Home » Articles » வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!

 
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!


சண்முக வடிவேல் இரா
Author:

தொடர்…. 10

நகைச்சுவைத் தென்றல் ” இரா. சண்முக வடிவேல்”

” அன்பே சிவம்”, திரைப்பட மல்ல. தெவிட்டாத வாழ்வுக்கான வழி இது.

”அன்பும் சிவமும் வெவ்வேறு என்று கருதுபவர்கள் அறிவில்லாதவர்கள்” என்கிறார் திருமூலர்.

” அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே” என்கிறார் வள்ளலார்.

பெரியவர்களெல்லாம் கூறுவதைப் பார்த்தால் அன்பு மிகவும் சிற்ப்பானதாகவே தெரிகிறது.

குழந்தையிடம் அன்பு காட்டுவோரைக் குழந்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது.

மக்களிடம் அன்பு காட்டுவாரை இறைவன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என்கிறான்.

ஆனால், சிலருக்கு அன்பு காட்டுவது என்றால் என்னவென்றே தெரிவதில்லை.

” ஐயா, இந்த தெருவில சுப்பிரமணின்னு ஒருத்தர் – முந்தி மளிகைக் கடையிலே வேலை பாத்தவரு – கருப்பா கட்டையா இருப்பாரு – முன்னால ரெண்டு பல்லு இருக்காது. அவரு வூடு எங்க இருக்கு தெரியுங்களா?”

இப்படி, பல்வேறு பகுதிகளில் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் இந்தத் தெருவிலாவது இருக்கிறாரா என்று கடைசி முயற்சி செய்து விடுவது என்ற நோக்குடன், தெருவில் நிற்கும் ஒருவரிடம் விசாரிக்கிறார்.

சுப்பிரமணியைத் தேடிவந்தவர் திக்குத்திசை அறியாமல் திகைத்து நிற்கிறார்.

பக்கத்து வீட்டுக்காரர் வெளியில் வந்து இவரைக் கூப்பிடுகிறார். விசாரிக்கிறார், ” இதற்கு முந்தி எந்த வீட்டுல குடியிருந்தார்? அவருடைய மகன் என்ன செய்கிறார்?” என்றேல்லாம் பரிவோடு கேட்டார்.

சுப்பிரமணியன் பெரிய மகன் கணேசன் போலீஸ் வேலையில் இருப்பதாகவும், அவர் இந்த ஊரிலேயே வேலை செய்வதாகவும் சொன்னார். சின்ன பையன் படித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

எல்லாவற்றையும் கேட்ட அன்பர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பெரிய மகனைக் கண்டுபிடித்து இவரோடு பேசவைத்தார். அந்தப் போலீஸ்காரர் தான் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு, வந்து தன் மோட்டார் சைக்கிளில் இவரை அழைத்துச் சென்றார்.

போகும்போது அந்தப் பெரியவர் கண்களில் நீர் தளும்பியது. வீட்டுக்காரர் கையை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டார். ‘’ஐயா நீங்க நல்ல இருப்பீங்க. மாலை நேரம் வந்துட்டா கண்ணு மறைக்கும். என்ன செய்யப் போறோம்னு தவித்தேன்யா. தெய்வம் மாதிரி உதவினீங்க’’ இவ்வாறி தழுதழுத்தார் அந்தப் பெரியவர்.

இந்த வீட்டுக்காரரும் பக்கத்து வீட்டுக் காரரைப் போலவே ‘’ வள், வள்’’ ளென்று விழிந்திருக்கலாம். அவ்வா றின்றி முயன்று அவருக்கு உதவி செய்தாரே அதுதான் அன்பு.

அதனால் தான் ‘’தெய்வம் மாதிரி வந்து உதவினீங்க’’ என்று பெரியவர் நெஞ்சார மொழிந்தார்.

