தொலைபேசியைப் பார்ப்பதும், ஹாலைச் சுற்றிப் பார்வையைப் படறவிடுவதும், கதவைத் தள்ளிக் கொண்டு யாராவது வந்து நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என வாசலைப் பார்க்கும் தோரணைகள் துல்லியமாக உங்களுக்குத் தெரியா விட்டாலும் உங்களை விரட்ட அவர் முடிவடுத்த காரணம் என்னவோ அது நீங்களோதான்.

என்ன நானா? ஆம். நீங்களேதான். அவர் முதலில் அக்கறையாக கேட்பதுபோல் நடிக்கவில்லை. உண்மையாகத்தான் உணர்ந்து, அக்கறையோடு ஒரு புரிதலோடுதான் கேட்டார். நீங்கள்தான் சரியாகப் பேசுகிறோம் பேர்வழி என நீண்ட… நேரத்தைப் பயன்படுத்தி சோதித்து விட்டீர்கள். சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையை சோதனைக்குள்ளாக்கி ”நீண்ட நேரப் பேச்சால் எல்லாம் போச்சு” என்ற நிலைக்கு காலம் கடத்திவிட்டீர்கள்.

நீங்கள் அங்கிருந்து நகர்ந்ததும் இத்தனை நேரம் உங்களை மதித்து பொறுமையுடன் கேட்ட அவருக்கு நேரம் பறிபோனதைத்தான் பொறுத்துக் கொள்ளவே முடியாமல் போய்விட்டது.

பல வேலைகள் தடைப்பட்டிருக்கலாம். அல்லது வேலையே இல்லாமல் இருந்தாலும் காலத்தைக் கணிசமாக வேறு எதிலாவது செலுத்த முன்கூட்டியே திட்டமிட்டிருக்கலாம். நீங்களோ அவருடன் அரைமணி நேரம் பேசவேண்டுமெனச் சொல்லி ஒருமணி அல்லது ஒன்றரை மணி நேரத்தைச் சாப்பிட்டதை எப்படி அவரால் ஏற்கமுடியும்.

செயல்கள்தான் நிலைக்கும், வாரத்தைகள் மறையும், காலத்தை அதிகம் செலவழிப்பவர் என்ற கரும்புள்ளியை உங்கள் மீது பதித்து, உங்கள் வியாபாரத்தையும் நிராகரிக்க நிறைய வாய்ப்புகளை நீங்களே தந்துவிடுகிறீர்கள்.

செயல்கள்தான் மனிதனை அடையாளம் காட்டும். ”ஐயோ இவரா!” என உங்களைப் பார்த்ததும் சலிப்படைந்து அடுத்த முறை பாரக்காத மாதிரியான நிலைக்குத் தள்ளப்பட நீங்களே கரணமாகிவிடாதீர்கள்.

முன்னெச்சரிக்கை உள்ளவன் தவறு செய்ய மாட்டான். என்பதுபோல் சோம்பெறித்தன மாணவர் என்ற முத்திரையையும் அவரிடம் அதிக நேரம் செலவளித்ததில் காட்டியவராகிறோம்.

முதலிலேயே திட்டமிட்டு எதைகப் பேசவேண்டுமோ, முக்கியமாக எதைப் புரிய வைக்கவேண்டுமோ அதை குறைந்த காலத்தில் குளறுபடியில்லாமல் விளங்க வைக்கத் தெரிந்து கொள்ளவேண்டும்.

குறைந்த நேரத்தைப் பயன்படுத்தி நாம் எதையும் கச்சிதமாக விளக்கும் ஆற்றலைப் பெற்றால் ஒரே முறையில் அவர், நம்மை அழைக்கும்படி நம் ஆற்றலைக் காண்பிக்கும் வெற்றியாளராகத் திகழ்வோம்.

நன்றாகச் செய்தால் எதையும் இருமுறை செய்யவேண்டாம். மனம் நினைப்பதை முகத்தில் காணும் கலையை பெற்றுவிடுவது அரிது. அதனினும் அரிது அதை நடைமுறையில் செயலாக்கி உணர்ந்து நடப்பது.

நீண்ட நேரம் அவரிடம் நட்பை விதைக்க, வியாபாரத்தை தொடர எண்ணி, ” கடுங்காற்று மழை காட்டும். கடும் நட்பு பகை காட்டும்” என்பதுபோல் நடந்து, நம் முன்னேற்றத்திற்கு நாமே எதிரியாகி விடக்கூடாது. பழக்ப் பழக, பேசப் பேச மரியாதை குறையும்

அருமையான வியாபாரம், நல்ல அறிவான பேச்சு, நேர்மையான திட்டங்கள் உள்ள விதிமுறை கள், உண்மையான பேச்சு, குறைவான நேரத்தில் நிறைவான பேச்சு என்றிருந்தால் எல்லாமே வெற்றிதான். மௌனத்தைவிட பேச்சிற்கு வருந்தியோர்தான் அதிகம். இந்த அறிவுரையை நாம் நம் நட்பு வட்டத்திலும், உறவினர்கள் விஷயத்தில் கடைபிடிக்க வேண்டும்.

எப்படிப்பட்ட உயர்ந்தவராயினும் யார் ஒருவர் நீண்ட நேரம் ஒரு வீட்டிலோ, போது இடத்திலோ பேச, அங்கேயே இருக்க என்றி ருந்தால் அவரின்பால் மரியாதை குறையத்தான் வாய்ப்புக்கள் அதிகம்.

சும்மா உட்கார்ந்திருந்தால், ”ஏ ஜடமே” என்பார்கள், அருகில்தான் நண்பன் வீடு, சினேகிதியின் இல்லம், எனக்கு வேலையெல்லாம் முடிந்து இப்போது ஓய்வுதான் என்றெண்ணி, அடுத்தவர் வீட்டிலேயே பொழுதைக் கழிப்பது நியாயமே அல்ல.

சென்றோம், சற்று பேசினோம், என்றிந்தால் நட்பு, உறவு தொடரும். மீண்டும் எப்போது வருகிறீர்கள் என நம் வருகையை எதிர்நோக்கும் படி நம் விஜயம் இருக்கவேண்டும். அன்பு, பாசம் வளரும். அன்பு குறைந்தால், தவறு தடிக்கும். நட்பு என்பது வேப்பம் பழத்தைச் சுவைப்பதுபோல இருக்க வேண்டும். லேசாக சப்பினால் சுவைக்கும், அழுத்திச் சுவைத்தால், கசப்பைக் கொடுக்கும்.

நம் வருகையில் பிறரை ஆர்வம் கொள்ளச் செய்வது நம் கையில்தான் இருக்கிறது. இது தொலைபேசி பேச்சுக்கும்தான். நீண்ட நேரம் பேசினால் போன் ” பில் ” மட்டுமல்ல உங்கள்பால் உள்ள அன் ”பில்” ஏற்படும் விரிசல்கூட அதி கரித்துவிடும்.

மனித நேயமே குறைந்து போவதற்கு வாய்ப்பைத் தந்தவர் பட்டியலில் நீங்கள் முதலிடத்தில் இருப்பதற்கு இதையும் ஒரு காரணமாக்கி விடாதீர்கள்.

ரொம்ப நேரம் இருக்காதீர்கள்.
இறுக்கவும் செய்யாதீர்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்