Home » Articles » வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!

 
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!


சண்முக வடிவேல் இரா
Author:

தொடர்…
”நகைச்சுவைத் தென்றல்”
இரா. சண்முக வடிவேல்

” உலகம் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்” என்று சொல்கிறோம். மனிதர்கள் எல்லோருமே ஒரே வகையானவர்கள் அல்லர்.

சிலருக்கு சிரித்தமுகம்; சிலருக்கோ கடுகடுப்பான மூஞ்சி, சிலர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சிலரோ, எப்போதும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சிலர் எடுத்த பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்கின்றனர், சிலரோ பணிசெய்ய வேண்டி இருக்கிறதே என்று செய்கின்றனர்.

எல்லோரும் வியாபாரம் செய்கிறார்கள். சிலர் வியாபாரத்தைக் கண்ணும் கருத்துமாகச் செய்கிறார்கள். வேறு சிலர் வருமானம் ஒன்றையே கருதி வியாபாரத்தைச் செய்கின்றனர்.

தொழிலிலும்கூட அப்படித்தான். அரசு அலுவலர் நிலையும் இதுவே.

ஒயின் தாயாரிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு நம்மூர் நண்பர் ஒருவர் சென்றிருக்கிறார். இது நடந்தது பிரான்சு நாட்டில், மாலை நேரத்தில் அன்று தாயாரிக்கப்பட்ட எல்லா ஒயினும் ஒரு பெரிய தொட்டியில் சேமிக்கப்பட்டிருந்தது. அதை பாட்டிலில் அடைக்க வேண்டிய வேலைதான மிச்சம்.

Wine Taster வருகைக்காக எல்லோரும் காத்திருந்தனர். அந்த ஆலையிலேயே அதிகச் சம்பளம் அந்த ஒயின் சுவை பார்ப்பவருக்குத்தான் என்று கேள்விப்பட்டு நம்மவர் அதிர்ச்சியே அடைந்திருக்கிறார்.

ஒயின் சுவைஞர் வந்தார். ஒரு சின்ன குழாய் மூலம் தொட்டியிலிருந்து ஒயினை எடுத்து இரண்டு சொட்டு நாவில் விட்டார். சற்று நேரம் ஆழ்ந்து சுவை பார்தார். அவ்வளவுதான், ” இந்த ஒயின் சரியாய் இல்லை.பாட்டிலில் நிரப்ப வேண்டாம், இதை அழித்துவிடுங்கள்” என்று கூறி விட்டார்.

ஆலையில் பரபரப்பு. பல லட்ச ரூபாய் பெறுமான முள்ளதைத் தகதியற்றதாக ஆக்கிவட்டாரே. என்ன காரணம்?

ஆலை முதலாளி வந்தார். தொட்டியில் உள்ள எல்லா ஒயினையும் வேறு தொட்டிக்கு மாற்றினார்கள். அடியில் ஒரு துருப்பிடிதுத ஆணி கிடந்தது. ஐம்பதாயிரம் லிட்டரில் ஒரு சிறிய துரு ஆணி கிடந்தால் ஏற்பட்ட சுவை மாறுதலையும் கண்டுகொள்ளும் நாக்கு அவருக்கு. அதற்காகவே அவருக்கே பல லட்சம் சம்பளம்.

நம்மவர் வியந்துபோய் நின்றார். லிட்டர் லிட்டராகக் குடிக்க இவரால் முடியும். ஆனால், கண்டிபிடிக்க முடியுமா?

ஐம்பதாயிரம் விட்டர் ஒயினும் அன்று அழிக்கப் பட்டது.

தன் கம்பெனி ஒயிர் தரமாக இருக்கவேண்டும் என் பதற்காகவே இவ்வளவு அதிகமாக ஊதியம் தந்து ஊழியரை வைத்துள்ளனர். தகுதியற்ற பொருளைச் சந்தைக்கு அனுப்ப மறுக்கின்றனர். இப்படி வியாபாரம் இருந்தால் அது செழிக்காமல் என்னவாகும்?

