Home » Articles » படித்தலும், கற்றலும்

 
படித்தலும், கற்றலும்


இரத்தினசாமி ஆ
Author:

மாணவர் பெற்றோர் பக்கம்

படித்தலும், கற்றலும்

பேரா. . இரத்தினசாமி

படித்தல் ( Reading ) – கற்றல் ( Learning) இரண்டிற்கும் என்ன வேறுபாடு, விரிவாகப் பார்ப்போம்.

”குப்புசாமி படிக்க ஆரம்பிச்சுட்டா…” என்று நான்காவது வீட்டில் உள்ளவர்கள் சொல்வார்கள். அப்படி வாய்விட்டு சத்தமாகப் படிக்கும் வழக்கம் அவருக்கு. அவர் படிக்கிறார், கேட்கிறது. பதியவைக்கிறாரா? தெரியவில்லை. எப்படி தெரிந்து கொள்வது?

படித்த பக்கங்களிலிருந்து ஒரு கேள்வியைக் கேட்டால் தெரிந்து விடும். விடை வந்தால பதில் வைத்துள்ளார். விடை சரியாக இல்லை எனில் பதியவைக்கவில்லை.

அப்படியே பதிய வைத்திருந்தாலும் 24 மணி நேரம் கழித்து அதே கேள்விக்கு அதே பதிலைப் பெற முடியுமா?

அதே பதிலைப் பெற்றால் அவன் படித்ததை நிரந்தர நினைவாற்றலுக்கு மாற்றியுள்ளார் என ஓரளவுக்குச் சொல்லலாம்.

ஒரு பாடத்தைக் கற்றவர்கள், அதைப் படித்தவர்களைக் காட்டிலும் நன்கு புரிந்து அதை நிரந்தர நினைவாற்றலாக மாற்றியுள்ளார் என்று உறுதியாகச் சொல்லலாம். ஏனெனில் புரியாமலேயே ஒரு பாடத்தைப் படித்து அதில் 100 க்கு 100 மதிப்பெண் பெறுவோரும் உண்டு. எனவே, படித்தல் என்பதில்  சிரமமேதும் இல்லை.

”டேய் ராமு, இந்த மஹாபாரதத்தில் 10 வது அத்தியாயத்தைப் படிடா”

”போங்க தாத்தா, எனக்கு வேற வேலை இருக்கு” என்று விளையாட ஒட இருந்த 8வது படிக்கும் பேரனை தடுத்து நிறுத்தினார் தாத்தா.

”இந்தாடா பத்து ரூபாய், வந்து படிடா” என்றவுடன் பெட்டிப்பாம்பாய் அடங்கி தாத்தா சொன்னதைப் படித்தான் பேரன்.

அவன் படித்தது அவனுக்கு புரிந்திருக்குமோ இல்லையோ தாத்தாவுக்குப் புரிந்திருக்கும்.

பேரன் படித்ததன் மூலம் தாத்தா கற்றுக் கொண்டார். எனவே, புரியாமல் படிப்பது படித்தல் ( Reading), புரிந்து படிப்பது ( Learing ) கற்றார்.

கசடறக் கற்பதே ஒருவரை மேல் நிலைக்கு உயர்த்தும்.

தற்காலிக நினைவாற்றல் நிரந்தர நினைவாற்றல்

திரைப்படம் பார்க்க ஒரு திரை அரங்கிற்கு சென்று அமரும் போது அந்த இருக்கையின் எண், வரிசை எண், இட அமைப்பு போன்றவற்றை படம் முடித்து வெளியே வரும் வரை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.

சென்னைக்கு இரயில் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும்போது எந்தப் பெட்டி, இருக்கை எண் என்ன போன்றவற்றை சென்னை சென்று அடையும் வரை நினைவில் கொள்ள வேண்டும்.

பின்னர் அவைகளை மறந்து விடலாம்.

புதியவர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும. 6 அல்லது 7 இலக்கமுள்ள தொலைபேசி எண்ணை ஒரு முறை பார்த்தபின் நினைவில் வைத்துத் தொலைபேசியை இயக்கலாம்.

அதற்கு பின் அந்த எண்ணை மறந்து விடலாம்.

இதற்குப் பயன்படுவது தற்காலிக நினைவாற்றல். ஆறு அல்லது ஏழு இலக்கமுள்ள சில எண்கள், 10 வார்த்தைகள் போன்றவற்றை எளிதாக தற்காலிக நினைவில் வைக்க முடியும்.

