Home » Articles » உறவுகள்… உணர்வுகள்…

 
உறவுகள்… உணர்வுகள்…


செலின் சி.ஆர்
Author:

தொடர்…
சி.ஆர். செலின்
மனநல ஆலோசகர்

கலர் காகிதம் சுற்றி, வெல்வெட் ரிப்பன் ஒட்டி அமர்க்களமாய், ஆர்ப்பாட்டாமாய் கொடுக்கும் பரிசுக்கே இவ்வளவு முக்கியத்துவ மென்றால், அடிப்படை ஜீவனத்தேவைகளை நிறைவேற்றி வைப்பது எவ்வளவு அவசியம்?

பொருளாதார ரீதியில் நம்மை சார்ந்திருப்பவர்களை அலட்சியப்படுத்தாமலிருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் இருப்பவர்களால் உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.

நன்றாக யோசித்துப் பாருங்கள், நமக்கு யாருடைய உதவியாவது தேவையென்றால் எப்படி வலியச் சென்று ஐஸ் வைக்கிறோம். அத்தனை நாட்கள் முகத்தைப் பார்த்துக் கூடப் பேசியிருக்க மாட்டோம். காரியம் ஆகவேண்டுமென்றால் பனிக்கடலுக்குள்ளேயே அவரை அமிழ்த்தி விடுவோம்.

இதற்கு நேர்மாறாக… நம்மைத் தேடி வரும் ஒருவரைப் எப்படி நடத்துகிறோம்…? முதலில் ஃபார்மாலிட்டிக்காக கொஞ்சம் தாராளமாய் புன்னகைத்து வரவேற்போம். கொஞ்சம் கொஞ்சமாய் புன்னகையில் நீள, அகலம் குறையத் தொடங்கி விடும்.

உறவுக்காரரோ, உடன்பிறந்தோரோ நம்மை நாடி வரும்போது மனம் சஞ்சலப்படும். இருந்தாலும், சமாளித்து ஏதோ கொஞ்சம் கருணை காட்டுவோம். வேறு கதியில்லாமல் அவர்கள் நம்மை சார்ந்திருக்கத் துவங்கும்போது எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு ஆட்டு விப்போம்.

”நான் காசு தருகிறேன. நீ எனக்கு அடிமை யாயிரு…” என்று சொல்லாமல் சொல்லி முடிவதுமாக நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்வோம்.

சூழ்நிலைதான் மனிதர்களது சுயரூபத்தை வெளிக்கொணர்கிறது. இது முற்றிலும் உண்மை. சூழ்நிலை மனிதர்களை மாற்றிவிடுகிறது என்பதை விட, அவர்களது இயல்பான, உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறது என்பதுதான் சரி.

அம்மா, அப்பாவை இழந்த இளம்பெண். அண்ணன் – அண்ணியுடன் தங்கியிருக்கிறாள். குடும்பத்தில் பெரியவர்கள் இல்லாத சூழ்நிலை யில் மனைவியின் உறவினர்களை உணர்வு ரீதியாக சார்ந்திருக்க வேண்டிய நிலை. மனைவியின் காலடியே சரணம் என எப்போதோ விழுந்திருப்பார். எந்த புத்தசிலி ஆண்மகனும் செய்யும் முதல் காரியம் இதுதானே. அதனால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆக மொத்தத்தில் லகான் இப்போது மனைவி கையில்.

கணவனை விட்டுவிடுவோம். அண்ணிக்கும் அந்த இளம்பெண்ணுக்குமான உறவு எப்படியிருக்கும்? தன் கணவரின் தங்கையை எப்படி நடத்துவாள்…? ஆகா, நாம் கொடுமைப்படுத்துவதற்கு ஒரு ஜீவன் கிடைத்துவிட்டது என புளகாங்கிதப்படுவாளா? அண்ணியின் ஆளுமைக்கு உட்பட்டவள் நீ என்று அதிகாரம் செலுத்து வாளா…?

