Home » Cover Story » வெற்றி முகம்

 
வெற்றி முகம்


ராஜன் ய.சு
Author:

– மரபின் மைந்தன் ம. முத்தையா

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அருகிலுள்ள கொட்டாரம் என்கிற கிராமத்தில் பிறந்த, இவர், 29 வது வயதில் ISRO – வின் விஞ்ஞானச் செயலாளராக, டாக்டர் அப்துல்கலாம் அவர்களால் நியமிக்கப்பட்டவர்.

பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் உருவாக்கக் குழு செயலாளராக, NRDC இயக்குநர்கள் குழுவில் அங்கம் வகிப்பவராக, TIFAC என்கிற இயக்கத்தின் இயக்குநராக பல பொறுப்புகளில் திகழும் ய.சு. ராஜன், டாக்டர் அப்துல்கலாமுடன் இணைந்து ” இந்தியா 2020 ” நூலை எழுதினார்.

” இதனை நாங்கள் தொகுத்து எழுதினோம் என்பதே உண்மை. இரண்டு ஆண்டுகள், ஐயாயிரம் நிபுணர்கள் சேர்ந்து தகவல்களை, ஆய்வு விபரங்களை 25 பெரும் கோப்புகளாகத் தொகுத்து எழுதினோம். அதன் சாரம் மக்களைச் சென்று சேர வேண்டும் என்று எழுதியதே ” இந்தியா 2020 ” என்கிறார்.

கோவையில், சமிபத்தில் கவிஞர் தேவமகள் நினைவு அறக்கட்டளை சார்பில், ” தேவமகள் இலக்கிய விருது ” வழங்கும் விழா, கவிஞர் தேவமகளின் கணவரும் கவிஞருமான நித்திலன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவிற்கு வந்திருந்த ய.சு. ராஜன், கோவையின் தேர்தெடுத்த அறிஞர் குழு ஒன்றுடன் விழாவிற்கு முதல் நாள் மாலை ஒரு பிரத்யேசுக் கலந்துரையாடலில் பங்கு பெற்றார்.

அப்போது, பல்துறை அறிஞர்களின் கேள்விகளுக்கு அவர் வழங்கிய விடைகளை, ய.சு. ராஜனின் கருத்தோட்டமாகத் தொகுத்து, தன்னபிக்கை வாசகர்களுக்காகத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதோ….. ய.சு. ராஜன் பேசுகிறார்.

”சின்ன வயதிலிருந்தே மகாகவி பாரதியின் எழுத்துக்கள் எனக்குள் ஒரு தைரியத்தை, தாக்கத்தை ஏற்படுத்தின. பாரதி, பல துறைகளுக்கும் ஒரு பாலம். ஆன்மீகத்திற்கும் உலகத்திற்கும், பழந்தமிழுக்கும் நடைமுறை வாழ்வுக்கும், பொருளாதாரத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் என்று பல்வேறு துறைகளுக்கு நடுவே பாரதியின் எழுத்துக்கள் பாலம் அமைத்துத் தந்தன.

எது அறம் என்பதற்கு, பாரதி தந்த இயல் வரையறையை என் வாழ்வுக்கான கொள்கையாக எடுத்துக்கொண்டேன். ” பயன்தரும் செய்கையே அறமாம் ” என்றான் பாரதி.

பயன்படக் கூடிய செயல்கள்தான் நிலைத்து நிற்கும், 1980-ல் செயற்கைக்கோளை வெற்றி கரமாக விண்ணில் ஏவினோம். 1979ல் எங்களுக்கு ஒரு தோல்வி ஏற்பட்டது. நாங்கள் ஏவிய செயற்கைக்கோள் வங்காள விரிகுடாவில் விழுந்தது.

ஆனாலும், தோல்விகளிலிருந்து பாடம் கற்கிறோம். வாழ்க்கை பல விஷயங்களை எனக்குக் கற்றுத் தந்தது. கற்றத் தந்து கொண்டே இருக்கிறது. மார்க்சிம் கார்க்கி ஒருமுறை சொன்னார், ” வாழ்க்கையில் எனக்குப் பெரிய குரு வாழ்க்கைதான் ” என்று.

இது எல்லோருக்கும் பொருந்துகிற உண்மை. ” Vision India 2020 ” தவிர ”Empowering Indians”, “Agony and Hormony” ஆகிய ஆங்கில நூல்களை எழுதினேன்.

தமிழில், என்பது கவிதைகள், ” வற்றாத ஊற்றுக்கள்”, ”நெஞ்சக மலர்கள்” ஆகிய தொகுப்புகளாக வெளிவந்தன. ” கனிவுறு நெஞ்சக மலர் கொடு வந்தோம்” என்கிற மகாகவி பாரதியின் வரிதான் அதற்கு ஆதர்சம். அந்தத் தொகுப்பு ” Blossoms of the Hearts” என்று ஆங்கிலத்திலும் வந்தது.

மனதில் ஒரு சந்தம் எனக்குள் ஓடும். எனவே அதனை எழுதிக்கொண்டே போவேன். அதை நானே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நேர்ந்தது, நாம் வளர்ந்த குழந்தையின் கழுத்தை நாமே நெரிப்பது போல என்பது என் அபிப்பிராயம், ஆனாலும் செய்தேன்.

எனக்குள் இருக்கும் தகுதிகள் காரணமாக எனக்கு நானே எழுதிக்கொண்ட கவிதைகள் அவை.