இதற்கு மூளையில் நியூரான்களுக்கிடையே ஏற்படுவது மின்தூண்டல் ( Electrical Impuise).

குழந்தைகளுக்கு இருப்பது தற்காலிக நினைவாற்றல்தான். நினைத்துப் பாருங்கள், நீங்கள் இரண்டு வயதில் எப்படி இருந்தீர்கள் என்று அம்மா, அப்பா சொல்லித்தான் அறிய முடியுமே தவிர உங்களுக்கு நினைவில் இருக்காது.

ஒரு கட்டுரையை பதிய வைப்பது, செய்யுளை அடிபிறழாமல் எழுதுவது, அறிவியல் சமன்பாடுகள், சோதனைகள், கணக்கு போன்றவைகளின் பயன்பாடுகள் நமக்கு தேர்வுக்கு மட்டுமல்ல நம் வாழ்நாள் முழுமைக்கும் தேவை. எனவே, அவைகளை நிரந்தர நினைவில் வைக்க வேண்டும். அதற்கு மூளையிலே அசிட்டைல் கோலைன் ( Acetyl Choline ) என்ற வேதிப்பொருள் சுரக்க வேண்டும். நியூரான்களுக்கிடையே தொடர்புகள் ( Inter connections ) ஏற்பட வேண்டும்.

அறிவின் வளர்ச்சி என்பது இந்த நியூரான்களுக்கிடையே ஏற்படும் தொடர்புகள் தான், இவற்றிற்கு மிகவும் பயன்படுவது திருப்புதல் ( Revisions ).

மூன்று பக்கமுள்ள ஒரு கட்டுரையை ஆசிரியர் படித்து வரச்சொல்கிறார். மறுநாள் அதைப் பார்க்காமல் சரியாக எழுதவேண்டும் என்று சொல்கிறார். ஒவ்வொரு தவறுக்கும் 100 தடவை Imposition எழுத வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் என்ன செய்வீர்கள்? வீட்டில் மாலையில் படிக்கிறீர்கள். திரும்பச் சொல்லிப் பார்க்கிறீர்கள். எழுதிப் பார்க்கிறீர்கள். அப்பா, அம்மா, உடன் பிறந்தோரிடம் பார்க்காமல் சொல்லிப் பார்க்கிறீர்கள்.

காலையில் எழுத்து படிக்கிறீர்கள். சொல்லி எழுதிப் பார்க்கிறீர்கள். வகுப்பிற்குச்சென்று சரியாக எழுதிவிடுகிறீர்கள். மறுநாள் நீங்கள் எழுதியது திருத்தப்பட்டு 10க்கு 9 மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆசிரியர் கோபத்துடன் ” நிறையப்பேர் சரியாக எழுதல, மறுபடியும் எழுதுங்க” என்று சொல்கிறார். எத்தனை பேர் சரியாக எழுதுவார்கள்?

9 மதிப்பெண்கள் பெற்ற மாணவனால் கூட முழுவதும் சரியாக எழுத முடியாது ஏன்?

ஒரு சராசரி மாணவனுக்கு 24 மணி நேரம் கழித்து, தான் படித்ததில் 18% தான் நினைவில் இருக்கும்.

அதே ஆசிரியர் ஒரு 10 நிமிடம் நேரம் கொடுத்து திரும்பப் படித்துப் பார்த்து விட்டு எழுதச் சொன்னால் மீண்டும் சரியாக எழுத முடியும்.

நேரத்திற்கும், நினைவாற்றலுக்கும் ஒரு வரைபடம் வரைந்தால் படத்தில் உள்ளபடிஇருக்கும்.

நன்கு படித்து 100% நினைவில் வைத்தது, 24 மணி நேரம் கழித்துப் பார்த்தால் 18% தான் நினைவில் இருக்கும். எப்படி 100% நினைவாற்றலுடன் இருப்பது?

இதற்குப் பயன்படுவது திருப்புதல் ( Revisions )

திருப்புதல் செய்யச் செய்ய acetyl choline சுரந்து அது நிரந்தர நினைவில் நிலைக்கும்.

எத்தனை சிரமப்பட வேண்டியுள்ளது.

வீட்டில் ஒரு காட்சி

அப்பா தன் மகனை கோபத்துடன் அழைக்கிறார். அவர் கண்கள் சிவந்துள்ளது.

