Home » Articles » வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க

 
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க


சண்முக வடிவேல் இரா
Author:

தொடர் – ( 14 )
– ” நகைச்சுவைத் தென்றல் ” இரா. சண்முக வடிவேல்

” மூத்த பிள்ளையா ஒரு குடும்பத்துல இருக்கறதவிட, நாயாப்பொறந்து அடிபட்டு சாகலாங்க” என்று என் நண்பர் ஒருவர் ஒருநாள் ஒப்பாரி வைத்தார். ” ஏங்க அப்படிச் சொல்றீங்க? மூத்த பிள்ளைக்கு மரியாதை அதிகமாத் தருவாங்களே! எல்லாத்தையும் ஒங்களக் கேட்டுத்தானே முடிவுசெய்வாங்க!” என்று அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன்.

” மரியாதையாம் மரியாதை! யாருக்கு வேணும் இந்த மதிப்பும் மரியாதையும்? மனுசன் நாய்படாதபாடுல்ல படவேண்டியிருக்கு? தங்கச்சிங்களுக்கு சீர்வரிசைன்னா நான்தான். அம்மா அப்பாவுக்கு மருந்தா? நான்தான் வாங்கித்தரனும். வச்சிக் காப்பாத்தறதா? நான்தான் காப்பாத்தனும். மத்தவனெல்லாம் அவனவனும் அவனவன் வேலையைப் பாத்துக்கிட்டுப் போயிறானுவ, நான்தான் மாட்டிக்கிட்டுத் தவிக்கிறேன் போங்க”

இன்னும் ஏதேதோ சொல்லி, தன் ஆதங்கத்தைக் காட்டினார்.

அப்படியானால் முதல் பிள்ளையாய் இருப்பதில் பொறுப்பு அதிகமோ? அடுத்தடுத்தவர்களுக்கு பொறுப்பே இல்லையோ? நினைத்துப் பார்த்தால், பொறுப்பு என்னவோ அதிகந்தான். அதனால் அடுத்த பிள்ளைகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லையென்றாகிவிடுமா?

தலைமகன் பொறுப்பு என்பது, தலைசிறந்த பொறுப்பாகும். அதிகம் குழந்தைகள் உள்ள குடும்பத்தில், கடைசியாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு தலைமகன் என்பவன் தந்தை போன்று கடமையாற்ற வேண்டியவனாகிறான். தந்தை, தாய் வலுவிழந்தவர்களாக வீட்டில் செயலற்று இருப்பார்கள். முதல் மகன் உழைத்து எல்லோரையும் கரைசேர்க்க வேண்டியவனாக இருப்பான். தலைமகன் தான் என்பதில்லை, தலைமகளாய்ப் பிறப்பவள் நிலையும் இதுவேதான்.

நாம் வேண்டிப்பெற்ற பதவியல்ல இது தானாகவே வந்த தகுதி.

” வளைகாப்புப் போட்டுப் பொறந்தவன் நான்தான்டா!” என்று பெருமை பேசிக் கொள்ளும் தலைமகன்கள் பலபேர் உண்டு.

எனவே, ஆவலுடன் எதிர்பார்த்துப் பெற்றபிள்ளை தலைப்பிள்ளை. அதனால்,இதிலே அலுத்துக்கொள்ளவோ, சலித்துக் கொள்ளவோ எதுவும் இல்லை.

கடைக்குட்டிப் பிள்ளை கூட இப்படிச் சலித்து அலுத்துக்கொள்ளலாம், ”நான் ஏன்தான் கடைசிப் புள்ளயா பொறந்தேனோ? கடைத்தொரு போவனுமா? நான்தான். எல்லார் துணிமணியும் மடிச்சு வைக்கணுமா? நான்தான். அப்பாவுக்கும் கால் அமுக்கிவிடனுமா? நான்தான் கெடைப்பேன். மத்தவங்க ஏறி மிதிச்சா அப்பா அம்மா பாடு அவ்வளவுதான்! சின்னவனக் கூப்படு, சின்னவனக் கூப்பிடுன்னு எப்பப்பாரு எல்லா வேலையும் என் தலையிலதான். மத்தவங்கல்லாம் கௌரவம் பாப்பாங்க. எனக்கு மட்டும் எந்தக் கவுரவமும் இல்லையா? மில்லுக்குப் போயி மாவு அரைச்சுட்டு வர்ற வேலை என்னோடதுதான்.

