– மெர்வின்
செயல்படாமல் யாரும் இருப்பதில்லை. எல்லோரும் செயல்படத்தான் செய்கிறார்கள். ஆனால், செய்கின்ற செயல் சரிவர ஆற்றல் படுகின்றனவா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். எச்செயல் செய்தாலும் இடம், பொருள், ஏவல் இம்மூன்றையும் கவனிப்பது அவசியம்.
வலிவு மிக உள்ள யானையும் நிலம் விட்டு நீரினுள் சென்றால் முதலையிடம் தோல்வி பெறும். நீரினிலுள்ள முதலை நிலத்திற்கு வந்தால் அது எளிதில் கொல்லப்படும்.
ஆகவேதான் எவ்வளவு கெட்டிக்காராக இருந்தாலும் வலிவுள்ளவராக இருந்தாலும், தான் செயல் செய்யும் இடம் தனக்குச் சாதகமான பலனைக் கொடுக்குமா என்று முன்னதாகவே ஆராய்ந்து வெற்றியை கொடுக்குமானால் விரைந்து செயல்பட வேண்டும்.
இல்லையென்றால் அச்செயலை ஒத்தி போட்டு விடுவது நல்லது. வலிவுள்ளவராக இருந்தாலும் பாம்புப் புற்றுக்குள் கைவிட்டால் பாம்பினால் கடிபட்டு உடலில் நஞ்சேரி மரணம் அடையும் நிலைதான் ஏற்படும.
அதனால் எந்த இடத்தில் நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்பதை மிக முக்கியமாகக் கருத்தில் கொள்வது அவசியமாகும். சரியான இடத்தில் தக்க காலத்தையும் அறிந்து செயல்பட வேண்டும் என்பது அறிவான முறையாகும்.
ஒருவனுக்குப் பசிக்கின்ற நேரத்தில் உணவளித்தால் அவன் பணி தீர்ந்து நம்மைப் பாராட்டுவான். பசி எல்லாம் அடங்கி அவன் தூங்கி கொண்டிருக்கும்பொழுது உணவு கொடுப்பதனால் என்ன பயனாகும்?
நாம் செய்யும் செயல் சரியான நேரத்தில் செயல்பட்டால்தான் சிறப்பும் பெறும்.
என்ன செயல் வேண்டும் என்ற எண்ணிப் பார்க்கிற போதே எப்பொழுது செய்ய வேண்டும் எப்படி, எங்கு செய்ய வேண்டும் என்பதனையும் நன்கு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
ஒரு காரியத்தைத் தொடங்கும்போது இருக்கும் ஆர்வம் அதனை முடிக்கும் வரையில் இருக்க வேண்டும். ஆர்வம் குறையக் குறைய வெற்றி தள்ளிக்கொண்டே போகும்.
எடுத்துக் கொண்ட காரியம் என்னவாக இருந்தாலும் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தொடக்கத்தில் ஏற்படும் ஆர்வம் குறையாமல் ஊக்கத்தோடு எத்தனை தடை வந்தாலும் விடாமல் முயன்று வெற்றி பெறுவதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.
உழைத்து வெற்றிகரமாகக் குறிக்கோளை அடைவோம் என்பது உறதி. வெற்றி என்பது வாழ்வில் ஒரு செயலை நன்கு தொடங்குவதல்ல. அதை நன்கு செயலாற்றி முடிப்பதே வெற்றியாகும்.
தொடங்கிய செயலை முடிப்பதற்குள் எத்தனையோ தடைகள் வரும். அதனைக் கண்டு உள்ளம் தடுமாறக் கூடாது. தளர்வு அடையக்கூடாது. பொறுமை கடைப்பிடிக்க வேண்டும்.
தடையை கண்டு மனம் தளர்ந்து விடாமல் தைரியமாக அதை நீக்கி முன்னேற மனதில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சில சமயங்களில் தடைகள் பெரியனவாகத் தெரியும். அவை சில சங்கடங்களை உண்டு பண்ணலாம்.
எடுத்துக்கொண்ட குறிக்கோள் எப்படியும் அடைந்தே தீரவேண்டும் என்று உறுதியுடன் இருந்தால், நமக்கு வரும் கஷ்டங்களை அமைதியுடன் பொறுத்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்.
நாம் செல்லும் பாதை சரியாக நியாயமாக குறிக்கோள் சிறந்தவையாக இருப்பினும் அதை அடைவதற்கு சில தடைகள் ஏற்பட்டாலும் அதனைக் கண்டு மனம் தளராமல் வெற்றி பெற வேண்டும்.
உறுதி துன்பத்தைத் தாங்கும் பக்குவத்தைத் தரும். துன்பத்தை பொறுத்துக் கொள்ளும் மன உறுதி ஆன்மிக வலிமையை காண்பிக்கும். உடல் வலிமையை விட ஆன்மிக வலுவே மேலானது.
அகில உலகம் வியக்கும் வண்ணம் காந்திஜி ஆங்கிலேயருக்கு எதிராக இயக்கம் நடத்தி அவர்கள் கொடுத்த தண்டனைகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு தன்னுடைய குறிக்கோளில் அசையாத உறுதி வைத்து தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தை நடத்தி வந்தபடியினால்…. இந்திய நாடு விடுதலைப் பெற்றது.
விடா முயற்சியும், வேதனைத் தரும் இன்னல்களைத் தாங்கும் தீரமுமே காந்தியடிகளின் பெரும் வெற்றிக்குக் காரணமாக இருந்தது.
எதையும் தாங்கும் இதயம் நமக்கு இருக்க வேண்டும். கஷ்டம் வந்தாலும் உறுதியை விட்டு விலகாமல் தொடர்ந்து செயல்புரிந்து வந்தால் அசைக்க முடியாத பாறை போன்று திண்மை கொண்டு வெற்றி பெற முடியும்.

April 2003






























No comments
Be the first one to leave a comment.