” என்னனடா, நான் கேள்விப்பட்டேனே உண்மையா?”

மகன் தான் செய்த தவறை உணர்கிறான். அந்த ஓர் அறையால் உடனே acetye choline  சுரந்து அத்தவறு நிரந்தர நினைவில் பதிகிறது. இதற்கு Revision தேவையில்லை.

பள்ளியில் ஊட்டிக்கு சுற்றுலாவாக உங்களை அழைத்துச் செல்கிறார்கள். மிகுந்த ஆர்வத்துடன் செல்கிறீர்கள். ஊட்டி மலைப் பாதையில் பயணம், அடர்ந்த காடுகள், வானுயர்ந்த மலைகள், வளைந்து செல்லும் பாதை, ஜில்லென்ற காற்று. தாழ்வான மேகங்கள். அப்படியே ஒன்றிப் போய் விடுகிறீர்கள்.

தாவிரவியல் பூங்காவிற்குள் சென்று புல்வெளிகளில் ஆடி, ஓடி மகிழ்கிறீர்கள். வண்ண, வண்ண மலர்களில் மனதைப் பறி கொடுக்கிறீர்கள். ஏரியில் படகுச் சவாரி. அதனருகே குதிரைச் சவாரி. இப்படி அந்த நாள் முழுவதும் ஆனந்தக் களிப்பில்.

ஊர் திரும்பி ஒரு வாரம் ஆன பின்னர் தமிழாசிரியர் ஊட்டி இன்பச் சுற்றலா சென்று வந்ததைப் பற்றி 4 பக்க அளவில் ஒரு கட்டுரை வரைக என்று நிச்சயம் எழுதுவீர்கள். அதற்கு திருப்புதல் தேவையில்லை.

ஏன்? உங்கள் ஆர்வம், மனமகிழ்ச்சி அவைகளை நிரந்தர நினைவிற்றலில் வைக்கிறது. எத்தனை காலம்? நீங்கள் உங்கள் பேரன், பேத்திகளிடம் ” நான் 9ம் வகுப்பு படிக்கும் போது ஊட்டிக்கு சுற்றுலா போனே பாரு” என்று விரிவாக சொல்லும் வரையில்.

எனவே நிரந்தர நினைவாற்றலில் படித்ததைப் புதிய வைக்க

ஆர்வத்துடன் படியுங்கள்

புரிந்து படியுங்கள்

பார்க்காமல் எழுதிப் பாருங்கள்

வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை, மாதம் ஒரு எனத் திரும்பத் திரும்ப படியுங்கள். ( Revisions)

உரக்கப் படித்தலும் ஆற்றல் இழப்பும்

நான்கு வீட்டிற்குக் கேட்குமளவிற்கு குப்புசாமி படிக்கிறான். இது சரியா? ஆரம்ப நிலை வகுப்புகளில் கற்பதில் இரண்டு வகைகள் தேவை. கண்கள் மூலம் பார்த்துப் படிப்பது. உரக்கப் படித்து சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்து காதுகள் மூலம் படிப்பது.

கண்களால் பார்த்து, காதுகளால் கேட்டுப் படிப்பது அவசியம் தான். அதே மாணவன் 7வது, 8வது வகுப்பு என்று மேலே வரவர உறக்கப் படிப்பதை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். முதலில் தனக்கு மட்டும் கேட்குமாறு படிக்கலாம். பின்னர் உதடுகள் மட்டுமே அசைக்கலாம். அதன் பின்னர் உதடே அசையாமல் அமைதியாகப் படிக்கலாம்.

முகாம்களில் மாணவ மாணவியரிடம் கேட்கும் போது கல்லூரியில் படிப்போரிடம் கூட உரக்கப் படிப்பது சிலரிடம் உள்ளது தெரிந்தது. மேல்நிலைப் படிப்பிற்கு வர, வர மெளனமாக கண்களால் பார்த்துப் படிப்பதை மட்டுமே மேற்கொள்வது சிறந்தது.

ஏன் உறக்கப் படிக்க கூடாது?

மூளையின் இயக்கத்திற்கு முக்கியத் தேவைகள் இரண்டு. ஒன்று பிராண சக்தி (Oxygen). இரண்டு குளுகோஸ்.

நாம் சுவாசிக்கிற காற்றிலிருந்து பிராணவாயு நுரையீரல்கள் மூலம் பிரிக்கப்பட்டு இரத்தத்தில் செலுத்தப்படுகிறது. நாம் உண்ணும் உணவிலிருந்து குளுகோஸ் பிரிக்கப்பட்டு இரத்தத்தில் சேர்க்கப்படுகிறது.