எடுத்த எடுப்பில் இப்படியெல்லாம் திட்டமிடுவார்கள் என்று சொல்ல முடியாது. இப்படி எவ்வித திட்டமிடலும் இல்லாமலேயே பெரும்பாலும் இவை நடந்துவிடும். என்ன, புரியவில்லையா? Influence என்ற வார்த்தையை பல சூழ்நிலைகளில் பயன்படுத்தியிருப்போம். இதற்கு என்னென்ன அர்த்தங்கள் இருக்கின்றன.

1. Affect

2. Modify

3. Power to sway or affect based on prestige
wealth, ability or position
4. One Exercising Such Power.

மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள். ஏதோ ஒரு விதத்தில், நாம் மற்றவரை விட ஒருபடி மேலேயிருக்கும்போது அவர்களை எப்படியோ ஒரு விதத்தில் அலைக்கழிக்கிறோம், பாதிக்கிறோம், சித்தரவதை செய்கிறோம். மற்றவர்களைவிட படிப்பிலோ, பண்பிலோ நாம் மேலேயிருந்தால் அது அப்படியொன்றும் பெரிய விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடாது.

உன்னைவிட நான் அழகு என்று பறைசாற்றிக் கொள்ளலாமே தவிர அதை வைத்துக்கொண்டு பெரிதாய் எதுவும் செய்துவிட முடியாது. ஆனால், பணம்… பதவி இந்த இரண்டு விஷங்களை வைத்துக்கொண்டு அடுத்தவர்களின் உணர்வுகளோடு விளையாடி அவர்களை சீரழித்துவிட முடியும்.

பதவியில் நமக்கு கீழேயிருப்பவர்களை ஆட்டுவிக்கும்போதுகூட நமக்கு மேலேயிருப்பவர்களை நினைத்து ஒரு பயம் வரும். அதனால் வேறு வழியில்லாமல் கொஞ்சம் கட்டுப்பாட்டுடனிருப்போம்.

ஆனால். பணம்…?

இப்போது மீண்டும் அண்ணி- நாத்தனார் விஷயத்துக்கு வருவோம். கணவனின் தங்கை – பெற்றோர் இல்லை. அவள் மீதான முழுபொறுப்பும், உரிமையும் எனக்கிருக்கிறது. சம்பாதிப்பது நானும், என் கணவனும். பணம் எங்கள் பணம். தினம் மூன்று வேளை சாப்பாட்டிற்கும், உடைக்கும், உறைவிடத்துக்கும் எங்களை சார்ந்திருக்கிறாள். இதற்கு மேல் படிப்பு, கல்யாணம்… இன்னும் என்னென்னவோ… மனம் கணக்குப் போட்டுப் பார்க்கும்.

அதே அளவு வீடு… அதே கரண்ட் தானே… இதில் அலட்டிக்கொள்ள மனசுக்குள் என்ன இருக்கிறது. ஆனாலும், ஏதோ பெரிய தியாகத்தை செய்வதுபோல் மனசுக்குள் அடிக்கடி கணக்குப் போட்டுக் கொள்வாள். ” என்ன செய்றது பெத்தவங்க போய்ட்டாங்க. எல்லாப் பொறுப்பும் எங்க தலையில…” என நாலு பேரிடமாவது புலம்புவாள்.

அவர்கள் கொஞ்சம் ” உச் ” கொட்டினால் போதும், இன்னும் கிர்ர்ரென ஏறிக்கொள்ளும் ஒரு பக்கம் பெருமிதம். இன்னொரு பக்கம் இவ்வளவு செய்கிறோமே… நமக்கு என்ன கிடைக்கும் இவளால் என்ற கணக்கு. மெல்ல கணவனிடம் சொல்வாள். ” அண்ணிக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணக்கூடாதா?” – லேசாய் எகிறுவான்.

கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு வேலையெல்லாம் அந்த சின்னப்பெண் தலையில் ஏறிவிடும். ஒரு வருடத்துக்கு கணக்குப் போட்டுப் பார்த்தால், இவள் சாப்பாடு, துணி மணிக்கு ஆனது தவிர ஆயிரக்கணக்கில் அவளுக்கு கொடுக்க வேண்டியிருக்கும்.

