Home » Articles » இந்தியா – நேற்று இன்று நாளை

 
இந்தியா – நேற்று இன்று நாளை


கிருஷ்ணராஜ் வாணவராயர் பி.கே
Author:

இந்தியாவின் வேதாந்த விழுமங்கள் சேரிகளைச் சென்றடைய வேண்டும் என்று விரும்பினார் சுவாமி விவாகனந்தர்.  பண்டிதர்களின் பாசறையைத் தாண்டி, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் வேதகாலச் சிந்தனைகள் எந்தவித பேதமுமின்றி தொடுகிற போதுதான் மனிதகுல மறுமலர்ச்சிக்கு வழி பறிக்கும்.

காலம் மாறுகிறது என்கிறோம். உண்மையில் காலத்தை மனிதன்தான் மாற்றுகிறான்.  காலமாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக ஐந்து சாதனங்கள் மனிதனிடம் உண்டு.  1. அரசியல் 2. பொருளாதாரம் 3. சமயம் 4. கல்வி 5. விஞ்ஞானம்.

இவற்றுக்கு நடுவே பொதுவான இலட்சியம் ஒன்று இருக்க வேண்டும் அறிவியல் – ஆன்மீகம்.  கல்வி – சமயம் என்று எந்தத் தொகுப்பிலும் ஒரு பொது இலக்கு தேவை.  அந்த இலக்குதான் மனித குலத்தின் முழுமையான வளர்ச்சி.

குறிப்பாக, கல்விக்கும் சமயத்திற்கும் முக்கியமான பங்கு உண்டு. சமயத்தை நம் முன்னோர்கள் புரிந்துகொண்ட விதத்திற்கும் நாம் தெரிந்து கொண்டுள்ள விதத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

சமயம் என்பது புத்தகங்களிலும்  தத்துவங்களிலும் இல்லை.  நம் இருப்பிலும், வாழ்க்கை மூட நம்பிகைகள் போன்றவற்றிலிருந்து சமயம் வெளி வரவேண்டும். கோவில், தேவாலயம், மசூதி ஆகிய எல்லைகளைத் தாண்டி மதம் வெளியே வரவேண்டும்.

கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள், நம் நாட்டில் எல்லாமே ஏட்டளவில் சரியாயிருக்கிறது. ஆனால் நடைமுறையில் இல்லை.

ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.  நம் கல்வி முறையை ஆய்வு செய்து சீர்த்திருத்தங்களைப் பரிந்துரை செய்வதற்காக, அமெரிக்காவிலிருந்து ஒரு நிபுணர் குழு வந்தது.  அவர்களை வரவேற்ற இந்தியக் கல்வித்துறை அதிகாரிகள், நம் கல்வித்திட்டத்தின் நகல் ஒன்றைக் கொடுத்தனர்.

மறுநாள் காலை குழு கூடியபோது அமெரிக்க நிபுணர் கூறினார், “உங்கள் கல்வித் திட்டத்தை முழுமையாய் படித்தோம். நாங்கள் பரிந்துரைக்க ஏதுமில்லை.  முடிந்தால் உங்கள் கல்வித் திட்டத்தின் பிரதியைக்கொடுங்கள்.  அதனை எங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்கிறோம்” என்றார்கள்.

இத்தனை சிறப்புக்கு இடமிருந்தும் இன்றைய கல்வி நிலை எப்படி இருக்கிறது என்று பார்க்கிறோம்.  அரசியல் தலைவர்கள் தங்களால் முடிந்த பலவற்றை சாதிக்க ஏனோ தயங்குகிறார்கள்.

தென்னிந்திய பஞ்சாலை உரிமையாளர் சங்கத்தில் நான் பொறுப்பிலிருக்கிறேன்.  பல முறை இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் சந்திக்கும்போது அவர்களே பல விஷயங்களை நன்கு அறிந்தவர்களாக இருப்பதைக் காண முடிகிறது.  ஆனாலும், அவர்களால் நடைமுறைப்படுத்த முடிவதில்லை.