யாராக இருந்தாலும் குடும்பத்திலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருக்கத்தான் செய்கிறது. எல்லோர்க்கும் பணிவிடை செய்து படிப்பு, எதிர்காலம் பற்றிய கவலைகளைப் பெரியவரிடம் ஒப்படைத்துவிட்டுக் கவலையின்றித் திரிவது சிறியவனின் வேலை. அவரரும் அவரவர் வேலையைப் பார்க்கும்போது அந்தந்த வேலையையும் தானே செய்துமுடித்து ஏற்றம் பெறவேண்டும் என்று கருதிப் பணிபுரிந்தால் ஊரில் பெரிய கண்ணியமான குடும்பம் என்ற பெருமையும் கிடைக்கும்.

தாயும் தந்தையும் தங்கள் பிள்ளைகளை எண்ணிப்பெருமிதத்தோடு வாழ்வார்கள்.

அண்ணன், தம்பிகளைக் கனிவோடு பார்ப்பதும், தம்பி, தங்கைகள் அண்ணனை, மதிப்பிற்கும் மரியாதைக்கு உரியவராகப் போற்றுவதும் நல்ல குடும்பத்துக்கு அடையாளம்.

இந்த நாளில் கூட்டுக் குடும்ப முறை இல்லையென்றே பெரும்பாலும் சொல்லிவிடலாம். ஆனாலும், தனித்தனியே வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தாலும் குடும்பத்து நிகழ்ச்சிகளுலும் தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களிலும் ஒன்று சேர்கிறோம். அப்போதும் கூட அவரவர் பொறுப்புக்கேற்ற பணிகளில் அலுப்போ சலிப்போ இல்லாமல் ஈடுபடுவதும் விட்டுக்கொடுப்பதும், சகிப்புத் தன்மையோடு இருப்பதும் ஒற்றுமைக்கு உதவும்.

எங்கள் அண்ணனும் நானும், எங்களுக்குத் திருமணமான நாள்களில், தீபாவளி பொங்கல் நாள்களில், எங்கள் தந்தையாரோடும், தாயா ரோடும், தம்பி தங்கைகளோடும் சேர்ந்திருப்போம். ஒரே மாதிரியில், இருவண்ணங்களில் அண்ணன் சேலை வாங்கி வைத்திருப்பார். இரு சேலைகளையும் காட்டி என் மனைவியைத் தனக்குப் பிடித்தை எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மற்றதை அண்ணியாரிடம் தருவார்.

தேர்ந் தெடுக்கும்போது சுவையான உரையாடல், என் மனைவியோ, ” உங்களுக்குப் பிடிச்சத எடுத்துக்கங்க அக்கா, இன்னொன்னை நான் எடுத்துக்கறேன்” என்பார். இருவரும் மாறிமாறிச் சொல்வதை நாங்கள் இருவரும் சிரித்துக் கொண்டே பார்த்து மகிழ்வோம்.

அண்ணனுக்குப் பிடித்த பலகாரங்களை என் மனைவியும், எனக்குப் பிடித்தமானவற்றை அண்ணியாரும் செய்வார்கள். எங்கள் அப்பாவும் அம்மாவும் அன்று முழுவதும் மகிழச்சி யில் திளைப்பார்கள்.

தம்பி தங்கைகளுக்கான வெடி, மத்தாப்பு, பூத்திரிகளை நானும் நிறைய வாங்கிச் செல்வேன். அண்ணனும் வாங்கி வருவார். எல்லாம் நல்லதாகவே நடந்து கொண்டிருக்கும். இரு நாட்களுக்குப் பிறகு எல்லோரும் ஊருக்குப் புறப்படும்போது, அம்மாவும் அப்பாவும் தம்பி தங்கைகளும் நானும் அண்ணனும் அண்ணியாரும் என் மனைவியும் கண்களில் நீர் தழும்பத்தான் பிரிவோம்.