” அப்படின்னா அண்ணிக்கு வீட்டு வேலைல உதவக்கூடாதுனு சொல்கிறீங்களா? இப்படி சொல்லி சொல்லித்தானே எங்களை கொடுமைக் காரியா சித்தரிக்கிறீங்க…?”

உதவுதல் என்பது வேறு. கொடுக்கல் வாங்கல் என்ற கணக்கு வேறு. நீ என்னை சார்ந்திருப்பதால் உன் சந்தோஷங்களை நீ அடகு வைத்துவிட வேண்டும் என எதிர்பார்ப்பது அராஜகம். அது வேண்டாமென்றுதான் சொல்கிறேன்.

வயதான காலத்தில் சார்ந்திருக்கும் பெற்றோரை அவமதிப்புது, கணவனை இழந்து பிறந்த வீட்டிற்கு வரும் அக்காவை வேலைக்காரி யாக்குவது எல்லாம் அவர்கள் பொருளாதார ரீதியில் நம்மை சார்ந்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்தினால்தான்.

நம் மனதின் தூண்டுதலினாலோ, மற்ற உதவிகளின் Influence னாலோ மற்றவர்களின் சுயமரியாதையை, மெல்லிய உணர்வுகளை எவ்வித குற்றவுணர்வுமின்றி நசுக்கிக் கொண்டிருக்கிறோம்.

சரி, என்னதான் செய்யனும்…?

நம் வீட்டிற்கு உறவுக்காரர்கள் வந்தால் என்ன செய்கிறோம்? காலையில் எழுந்ததிலிருந்து, இரவு படுக்கைக்குச் செல்லும்வரை இது வேண்டுமா, அது வேண்டுமா எனக் கேட்டு பணிவிடை செய்கிறோம். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் போது கேட்டு வாங்க சங்கோஜப்படுவார்களே என்று நாமே வலிய வலிய பரிமாறுகிறோம்.

உங்களைச் சார்ந்திருக்கும் உறவினர்களிடமும் இப்படித்தான் செய்யுங்கள். சாதாரணமாக பேசும்போதுகூட வார்த்தைகளில் கவனமாயிருங்கள். அவர்களது தேவைகளை நீங்களே வலியச்சென்று கேட்டறிந்து நிறைவேற்றுங்கள். நீங்கள் கொடுக்கும் நிலையிருக்கும் போதுதான் இன்னும் அதிகம் பணிவாயிருக்கு வேண்டியது அவசியம்.

நண்பர்களுக்கிடையேயான உறவில் பொருளாதாரப் பிரச்சினைகள் எப்படி வரக்கூடும்? உறவையே விரிசலாக்கி விட வாய்ப்புள்ளதா…?

நிச்சயமாக இரண்டு நண்பர்கள் பார்ட்னர் ஷிப் அடிப்படையில் பிஸினஸ் துவங்குவதைப் பார்த்திருப்பீர்கள். அமர்க்களமாக அழைப்பிதழ் அடித்து, சீரியல் பல்ப் மாட்டி அலங்கிரித்து கோலாகலமாய் துவக்கவிழா கொண்டாடுவார்கள்.

ஆரம்ப தடபுடல்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து, ஐந்தாறு மாதத்திற்குள் சாயம் வெளுக்க ஆரம்பிக்கும். லேசாய் பிரச்சனை துவங்கும். ” இந்த மாசம் எவ்வளவு லாபம்? பராமர்ப்புக்கு இவ்வளவு ஆச்சே, எல்லாம் நாந்தானே கொடுத்தேன். உன் பங்கு எங்கே?”

”இந்த ஆர்டர் பிடிச்சது நான். எனக்கில்ல் அதிக ஷேர் வரணும்…?”

