Home » Articles » வெற்றி மாலை

 
வெற்றி மாலை


கமலநாதன் ஜெ
Author:

எண்ணங்கள்தான் ஏணிப்படிகள். ஏறி நின்றால் நட்சத்திரங்களை வருடலாம். உள்ளத்தின் உறுதி செயல்களுக்கு உரமேற்றுகிறது. அதன் வலிமையில் வானமும் நமக்கு வசப்படும்.

அழகிய சூரியகாந்திகள் தலையசைக்கும் பாதையில் கிளிக் கூட்டம் சிறகடிக்க மின்னல் ஒளிக்கீற்று தங்கம் உருக்கி வார்க்கும் அதில் புத்தம் புது எதிர்காலம் பூக்கும். கண்கள் எப்போதும் நம்பிக்கை வெளிச்சத்தையே நாடட்டும் மாற வேண்டாம்.

“வீரமிருந்தால் விண்ணில் எங்கும் செல்ல லாம் நேரமிருந்தால் நிலவில் கொஞ்சம் தங்கலாம் ஆர்ப்பரிக்கும் பறவைகளாய் அனுதினம் உலகை வலம் வரலாம் பூப்பறிக்கும் சிறுமிகளாய் புவியை ரசிக்கலாம்!”

கவிஞர் வைரமுத்துவின் வரிகள் சோர்வுற்ற உள்ளங்களிலும் நம்பிக்கை விதைகளை விதைக்கின்றன.

திருவள்ளுவரின் திருக்குறள் என்ற ஞானநூல் ஈராயிரம் ஆண்டு பழமையானது என்ற போதிலும் இன்றைய யுகத்து சோர்வுற்ற மனிதர்களுக்கு ஊக்கம் சேர்க்கிற புதுப்புது வாழ்க்கை நெறிகளை அள்ளி வழங்குகிறது.

நமது இந்திய திருநாட்டின் ஞானிகளும், சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும், கவிஞர் களும், பண்டிதர்களும் படைத்து விட்டுச் சென்றுள்ள பல ஞானப் பொக்கிஷங்கள் இன்றைய நவீன வாழ்க்கைத் துன்பங்களுக்கும் மருந்து தந்து மாற்றும் வல்லமை படைத்தவை.

திருக்குறள் சொல்கிறது,

எண்ணிய எண்ணியாங்கு எய்துப         எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்!

என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டீர்களோ அதுபடியே உறுதியாக செயல்பட்டால், என்ன எண்ணினீர்களோ அதை உறுதியாக அடைவீர்கள். வெற்றி கிடைக்கும்.

இன்னொரு குறள் அதற்கு மேலே போகிறது

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்

உலகத்தையே வசப்படுத்த வேண்டும் வெல்ல வேண்டும் என்று கருதுகின்றீர்களா? தப்பில்லை முயற்சி செய்யுங்கள். முடியும். ஆனால், முயற்சிக்கும்போது ஒன்றை மறந்துவிடாதீர்கள். காலமறிந்து இடமறிந்து முயற்சி செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

சரியான நேரம், சரியான இடம் எது என்று ஆராய்ந்து தேர்ந்தெடுத்து செயல்பட்டால் உலகத்தையே வசப்படுத்தும் அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது திருக்குறள் வரிகள் தரும் நம்பிக்கை ஆகும்.

விவேகானந்தரின் வீர முழக்கம் அதோ கேட்கிறது.

“எழுந்திரு! விழித்திரு! கோரிய கருமம் கை கூடும்வரை உழைத்திடு! நான் பலமற்றவன் என்று நினைப்பது தவறு. எவரும் உண்மையில் பலவீனர்களல்ல சோர்வு பலவீனமும் தங்களிடம் பலமில்லை என்ற கருத்திலிருந்து பிறந்த மயக்கமும் உங்களைச் சூழந்து கொண்டிருக் கின்றன. அந்த மயக்கத்திலிருந்து விழியுங்கள். உறக்கத்தில் இருக்கும் ஆத்மாவைத் தட்டி எழுப்பி ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பை புகட்டுங்கள்! சிறு விஷயங்களிலும் அற்பச் சண்டைகளிலும் நம் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்க வேண்டாம்”

இது சுவாமி விவேகானந்தரின் அறைகூவல். நமக்கு உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் செயல் வேகத்தைத் தட்டி எழுப்பும் குரல் இது. நம்மிடையே படர்ந்துவிட்ட சோர்வையும் தளர்ச்சியையும் பலவீனத்தை அகற்றி வலிமையை உட்புகச் செய்யும் மாமருந்து இதில் இருப்பது உங்களுக்கு புரிகிறதா?

“பிரமாண்டமாகத் திட்டமிடுங்கள். துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள். உங்களை செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன” என்கிறார் ரூதர்போர்டு என்ற அறிஞர்.

எனக்கு உதவ நண்பர்கள் இல்லையே, உறவினர்கள் இல்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டி இருப்பதைவிட நமது உடலும் அதற்குள் இருக்கும் ஊக்கமுமே நமக்கு உறுதுணையாக நின்று உதவும் என்று நம்புங்கள், வெற்றி காண்பீர்கள் என்பதைத்தான் அந்த அறிஞர் அவ்வாறு கூறினார்.

கவிஞர் குயிலனின் கவிதை எந்த நிலையில் இருந்தாலும் ஒருவன் முன்னேற முடியும் என்பதை இப்படிச் சொல்கிறது.