வழிபாட்டுத் தலங்களையும் கல்வி நிறுவனங்களையும் நாம் மனிதவள மேம்பாட்டு மையங்களாக உருவாக்க வேண்டும்.

இளைஞர்களை எதிர்காலத்திற்கேற்ப வளர்க்க வேண்டும் என்றால் பள்ளிப் பருவத்திலேயே ஐந்து அம்சங்கள் அவர்களுக்கு சொல்லித் தரப்பட வேண்டும்.

1. நமது பாரம்பரியத்தின் மேன்மை. 2. இந்த தேசத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட அந்த நாளைய பற்றி ஆன்றோர்கள் பற்றிய தகவல்கள்.  3. நம் மகத்தான சுதந்திரப் போராட்டம் 4. இருபத்தோராம் நூற்றாண்டுக்கான சவால்கள். 5. இந்த சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள்.

இவற்றைத்தான் நாம் போதிக்க வேண்டும்.  இல்லையென்றால், கல்வியும் சமயமும் அர்த்தம் இழக்கும்.

மனிதன், இறைவனின் படைப்பின் உச்சம்.  சரியான இலக்கு இல்லையென்றால் அந்தப் பிறவி பொருள்ளதாகிவிடும்.

இந்தியா விடுதலை அடைந்தபோது நேரு சொன்னார். “நமது பணி எல்லா இந்தியர்களின் கண்களிலிருந்தும் கண்ணீரைத் துடைப்பதுதான். அதுதான் நம் முதல் கடமை” என்று.

55 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இன்றும், பல்லாயிரம் குழந்தைகளுக்கு அடுத்த வேலை உணவுக்கான உத்திரவாதமில்லை.மாற்றத் துணியில்லை; தங்க ஒரு வீடுமில்லை.  இவை எல்லாவறையும் விட, அன்புகாட்ட ஆளில்லை  எங்கே தவறு நடந்துள்ளது என்று பார்த்து அதைத் திருத்த வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள “பாரதிய வித்யா பவனில்” உரையாற்றியபோது நம் பிரதமர் ஒன்றைச் சொன்னார், “இந்தியாவில் எல்லாம் இருக்கிறது.  நல்ல தலைவர்தான் இல்லை.   என்று தலைமையின் வருகைக்காக தவமிருக்கப் போகிறோமா?  இதற்கான ஒரே வழி, உங்களுக்குள் இருக்கிற, உங்களுக்குள் ஒளிந்திருக்கிற  தலைவரை வெளியே கொண்டு வருவதுதான். புறத்திலுள்ள சாவல்களை சமாளிக்க அகத்தில் வலிமை வேண்டும்.

நம் பெற்றோர்கள், அந்த நாட்களில் ஒன்றைச் சொல்வார்கள், “என் குழந்தைக்கேற்ற எதிர்காலத்தைத் தயார் செய்ய வேண்டும்” என்று இன்றைய சூழல் மாறிவிட்டது.  குழந்தைகளுக்கு உரிய எதிர்காலத்தைத் தயார் செய்கிற சூழல் இல்லை.  எதிர்காலத்திற்கேற்ப குழந்தைகளை நாம் தயார் செய்ய வேண்டும்.

இவற்றிற்கு நடுவே நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டம்.  இந்தியா மகத்தான நாடு.  இதற்கு மகத்தான எதிர்காலம் இருக்கிறது.  இதன் வெற்றிக்கு துணை நிற்பது நம் கடமை.  அகத்தை வலிமையாக்கிக்கொள்வதன் மூலம் புறச் சவால்களை நம்மால் எளிதில் எதிர்கொள்ள முடியும்.

நிறைவடைகிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2003

இந்தியா – நேற்று இன்று நாளை
தொழில் & வியாபார வளர்ச்சி / உத்திகள்
தொழில் & வியாபார வளர்ச்சி / உத்திகள்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்