அன்பு செய்தவருக்குப் பணங்காசு வேண்டியதில்லை. நல்ல மனம் இருந்தாலே போதுமானது. நல்ல மனம் முயலச் சொல்லும். முயற்சியில் பிறர்க்கு உதவி வாய்க்கும். உதவி பெற்றவர் உளார வாழ்த்துவார். உதவிய நம் மனமும் நிறைவடையும்.

‘’ அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே’’.

என்கிறார் தாயுமானவர்.

யாரோ ஒருவர்க்கு அன்புடன் உதவுவது அறம் ஆகிறது. நம்மோடு சேர்ந்து வாழ்பவரிடமே நாம் அன்பு செய்கிறோமா என்றால், சந்தேகம்தான்.

முழுமையான அன்பை மனைவியிடம் செலுத்திப் பார்த்தால், தெரியும் அதன் சுகம்!

‘’ என்ன சுமதி இன்னக்கி வீட்டில வேலை அதிகமா? ரொம்ப சோர்வா இருக்கியே?’’

மாலையில் வீடுவந்து இப்படிக் கேட்டால் மனைவி மனம் மகிழும்.

‘’ என்னதான் சண்டை போட்டாலும், அவருக்கு என்மீது தனிப்பாசம் இருக்கத்தான் செய்யுது, இல்லாட்டி இப்படிக் கேட்பாரா? என்று நினைக்கத் தோன்றும்.

‘’ பூவா வாங்கிட்டு வந்தீங்க? மாசக் கடைசியில இதெல்லாம் என்னத்துக்குங்க? 20 தேதிக்கு மேல் நீங்க படுற பாட்டைப் பார்த்தா மனக ரோம்ப கஷ்டப்படுதுங்க’’ என்று சொல்லிக்கொண்டே கையைப் பிடித்துக் காதலோடு அழுத்துவாள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி ‘’ கொள்ளையோ கொள்ளை’’ !

குழந்தைப் பருவத்தில் மகனிடமும் மகளிடமும் அன்பைப் பொழிந்து அரவணைக்கும் நாமே பின்னர் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது எதிரிகளைப் பார்ப்பதுபோலப் பார்க்கிறோம்.

‘’ ஏன்டா இவ்வளவு நேரங்கழிச்சு வர்றே. எங்க சுத்திட்டு வர்றே?’’ என்று கேட்டு அவன் ஊரைச் சுற்றிவிட்டு வருவதாகத் தான் சந்தேகப்படுவதை வெளிப்படுத்துகிறார்.

‘’கோச்சிங் கிளாஸ் நடந்ததுப்பா. முடிச்சிட்டு விளையாடிட்டு வரேன்பா’’

இந்த பதிலை நாம் நம்பத் தயாராக இல்லை என்பதுபோல முகபாவம் காட்டுகிறோம். பையனின் மனோபாவமும் அதற்கேற்ப மாறுகிறது.

மகளிடமும் இப்படித்தானே நடந்து கொள்கிறோம்.

இதையே மாற்றி அன்பான உரையாடலாக ஆக்கிப் பார்த்தால் விளைவு அற்புதாமாக ஆகிறது.

‘’ தம்பி பள்ளிக்கூடம் முடிஞ்சா சீக்கிரமா வந்துடுப்பா. விளையாடுகிறதா இருந்தா சொல்லிட்டுப் போயேன். நாங்க இன்னும் காணோமேன்னு கவலைப்படாம இருப்போம். இல்லியா?’’ என்று கேட்டால். இ

‘’மறந்துட்டேம்பா. இனிமே சொல்லிட்டுப் போறோம்பா. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் விளையாடக் கூப்பிட்டாங்க. அதனால போயிட்டேன். என்று பவ்விய விடை வரும்.

அப்பா நம்மீது அன்பாகத்தான் இருக்கிறார். நாம் செய்தது தவறுதான் என்று உணருமாறு நம் பேச்சு அன்பாக இருக்க வேண்டும்.

கண்டிப்பது கூட, பூனை தன் குட்டியைக் கவ்வுவது போல் தவறுதான் இருக்க வேண்டும். பூனை எலியைக் கவ்வுவது போன்று இருந்துவிடக் கூடாது.

