Home » Articles » வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!

 
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!


கந்தசாமி இல.செ
Author:

– டாக்டர் இல.செ.கந்தசாமி

‘என் வாழ்க்கையே இந்த நாட்டுக்கு விடுகின்ற செய்தி’ ( My life is my message ) என்று சொன்னார் காந்தியடிகள்.

காலம் மாறி வருகின்றது. மிகச் சாதாரண மனிதன் கூட மிக உயர்ந்த நிலையை அடையமுடியும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, அறிவார்ந்த உழைப்பை மேற்கொள்கின்றவர்கள் ஒவ்வொருவரும் வெற்றியான, சாதனை மிகுந்த வாழ்க்கை வாழ முடியும் என்பதை அண்மைக்கால அறிவியல் நமக்கு உணர்த்தி வருகின்றது.

‘நீயே, உனது அன்றாட நடைமுறை வாழ்க்கையே இந்த உலகுக்கு நீ விடுக்கும் செய்தியாகும். ( You are the message ) என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

முன்னேற வேண்டும் என்ற ஆசை, ஆர்வம், பேரவா தேவைதான். ஆனால், அதுமட்டுமே போதாது. நமது உழைக்கின்ற நேரத்தையும் நாம் கூடுதலாக்க வேண்டும்.

இப்பொழுது நாம் எட்டுமணி நேரம் பணியாற்றுகிறோம். வாரத்திற்கு 40 மணி நேரம் ஆகிறது. இந்த உழைப்பு – ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், வாழ்வில் முன்னேற – வாழ்வில் வெற்றிபெற – வாழ்வில் சாதனைகளை நிகழ்த்த இப்போது உழைக்கின்ற உழைப்பை 2 மடங்காக, உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் சாதனையாளராகத் திகழ முடியும்.

ஜப்பானியர்களின் உழைப்பு

ஜப்பானியர் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள், உழைத்துக் கொண்டே சாகிறார்கள் என்ற கருத்தை உலகம் நன்கு அறியும் ( Japanese live for work and die of workinf).

அவர்கள் தன்னலமற்ற ஈடுபாட்டுடன் (Self – less devotion) உழைக்கிறார்கள். ஆண்டில் 15 நாட்கள் மட்டுமே அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள்.

உலக நாடுகளில், குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளைக்காட்டிலும் ஆண்டு முழுவதும் தினம் 1 மணி நேரம் கூடுலாக உழைக்கிறார்கள்.

உலகில் மிகக்குறைந்த நிலப்பரப்பை உடைய ஜப்பான் – உலகில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தக் காரணம் உழைப்புதான் – கூடுதலான நேர உழைப்புதான் அறிவார்ந்த உழைப்புத்தான் ( Productive Work).

சாதனையாளர்கள்

1986இல் அமெரிக்காவில் சாதனையாளர்கள் 15000 பேரைக் கொண்டு ஜார்ஜ் கலப் என்ற பேராசிரியர் ஓர் ஆராய்ச்சி நடத்தினார். அந்தச் சாதனையாளர்களில் பெரும்பான்மையோர் மிகவும் திறமையானவர்கள் என்பதோடு, அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் உழைத்தார்கள் என்பதும் தெரியவந்தது.

சாதாரண மனிதர்களைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உழைத்தால் மட்டுமே சாதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

‘வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு’ என்பதை சாதனை புரிய விரும்புவோர் தாராக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.

அண்மையில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற வேளாண் பல்கலைக் மாணவர்கள் சிலரை அணுகிக் கேட்டபோது, அவர்கள் ஒரு நாளைக்கு 14 அல்லது 15 மணி நேரம் உழைத்ததாகக் குறிப்பிட்டார்கள்.

அப்படி உழைத்த சிலர் இந்திய ஆட்சிப் பணித் தேர்விலும் (இ.ஆ.ப) வேளாண்மையில் டாக்டர் பட்ட ஆராய்ச்சி செய்ய, டில்லியில் சென்று படிக்க தேசிய அளவிலும், அமெரிக்கா, கனடா பொன்ற வெளி நாடுகளில் சென்று படிக்க உலக அளவிலும் இடத்தையும், நிதி உதவியையும் பெற்று, சாதனை நிகழ்த்தி உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சி 1990 இன் நடைமுறை உண்மை என்பதை, இன்றைய இளைஞர்களும் சாதனை படைக்க விரும்புகின்றவர்களும் மனங்கொள்ள வேண்டும்.

ஒரு நாங்கூழ் புழுவைப் பாருங்கள் – அதற்கு என்ன மகத்தான இலட்சியம் இருந்திட முடியும்? அந்த மண்புழு இடைவிடாது உழைக்கிறதே! ஏன்? உழைப்பதே அதன் இலட்சியம்.

புதிதாக நிலம் வாங்கிய சில இளம் உழவர்களைப் பாருங்கள், காடுமேடுகளைத் திருத்திக் கழனியாக்கும் வரை – அவர்கள் வரப்பே தலையணையாக – வாய்க்காலை பஞ்சு மெத்தையாக களைத்த நேரத்தில் உறங்கி, விழித்த நேரத்தில் எல்லாம் வேலை செய்வதைக் காணலாம்.

சாதனைகள் என்பது சாதாரணமாக வந்துவிடுவதில்லை. வெற்றி என்பது வியர்வை சிந்தாமல் கிடைத்துவிடுவதில்லை. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்துவந்த காலடிக் சுவடுகளை இன்றும் காணலாம்.

இப்போது எத்தனை மணிநேரம் உழைக்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். அதை இரட்டிப் பாக்கினால் 100 மணி நேரம் வருகிறதா என்று பாருங்கள். வராவிட்டால் வாரத்தில் 100 மணி நேரம் உழைக்க வழி செய்து கொள்ளுங்கள் – உங்கள் வாழ்வில் சாதனை நிகழ்வது உறுதியாகிவிடும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2003

திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
உறவுகள்…. உணர்வுகள்…
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
உறுதியான செயல்
வெற்றிக் கணக்கு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
மாதுளை
ஏழுலகும் உன் வசம்
வெற்றிமாலை
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
தலைசிறந்த விற்பனையாளர் ஆக வேண்டுமா?
தோள்கள் தொட்டுப் பேசவா
படித்தலும், கற்றலும்
சிந்தனைத்துளிகள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
இளைஞனே… வா!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மனிதன் மனிதனாக இருக்க!
கிராமங்கள் காலியாகின்றன
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
இலட்சியக் கனவு காணுங்கள்
வாசகர் கடிதம்
தோள்கள் தொட்டுப் பேசவா?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
த(க)ண்ணீர்க் கனவுகள்