”ஹாலே, நீ ஒர்க்கிங் பார்ட்டனரா இருக்கலாம்பா. இன்வெஸ்ட் பண்ணுணது யாரு? மாசா மாசம் வட்டிக்கே எவ்வளவு அழறேன் தெரியுமா…? காசோடோ அருமை பணம் போட்டவங்களுக்குத் தானே தெரியும்.”

”சும்மா பேசிட்டே போகாதே, நானும்தான் பணம் கொடுத்திருக்கிறேன்”.

”ஆங்… அது எந்த மூலைக்கு? யானை பசிக்கு சோளப்பொரி கொடுத்த கதையா…”

போதும் நிறுத்து… வெயில்ல அலைஞ்சு ஆர்டர் பிடிச்சு பாரு, அப்பத்தெரியும் வலி…”

இப்படியே நீண்டு, வார்த்தைகள் தடித்து கடைசியில் அடிதடியில் வந்து முடியும் ஆசிர்வதித்து கடையைத் திறந்து வைத்து அதே ஊர்ஜனம் கட்டைப் பஞ்சாயத்து நடத்தி பிரித்து வைக்கும்.

“நீ கவலைப்படாதே ப்ரதர். நான் இடம் தர்றேன், நீ ஆர்டர் வாங்கு…” என எரியும் வீட்டில் பிடுங்க நினைப்பது போல், ஆறுதல் வார்த்தைகள் கூறும் சாக்கில் ஆதாயம் தேட ஆரம்பிப்பார்கள்.

”அக்னி நட்சத்திரம் ” ஸ்டையில் நண்பர்களிருவரும் ஆளுக்கொரு திசையில் பிரிவார்கள். வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தக் காட்சியைப் பார்த்ததில்லை நீங்கள்? பார்ட்னர்ஷிப் அக்ரி மென்ட்டெல்லாம் நீங்கள்? பார்ட்னர்ஷிப் அக்கரி மென்ட்டெல்லாம் பெரும்பாலும் தோல்வியில் முடிவது ஏன்…?

பண விவகாரத்தையும், நட்பையும் கலக்காமல் அந்தந்த எல்லைக்கோட்டில் சரியாய் நிற்காதுதான். நட்பு இன்னமும் பலப்பட வேண்டுமெனில் பணவிஷயத்தைப் பற்றி தெளிவாய்ப் பேசி முடிவுசெய்ய வேண்டும் என்ற அடிப்படை சிந்தனை இல்லாமல் போதுவதான்.

ஃப்ரெண்ட்ஷிப்ல இதெல்லாம் என்னடா பெரிய விஷயம்?” என்று ஆரம்பத்தில் நாசூக்காய் நழுவப்பார்த்தால்கூட, நீங்கள் விடாதீர்கள். கணக்கு வழக்கு விஷயத்தில் நீங்கள் கறாராய், தெளிவாய், உண்மையாயிருக்கிறீர்கள் என்பதை உங்கள் நண்பருக்குப் புரியவையுங்கள்.

அவர் மனதில் சந்தேகம் தோன்றுவதுலேசாய் வெளிப்பட்டால் கூட உடனே தீர்த்து வையுங்கள். இப்படித் தோன்றக்கூடும் என்று நீங்களே யோசித்து அவர் கேட்குமுன் அதற்கான பதிலைக் கொடுத்து விடுவது நல்லது. ”சே, என்னை சந்தேகப்பட்டுட்டானே…” என்று உணர்ச்சி வசப்படாதீர்கள்.

சந்தேகத்திற்கும், சலனத்திற்கும் இடம் கொடுக்காமல் வெளிப்படையாய் விளக்கிவிடுவது நல்லது. அதேபோல் நீங்களும் மூடிமறைத்து மௌனம் காக்க வேண்டாம். வரவு செலவு விஷயத்தில் திறந்த புத்தகமாயிருங்கள்.

தோழில்முறை விவாதங்கள் முடிந்தவுடன் தாராளமாய் தோளில் கை போட்டுக்கொண்டு ஊர்க்கதை பேசலாம். இந்த இரண்டுவழிப் பாதைகளையும் சரியாய் பேலன்ஸ் செய்யக் கற்றுக்கொண்டால் பார்ட்னர்ஷிப்பில் பிரச்சினையாவது…? சண்டையாவது…?