ஒரு முறை கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்கள் ஒன்று கூறினார்கள்.

சிங்கப்பூரில் அவர் தங்கியிருந்த இடத்துக்குப் பக்கத்தில் ஒரு கடை, அக் கடையில் கீரையும் முட்டையும் மட்டுமே விற்பனை செய்கிறார். கடை திறக்கும் முன்பே மக்கள் கையில் பையுடன் வரிசையில் நிற்கிறார்கள். கடை திறந்ததும் கீரை, முட்டை விற்பனையாகிறது. கடைசியில் நின்ற பத்துப் பேருக்கு சரக்கு இல்லை. கடையைக் கட்டிகொண்டு கடைக்காரர் பறக்கிறார்.

நாலு கடைக்கு அப்பால் ஒரு கடையில் கீரை மலைபோல் குவிந்து கிடக்கிறது. முட்டையும் ஏராளமாக இருக்கிறது. மக்கள் அங்கு போகவில்லை.

திரு. கி.ஆ.பெ. விசிவநாதன் இவர்கள் இந்தக் கடைக்காரைப் பார்த்து ” அந்தக் கடையில்தான் ஏராளமாகக் கீரையும் முட்டையும் இருக்கிறதே! அதை வாங்கி இவர்களுக்கு விற்கக் கூடாதா?” என்று கேட்டிருக்கிறார்.

அதற்குக் கடைக்காரர்,

” நீ இந்தியாக்காரனா?” என்று கேட்கிறார்.

”ஏன் அப்படிக் கேட்கிறாய்?” என்ற போது

” அவனுக்குத்தான் இப்படிப்பட்ட யோசனையெல்லாம் தோனும்” என்றிருக்கிறார்.

அத்துடன் நில்லாமல்,

” நான் அதிகாலையில் கிராமங்களுக்குப் போய் இன்று பறித்த கீரைகளையும் இன்று கிடைத்த முட்டைகளையும் வாங்கி வந்து விற்கிறேன். அதனால்தான் என் கடையில் இவ்வளவு கூட்டம், ஐனங்களுக்கு வேறு கடையில் இருக்கிறது தெரியாதா? அதை வாங்கி நான் விற்றால் நானும் அதுபோல சும்மா வச்சுக்கிட்டு ஒக்காந்திருக்க வேண்டியுதான்” என்று விளக்கமும் தந்தார்

எல்லோரும் வியாபாரம் செய்கிறார்கள். சிலர் மட்டும் வியாபாரத்தைக் கவனமாகச் செய்கிறார்கள். ஏனோ தானோ என்று செய்பவர் வியாபாரம் படுத்துவிடுகிறது. கவனமாகச் செய்பவர் வியாபாரம் செழித்து வளர்கிறது.

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்

என்பது திருக்குறள். பிறப்பால் எல்லோரும் சமமே. ஆனால், செய்யும் தொழில் நேர்த்தியால் சிறப்பு வேறுபடுகிறது என்கிறார்.

எங்கள் ஊரில் ஒரே ஒரு முடிதிருத்தும் நிலையத்தில் மட்டும் எப்போதும் கூட்டமாகவே இருக்கும்.

அவரிடம் உள்ள சிறப்பு யாவரும் அறிய வேண்டியது. வாடிக்கையாளர்கள் எல்லோரையும் அவர் நன்கு அறிவார். குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றி விவரம் அவருக்குத் தெரியும்.

”ஏன் தம்பி கண் சிவந்து இருக்கிறது. ராத்திரி தூங்கலையா?” நாற்காலியில் அமர்ந்த இளைஞனைப் பரிவோடு கேட்பார்.

”தம்பி முடியைக் கொஞ்சம் குறைச்சிடுவமே. தலைவலி வர முடி அதிகமா இருக்கிறதும் காரணமா இருக்கும்”

”சரியங்கண்ணே குறைச்சிடுங்க”

அடுத்தமாதம் வரும் போது அவர், தலைவலி போய்விட்டதை சொல்லி மகிழ்வார்.

