Home » Articles » உறவுகள் உணர்வுகள்…

 
உறவுகள் உணர்வுகள்…


செலின் சி.ஆர்
Author:

“நீங்க இவ்வளவு நாள் கழிச்சு எடுத்த முடிவை உங்க மனைவி என்னைக்கோ எடுத்துருப்பாங்கன்னு தோணுது. உங்களைப் பத்தின திருப்தியின்மையை, குறையை வேற யார்கிட்டேயாவது போய் சொல்லி புலம்பினா எப்படியிருக்கும்?”

என் கேள்வியையே ஜீரணத்துக் கொள்ள முடியாதவராய் அடிபட்ட சிங்கம் போல் ஒரு பார்வை பார்த்தார். இப்படி ஒரு கோணத்தில் இதுவரை சிந்தித்ததேயில்லை என்பது அவர் பார்வையிலேயே தெரிந்தது.

“என்னைப் பற்றியா? குறையா? என் மனைவியா?” என்ற கேள்வி, “என்னிடம் குறைகாணுமளவுக்கு, என்னை பிடிக்கவில்லை என்று சொல்லுமளவுக்கு அவளுக்கு தகுதி இருக்கிறதா?” என்ற ஏளனம், “நிஜமாகவே நம்மிடமும் சில விரும்பத்தகாத குணங்கள் இருக்குமோ” என்ற குழப்பம்…. இவை எல்லாமிருந்தது அவரது அமைதியில்.

அந்த ஆழ்ந்த அமைதியைக் கலைத்து நிதர்சனங்களை அவருடன் பகிர்ந்து கொண்டேன். நீங்களும் கேளுங்களேன், கொஞ்சம் கவனமாக.

வீட்டுக்கு வீடு இதே கதைதான் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதே கேள்விகள், குழப்பங்கள், ஏளன எண்ண ஓட்டங்கள் உங்கள் மனதைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து படர்ந்து கொண்டு சதா ஒரு மன வேதனையை உருவாக்கிக் கொண்டிருக்கும். கொஞ்சம் தள்ளி நின்று பிரச்சனைகளை உற்று நோக்கினால் “கருத்து வேறுபாடு” என்ற மாயையின் விளைவுகள் தான் இவை என்பது புரியும்.

“மனதில், தானே உருவாகும் எண்ணங்களைத் தடுக்க முடியாது. ஆனால் கொஞ்சம் முயன்றால் அவற்றைச் சரியான முறையில் கையாள முடியும்”.

“எப்படி?”

திருமணமான கையோடு “நமக்குள் இனி கருத்து வேறுபாடே வரக்கூடாது” என்ற சம்பிரதாய சத்தியப் பிரமாணத்தை மூட்டை கட்டிப் போடுங்கள். திருமணத்திற்கு முன்பே ஆணும், பெண்ணும் ஒரு நடுநிலைமையான மனநிலையை உருவாக்கிக் கொள்ள பழக வேண்டும்.

“என் மனைவி என்பதையும் கடந்து அவள் ஒரு தனிமனுஷி” என கணவனும், “என் கணவன் என்பதை விட முதலில் அவன் ஒரு தனி மனிதன்” என மனைவியும் தங்கள் மனதிற்குள் அடிக்கோடிட்டு குறித்துக் கொள்ள வேண்டும். காரணம், “என் கணவன், என் மனைவி” என்று சிந்திக்கும் போது இயல்பாகவே “அது நம் உடைமை…” என்ற எண்ணம் வந்துவிடுகிறது.

ஒரு பேனாவை காசு கொடுத்து வாங்கி நம் உடைமையாக்கிக் கொள்கிறோம் என்றால், சகல விதத்திலும் அதற்கு முழு முதல் சொந்தக்காரராகிவிடுகிறோம். நம் விருப்பத்தை மீறி அந்தப் பேனாவால் ஒன்றும் செய்ய முடியாது. பிடிக்கும்போது எழுதுகிறோம், களைப்படைந்துவிட்டால், மேஜைமீது போட்டு விடுகிறோம். தேவைப்படும் சமயத்தில் பக்கம் மாறிவிடாமலிருக்க புத்தகத்தின் நடுவே வைத்துவிடுகிறோம். விருப்பப்பட்டால் அடுத்தவருக்கும் கொடுக்கிறோம். இல்லையா, யாருக்கும் தெரியாமல் மேஜை அறையில் போட்டு பூட்டிவைத்து விடுகிறோம்.

“ஏ, பேனா, பேனா, உன்னை நான் அவருக்கு கொடுக்கப்போகிறேன். உனக்கு சம்மதமா?” என்று

கேட்டுக்கொண்டிருப்பதில்லை. அதை ஒரு பொருளாகவே மதிப்பதில்லை. சொல்லப் போனால், அதை நம் உடலின் ஒரு பாகமாகத் தான் பார்க்கிறோம்.

நம் விரலில் சொடுக்கெடுக்க எப்படி யாரிடமும் அனுமதி கேட்க அவசியமில்லையோ, அதே போல்தான் இந்த பேனாவைப் பொறுத்த மட்டிலும்…. என்ற ஆணித்தரமான கருத்து, முடிவு நம் மனதில் பதிந்து போயிருக்கும்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள், 90% தம்பதியர் தங்கள் வாழ்க்கைத்துணையை இந்த பேனாவிற்கு சமமாகத்தான் மதிக்கிறார்கள்.

ஆரம்பத்தில், நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது என்ற நிலையிலிருக்கும் இவர்கள், போகப் போக “இவருக்கென்ன தனிக் கருத்து இருக்கப்போகிறது….?” என தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து அவருக்கும் சேர்த்து தாங்களே சிந்தித்து ஒரு முடிவும் எடுத்து விடுகிறார்கள்.