பொதுவாக, மனதில் இருக்கும் கோணல்களை சரி செய்து நுண்ணுணர்வுதான். அந்த நுண்ணுணர்வுதான் படைப்பாக வெளிப்படுகிறது.

அப்போது படைப்பாளனுக்குள் ஒரு தவிப்பு இருக்கும். உள்ளே ஒரு வண்டு குடைந்து கொண்டே இருக்கும்.

அந்தத் தவிப்பை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தும்போது, அது படைப்பாகப் பரிணமிக்கிறது.

அதனால்தான், துறைகள் அனைத்தையும் ஒன்றன் தொடர்ச்சியாகத்தான் உணர்கிறேன். எந்தப் புதுமைக்கும் முன்னே ஒரு வலி இருக்கத்தான் செய்யும்.

இன்னொரு இயற்கைத் தத்துவம், எதற்குமே மறுபக்கம் உண்டு என்பதுதான். அறிவியலின் அடிப்படையே பகுப்பாய்வு. பகுத்துக்கொண்டே போக வேண்டும். ஆனால், இந்தப் பகுப்பாய்வு படைப்பதற்கு துணை செய்யாது.

எல்லாவற்றுக்கும் மறுபக்கம் உண்டு என்பதால்தான் பல அறிவியல் உண்மைகள் முடிந்த முடிவாக ஒரே உண்மையாய் உணரப்படுவதில்லை. எல்லாமே துகள்களால் ஆனதென்று ஒரு கருத்துண்டு. எல்லாமே அலைகளால் ஆனதென்றும் ஒரு கருத்து உண்டு. இதில் அலையும் உண்மை. துகளும் உண்மை.

ஒரு கணக்குக்கு 4 விடைகள் கிடைக்கின்றன. எனவே கண்ணில் பார்க்காத விடையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொதுமான விடை என்று ஒன்றைச் சொல்ல முடியாது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தூரத்தை விமானத்தில் கடப்பதற்கும், நடந்து கடப்பதற்குமான நேரம் மாறுபடுகிறது. உண்மை என்பது அவரவர் பார்வைக்கேற்ப மாறுபடும.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். ஒரு அழகான பெண்ணை ஒரு கவிஞரோ ஓவியரோ அழகியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறார். ஒரு மருத்துவர், உடற் கூற்றியல், மருத்துவம் ஆகிய அடிப்படையில் பார்த்து நோயைக் கண்டறிகிறார். அழகு இருப்பதும் உண்மை. நோய் இருப்பதும் உண்மை.

இந்த மறுபக்கம் என்பது விஞ்ஞானக் கோட்பாடு மட்டுமல்ல, மெய்ஞானத் தத்துவம் கூடத்தான். இந்தியாவில் ஆதிகாலத்திலிருந்தே இந்த இருவேறு இயல்புகளையும் இணைத்தே வைத்திருந்தார்கள்.

ஆண் – பெண், அமுதம் – நஞ்சு , இருள் – வெளிச்சம் எல்லாமே ஒன்றின் மறுபக்கத்தை உணர்த்துபவை.

Agony & Harmony – தவிப்பு மற்றும் நல்லிணக்கம், ஒன்றைப் படைக்கும் போது ஏற்படும் பதட்டத்தையும் அதன்பிறகு பெரும் சமநிலையையும் குறிக்கும.

நீங்கள் ஒன்றை ஆராய வேண்டும் பல நேரங்களில் படைப்பாக்கம் வெள்ளம் போல பெருக்கெடுக்கும். ஒரே நேரத்தில் சில கண்டு பிடிப்புகளை விஞ்ஞானிகள் வரிசையாக வெளியிடுவார்கள்.

ஜன்ஸ்டீனின் கண்டுபிடுப்புகள் பல ஒரே மூச்சில் தொடர்ந்து வெளியாயின. நியூட்டனின் பல முக்கிய கண்டுபிடிப்புகள் ஒரே ஆண்டில் வெளியாயின. உள்ளே குடையும் வண்டு, ஒரு தடையை உடைத்திருக்கிறது என்று பொருள்.

நாளுக்கு நாள், மனிதனின் அறிவு எல்லை விரிவடையும்போது இத்தனை நாள் இதனை அறியாமலிருந்தோம் என்கிற எண்ணமும் விரிவடைகிறது. இந்த விழிப்புணர்வு மனிதனுக்கு வேண்டும். அறிவு, அறியாமையின் மறுபக்கம்தான்.

ஜாதிப் பிரிவுகள் நமக்குத் தடையா?
உலகமயமாக்கலை நாம் தாக்குப்பிடிப்போமா?
2020- வெறும் கனவா? நடைமுறையில் சாத்தியமா?

( இன்னும் பல கேள்விகளுக்கான பதில்களுடன் அடுத்த மாதமும் ய.சு. ராஜன் நம்முடன் பேசுகிறார்.)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2003

திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
உறவுகள்…. உணர்வுகள்…
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
உறுதியான செயல்
வெற்றிக் கணக்கு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
மாதுளை
ஏழுலகும் உன் வசம்
வெற்றிமாலை
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
தலைசிறந்த விற்பனையாளர் ஆக வேண்டுமா?
தோள்கள் தொட்டுப் பேசவா
படித்தலும், கற்றலும்
சிந்தனைத்துளிகள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
இளைஞனே… வா!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மனிதன் மனிதனாக இருக்க!
கிராமங்கள் காலியாகின்றன
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
இலட்சியக் கனவு காணுங்கள்
வாசகர் கடிதம்
தோள்கள் தொட்டுப் பேசவா?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
த(க)ண்ணீர்க் கனவுகள்