பொங்கல் எப்போது வரும் என்று நாங்கள் எல்லோரும் ஏங்குவோம்.

” நல்ல குடும்பம் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று ஊர்க்காரர்கள் எல்லோரும் சொல்வார்கள்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நாம் வேறு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்? நாம் எடுத்துத்தரும் வேட்டி புடவைகளை விட, நம்முடைய ஒற்றுமையே அவர்களை இன்புறுத்தும்.

” உங்களுக்குப் பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கறேன்” என்று என் மனைவி சொல்கிறார்.

” உனக்குப் பிடித்ததை எடுத்துக்கோ இன்னொன்னு எனக்கு” என்று அண்ணியார் சொல்கிறார்.

இதுதான் விட்டுக்கொடுத்தல் என்பது. பெரியவர்கள் விட்டுக்கொடுக்கும் போது இளையவர்களும் அதற்குத் தயாராகிறார்கள். அது தனக்குத் கிடைத்த பெருவாய்ப்பு என்று நினைக்கவேண்டும்.

எல்லோரும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, தான் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழவேண்டும்.

” என்னண்ணே செருப்பு கிழிஞ்சிருக்கே, தச்சுத் தச்சுப்போட்டுக்கிறீங்களே, புதுசு ஒண்ணு வாங்கிக்கங்களேன்” இடையிலுள்ளவர் இப்படிச் சொல்கிறார்.

” இல்லப்பா இந்த மாசம் சின்னவனுக்குப் பள்ளிக்கூடப் பணம் கட்டணுமில்லே. அடுத்த மாசம் வாங்கிக்கலாம்னு இருக்கிறேன். நீ காலேஜீக்குப் புத்தகம் வாங்கனும்னு சொன்னியே. இன்னிக்கி வேணுமா? ரெண்டு நாள் கழிச்சுத் தரலாமா? நாளைக்கு ஒரு பணம் வருவது. அதிலே வாங்கிடலாம்”.

” அடுத்த வாரம் வாங்கிக்கலாம் அண்ணா, நீங்க செருப்பு வாங்கிக்கிங்க. கால்லே ஆணிகுத்திடும். உங்களுக்கு இனிப்பு நீர் இருக்குல்லே பாத்துக்குங்க”.

அண்ணன் தன் குடும்பத்துக்காக தியாகம் செய்கிறார். தம்பி அண்ணன் நலத்தைப் பரிவோடு பார்க்கிறார். இந்தக் குடும்பத்தில் எங்கிருந்து வேற்றுமை வந்து புகுந்துவிடும்?

சில நேரங்களில் மூத்தவரின் தியாகம் மதிக்கப்பெறாமல் போவதும் உண்டு. அந்த நேரங்களில் மனம் தளரக்கூடாது. நம்முடைய கடமையை நாம் செய்கிறோம். இன்றில்லா விட்டாலும் நாளை அவர்கள் உணர்வார்கள் என்ற நம்பிக்கையோடு செய்ல்படவேண்டும்.

வயதான தாய், தந்தையரிடம் தான் செய்யும் தன்னலமற்ற காரியங்களைப் பட்டியல் போட்டுக் காட்டுவது சரியல்ல. அதோடு சின்னவர்கள் ஏதேனும் தவறாக நடந்துகொண்டாலும் பெற்றோரிடம் அதைச் சொல்லி அவர்கள் மனத்தைப் புண்படச் செய்யாமல் இருத்தலும் வேண்டும்.

என் இளமைக் காலத்தில் பார்த்த ஒரு நிகழ்ச்சி. நாங்கள் குடியிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒருவர் வாழ்ந்து வாந்தார். நான்கு வீடுகளில் தள்ளி அவர் தம்பியின் வீடு இருந்தது. இருவருக்கும் நீண்டநாள் பகை. இருவரும் பேசிக் கொள்வதில்லை. போக்குவரத்தும் இல்லை.