மகளின் நடத்தையில் சந்தேகம் வரக்கூடாது. என் மகள் ஒருநாள் பள்ளியிலிருந்து நேரங்கழித்து வந்தாள். ப்ளஸ் டூ படிக்கும் அவள் நேரங்கழித்து வருவதைக் கண்டு மனைவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. மகளைக் கண்டபடி திட்டுவதற்குத் தயாராகி விட்டாள்.

செருப்பை மகள் கழற்றிக் கொண்டிருக்கும் போதே, மனைவியிடம், ‘’ நீ அமைதியாயிரு. நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கண்ணாலேயே கூறிவிட்டு மகளிடம்,

‘’ வாம்மா, வா. என்னா இன்னக்கி ஸ்கூல்ல ஏதாவது வேலை இருந்திச்சா? என்றேன்.

‘’இல்லப்பா? நாளாக்கி ஆண்டு விழாவிலே நான் டான்ஸ் ஆடுறேம்பா. அதுக்கு சாமான்லாம் ஃபேன்சி ஸ்டோர்ல வாங்கிட்டு வரேம்பா. காணோமேன்னு கவலைப்பட்டீங்களா?’’

‘’ஆமாம்மா, பொழுது போனப்புறம் காணோம்னா, கவலை வந்துடுதேம்மா. கடையிலேருந்தே ஒரு ஃபோன் பண்ணக்கூடாதாம்மா?’’

‘’மறந்துட்டேம்பா. இனிமே லேட்டானா ஃபோன் பண்ணி சொல்லிடறேம்பா. சாரிப்பா!’’

பிறகு வாங்கிவந்த பொருகளைப் பிரித்துக் காட்டினாள். என் மனைவியும் உண்மை உணர்ந்து சாநய்தமடைந்தாள். எல்லாம் சுமூகமாக நிறைவேறியது.

எடுத்தவுடன் எகிறியிருந்தால், தன்னைச் சந்தேக்ப்படும் தாய் தந்தேயாரை மகள் அலட்சியமாகப் பார்க்க ஆரம்பித்து விடுவாள். என்ன செய்தாலும் ஒட்ட முடியாத பிரிவினை தோன்றிவிடும்.

இவ்வாறு குடும்பத்தாரிடம் அன்பு செலுத்தும்போது, எல்லோரும் அன்புடையவர்களாக மலர்ச்சி பெறுவார்கள்.

‘’காய்கறி வாங்கணும். டேய் ரமேஷ் ஓடிம்போய்க் கடையில கால் கிலோ அவரைக்காயும் கால் கிலோ தக்காளியும் வாங்கிட்டுவாடா’’, என்று சொல்லும் தாயை படித்துக் கொண்டிருக்கும் மகன் முறைக்கிறான். பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் தந்தை.

‘’காமச்சி இங்க கொண்டா பணத்தையும் பையையும். அவன்தான் படிச்சிக்கிட்டு இருக்கானே. நான் போயி வாங்கிட்டு வாரேன்’’,
என்று கூறினால், மகன்,

‘’வேண்டாம்பா, நானே போயி வாங்கிட்டு வந்து குடுத்துட்டு அப்புறமா படிக்கிறேன்’’ என்பான்.

‘’என்னடா பெரிய ஐ.ஏ.எஸ். சா படிக்கிறே? போயி வாங்கிட்டு வந்து குடுத்துட்டுப் படியேண்டா தடி மாடு?’’ என்று கேட்டால், மகனிடமிருந்து வரும் பதில் வேறுவிதமாக இருந்துவிடும்

‘’நீங்க என்ன வெட்டியா முறிக்கிறீங்க? பேப்பர் படிச்சிட்டு இன்னக்கி சட்டசபையில பதில் சொல்லப் போறீங்களோ? போயிட்டு வாங்கப்பா’’. இப்படி அவன் சொல்லிவிட்டால் பிறகு இருவேறு உலகங்களாக ஒரு வீட்டுக் குள்ளேயே வாழ வேண்டி வந்துவிடுமே!