”இந்தத் தடவை முடியை நல்லாக் குறைச்சிடு மாரியப்பா. தலை பாரமா இருக்கு ” என்பார் வந்தவர்.

”ஐயா நீங்க. பல ஊருக்குப் போறவங்க, பலபேரைப் பார்த்துப் பல காரியம் செய்யறவங்க. நாலு இடத்துக்குப் போறவங்க தலைமுடி நல்லா இருக்கணுங்க. கட்டையா வெட்டினா நீட்டிக்கிட்டு நிக்குது. அசிங்கமா இருக்கும். வீட்டிலேயே இருந்தா பரவாயில்லே. வீட்டு அம்மா எப்படி இருந்தாலும் சகிச்சுக்குவாங்க. என்ன செய்யப்பட்டு ” என்று பவ்வியமாகக் கேட்பார்.

”சரி, சரி ஒண்ணோட யோசனைப் படியே செய்யுப்பா?” அடுத்த முறை சிகையலங்காரம் செய்கிறவரையில் கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் அவருக்கு மாரியப்பன் நினைவு வந்து கொண்ட இருக்கும்.

” அண்ணே முடியா நீளமா வச்சு வெட்டுங்கண்ணே. குறைச்சு குறைச்சு வெட்டிப்புடுறீங்க. அசிங்கமா இருக்கு” சிறுவனின் வேண்டுகோள் இது.

”டேய், உங்கப்பா கொன்னுப்புடுவாருடா, மோட்டை அடிக்கத்தான் சொன்னாரு. நந்தான் கொஞ்சம் இருக்கட்டும்னு சொல்லி வச்சிருக்கேன். ஏன் ? மொட்டை வேணும்னா அடிச்சிடவா சொல்லு, செஞ்சிவோம்.

இதைக்கேட்ட சிறுவன் அடங்கிவிடுவான்.

” சிறுவர்கள் தலையில் முடி அதிகமிருந்தால் வெய்யிலில் அலையும் அவர்களின் தலையில் அழுக்கு அதிகம் சேரும். பேன் ஈறுகள் உண்டாகும். அதனாலதான் பயல சும்மா மிரட்டி வச்சேன்” என்று என்னிடம் அவன் போனபிறகு கூறுவார்.

பெற்றோர்கள் மட்டுமின்றி சிறுவர் இளைஞர் என்று எல்லோருமே அவரிடம் வாடிக்கையாளர்களாக இருப்பதன் ரகசியம் இதுதான்.

அவர் ஒரு ” அக்குப்பிரஷர்” மெஷின் வைத்திருப்பார். யாராவது கழுத்தில் களுக்குடன் வந்தால் முதலில் அந்த மெஷினை வைத்துச்களுக்கு எடுப்பார். பிறகுதான், முடிதிருத்துவார்.

நம்முடைய குடும்பத்தில் உண்மையான அக்கறையோடு விவரங்களைக் கேட்பார். மனைவியின் நோய்க்குத் தான்றிந்த நாட்டு வைத்தியத்தைக் கூறுவார்.

அந்தக் கடைக்காரரின் மகன் +2 முடித்த போது, வழக்கமாக அவர்கடைக்கு வரும் பெரிய அதிகாரி ஒருவர், இதுபற்றி விசாரித்து அறிந்து கொண்டு, மேற்படிப்புக்கு வழி சொன்னார். அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவனை விண்ணப்பம் எழுத வைத்து, அனுப்பி வைத்து, பெரியவர் ஒருவரிடம் கல்விச் செலவுக்கான பொறுப்பை ஏற்கச் செய்து எல்லா வகையிலும் உதவினார்.

இன்று அந்தப் பையன் டாடாவின் பெரிய கம்பெனி ஒன்றில் மாதம் இருபதாயிரம் ஊதியம் பெறுகிறான்.

தான் செய்த வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்தார். எல்லோர் குடும்பத்திலும் உண்மையான நேசம் காட்டினார். விளைவு? அவர் குடும்பத்தின்மீது அன்பு செலுத்திப் பேருதவி செய்தார் ஓர் அதிகாரி.