சிறிதென எண்ணி ஒதுக்காதே – கேலி

செய்தே எள்ளி நகைக்காதே

பெரிதென எண்ணி மலைக்காதே – வீண்

பெருமைக்கு இடம்நீ கொடுக்காதே

ஆலமரத்தின் விதை சிறிது – எனில்

அதிலே வளரும் மரம் பெரிது

சாலச் சிறிய அணுவினிலே – பெரும்

சக்தி மறைந்து கிடக்கிறது.

புழுவுக்கும் இறக்கை முளைப்பதுண்டு – பட்டு

பூச்சி என்றே அது பறப்பதுண்டு.

புழுதியில் சேரியில் பிறப்பவரும் – புவி

போற்றும் விதமாய் சிறப்பதுண்டு

ஆலமரத்தின் விதை சிறிது – எனில்

அதிலே வளரும் மரம் பெரிது.

கஷ்டங்கள், துயரங்கள், தோல்விகள், இழப்புகள் இவைகளால் ஆனதுதான் என் வாழ்க்கை என்று சலிப்பும் துன்பமும் அடைவோர் நம்மில் பலர் உண்டு. பலர் என்ன? ஐம்பது சதவிகித மக்கள் அப்படித்தான் என்று உங்களுக்குத் தெரியுமா?

உண்மைதான்… தொடர்ந்து தோல்விகள், தொடர்ந்து இழப்புகள் வரும்போது மனம் இப்படித்தான் வேதனையில் மூழ்கும்.

செயல்படத் தடையாக இருப்பது எது என்று பார்த்தால் வாழ்வில் ஏற்படும் இழப்பு களை நேருக்கு நேர் சந்தித்து ஜீரணிக்க திறன் இல்லாமல் போவதுதான்.

ஓர் இழப்பு ஏற்படும்போது அது என்னவோ தனக்கு மட்டுமே ஏற்பட்டுவிட்டது என்பதே பலரின் நினைப்பாக இருக்கிறது. அதனாலேயே சூனியமும் தனிமையும் தன்மீதே கழிவிரக்கமும் ஏற்பட்டு மனம் வெதும்பிப் போகிறது.

இது தவிர்க்க முடியாததுதான். ஆனால் தவிர்க்கப்பட வேண்டியது. எப்படித் தவிர்ப்பது? முதலில், இது தனக்குமட்டுமே நேர்ந்துள்ளது என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும். ஏற்றமும் இழப்பும் சரிநிகர் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இழப்புகளையும் ஏற்றுக் கொள்கிற, சகித்துக் கொள்கிற மனப் பயிற்சி இருந்தால் அடுத்த வெற்றிப் படியில் கால் வைக்கலாம்.

எபிக் டெடல் என்கிற அறிஞர் சொன்ன கருத்துத் துளியை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டால் துன்பம் நேராது.

“எதுவும் நேராததுபோல் நடந்து

கொள்ளுங்கள் – என்ன நேர்ந்தாலும் சரி”

ஒரு குழந்தையைப் பாருங்கள் 2 வயதுக் குழந்தையிடம் 25 வயது இளைஞன் கற்றுக் கொள்ள பத்து விஷயங்களாவது இருக்கும் எனத் தோன்றுகிறது.

கவனியுங்கள்:

1.    அதனிடம் சோம்பல் இல்லை. அது ஓரிடத்தில் சும்மா உட்கார்ந்திருப்பதில்லை.

2.    ஒரு பொம்மையை நீட்டினால், அதைப் பிடிக்க கால்களால் நம் நெஞ்சில் ஊன்றி கைகளை அலைபாய்ந்து எத்தனை பிரயத்தனப்படுகிறது. அதன் விடா முயற்சியை கவனியுங்கள்.

3.    பசிக்கும்போது குரல் எழுப்பி தனது தேவையை தாய்க்கு உணர்த்துகிறது.

4.    வயிற்று வலியோ வேறு உபாதைகளோ ஏற்பட்டால் வேறு முறையில் குரல் எழுப்பி தாய்க்கு உணர்த்துகிறது. சொற்கள் இல்லாமலே பேசுகிறது.

5.    அதற்கு யாரிடமும் பயம் இல்லை பார்த்தீர்களா? யாரையும் எட்டி உதைக்கும் சிரித்து மயக்கும் கைகளால் தொட்டு அடித்து அந்நியோன்யம் ஏற்படுத்துகிறது.

6.    கற்றுக் கொள்ளத் துடிக்கிறது. தாமரைப் பூ மாதிரி கைகளை சுழற்றினால் உடனே தானும் அதுபோல் செய்கிறது. பழிப்பு காட்டினால் அதுவும் பழிப்பு காட்டுகிறது.

7.    எப்போது தூங்கவேண்டுமோ அப்போது சட்டென தூங்கப் போய் விடுகிறது.

8.    எல்லோரிடமும் உற்சாகத்தைப் பரப்புகிறது. தன்னைச் சுற்றி இருப்போரை எல்லாம் சந்தோஷப்படுத்துகிறது. அது இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி அலைகள் வீசுகின்றன.

9.    சிரிப்பையும் அழுகையையும் சரிசமமாக பிரித்து வைத்திருக்கிறது.

10.    எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்ப தில்லை. தன்னை தூக்குபவர் யார் என தானே தீர்மானிக்கிறது. யாராவது வேண்டா தவர் தூக்கினால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தாயிடமோ தந்தையிடமோ போய் சேர்ந்து விடுகிறது. முடிவெடுக்கும் அதிகாரத்தை தன்னிடமே வைத்திருக்கிறது.

(தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்