குழந்தைகளிடம் பாசத்தால் அன்பு காட்டினால், அவர்கள் மதிப்போடு அன்பும் செலுத்தவார்கள்.

நம்மோடு மாறுபட்ட கருத்துகொண்டு நம்மிடம் பகை செலுத்தும் மனிதர்களிடம் கூட, நாம் அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டால், பகைமாறி நட்பு பிறக்கும்.

என்னோடு பணியாற்றும் ஒருவர் என் எதிரியாக மாறியிருந்தார். நாங்கள் இருவரும் பேசுவதில்லை. பார்த்தால் வணக்கம் தெரிவிப்ப தில்லை. என் நண்பர்கள் அவர் பகைவர்கள். அவர் நண்பர்கள் என் பகைவர்கள். அவர் எது செய்தாலும் அது எனக்குப் பிடிப்பதில்லை. நான் செய்வது எதுவும் அவருக்கும் பிடிப்பதில்லை.

எதற்காக நாங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டோம் என்பதுகூட இப்போது நினைவில் இல்லை. பல ஆண்டுகளாகவே நாங்கள் எதிரிகள்தான்!

என் மகள் திருமணம் வந்தபோது அவருக்கு மட்டும் பத்திரிகை தருவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன்.

திருமணத்துக்கு ஒருவாரம் தான் இருக்கிறது. ஒருநாள் இரவு என் மனைவி ‘’ ஏங்க அவருக்கு மட்டும் பத்திரிகை தராம இருக்கறது முறையாங்க? சும்மா பத்திரிகையைக் குடுத்துவிட்டு கல்யாணத் துக்கு அவசியம் வாங்கன்னு சொல்லுங்களேன். வந்தா வராரு வராட்டி இருந்துட்டுப் போறாரு’’ என்று சொன்ன யோசனையை என்னால் தட்ட முடியாமல் அலுவலகத்தில் தனியாக அவர் இருந்தபோது, பத்திரிகையை அவரிடம் கொடுத்தேன்.

அவர் கண்கலங்கினார். கையைப் பிடித்துக் கொண்டார். ‘’அவசியம் வருவேன்’’ என்றார். அதோடு நில்லாமல், ‘’வாசல்ல வாழை மரம் கட்டணுமே, சொல்லி வச்சிருக்கீங்களா?’’ என்றார். ‘’இன்னும் சொல்லலே’’ என்றேன்.

‘’சொல்ல வேண்டாம். என் வீட்டுல ரெண்டு மரம் தார் விட்டிருக்கு, பூவோட இருக்கு நான் வெட்டிக் கொண்டார்றேன்.’’

ஆச்சரியம் தாங்கவில்லை எனக்கு. ஆக, அன்பு உள்ளே ஒளிந்து இருந்திருக்கிறது. நானும் மனைவி சொன்னதும் அழைப்பு தந்தேன். அவரும் அ.ழைப்பு பெற்றதும் காத்திருந்தவர் போல அன்பைப் பொழிந்துவிட்டார்.

‘’ அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’’ பகைகூட நட்பாகிவிடுமே, அன்பு காட்டினால்!

( தொடரும் )

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2003

திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
உறவுகள்…. உணர்வுகள்…
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
உறுதியான செயல்
வெற்றிக் கணக்கு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
மாதுளை
ஏழுலகும் உன் வசம்
வெற்றிமாலை
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
தலைசிறந்த விற்பனையாளர் ஆக வேண்டுமா?
தோள்கள் தொட்டுப் பேசவா
படித்தலும், கற்றலும்
சிந்தனைத்துளிகள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
இளைஞனே… வா!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மனிதன் மனிதனாக இருக்க!
கிராமங்கள் காலியாகின்றன
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
இலட்சியக் கனவு காணுங்கள்
வாசகர் கடிதம்
தோள்கள் தொட்டுப் பேசவா?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
த(க)ண்ணீர்க் கனவுகள்