Home » Articles » திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்

 
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்


ஆசிரியர் குழு
Author:

19 ஜனவரி காலை 10.00 மணி

“புதுயுகம் படைப்போம்” என்ற தலைப்பின் கீழ் தன்னம்பிக்கை வாசகர்களின் புன்னகை முகங்கள் பூத்த மலர்களாய் நிரம்பியிருந்தனர், திருச்சி ஃபெமினா அரங்கில்! ஆண்டுவிழாக் காணும் ஆனந்தம் அனைவர் முகங்களிலும்!

கவிதை நனைந்த அறிவிப்புகளோடு விருந்தினர்களை மேடைக்கு அழைத்தார் திரு. தங்கவேலு மாரிமுத்து. ஜே.ஜே.பொறியியல் கல்லூரியின் தலைவர் டாக்டர் செல்வராஜ், தலைமையில் விழா துவங்கியது. கவிஞர் லெணா வரவேற்புரையாற்றினார். திருச்சி தன்னம்பிக்கை வாசகர்களின் உற்சாகமான பங்கேற்பில் பயிலரங்குகள் சிறப்புற நடப்பதை நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

“தன்னம்பிக்கை” வாசகர் வட்டத்தின் அத்தனை செயல்பாடுகளுக்கும் துணை நிற்கும் அர்ச்சனா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு.ராஜ மாணிக்கம், கற்பகம் ரெஸ்டாரண்ட் உரிமை யாளர் திரு. ராஜேந்திரன் ஆகியோரின் உற்சாக மான செயல்பாடுகள் ஆண்டுவிழா ஏற்பாடு களையும் அழகாக்கியிருந்தன.

டாக்டர் செல்வராஜ் பேசும்போது “பி.ஏ. வரலாறு மட்டுமே படித்த தன்னால் பொறியியல் கல்லூரியை நிர்வகிக்க முடிந்தது தன்னம்பிக்கை காரணமாகத்தான்” என்றார்.

தொடர்ந்து, தன்னம்பிக்கை இணை ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா பேசும் போது, “தமிழகத்தின் மற்ற மாவட்டங்களும் மகிழ்ச்சியோடு பாராட்டும் விதமாக திருச்சி தன்னம்பிக்கை வாசகர் வட்டம் செயல்படுகிறது” என்றார். “தன்னம்பிக்கை இதழ் வாசிப்பதென்பது வாழ்வின் அத்தனை சவால்களுக்கும் ஆயத்தம் செய்து கொள்வதற்கான படி நிலைகளில் ஒன்று” என்றார் அவர்.

“உடற்பயிற்சி செய்யுங்கள் மாத வருமானம் பெருகும்” என்று யாராவது சொன்னால் என்ன சொல்கிறார் என்கிற குழப்பம் ஏற்படும். ஆனால், உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியம் கூடும், சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும்போது தொழிலில் கவனமும் கூடும். அதனால் வருமானம் பெருகும்.

எனவே, வாழ்வின் அடிப்படைகளான உடல் – மனம் – அறிவு போன்றவற்றை பலப்படுத்தும் பயிற்சிகளை மனிதன் மேற்கொள்வது அவசியம். அத்தகைய மனப்பயிற்சிக்கும் அறிவுப் பயிற்சிக் கும் துணை நிற்கும் விதமாக தன்னம்பிக்கை இதழின் இலக்கும் இருந்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

விழிப்புணர்வு – ஆய்வு மனோபாவம் – கேள்வி கேட்கும் துணிவு இவற்றால் வெற்றி தோல்வி நிகழ்வதற்கான விதிமுறைகளை விரிவாக விளக்கிப் பேசினார்.

“சின்னத்திரை என்பதை சரியாகப் பயன் படுத்தும் ஒரு சிலரில் வீரபாண்டியன் குறிப்பிடத் தக்கவர். ஆனால், சின்னத்திரை காரணமாய் வரும் சீர்குலைவுகளுக்கு சின்னத்திரையை பயன்படுத்தத் தெரியாத நாமும் காரணம்” என்றார்.

“தன்னம்பிக்கை அரசியல், சினிமா சாராத பத்திரிகை என்றால் கட்சி அரசியல் சாராத பத்திரிகை, சினிமாச் செய்திகள் வெளியிட்டு ஆதாயம் தேடிக் கொள்ளாத பத்திரிகை, ஆனால்  அரசியல் – சினிமா எப்படி நம்மை சீர்குலைக்கிறது என்கிற விழிப் புணர்வை ஊட்ட தன்னம்பிக்கை இதழ் தவறாது. பழைய தலைவர் களின் தரமான கொள்கை களையும் நினைவு படுத்தும் பணியையும் மேற்கொள் ளும்” என்றார் அவர்.

தொடர்ந்து சிறப்புரை நிகழ்த்த வந்தார் சன்  டி.வி. அரசியல் விமர்சகர் திரு.வீரபாண்டியன்.