அண்ணன் இறந்தவிட்டார். போய்ச் சொன்னார்கள். தம்பி வரவில்லை. பிள்ளைகளும் வேறு உறவினர்களுமாகச் சேர்ந்து காரியங்களைச் செய்தார்கள். மதியம் தூக்கிக் கொண்டு போனார்கள். தம்பி வீடு தாண்டித்தான் சவ ஊர்வலம் போயாக வேண்டும். தம்பி வீட்டுப் பக்கம் ஊர்வலம் செல்லும்போது, உள்ளேயிருந்து ஓ வென்று அழுது ஓலமிட்டபடி ஓடிவந்தார் தம்பி!

” அண்ணே போயிட்டியா? இனிமே என்னைக்கு அண்ணே உன்னைப் பார்க்கப் போறேன்?” என்று பரிதாபமாகக் கதறினார்.

பல்லக்கை இறக்கினார்கள். தம்பி அண்ணன் உடல்மீது விழுந்து புரண்டு தலையில் தலையில் அடித்துக் கொண்டு அழுதான். எல்லோரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். பாசம் அப்படிப்பட்டது.

ஒரு கதை, அதற்குள்ளே ஒரு கருத்து பார்ப்போம். பாகப்பிரிவினை ஆயிற்று அண்ணன் தம்பிக்குள். தம்பி ஒரு ஏமாளி – அண்ணன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. எல்லா சம்மாகப் பிரிக்கப்பட்டது. எல்லாவற்றிலும் பாதிப்பாதி.

தென்னையின் மேல் பகுதி அண்ணனுக்கு – தேங்காய் அவருக்கு. பசுவின் முன்புறம் தம்பிக்கு – தீனி போடவேண்டும். பாசுவின் பின்புறம் அண்ணனுக்கு – பால் கறந்து கொள்ளலாம். போர்வை கலையில் தம்பிக்கு – தேவைப்படாத நேரத்தில். மாலையில் போர்வை அண்ணனிடம் – குளிருக்குப் போர்த்திக்கொள்ள. எப்படிப் பிரிவினை? தம்பியின் ஏமாந்தநிலை இதற்கு உடன்பட்டிருந்தது.

தம்பிக்கு மனைவி வந்தாள். அறிவுறுத்தி ஏமாற்றத்தை வெளிப்படுத்தி தம்பியை கிளர்ச்சிக்குத் தூண்டினாள், தம்பி விழித்துக் கொண்டான்.

அண்ணன் தேங்காய் பறிக்கும் போது கீழே மரத்தை வெட்டினான். ” என்னடா தம்பி இப்படிப்பண்றே?”

” உன் பாகத்துல நீ கற. என் பாகத்தில் நான் அடிக்கிறேன்”

மாலையாயிற்று ” போர்வை எங்கே?” என்றான் அண்ணன். நீர் சொட்டச் சொட்ட போர்வையைத் தந்தான் தம்பி. ” அண்ணே இப்பத்தான் போர்வையைத் துவைச்சிருக்கேன்” என்று தம்பி சொன்னபோது, தம்பியின் விழிப்புணர்வை உணர்ந்து அண்ணன் திருந்தினான்.

இதுதான் கதை. கிராமத்துக் கதைதான். ஏமாற்றியபடி எப்போதுமே வாழ்ந்திவிட முடியாது. அரவணைத்தால் அகிலத்தையும் ஆளலாம். புரிந்தால் சரி.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2003

திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
உறவுகள்…. உணர்வுகள்…
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
உறுதியான செயல்
வெற்றிக் கணக்கு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
மாதுளை
ஏழுலகும் உன் வசம்
வெற்றிமாலை
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
தலைசிறந்த விற்பனையாளர் ஆக வேண்டுமா?
தோள்கள் தொட்டுப் பேசவா
படித்தலும், கற்றலும்
சிந்தனைத்துளிகள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
இளைஞனே… வா!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மனிதன் மனிதனாக இருக்க!
கிராமங்கள் காலியாகின்றன
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
இலட்சியக் கனவு காணுங்கள்
வாசகர் கடிதம்
தோள்கள் தொட்டுப் பேசவா?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
த(க)ண்ணீர்க் கனவுகள்