இந்த முடிதிருத்துநரின் உண்மை அன்பும், தொழிலில் காட்டிய அக்கரையும் அந்த அதிகாரியைக் கவர்ந்தது. இவ்வளவு நல்ல மனதருக்கு நாமும் ஏதாவது உதவ வேண்டும் என்று நினைத்து உதவினார்.

”செய்தொழில் வேற்றுமையால் – சிறப்பு ஒவ்வாது” என்ற திரவள்ளுவர் கருத்தும் இதுதான். ஒரே வேலையைப் பலபேர் பார்த்தாலும் தொழிலில் எல்லோரும் ஒரே வகையான மேன்மையான பெறுவதில்லை. அவரவரின் திறமைக்கும் உண்மை ஈடுபாட்டுக்கும் ஏற்ற வகையில் அவரவர் சிறப்படைகிறார்.

மதுரைக்கு ஒரு முறை ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் சென்றேன். இலக்கிய மன்றங்கள் நடத்துவது போன்ற நிகழ்ச்சியல்ல.பல்வேறு இடங்களிலும் இன்று நாம் காணும் அடுக்ககமுறையில் (Falt System) நிறைய வீடுகள் கட்டித் தந்திருக்கும் அன்பர் சேதுராமன் அவர்கள் தங்கள் வீடுகளில் வசிப்போருக்காக மாதா மாதம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. இடையிடையே ஆன்மீகப் பெரியவர்களை அழைத்து வந்து நல்லுரை ஆற்றச் செய்வது என்று பல்வேறு பணிகளைச் செய்கிறார்.

கட்டினோம், விற்றோம், முடிந்தது வேலை என்று இல்லாமல் அவர்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்துகிறார். வீடுவாங்கி அங்கே வாழ்வோரும் நன்றாக இருக்கிறார்கள். நண்பர் சேதுராமன் அவர்களும் நன்றாக இருக்கிறார். தொழிலில் அக்கறை, உண்மை, உழைப்பு எல்லாம் சேர எல்லாமே சிறக்கின்றன.

ஒரு கடையில் கைக்கடிகாரம் வாங்கினேன். சில நாள் கழித்து அதன் செயின் கருத்துப்போய் கையையும் கஷ்டப்படுத்தியது. 15 நாள் கழித்துக் கடைக்காரரிடம் சென்று காட்டினேன். ராதாகிருஷ்ணன் என்ற அந்தக் கடைக்காரர் என்னைக் கண்டதும் ” வாங்கசார், வாங்க். உங்களைத் தேடிக்கிட்டு இருக்கோம் சார். ஏன் ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணலே” என்றார்.

நான் கடிகாரச் சங்கிலி பற்றிச் சொன்னேன்

”ஐயா, ஒங்களுக்கு தப்பா பில் போட்டுப் பணம் வாங்கிட்டாங்க. இதைவிட ஒஸ்தி கடிகாரத்துக்கு உள்ள பணத்தை ஒங்ககிட்ட வாங்கிட்டாங்க. தப்பு நடந்து போச்சு, எல்லாம் மறதிதான். இப்ப உங்க பணம் 200 ரூபாய் இங்க இருக்கு. இந்தச் செயினை தூக்கிப் போட்டுட்டு வேற ஒரு தோல்வார் தர்றேன். அதைக் கட்டிக்கிங்க. என்று சொல்லி 200 ரூபாய் தந்தார்.

அந்த நேர்மையைக் கண்டநான் அதன்பிறகு வேறு கடைக்குச் செல்வேனா? வியாபாரத்தில் நேர்மை இருந்தால் வியாபரம் பெருகும். நிரம்ப லாபம் கிடைக்கும். மோசடி செய்தால் அந்த வியாபாரத்தோட சரி. அதன் பிறகு நடக்காது.

(தொடரும்….)

 

1 Comment

  1. Awesome. Thanks a lot!

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்