முதியவர்களை மதிக்கும் மனோபாவம் இளைஞர்களிடம் வரவேண்டும். தாய்லாந்தில் நதிக்கரை ஒன்றில் ஒரு முதியவரின் பிணம் எரிந்து கொண்டிருந்தது. மறுகரையிலிருந்து இளைஞன் அங்கிருந்தே விழுந்து வணங்கினான். கேட்டதற்கு, “எங்கள் ஊரில் முதியவர்களை நூலகத்திற்கு சமமாய் மதிக்கிறோம். இன்று அது நெருப்பிலிடப்படுகிறது. எனவே தலைவணங்குகிறோம்” என்றான்.

“திருத்துறைப்பூண்டியருகே ஒரு கிராமத்தில் வளர்ந்த நான், இன்று செய்தித் தொடர்பியல் துறையில் வளர்வதற்கு தன்னம்பிக்கை பெரிதும் துணை செய்துள்ளது. ஒரு காலத்தில் ஏளனம் செய்தவர்களும் இன்று ஏகமாக வியக்கிறார்கள். அனுமானங்களக்கு இளைஞன் அஞ்சவே கூடாது. அறிவுக்கான வாய்ப்பு அனைத்துத் திசைகளிலும் இருக்கிறது”.

“”இரண்டு குவளை பாலில் தனித்தனியாய் இரண்டு தவளைகளைப் போட்டார்கள். ஒரு தவளை மல்லாந்து இறந்து கிடந்தது. உடனே பாலில் போட்டால் தவளை சாகும் என்று முடிவெழுதினார்கள்”.

“இன்னொரு குவளையில் பாலுக்கு நடுவே தவளை கைகாலை உûத்துப் போராடிக் கொண்டிருக்கிறது. விரைவில் பாலில் எண்ணெய் திரளும் அதன்மேல் ஏறி தவளை தாவிச் செல்லும். போராடி வெல்லும். இந்த எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையுமே மனிதன் இயக்கும் சக்தி” என்றார் வீரபாண்டியன்.

குலுக்கலின் மூலம் வாசகர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை ராசிபுரம் திரு.தங்கவேலு வழங்கினார். வாசகர் வட்டத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாய் இணைந்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

விழா ஏற்பாடுகளை தன்னம்பிக்கை வாசகர் வட்டத் துணைத் தலைவர் திரு.ஜெயவீரன், திரு.மாத்யூஸ் உள்ளிட்ட நண்பர்கள் விரிவாக செய்திருந்தனர். ஐந்நூறுக்கும் அதிகமாக தன்னம்பிக்கை வாசகர்கள் பங்கேற்றனர்.

அன்று மாலை திருவாரூர் மாவட்டத்தில் தன்னம்பிக்கை இதழ் அறிமுக விழா ஹோட்டல் ராயல்பார்க் அரங்கில் நடைபெற்றது.

தன்னம்பிக்கை இதழில் இந்த அறிவிப்பைப் பார்த்ததிலிருந்தே நூற்றுக்கணக்கான வாசகர்கள், திருவாரூர் தன்னம்பிக்கை முகவர் திரு. சீனிவாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்திக் கொண்டேயிருந்தனர். இந்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன சீனிவாசன் கூடுதல் உற்சாகத்தோடு விழா ஏற்பாடுகளை விரிவாக செய்திருந்தார். இந்த உற்சாகம் அவரின் வரவேற்புரையிலும் வெளிப்பட்டது.

விழாவிற்கு தலைமையேற்ற சீனு குழு நிறுவனங்களின் தலைவர் திரு.வெங்கட் குப்தா, வாழ்வில் வெற்றிபெற தன்னம்பிக்கை எவ்வளவு அவசியம் என்பதை அனுபவ உரையாக வழங்கினார்.

கவிஞர் ராஜசேகரின் அழகிய கவிதை வரிகள் தொகுப்பு நூலாய் அமைந்து விழாவிற்கு வளம் சேர்த்தன.

இணை ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா, அமரர். இல.செ.கந்தசாமி “தன்னம் பிக்கை” இதழை துவங்கிய விதம் குறித்தும் அவரது இலட்சியங்கள் குறித்தும் விளக்கியதோடு இன்றைய சூழலில் தன்னம்பிக்கையின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

திரு. வீரபாண்டியன் தனது சிறப்புரையில் “மற்றவர்களின் தாக்கத்தால் உருவாகும் மனிதன் தன் தனித்தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

தன்னம்பிக்கை திருவாரூரில் பரவலாக அறிமுகம் செய்ய உறுதி பூண்டிருப்பதாக பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார் திரு.சீனிவாசன். அவரது குடும்பமே முன்னின்று தங்கள் விழாவாக தன்னம்பிக்கை அறிமுக விழாவை நடத்தியது, அந்த உறுதிமொழிக்கு உரம் சேர்த்தது.

திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் மேற் கொண்ட சுற்றுப்பயணம் தன்னம்பிக்கை ஆசிரியர் குழுவின் தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

மற்ற மாவட்டங்களின் வாசக நண்பர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? 2003 செயல்பாடு களுக்கான ஆண்டு (Action Year) அறிவித்திருக்கிறார் அப்துல்கலாம். அது அனைத்து மாவட்ட தன்னம்பிக்கை வாசகர் வட்டங்களுக்கும் பொருந்தும் என்பதற்கு ஆரம்ப அறிகுறிகள் இந்த ஆக்கபூர்வமான விழாக்கள்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்