“அப்படியானால் கணவனோ, மனைவியோ தாங்களே தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்கக்கூடாதா? ஒவ்வொரு சின்ன விஷயத் திற்கும் ஆலோசித்துக் கொண்டிருக்க வேண்டுமா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்.

இந்த விஷயத்தைப் பெரிதாய் ஆலோசிக்க வேண்டியதில்லை என்று இருவருமே ஒத்துக் கொள்ளக்கூடியவையாய் இருந்தால் பரவாயில்லை. அடுத்தவருக்கும் சில முடிவுகள், ஆசைகள் இருக்கக்கூடும் என்ற அடிப்படை எண்ணம் அனை வருக்கும் இருக்க வேண்டும். புரியும்படி, எளிதாகச் சொல்ல வேண்டுமானால், பேனாவிற்கு தனி கருத்து எதுவுமிருக்காது, ஆனால், நம் மனைவிக்கு… கணவனுக்கு… இருக்கக்கூடும் என்ற அளவிலாது புரிந்திருக்க வேண்டியது அவசியம்.

Richard Bach தனது “The bridge across for ever” என்ற நாவலில் இந்த விஷயத்தை மிக அழகாய் கையாண்டிருப்பார்.

கதாநாயகனுக்கு விமானத்தின் மேல் அப்படி யொரு காதல்…. பைத்தியம்… விமானம் ஓட்டுவதில் அவ்வளவு வெறி. கதாநாயகிக்கோ இதெல்லாம் ஒன்றும் புரியாது. அவளுக்கு கொஞ்சமும் சம்பந்தமேயில்லாத விஷயம்.

அவளுக்கு இசையின் மீது அதீத ஈடுபாடு. இசையே உலகம் என்பதையும் கடந்து தானே உருகி இசையாகி விடுகிற அளவுக்கு இசையின் மேல் காதல்.

இருவருடைய உலகமும் வெவ்வேறு. எப்படி வாழ்கிறார்கள்? இவர்கள். “உனக்கும் எனக்கும் ரசனையில், சிந்தனையில் எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது. நீ வா என் வழிக்கு…” எனப் பிடித்திருக்கவில்லை. அப்படி இழுத்திருந்தால் அந்த உறவு உடைந்து சுக்கு நூறாகியிருக்கும்.

நாயகன், தன் முதல் காதலியான விமானத்தைப் பற்றி அங்குலம் அங்குலமாக விவரிக்கிறான். ஆர்வமாய் கண் இமைக்காமல் கேட்கிறாள் அவள்.

“இப்படித்தொடு, இதை இப்படி இயக்கு. ஜிவ்வென்று இருவரும் பறப்போம்” என கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுத் தருகிறான். அதோடு நிற்கவில்லை. “உன் இசையை எனக்கும் கொஞ்சம் கற்றுக்கொடேன்” என்று யாசிக்கிறான். முகம் மலர அவனுக்கும் கற்றுக்கொடுக்கிறாள். இசையில் இணைகிறார்கள்…

படிக்கும்போதே சுகமாயில்லை? கொஞ்சம் கண்களை மூடி உங்களுக்குப் பிடித்த டென்னிசை உங்கள் காதல் மனைவியோடு சேர்ந்து விளை யாடுவதாய் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கணவரோடு தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதை நினைத்துப் பாருங்கள்.

யோசித்துப் பார்க்கையிலேயே மெய்

சிலிர்க்கிறது, இல்லையா?

“ம். இதெல்லாம் எங்க நடக்கப் போகுது?” அலுப்பும் கூடவே வருகிறதா. ம்ஹும். தவறு, இந்த கற்பனைகள் சாத்தியமாகாது என்று யார் சொன்னது? கொஞ்சம் முயற்சி, அதிக முயற்சி இருந்தால் சாத்தியமே…..

அதென்ன கொஞ்சம் முயற்சி? அதிக முயற்சி?

உங்கள் துணையை உங்கள் ரசனைக்கு மாற்ற கொஞ்சம் முயற்சி. அவர் ரசனையை உணர்ந்து, ரசித்து, நீங்களும் பின்பற்ற அதிகம் முயற்சி. இவையிரண்டுமிருந்தால் இந்த சுகமான கற்பனைகள் நிஜமாகிவிடுமே.

அதை விட்டுவிட்டு, “ரசனையா அவளுக்கா? கத்தரிக்காயை கேட்கற மாதிரி, கிலோ என்ன விலைனு கேட்பா….” என்று அலுத்துக் கொண்டால் நஷ்டம் உங்களுக்குத்தான்.

“அவளோட குரலைப் பாராட்டினேன் மேடம், சும்மா இல்ல, மனசார. என்கிட்டே உட்கார்ந்து ஷேக்ஸ்பியர் பத்தி கேட்டா. இப்ப எனக்கே சில சமயம் ரெஃபரென்ஸ் தர்ரான்னா பார்த்துக்கங்களேன்…” என்று சிரிக்கிறார் அந்த நண்பர்.

வாழ்க்கையின் சூட்சுமம் இதுதான். இவ்வளவேதான்.

“நீ நானாக, உன் எண்ணம் என் எண்ணமாக, என் ரசனை உன் ரசனையான… முற்றிலும் உருமாறுவோம்… முடியவில்லையா?

குறைந்தபட்சம் பகிர்ந்து கொள் வோம்…. பரிமாறிக் கொள்வோம்….

(தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்