கடன் அன்பை முறிக்கும்

சமயத்தில் கையைக் காலையும் முறிக்கும்!

இதைத எங்கோ படித்தபோது சிரிப்பு வந்தது. அடுத்த கணம் சிந்திக்கத் தோன்றியது. யோசித்துப் பாருங்கள், எவ்வளவு உண்மையென்று.

”பாவம்னு பரிதாபப்பட்டு கடன் கொடுத்தேம்பா. இப்பப்பாரு என்னை அலைய விடறான். அடுத்தவங்களுக்கு பரிதாபப்பட்டா, நம்ம கதி இதுதான்…” இதைபோன்ற புலம்பல்களைக் கேட்டிருப்பீர்கள். இல்லை, நீங்களே இந்தகதிக்கு ஆளாகியிருப்பீர்கள்.

கடன் கொடுத்து உதவுவதில் தவறில்லைதான். அதற்குமுன் சில விஷங்களில் நீங்கள் தெளிவாயிக்க வெண்டும்.

1.    பெரிய தொகையைக் கடனாக்க் கொடுக்கிறீர்கள் என்றால், சே என்ன நினைத்தாரோ இவ்வளவு நாள் பழகியும் நம்ம மேல     நம்பிக்கை இல்லையேனு தப்பா நினைச்சுப்பாரோ என்ற சிந்தனைகளையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு பத்திரத்தில் எழுதி     வாங்குங்கள்.

முதலில் பந்தாவாய் கொடுத்துவிட்டு, அவர் திருப்பிக் கொடுக்கும்வரை பதைபதைத்துக் கொண்டிருப்பதைத் தவிர்க்கலாம்.

எனக்குத் தெரிந்த நண்பர் இப்படித்தான், அவரது நண்பரின் திருமணத்துக்கு பெரிய தொகையைக் கடனாக கொடுத்து விட்டார்,     எதையும் எழுதி வாங்காமல். இரண்டு வருடங்கள் பேச்சு மூச்சேயில்லை. கடைசியில் ஒரு இக்கட்டான நிலையில் இவர்     பணத்தைத் திருப்பிக் கேட்க, ”நீ ஆதாரம் வைத்திருக்கிறாயா” என அவர் கேட்க… வேறு வழி? ஹோகயாதான். இந்நிலை உங்களுக்கு     வரவேண்டுமா?

2.    தெரிந்தவர்களுக்கு கடன் கொடுக்கிறீர்கள், அவர்கள் நட்பு அறுந்துவிடக்கூடாது என நினைக்கிறீர்களென்றால் உங்களுக்குப்     பொருட்டேயில்லாத ஒரு தொகையை மட்டும் கொடுப்பது நல்லது. அதை திரும்ப எதிர்பார்க்காதீர்கள். பரிசு கொடுத்தது போல்     நினைத்துக்கொள்ளுங்கள்.

3.    அடுத்தது மிக மிக முக்கியமான ஒரு Rule – கடன் வாங்கி கடன் கொடுக்காதீர்கள். உங்கள் பணமாயிருந்தாலாவது பரவாயில்லை,     பரிதாபப்பட்டு உதவுகிறேன் பேர்வழி என்று நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கிக் கொடுத்து, கடையில் உங்கள் உறவினரால் அதை     திரும்ப செலுத்த முடியாமல் போகும்போது நீங்கள் கடன்காரருக்கு பதில் சொல்ல வேண்டிவரும். தேவையில்லாத மன உளைச்சல்     வேறு. தயவுசெய்து இந்த ரிஸ்க்கை எடுக்காதீர்கள்.

பணத்திற்கும், உறவுகளுக்குமிடையேயுள்ள இந்த சின்னச் சின்ன பிழைகளை சரியாய் இணைத்தால், அழகான உறவுக்கூட்டிற்குள் சுகமாய் வாழ்வீர்கள்.

(தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்