நம் உடல் இயக்கத்திற்கு தேவையான பிராணவாயு 100% குறைந்தால் கடுமையான தலைவலி ஏற்படும். கண்களைத் திறக்க முடியாது. படுக்க சொல்லும். 10% குறைந்தால் (அதாவது மூளைக்கு தேவையானதில் பாதிதான் கிடைக்கிறது என்றால்) நினைவு தவறி கோமா நிலைக்கு கொண்டு செலுத்தும்.

சிலருக்கு எப்படி சுவாசிப்பது என்றே தெரியவில்லை. அவர்கள் நுரையீரலின் முழு அறைகளையும் பயன்படுத்துவதில்லை. அதற்கு மூச்சுப் பயிற்சி செய்வது அவசியமாகிறது.

நீங்கள் சரியாக சுவாசிக்கிறீர்களா என்று பார்ப்போமா?

நேராக நிமிர்ந்து அமரவும், வலது கை உள்ளங்கையை தொப்புள் பகுதிக்கு மேல் லேசாக படும்படி வைக்கவும். கண்களை மூடவும, நிங்கள் சாதாரணமாக சுவாசிப்பது போல் சுவாசிக்கவும். மூச்சை உள்ளே இழுக்கவும், விடவும், மூச்சை உள்ளே இழுக்கும்போது உள்ளங்கை உள்ளே செல்கிறதா, வெளியே செல்கிறதா, அப்படியே உள்ளதா என்பதை உணர்வில் கவனிக்கவும்.

பல மூகாம்களில் நாங்கள் கண்டது ஆச்சரியப்படவைத்தது. 50-60% மாணவ மாணவியருக்கு காற்றை உள்ளே இழுக்குபோது உள்ளங்கை உள்ளே சென்றதாக உணர்ந்தார்கள். 10-20% மாணவர்கள் அதே நிலையில் இருந்ததாகவும், 30-40% உள்ளங்கை வெளியே வந்ததாகவும் உணர்ந்தார்கள்.

நீங்கள் இதில் எந்த ரகம் ?

காற்றை உள்ளே இழுக்கும் போது கைகள் வெளியே வந்தால்தான் சரியாக சுவாசிக்கிறீர்கள் என்று அர்த்தம். நுரையீரலின் அனைத்து அறைகளிலும் காற்றை நிரப்பினால் அது பலூன் போல பெரிதாகி உதிர விதானப் பகுதியை (diaphragam) கீழ் நோக்கித் தள்ளும். அப்போது அடிவயிற்றுப் பகுதி மேல் நோக்கி வரும். காற்றை வெளிவிடும் போது உள்ளங்கை உள்ளே செல்லும்.

மூளைக்குத் தேவையான அளவு பிராண சக்தி செல்லாவிடின் நினைவாற்றல் குறையும். எனவே, அவசியம் பிராணயாமம் மூச்சுப் பயிற்சியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உரக்கப் படித்தால் மூளைக்கு அவசியத் தேவையான பிராண சக்தி வீணாகிறது. சக்தி இழப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல. இதனால் விரைந்து படிக்கும் கலையை கற்க முடியாமல் போய்விடும்.

உரக்கப்படிப்பதை எப்படி நிறுத்துவது?

பிராணாயாம மூச்சுப் பயிற்சியை எப்படிச் செய்வது?

எப்படி விரைந்து படிப்பது?

அடுத்த இதழில் அது குறித்துப் பார்ப்போம்.

(தொடரும்…….)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2003

திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
உறவுகள்…. உணர்வுகள்…
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
உறுதியான செயல்
வெற்றிக் கணக்கு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
மாதுளை
ஏழுலகும் உன் வசம்
வெற்றிமாலை
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
தலைசிறந்த விற்பனையாளர் ஆக வேண்டுமா?
தோள்கள் தொட்டுப் பேசவா
படித்தலும், கற்றலும்
சிந்தனைத்துளிகள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
இளைஞனே… வா!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மனிதன் மனிதனாக இருக்க!
கிராமங்கள் காலியாகின்றன
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
இலட்சியக் கனவு காணுங்கள்
வாசகர் கடிதம்
தோள்கள் தொட்டுப் பேசவா?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
த(க)ண்ணீர்க் கனவுகள்